(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
இரவு 8.00 மணியளவில் மட்டக்களப்பு ‘பஸ்’ நிலையத்திலிருந்து ஓட்டத்தை ஆரம்பித்த ‘பொத்துவில்’ பஸ் கோட்டைமுனைப் பாலத்தை ஊர்ந்து கடந்து பின் ‘சின்னாஸ்பத்திரிச் சந்தி’ வரைக்கும் திருமலை வீதியாலும் – சின்னாஸ்பத்திரிச் சந்தியில் வலதுபுறம் திரும்பி ‘அரசடிச் சந்தி’வரைக்கும் பார்வீதியாலும் – அரசடிச் சந்தியில் வலதுபுறம் திரும்பி நெற்சந்தைப்படுத்தற் களஞ்சியச் சந்தி வரைக்கும் பெய்லி வீதியாலும் சென்று நெற்சந்தைப்படுத்தற் களஞ்சியத்திற்கு முன்னால் வலதுபுறம் கல்லடிப்பாலத்தை நோக்கித் திரும்பிப் ‘புதியகல்முனை வீதி’யில் பிரவேசித்தது.
நெற்சந்தைப்படுத்தற் களஞ்சியத்திற்கு முன்னால் உள்ள ‘T’ சந்தியில் இலங்கைப் ‘பொதுமராமத்து இலாகா’ வினால் நிர்மாணிக்கப்பெற்றிருந்த ‘சீமெந்திலான பெயர்பலகைக் கட்டிடத்தின் வெள்ளைச்சுவரில் கறுப்புத் தீந்தையால் அம்புகுறிகாட்டி பொத்துவில் 67 மைல் எனத் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. கோகுலன் பயணிக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த அம்புக்குறி காட்டியைக் கவனிக்கத் தவறுவதில்லை. அன்றும் அவன் அதனைக் கவனித்தான். பொத்துவிலுக்குப் போகிறோம் என்ற உணர்வு அவனைப் புளகாங்கிதமடையச் செய்தது.
புதியகல்முனை வீதியில் பிரவேசித்த பஸ் ஆர்முடுகலைச் சற்று அதிகரித்துச் சென்று, சுவாமி விபுலானந்த அடிகள் ‘பாடும்மீன்’ இசை கேட்டு அதனை ‘நீரரமகளிர்’ஆகக் கற்பனையில் உருவகித்துப் பாடல் புனைந்து மகிழ்ந்ததும் – மீன்மகள் பாடுகிறாள்.! வாவி மகள் ஆடுகிறாள்.!” எனக் கவிஞர் காசி ஆனந்தனைப் பாடல் எழுத வைத்ததுமான மட்டக்களப்பு வாவியின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1922 இல் நிர்மாணிக்கப்பெற்று அக்காலத்தில் ‘லேடி மனிங் பிரிட்ஜ்’ என அழைக்கப்பெற்றதும் இக்காலத்தில் ‘கல்லடிப் பாலம்’ என வழங்கப்பெறுவதுமான கறுத்த இரும்புப்பாலத்தினூடு புகுந்து வெளியேறிப் பின், கல்லடி – மஞ்சந்தொடுவாய் – காத்தான்குடி – ஆரைப்பற்றை – தாழங்குடா – புதுக்குடியிருப்பு – கிரான்குளம் – குருக்கள்மடம் – செட்டிபாளையம் – மாங்காடு – தேற்றாத்தீவு – களுதாவளை – களுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு – பெரியகல்லாறு – பெரியநீலாவணை – மருதமுனை – பாண்டிருப்பு கிராமங்களினூடாகப் பயணிகளை ஆங்காங்கே ஏற்றியும் இறக்கியும் தன் கடமையினை நிறைவேற்றிக் கொண்டு இரவு 10.00 மணி போல் கல்முனையைக் கடந்தது. கல்முனை ‘பஸ்’ நிலையத்தில் படுத்துக்கிடந்த கட்டாக்காலிமாடுகள் ‘பஸ்’ சின் உறுமல் ஒலி கேட்டுத் தலையை உயர்த்திப் பார்த்துப் பின் மீண்டும் கவிழ்த்துக் கொண்டன.
இரவுநேரப் பயணம் என்பதால் பயணிகள் சிலர் ஆசனத்தில் அமர்ந்தபடியே கண்களை மூடி நிஸ்டையில் அமர்ந்திருக்கும் முனிவர்களைப்போல் இருந்தார்கள். இன்னும் சிலர் விழித்திருந்து தமக்குள்ளே அளவளாவிக் கொண்டிருந்தார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த பயணியொருவரின் குறட்டை ஒலி விட்டுவிட்டு இரவின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது. பஸ் நடத்துனர் பஸ்ஸின் முன்பக்க மிதிபலகையில் நின்றுகொண்டு அவ்வப்போது சாரதியுடன் கதை கொடுத்துக் கொண்டும் ‘வெற்றிலை’ மடித்துக் கொடுத்துக் கொண்டும் தானும் விழிப்பாகவிருந்து சாரதியையும் விழிப்பாக வைத்துக்கொண்டிருந்தார்.
கல்முனையைக் கடந்து கல்முனைக்குடி – சாய்ந்தமருது – காரைதீவு – நிந்தவூர் – ஒலுவில் – பாலமுனை – மீனோடைக்கட்டு – அட்டானைச்சேனை – அக்கரைப்பற்று – சின்னமுகத்துவாரம் – தம்பட்டை – தம்பிலுவில் – திருக்கோவில் – கோரைக்களப்பு – காஞ்சிரங்குடா – தாண்டியடி கிராமங்களைத் தாண்டி நள்ளிரவில் சங்கமன்கண்டிப் பிள்ளையார் கோயிலடியில் வந்து தரித்தது ‘பஸ்’. அந்த நள்ளிரவிலும்கூட கோயிலுக்கு எதிரேயிருந்த தேனீர்க் கடைகளிலொன்று திறந்திருந்தது. கூரையிலிருந்து கைமரமொன்றில் கொழுவப்பட்ட இரும்புக்கம்பியின் வளைக்கப்பட்ட மறு நுனியில் தொங்கிய ‘பெற்றோமக்ஸ்’ விளக்கொன்று வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்தது.
மட்டக்களப்பு பொத்துவில் பிரதானவீதியில் அமைந்திருந்த சங்கமன்கண்டிப் பிள்ளையார் கோயிலடியைக் கடந்து செல்லும் சகல வாகனங்களும் கோயிலடியில் தரித்துநின்று பயணிகள் இறங்கிக் கும்பிடுவதும், தேனீர்க் கடையில் சிற்றுண்டி, தேனீர் எடுத்துச் சில நிமிடங்கள் இளைப்பாறி மீண்டும் பயணத்தைத் தொடர்வதும் காலாதிகாலமாக இருந்துவரும் வழக்கம்.
பிரதான வீதியிலிருந்த கோயிலை ‘றோட்டுப்பிள்ளையார்’ என அழைப்பர். பிரதான கோயில் உள்ளே காட்டுக்குள் பிரதான வீதியிலிருந்து மேற்கே சுமார் ஒரு கட்டை (மைல்) தூரத்தில் அமைந்திருந்தது. அதனைக் ‘காட்டுப் பிள்ளையார்’ என அழைப்பர்.
காலாதிகாலமாக இருந்து வரும் வழக்கத்தை – மரபை மீறாமல் பஸ் சாரதி அந்த நள்ளிரவு நேரத்திலும் சங்கமன்கண்டி றோட்டுப் பிள்ளையார் கோயிலடியில் ‘பஸ்’ சை நிறுத்தியிருந்தார். தூக்கம் கலையாதவர்கள் ‘பஸ்’ சுக்குள்ளேயே சயனத்தில் இருக்க, விழித்துக் கொண்டவர்கள் இறங்கித் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். தேனீர்க்கடை உரிமையாளர் மணியம் ‘பிளேன்ரீ’ அடித்த சத்தத்தில் உறக்கத்திலிருந்த கோகுலன் விழித்துக் கொண்டு எட்டிப் பார்த்துச் சங்கமன்கண்டிக் கோயிலடி என்பதைத் தெரிந்து கொண்டான். ஆனாலும் ‘பஸ்’ சை விட்டு அவன் இறங்கவில்லை. இதுவரை தூக்கத்தில் பசியை மறந்திருந்தான். இப்போது விழித்துக் கொண்டபோது பசி வயிற்றைக் கிள்ளியது. இனி விரைவில் பொத்துவிலை – வீட்டை அடைந்துவிடலாம் என்ற எண்ணம் அவன் நெஞ்சில் பால் வார்த்தது. இனிக் கண்ணயரத்தேவையில்லையென்றும் தீர்மானித்துக் கொண்டான்.
கிழக்கிலங்கையின் தென்கோடியில் ‘திருக்கோவில்’ பிரதேசத்தின் தென்னெல்லைப்பகுதியாகச் சங்கமன்கண்டி விளங்குகிறது. அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதானவீதியின் மேற்கே சற்றுத் தொலைவில் அமைந்துள்ள ‘சங்கமன்கண்டி’ மலையின் மேற்குப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.
கி.மு. 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு வரை ஈழத்தின் பூர்வகுடியினரில் ஒரு பிரிவினரான ‘நாகர்’ குலத்தவரின் ஆட்சிப்பிரதேசமாகவும் வாழ்விடமாகவும் சங்கமன்கண்டி விளங்கிய காலத்தில் சங்கமன்கண்டி நகரைச் சங்குமன் (சங்கமன்) என்ற நாகர்குல மன்னன் தோற்றுவித்தான்.
அக்காலம் தொட்டுச் சங்கமன்கண்டியை இராசதானியாகக் கொண்டு ‘நாகர்முனை’ என்று பெயர்வழங்கி வந்த இன்றைய திருக்கோவில் பிரதேசத்தை நாகர்குல முதல்வர்கள் (நாகர்குல சிற்றரசு) பரிபாலித்து வந்தனர்.
பின்னர் கி.மு. 4 ஆம், 3 ஆம் நூற்றாண்டுகளில் பண்டைய மட்டக்களப்பை (இன்றைய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களையும்; உள்ளடக்கியது) பாண்டிய குலத்தவர்கள் கூட்டாக ஆட்சிபுரிந்த காலத்தில் இக்குலத்தவர்களில் ஒருவன் சாகாமத்திலிருந்து இந் ‘நாகர்முனை’ என்று பெயர் வழங்கிய இன்றைய திருக்கோவில் பிரதேசத்தைப் பரிபாலித்து வந்தான்.
கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கை மன்னன் தேவநம்பியதீசன் காலத்தில் (கி.மு.247 – கி.மு 207) இலங்கையில் பௌத்தம் அறிமுகமாகியபோது சங்கமன்கண்டியில் சிவாலயமும் பௌத்த மதவழிபாட்டு இடமும் அமைந்து இருசமய நெறிகளையும் கடைப்பித்த தமிழர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தனர். அதாவது சைவத்தமிழர்களும் பௌத்த மதத்தைத் தழுவிய பௌத்த தமிழர்களும் முரண்படாமல் வாழ்ந்து வந்தனர்.
இன்றைய சங்கமன்கண்டி மலைப்பிள்ளையார் ஆலயத்திற்குச் சிறிது தொலைவில் வடமேற்குப்பகுதியிலேயே இப் பண்டைய சங்கமன்கண்டிச் சிவாலயம் அமைந்துள்ளது. தேவநம்பியதீசனின் காலத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அனைத்து ஆட்சி மற்றும் அரசியல் மாற்றங்களின்போதும் நிலைகுலையாது பேணப்பட்டும் அபிவிருத்தி செய்யப்பட்டும் வந்த இச் சங்கமன்கண்டிச் சிவாலயம் ஈற்றில் இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் சைவக் கோயில்கள் இடித்தழிக்கப்பட்டபோது இச் சங்கன்கண்டிச் சிவாலயமும் கி.பி 1623 இல் இடிக்கப்பட்டது.
பின், தற்போதைய சங்கமன்கண்டி மலைப்பிள்ளையார் ஆலயம் 1822 இல் தாபிக்கப்பெற்றது. சங்கமன்கண்டி காட்டுப்பகுதியை அண்மித்த பகுதிகளில் சேனைப்பயிர்ச்செய்கை, நெற்பயிர்ச்செய்கை, கால்நடைவளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த விவசாயிகளே இவ் ஆலயத்தைத் திறந்த வெளிக் கோயிலாகத் தாபித்தனர்.
1876 ஆம் ஆண்டு சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயம் திறந்த வெளிக் கோயிலாகக்; காணப்பட்டதாகவும் ஒரு மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறிய மேடையொன்றில் இலிங்கங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புள்ளது.
கி.பி 1910 ஆண்டளவில் சங்கமன்கண்டி மலைப் பிள்ளையார் ஆலயம் மிகவும் பிரபலயம் பெற்றிருந்தது.
கல்முனை – பொத்துவில் வீதி செப்பனிடப்பட்டுத் ‘தார்றோட்’ டாக மாறிய இக்காலத்தில் வாகனப் போக்குவரத்துகளும் – வசதிகளும் அதிகரித்தன.
இக்காலத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்ந்த கே.வி.மார்க்கண்டன் என்ற செல்வந்தர் 1912 இலிருந்து அவர் இறக்கும் வரை (1936) பூசைவழிபாடுகளும் தொண்டுகளும் புரிந்து வந்துள்ளார். அவரது மறைவுக்குப் பின்னர் அவரது சந்ததியினர் சிறிது காலம் அப்பணியைத் தொடர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கண்ணமுத்து எனும் பெரியவரும் அவரோடிணைந்த சில இளைஞர்களும் இவ் ஆலயத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தனர்.
பின்னர், திருக்கோவில் அரசினர் வைத்தியசாலையில் மருந்தாளராகக் (ஓடலி) கடமையாற்றி வந்த வேலுப்பிள்ளை என்பவரால் 1950 ஆம் ஆண்டு சங்கமன்கண்டி மலைமீது சிறியதொரு ஆலயம் அமைக்கப்பெற்றது.
சிறிது காலத்தின் பின்னர், ஒரு நிருவாக சபையை உருவாக்கி அதனிடம் ஆலயத்தை வேலுப்பிள்ளை ஒப்படைத்தார். நிருவாக சபையினரால் கருங்கல்லான சிறியதொரு ஆலயம் நிர்மாணிக்கப்பெற்று 1960 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதானவீதியூடாகப் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சியுற்ற காலக்கட்டத்தில் (1933 – 1960) சங்கன்கண்டி றோட்டுப் பிள்ளையார் ஆலயம் தோற்றம் பெற்றது. பிரதானவீதியூடாகச் செல்லும் வாகனங்கள்யாவும் இவ்விடத்தில் தரித்துச் செல்லும் வழக்கமும் தொடங்கியது.
சங்மன்கண்டிப் பிள்ளையார் ஆலயம் இலிங்கவடிவில் பிள்ளையார் கோயில் கொண்ட தலமாகும் என்கின்ற தனித்துவச் சிறப்பையுடையது.
சங்கமன்கண்டியில் நகரநாகரீகம் நிலவிய காலத்தில் விளங்கிய சிவாலயத்தின் தொடர்ச்சியாகவே (அது 1623 இல் போர்த்துக்கேயர் காலத்தில் இடிக்கப்பட்ட பின்னர்) திறந்த வெளிக்கோயிலாகத் தோற்றம் பெற்று இன்று சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயமாகத் திகழ்கிறது.
(தொடரும்…….அங்கம் 04)