(மௌன உடைவுகள் – 48)
— அழகு குணசீலன் —
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பின் இரு மூத்த பாடசாலைகளின் 150, 149 வது ஆண்டுவிழாவுக்கு பிரதம அதிதியாக வருகைதந்தவர். இன்னும் சொன்னால் அழைக்கப்பட்டவர் – மட்டக்களப்பு மக்களின் அழைப்பின் பேரில் வந்த விருந்தாளி. அவரை மட்டக்களப்பின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொள்ள மட்டக்களப்பு அரசியலில் ஒரு பகுதி தவறி இருக்கிறது.
சென்.மைக்கல் கல்லூரியின் சிறப்பை, இன, மதங்களைக்கடந்த பல்காலாச்சார- பலவர்ண சமூக வாழ்வியலை அடையாளம் கண்ட உரையாக ஜனாதிபதியின் உரை அந்த கல்லூரியிலத அமைந்திருக்கிறது. தமிழில் தேசிய கீதம் பாடினீர்கள். இது ஒரு பிரச்சினையே அல்ல. இன, மதங்களைக்கடந்து, நாம் இலங்கையர்களாக ஒன்றாகப் பயணிப்போம்……. என்று அவரது உரை தொடர்கிறது. இது ஒரு அரசியல்வாதியின் உரை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் சில கருத்தியல் மாற்றங்களை அது எமக்கு வெளிக்காட்டுகிறது. எங்கள் எண்ணஙகளில் ஏன் மாற்றம் ஏற்படக்கூடாது….?
செங்கலடியில் ஆற்றிய உரையில் மட்டக்களப்பின் – கிழக்கின் அபிவிருத்தி பற்றி பேசியிருக்கிறார். கல்வி, கைத்தொழில் வலயம், நிலாவெளி முதல் அறுகம்பை வரையான உல்லாசப்பிரயாணத்துறை அபிவிருத்தி பற்றி எல்லாம் அவரது உரை அமைந்திருந்தது. இவற்றிற்கு எல்லாம் குறுக்கே நிற்பதாக இருக்கிறது ஆர்ப்பாட்ட சத்தவெடி அரசியல். ஒரு பிரச்சினைக்கான தீர்வை சத்தமாகக்கோரி பல பிரச்சினைகளுக்கான மட்டக்களப்பு மக்களின் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.
இதனால் பண்ணையாளர் பிரச்சினைகளை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. அதேவேளை எதிர்ப்புக்காட்டுகின்ற ஜனநாயக உரிமையை மறுப்பதாகவும் இதைக் கொள்ள வேண்டியதில்லை. இந்த போராட்டவழிமுறைகள் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மக்களுக்கு எதையும் பெற்றுத்தரவில்லை. இந்த நிலையில் இந்த அணுகுமுறையை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதில் என்ன பிரயோசனம். தீர்வைத்தராத – தீர்வுக்கு தடையாய் இருக்கின்ற ஒரு அணுகுமுறையில் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருந்தால் அந்த அரசியலில் எங்கோ தவறு இருக்கிறது.
தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் வெறும் சத்தவெடி அரசியலாகவே தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. குறிபார்த்து சுடாது இலக்கில்லாமல் சத்தத்தை ஏற்படுத்தும் விளம்பர அரசியல். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை “நரி” என்று கூறிக்கொண்டே இதை அவர்கள் செய்கிறார்கள். பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு அஞ்சாது என்பதை ரணில் பல தடவைகள் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நிரூபித்திருக்கிறார்.
இல்லையேல் சமூக ,பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் நிறைந்திருந்த ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவியை அவரால் எப்படி ஏற்றிருக்க முடியும்? எதிரணியில் இருந்து ஆர்ப்பரித்தவர்கள் எவருக்கும் ரணிலுக்கு இருந்த தற்றுணிவும், முதுகெலும்பும் இருக்கவில்லை. கோத்தபாய கூப்பிட்ட போதெல்லாம் ஓடி ஒழித்தவர்கள் இவர்கள். பின்னர் பாராளுமன்றத்தில் தனியொரு மனிதனாக ரணில் பதவி ஏற்றபோது வழக்கம்போல் சத்தவெடி. இந்த வெடி நாட்டின் நன்மைக்கானதா….? அல்லது அவர்களின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்ததன் வெளிப்பாடா? செய்யவும் மாட்டேன், செய்பவனை விடவும் மாட்டேன்.
தமிழர் அரசியலில் இந்த சத்தவெடி பாராளுமன்ற அரசியல் இனியும் சரிப்பட்டு வராது என்பதற்காகத்தானே ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது. ஆனாலும் அதுவும் தோற்றுப்போனது. இந்த ஆயுதப்போராட்டம் இலக்கோடு தொடங்கி காலப்போக்கில் இலக்கு தவறி சுட்டழித்த கதையை மூத்த கவிஞர்பேராசிரியர் சிவசசேகரத்தின் கவிதை ஒன்று அற்புதமாக பேசுகிறது.
“துரோகி எனத்தீர்த்து முன்னொருநாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக்கண்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணணையிட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனைச் சுட்டது
வழக்குரைத்தவனைச் சுட்டது
சாட்சி சொன்னவனைச் சுட்டது
தீர்ப்பு எழுதியவனைச் சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது
எதிர்த்தவனையும் சுட்டது
சும்மா இருந்தவனையும் சுட்டது”
ஆயுதப்தப்போராட்டத்தின் இலக்குத்தவறிய இந்த சூட்டுக்களால் அடைந்த தோல்வி இன்றைய பாராளுமன்ற அரசியலில் சத்தவெடியாக அடுத்த கட்ட தோல்வியை நோக்கி நகர்கிறது.
தமிழர் அரசியல் வரலாற்றில் தமிழரசுக்கட்சி அகிம்சை அரசியல் ஊடாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், கதவடைப்புக்கள், ஹர்த்தால்கள், பகிஷ்கரிப்புக்கள் , கறுப்புக்கொடிகள் …என நீண்ட அரசியல் பயணத்தை கடந்து வந்திருக்கிறது.
இன்றைய நிலையோடு ஒப்பிடும்போது இவை ஓரளவுக்கு அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் போராட்டங்களாகவும், முஸ்லீம் மக்களும் பங்கு கொண்ட போராட்டங்களாகவும் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் அடையப்பட்ட பெறுபேற்றை நோக்கினால் அரசியல் களப்பரீட்சையில் தமிழரசுக்கட்சி சித்தியடையவில்லை என்பதையே அதன் வரலாறு பதிவு செய்கிறது. 1960 களிலே தோற்றுப்போன அணுகுமுறையை இப்போது ஏழாவது தசாப்தத்திலும் தூக்கிச் சுமக்கின்ற அரசியல் வறுமையை என்ன என்பது?
இந்த அகிம்சை அரசியலின் தோல்வியே ஆயுதப்போராட்டம் ஒன்றின் தேவையை கட்டாயப்படுத்தியது. ஆயுதப்போராட்டமும் இறுதியில் இலக்கு தவறி இலங்கை, இந்திய அரசுகளை மட்டும் அன்றி சகோதர இனங்களையும் ஆத்திரமூட்டி, சமாதானப்பேச்சுக்களில் சர்வதேசத்திற்கும் கோபமூட்டி, சமஷ்டிவரை வந்த தீர்வை தட்டிக் கழித்து, நம்பிக்கை இழக்கச்செய்து பயங்கரவாதம் என பிரகடனம் செய்து அழித்தொழிப்பதை விடவும் வேறுவழியில்லை என்ற முடிவுக்கு சர்வதேசத்தை தள்ளிவிட்டது. இப்போது அழித்தவர்களிடமே “பிச்சை பாத்திரம்” ஏந்தும் நிலை.
இன்று தமிழ்த்தேசிய அரசியல் இருந்தவற்றையும், கிடைத்தவற்றையும் இழந்து அழித்தவர்களிடம் நேர்த்தி- த்துவா கேட்கின்ற பலவீனமான அரசியலை பாராளுமன்ற பதவிகளுக்காக செய்துகொண்டிருக்கிறது. பலவீனமான ஒருவர் – ஒரு சமூகம் வேறுவழியின்றி மிகவும் இலகுவாக ஆத்திரமடைவதும், நிதானம் தவறுவதும் , சரியாகச்சிந்சித்து செயற்படும் ஆற்றலை இழப்பதும் உளவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்ற ஒன்று. இதுவே தமிழர் அரசியலின் இன்றைய வடிவம்.
போராட்ட வழிமுறைகள் மாறலாம் போராட்டம் மாறாது என்று தமிழ்த்தேசிய அரசியல் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்னரானதும், சமகால பூகோள அரசியலுக்கு பொருத்தமற்றதுமான ஒவ்வாமை அரசியலை செய்து கொண்டிருக்கிறது. இதை அரியநேந்திரன் போன்றவர்கள் அ, ஆ, இ,…. என்று பாலர் வகுப்பில் அரசியல் படிப்பிக்க வருகிறார்கள்.
அகிம்சை, ஆயுத அரசியல்கள் தோல்வியைச் சந்தித்துள்ளன. இதனால் இன்றைய சமகாலத் தேவை ஆத்திரமூட்டும் அகிம்சை அரசியல் அல்ல. மாறாக மாற்று அரசியல் -அணுகுமுறை. அந்த மாற்று அரசியல் அணுகுமுறை புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, ஒரு தரப்பை மறு தரப்பை அங்கீகரித்தல்…. போன்றவற்றின் ஊடான இணக்க அரசியலாகும். இது சம்பந்தப்பட்ட இருதரப்பும் இணைந்து செயற்படும் போதுதான் சாத்தியமாகும். இல்லையேல் மக்களை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று ஒரு மாடு “நுகம்” போட, மறு மாடு தனித்து இழுக்க முடியாமல் மக்களை நடுத்தெருவில் தவிக்க விட்ட கதையாகத்தான் அமையும்.
இதை தவிர்த்து காலாவதியாகிப்போன, காலத்திற்கும் , பூகோள அரசியலுக்கும் பொருத்தமற்ற அ,ஆ. இ….பழையபாடத்திட்டம். இவை அனைத்துமே தோற்றுப்போனவை. தேவை புதிய மாற்று அரசியல் அணுகுமுறை . தமிழ்த்தேசிய அரசியலில் “மாற்று” வரட்சி இருப்பதால்தான் அவர்கள் மீண்டும், மீண்டும் தோற்றுப்போன அரைத்தமாவைத் திருப்பித்திருப்பி அரைத்து புதியது போன்று பக்கட் பண்ணி அரசியல் சந்தையில் விற்பனைக்கு விட்டு மக்களை ஏமாற்றும் அரசியல் வியாபாரத்தை செய்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் பண்ணையாளர்களின் காணிப்பிரச்சினையை ஆர்ப்பாட்டம் ஆக்கி தூங்கிய நாயை கல்லெறிந்து எழுப்பியதால் மட்டக்களப்பில் பிக்கு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு ஆத்திரமூட்டும் அரசியல் தன் கடமையை செய்திருக்கிறது. சிங்கள கடும்போக்காளர்கள் உசார் அடைந்தார்கள். சாணக்கியன் பாராளுமன்றத்தில் எறிந்த பந்தை பிக்கு சாணக்கியனை நோக்கி வீசி இருக்கிறார். ஆத்திரத்திரமூட்டும் அரசியலுக்கு ஆத்திரமூட்டும் அரசியலால் பதிலடி.ஆகப்போவது எதுவுமில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆத்திரமூட்டல் அரசியல் ஆர்ப்பாட்டம் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு பெற்றுத்தரப்போகின்ற தீர்வு என்ன? அதுவும் ஏற்கனவே பண்ணையாளர்களுடன் பேசி ஒரு அரசியல் நகர்வு நடந்து கொண்டிருக்கும் போது அதைக் குழப்புவதற்கான நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டி உள்ளது.
இந்த விவகாரம் ஆவணம் ஒன்றில் கட்டளை பிறப்பித்து கையொப்பம் இடுவதன்மூலம் இரவோடிரவாக செய்கின்ற விடயம் அல்ல. அந்த கட்டத்தை இது தாண்டி விட்டது. இரு இனங்களுக்கிடையேயான உணர்வு பூர்வமான விடயம். கவனமாகவும், இருதரப்பும் இணங்கும் வகையிலும் செய்யப்பட வேண்டியதே அன்றி ஆத்திரமூட்டும் சண்டித்தன அரசியலால் சாதிக்கக்கூடியது அல்ல. அங்கு வாழப்போகின்றவர்கள், தொழில் செய்யப்போகின்றவர்கள் சாதாரண விவசாயிகள். இவர்களுக்கு எம்.பி.க்களுக்கான சிறப்புரிமைகளும் இல்லை, விசேட பாதுகாப்பு வசதிகளும் இல்லை. அவர்களின் அச்சத்தையும், பாதுகாப்பு இன்மையும் இரு தரப்பு விவசாயிகளுக்கும் இடையிலான நல்லுறவு, பரஸ்பர நம்பிக்கை என்பனவற்றின் மூலமே ஏற்படுத்த முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவின் மட்டக்களப்பு விஜயம் கட்சி அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட மக்களையும் குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தையும், ஆயர் இல்லம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்த்தவ அமைப்புக்களையும் அவமதித்த செயலாகும். கிறிஸ்தவ மிஷனரிகள் மட்டக்களப்பு கல்விவளர்ச்சிக்கு வழங்கிய, அந்த ஆணிவேர் விருட்சம் கடந்த 150 ஆண்டுகளாக தொடர்ந்தும் வழங்கிக்கொண்டிருக்கின்ற “கல்விக்கனியை” காலால் போட்டு மிதித்த செயல். ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்.
2009 க்கு பின்னர் பாராளுமன்ற கதிரைகளை பலமாக காட்ட பொத்துவில்லில் இருந்து பொலிகண்டி, மற்றும் எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை ஏதாவது ஒரே ஒரு தீர்வையாவது அவை பெற்றுத்தந்துள்ளனவா? பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்,காணாமல் ஆக்கப்ப்பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, சர்வதேச போர்க்குற்றவிசாரணை, பொறுப்புக்கூறல் இவற்றில் ஏதாவது ஒன்றையாவது ஆத்திரமூட்டலால் சாதிக்கமுடிந்ததா ? “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்று சொல்ல வருகிறீர்களா? அப்படியானால் ஆரம்பத்திலேயே இதைக் கடமைக்காகத்தான் செய்கிறோம் என்று சொல்லிவிடுங்கள். அப்போது மக்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். ஏனெனில் மக்கள்- பண்ணையாளர்கள் பலனை எதிர்பார்க்கிறார்கள்.
மலையக மக்களின் வாக்குகளை எந்த யு.என்.பி. பறித்ததோ அதே யு.என்.பி. யால் மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டது . இ.தொ.க .தலைவர் தொண்டமான் ஆத்திரமூட்டும் அரசியல் செய்யவில்லை இணக்க அரசியல் செய்தார்.
விகிதாசார தேர்தல் முறையில் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளி வீதம் அதிகமாக இருப்பது சிறிய கட்சிகளுக்கு -சிறுபான்மையினர் கட்சிகளுக்கு பாதகமாக அமைகிறது என்று முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ஆத்திரமூட்டும் ஆர்ப்பாட்டங்கள் செய்யவில்லை, அமைதியாக இணக்க அரசியல் செய்தார். வெட்டுப்புள்ளி வீதம் குறைக்கப்பட்டது.
இணைந்த வடக்கு -கிழக்கு மாகாணங்களை ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்து , ஆட்சியாளர்களுக்கு ஆத்திரமூட்டி பிரிக்கவில்லை. ஆரவாரம் இன்றி நீதிமன்றத்தை நாடி தனது நோக்கத்தை அடைந்தது.
ஹிஸ்புல்லா “Batticaoa Campus ” ஐ மீளப்பெற நடாத்திய ஆர்ப்பாட்டங்கள் எத்தனை? . அதுவும் எதிரணியில் உள்ள முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் ஹிஸ்புல்லா இணைந்து செயற்படும் நிலையில் மீளப்பெறுவது எப்படிச் சாத்தியமானது?
பட்டிருப்பு முன்னாள் எம்.பி.கணேசலிங்கம் குடியேற்ற கிராம வயல்களுக்கான பாய்ச்சல் நீரை, தாந்தாமலை புதைபொருள் ஆராய்ச்சியை ஆர்ப்பாட்டம் செய்து தீர்வுகாணவில்லை. இரவோடிரவாக ஒரு கையளவு இளைஞர்களுடன் அவரால் செய்ய முடிந்தது. முடிந்தால், துணிவு இருந்தால் அப்படி ஒன்றை செய்து காட்டுங்கள்.
கிளி வெட்டியில் அரசமரம் ஒன்று இரவோடிரவாக காணாமல் போனது.
அ. தங்கத்துரை அண்ணரின் சாதனை அது போன்ற ஒன்று உங்களால் முடியுமா?
வெறும் சத்தவெடி ஒரு நொடிப்பொழுது அரசியல். மக்களின் பிரச்சினைகளுக்கான தற்காலிக தீர்வு கூட இல்லை. அதையும் தடுப்பதாகவே அமைகிறது.
எதிர்கட்சி என்றால் , அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்ப்பது, என்ற கருத்தியல் ஜனநாயகம் அல்ல. இது உருப்படியான – நடைமுறைச் சாத்தியமான அரசியல் கொள்கை இல்லாததன், ஜதார்த்தத்தை புரிந்து கொள்ளாததன், மாற்று அணுகுமுறை வங்குரோத்தின் அரசியல் வெறுமை.
ஆக, தமிழர் அரசியலின் இன்றைய தேவை ஒரு புதிய மாற்று அணுகுமுறை….!