— கருணாகரன் —
சட்டமா அதிபரின் (அரசு) அழுத்தத்தத்தினால் பதவியைத் துறந்ததாகச் சொல்லப்படும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தும் அரசின் செயற்பாடுகளை எதிர்த்தும் பல விதமான போராட்டங்கள் தமிழ்ப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் அரசியற் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் கலந்து கொள்கின்றனர். சில போராட்டங்களை இவற்றில் சில தரப்புகள் முன்னெடுப்பதையும் காண முடிகிறது.
அதில் ஒரு போராட்டம், “நீதி தேவதைக்கு அரோஹரா”, ”இலங்கைக்கு அரோஹரா..” என்று கொக்குவிலில் நடந்தது. இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் என்ன கருதினார்களோ தெரியாது. ஆனால், பலருக்கும் இது பகடியாகவே பட்டது.
இன்னொரு போராட்டம், மனித சங்கிலிப் போராட்டமென யாழ்ப்பாணத்தில் நடந்தது. அதுவும் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை.
இறுதியாக ஹர்த்தால் அறிவிக்கப்பட்டது. இதனை ஏழெட்டுக் கட்சிகள் இணைந்து அறிவித்துள்ளன. இதுவும் புதிதல்ல. வழமையாக இந்தக் கட்சிகள் செய்கின்ற வேலைதான். இதனுடைய பயன் எப்படி அமையும் என்று எல்லோருக்குமே தெரியும்.
வடக்குக் கிழக்கில் கடைகள், சந்தைகள் மூடப்படும். சந்தைகள் இயங்காது. பொதுப்போக்குவரத்து முடங்கும். இதிலும் அரச பேருந்துகளும் புகையிரத சேவையும் முடங்காது. அரச திணைக்களங்களும் பாடசாலைகளும் வழமையைப் போல நடைபெறும். மாணவரின் வருகை சில இடங்களில் குறைந்திருக்கும். நகரங்கள் வெறிச்சோடிப் போயிருக்கும். மற்றப்படி எல்லாமே வழமையைப்போல நடக்கும்.
மாலையில் தமிழ் இணையத் தளங்களும் மறுநாள் தமிழ்ப் பத்திரிகைகளும் “வடக்குக் கிழக்கு முடங்கியது. ஹர்த்தால் பூரண வெற்றி. அரசுக்குச் சாட்டையடி..” என்றவாறாகச் செய்திகளை வெளியிடும். அதோடு வரலாற்றுக் கடமை முடிந்து விடும். இதற்கப்பால் ஹர்த்தால் எந்தப் பயனையும் தமிழ்ச்சமூகத்துக்குத் தந்து விடாது.
ஏறக்குறைய இதொரு சுய இன்ப விளையாட்டுத்தான். அல்லது நாமே நம்முடைய முதுகில் தட்டிப் பாராட்டிக் கொள்ளும் சங்கதியே.
ஹர்த்தால் என்றால் அது அரசை, ஆட்சியாளர்களை முடக்குவதாக இருக்க வேண்டும். அரசும் ஆட்சியாளர்களும் திணற வேண்டும். அப்பொழுதுதான் ஹர்த்தாலின் தாக்கம் எப்படியானது என்று அதற்குப் புரியும். வடக்குக் கிழக்கில் மட்டும் நிகழ்த்தப்படும் ஹர்த்தால் வடக்குக் கிழக்கு மக்களை மட்டுமே பாதிக்கும். அரசுக்கு உண்டாகும் பாதிப்பு மிக மிகச் சிறியதாகவே இருக்கும். ஆகவே இதையிட்டு அரசு கணக்கிற் கொள்ளாது. இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
” அப்படியென்றால் ஹர்த்தால் தோற்றுப் போன அரசியல் வடிவமா,?” என்று நீங்கள் கேட்கலாம்.
“ஜனநாயக ரீதியாக மக்களும் அரசியற் தரப்பினரும் முன்னெடுக்கக் கூடிய மிகச் சிறந்த போராட்ட வடிவங்களில் ஒன்று ஹர்த்தால். அப்படித்தான் காந்தி தொடக்கம் பலரும் ஹர்த்தாலைக் கையாண்டிருக்கிறார்கள். தனியே ஹர்த்தாலுடன் மட்டும் அவர்கள் நின்று விடவில்லை. ஹர்த்தாலையும் தமது அரசியற் செயற்பாட்டில் ஒன்றாகக் கையாண்டனர். அதில் வெற்றியும் கண்டனர்.
இங்கே முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தால் அப்படியானதல்ல. இதனால் ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது. இதை நமது அரசியல் தலைவர்(?)களும் நன்றாக அறிவர். ஆனால், அவர்களுக்கு வேறு கதியில்லை. ஏனென்றால் செயற்பாட்டு அரசியலை முன்னெடுப்பதற்கு யாரும் தயாரில்லை. புதிதாகச் சிந்திக்கும் திறனும் அவர்களிடம் கிடையாது. ஊடகர்கள், அரசியல் பத்தியாளர்கள், மக்கள் எல்லோருக்கும் கூட இதைப்பற்றித் தெரியும்.
ஆகவே எல்லோரும் தெரிந்து கொண்டே ஆடுகிற நாடகம் இது. அப்படியென்றால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்றுதானே அர்த்தம்!
இதற்குக் காரணம், தமிழ் அரசியலின் கையறு நிலையாகும். இனி என்ன செய்வது என்று தெரியாது குழம்பிக் கிடக்கிறது தமிழ்ச்சமூகம்.
முக்கியமாக இது போருக்கு முந்திய காலமா? போர்க்காலமா? போருக்குப் பிந்திய காலமா? என்ற தெளிவே பலருக்குமில்லை. ஏனென்றால், போருக்கு முந்திய கால Pre-war politics (1980 க்கு முந்திய) அரசியலே இப்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. அதே சொல்லாடல்கள். அதே அறிக்கைகள். அதே பிரகடனங்கள். அதே அரசியல் வழிமுறைகள்.
ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்து விட்டன. முக்கியமாக 30 ஆண்டுகளாக போர்க்கால அரசியல் (Wartime Politics) மேற்கொள்ளப்பட்டது.
இப்பொழுது போருக்குப் பிந்திய கால அரசியலை (Post-war politics) முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் அது முன்னெடுக்கப்படவில்லை. இதற்கான புரிதல் – விளக்கம் பலரிடத்திலும் இல்லை.
போர்க்குற்ற விசாரணை, அரசியற் கைதிகள் விவகாரம், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான குற்றச்சாட்டு, மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்ட சவால் அல்லது நெருக்கடி, நில மீட்பு போன்றனவெல்லாம் போருக்குப் பிந்திய கால (Post-war politics) அரசியல்தானே என்று நீங்கள் கேட்கலாம்.
இவையும் அவற்றில் அடங்கும். ஆனால் இவை மட்டுமல்ல நமது அரசியல் முன்னெடுப்புக்குரியவை. இவை உப பிரச்சினைகள். பிரதான பிரச்சினைகள் வேறு. அவை பலவிதமானவை. அவற்றைப்பற்றிய கரிசனையே நமக்கிருப்பதில்லை. அல்லது அவற்றின் மீதான கவனம் குவிக்கப்படுவது குறைவு.
தவிர சமகாலச் சிக்கல்களாக இருக்கும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பதால் (புலம்பிக் கொண்டிருப்பதால்) எந்தப் பயனுமில்லை.
அரசு இந்த மாதிரிப் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. நில அபகரிப்பு, தொல்பொருட் திணைக்களத்தின் தவறான அல்லது அவசியமற்ற நடவடிக்கைகள் (தலையிடிகள்), பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள், அதிகாரக் குழப்பங்கள் (மத்தி, மாகாணம் போன்றன), நிர்வாக ஒழுங்கீனங்கள் (ஆளுனர், அதிகாரிகள் நியமனங்கள் தொடக்கம் நிதி ஒதுக்கீடுகள், நிதிக்கையாளல்கள் போன்றவை) இப்படி எதையாவது அவ்வப்போது உருவாக்கி குழப்பிக் கொண்டேயிருக்கிறது.
அப்படியானவற்றில் ஒன்றுதான் நீதிபதி சரவணராஜா விவகாரமும்.
இது தீர முன்பு இன்னொரு புதிய பிரச்சினையை நம்முடைய காலடியில் கொழுத்திப் போட்டு விடும்.
அப்பொழுது நாம் அதற்குப் பின்னே ஓடுவோம்.
ஒடுக்குமுறை அரசுகளின் உத்தி அப்படித்தானிருக்கும். இதைப் புரிந்து கொண்டு, இதை முறியடிக்கும் ஆற்றலுடன் நமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அதற்கு ஆளில்லை. அப்படி யாராவது முன்வந்தாலும் அதை ஆதரிப்பதற்கும் ஆளில்லை.
ஆகவேதான் இந்த மாதிரிக் ஹர்த்தால் விளையாட்டு. இதைச் சோம்பேறி அரசியலின் வடிவமாக்கியாயிற்று.
செயற்பாட்டு அரசியலின் பலவீனமே இப்படியான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. அடுத்தது புதிதாகச் சிந்திக்க முடியாத – அப்படிச்சிந்திப்பதற்கு அச்சப்படும் தயக்கம். இதனால்தான் இந்த மாதிரிப் பழைய குப்பையைக் கிளறி எதையாவது எடுப்போம் என இலகுவழியில் சிந்திக்கத் தூண்டுகிறது. இதில் செயற்பாட்டியக்கப் பாரம்பரியத்திலிருந்து வந்த சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோரும் சிக்கியிருப்பதுதான் வரலாற்றின் துயரம். இவர்களும் தோற்றுப்போன அரசியல் வடிவத்திற்குள் சிக்குண்டிருப்பது கவலையளிப்பது. இவர்களாவது புதிதாகச் சிந்திக்க வேண்டும்.
அடுத்த தலைமுறை என்று சொல்லப்படும் இளைஞர்களாக இருப்போரும் ஹர்த்தால், எதிர்ப்புப் போராட்டம் என்று அங்கங்கே நடத்தப்படுகிற குட்டிக் குட்டி எதிர்ப்புகளுக்கு அப்பால் சிந்திக்கக் கூடியவர்களாக இல்லை. பல்கலைக்கழக மாணவர் இயக்கங்கள் எப்போதோ காலாவதியாகி விட்டன. இளைஞர்களுக்கு அடையாளமான புதிய சிந்தனைத் திறனோ, துடிப்போ, புதியன ஆக்கும் பண்போ, கூட்டுழைப்போ இல்லாமற் போய்விட்டது.
ஆகவேதான் கையறு நிலையின் வெளிப்பாடு இது என்ற நிலை வந்திருக்கிறது.
அப்படியல்ல, ஹர்த்தாலுக்கு இன்னும் மதிப்புண்டு என்றால், அதொரு வீரியமிக்க போராட்ட வடிவம்தான் என்றால் அதைப்போல இப்பொழுது பதவியிலிருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவியை ராஜினாமாச் செய்யலாம். அவர்களுடைய இடத்துக்குப் பதிலாக அடுத்த நிலையில் உள்ளவர்கள் உடனே முண்டியடித்து அந்தப் பதவியை ஏற்காமல் அவர்களும் அதை நிராகரிக்க வேண்டும். அரசு சார்ப்புக் கட்சிகளில் அல்லது சிங்களக் கட்சிகளில் போட்டியிட்டவர்கள் அந்த இடத்தை நிரப்புவார்கள் அல்லவா என்று நீங்கள் கேட்கலாம்.
வடக்கில் அநேகமாகப் போட்டியிட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள்தான். வன்னியில் முஸ்லிம்களும் சில சிங்கள வேட்பாளர்களும் உண்டு. ஆனால் அங்கயன், விஜயகலா தொடக்கம் இவர்கள் அனைவரும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குத் தாமும் ஆதரவு என்று சொல்வதுடன் விடுதலைப்புலிகளையும் தாம் ஆதரிப்பதாகப் பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டிருப்பவர்கள். ஆகவே இந்தச் சூழலில் இவர்களுடைய முகமூடிகள் அப்போது வெளிப்படும். அல்லது உண்மை நிலவரப்படி இவர்களும் நிராகரிப்புச் செய்து நெருக்கடியை உண்டாக்குவர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால், அதற்குப் பிறகு பட்டியலில் உள்ளவர்களும் பதவியை ஏற்காமல் விட்டால் என்ன நடக்கும் என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். அப்படியிருந்தால், அவை வெற்றிடமாகும். இடைத்தேர்தல் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் இந்தக் ஹர்த்தால், பேரணி, சிற்றணி போன்ற எதிர்ப்புகளை விட இது பெரிய எதிர்ப்பாக இருக்கும்.
இத்தகைய ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக 1990 இல் ஈரோஸ் இயக்கத்தின் (ஈழவர் ஜனநாயக முன்னணியின்) 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறந்திருந்தனர். அன்று அதொரு பெரிய வினையாக இருந்தது.
அப்படிச் செய்தாலும் ஒன்றும் நிகழப் போவதில்லை எனினும் எதிர்ப்பின் வடிவம் அது. இன்னும் சொன்னால், இந்தக் ஹர்த்தால் விளையாட்டை விட அது கொஞ்சம் கவர்ச்சியான விளையாட்டாக இருக்கும்.
உலகத்தின் புருவத்தைக் கொஞ்சம் உயர்த்த வைக்கும்.