— தம்பியப்பா கோபாலகிருஷ்ன் —
“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் புதிய அரசமைப்பு இப்போதைக்கு வரும் சாத்தியம் இல்லாத நிலையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் உங்களது நகர்வு சரியானது”
என 23.08.2023 அன்று யாழ்ப்பாணத்தில் தன்னைச் சந்தித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரிடம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார் (‘ஈழநாடு’, 24.08.2023).
இந்தச் செய்தியைப் படித்தபோது இந்து சமுத்திரப் பிராந்தியப் புவிசார் அரசியல் மற்றும் பூகோள அரசியல் நீரோட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
13 ஆவது திருத்தம் உருவாவதற்குக் காரணமாகவிருந்த 1987 ஆம் ஆண்டின் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் முழுமையாகவும் முறையாகவும் நிறைவேற்றப்படுவதன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு மேலோங்குவதை விரும்பாத அமெரிக்கா அப்போது அதனைக் குழப்பும் காரியங்களையே திரை மறைவில் முன்னெடுத்திருந்தது.
அப்போதிருந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமான அமரர் அ. அமிர்தலிங்கத்திடம் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு அமிர்தலிங்கம் அவர்கள் மறுத்துவிட்டதாகவும்கூட ஒரு கதை கசிந்தது. அது பெரிதாக அரசியல் பொதுவெளியில் வெளிக்கிளம்பவில்லை. இராஜதந்திர சம்பிரதாயங்கள் அல்லது நாகரிகங்கள் அக்கதை வெளிக்கிளம்புவதைத் தடுத்திருக்கலாம்.
ஆனாலும், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்ததற்கும், இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கை வந்து பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் போர் கொடுத்ததற்கும், 13 ஆவது திருத்தத்தின் வாயிலாகவும் மாகாண சபைகள் சட்டத்தின் மூலமும் உருவான வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்ட மாகாண அரசு நிர்வாகத்தைச் சீர்குலைப்பதற்கும் அமெரிக்கா பின்னணியிலிருந்து அனுசரணை வழங்கியது என்பது பரவலாக பேசப்பட்ட விடயமாகும்
இதன் நீட்சியாகத்தான் 1989இல் கொழும்பில் அ. அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் 1990 இல் சென்னையில் இடம்பெற்ற பத்மநாபா மற்றும் சக தோழர்களின் படுகொலையும், 1991 தமிழ்நாட்டில் வைத்து இடம்பெற்ற ராஜீவ் காந்தி தற்கொலைக் குண்டுதாரியினால் கொல்லப்பட்ட சம்பவமும் இடம்பெற்றன என்பது இரகசியமான செய்திகளல்ல.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே கையெழுத்திட்டார் என்பதும் (அவரே அவ்வொப்பந்தத்தின் பிதாமகர்), இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்தே அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் செயற்பட்டார் என்பதும் பத்மநாபாவைச் செயலாளர் நாயகமாகக்கொண்ட ஈபிஆர்எல்எஃப் இயக்கமே/கட்சியே இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதற்கான பங்களிப்பை வழங்கியது என்பதும் அனைவரும் அறிந்ததே.
இதற்காகவே இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கொல்லப்பட்டார்கள் என்று வரலாறு பதிவு செய்தும் வைத்திருக்கிறது. வரலாற்றுப் புத்தகத்திற்குள் புதைந்து போயுள்ள இவ்விடயங்களையெல்லாம் மேலோட்டமாகவேனும் இப்போது சுட்டிக்காட்டவேண்டியதன் நோக்கம் என்ன?
அன்று (1987) இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் அமுலாக்கலை உள்ளூர விரும்பியிராத அமெரிக்கா 36 வருடங்களுக்குப் பின் இன்று (2023) அந்த ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தமிழர் தரப்பின் நகர்வு சரியானது எனப் பகிரங்கமாகக் கூறுகிறது என்றால் இந்த மன மாற்றம் எதனால் ஏற்பட்டது என்பதைத் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளவும் இதில் உள்ள நுண்ணரசியலைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.
2005 இற்குப் பின்னர் ஆரம்பித்து அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுவரும் சீனாவின் ஊடுருவலைத் தடுப்பதற்காக இப்போது இந்தியாவுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவை ஆசுவாசப்படுத்தி மகிழ்விக்கவேண்டிய இந்து சமுத்திர புவிசார் அரசியற்தேவை இருக்கிறது. இந்த உலக ஒழுங்கைத் தமிழர்கள் புரிந்து கொள்ளாமல்விட்டதுதான் 2009 இல் தமிழர்களை முள்ளியவாய்க்காலில் பேரழிவுக்கு இட்டுச் சென்றது.
இந்த விடயத்தை அதிகம் விபரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை நாடுகளின் அது அமெரிக்காவாகவிருந்தாலென்ன – கனடாவாகவிருந்தாலென்ன-பிரித்தானியாவாகவிருந்தாலென்ன அவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளே அல்லது இம் மேற்கு நாடுகளின் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் இயங்கும் ஐ நா. போன்ற உலக தாபனங்களின் நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளே அகப்படாது, இந்தியாவை முழுமையாகவும்-உளப்பூர்வமாகவும்-சந்தேகத்திற்கிடமில்லாமலும் அனுசரித்துப் போவதே இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் சமூக-பொருளாதார அரசியல் ஏற்றத்தைத் தரும். எதிலும் தெளிவு வேண்டும். அந்தத் தெளிவு என்பது ஆடு நனைகிறது அன்று அழும் ஓநாய்களை அடையாளம் காணும் விடயத்தையும் உள்ளடக்கியதாகும்.
ஈழத் தமிழர்கள் தங்களுக்கு ஆதரவு தரும் சக்திகளை அரவணைத்துப் போவதில் தவறில்லை. ஆனால், அது அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையாகிவிடக்கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் 1987 இல் அந்தத் தவறைத்தான் செய்தார்கள். அதன் பின்விளைவுதான் தமிழ் மக்களை 2009இல் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவுக்கு இட்டுச் சென்றது.
ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரமான நேச சக்தி இந்தியாதான் என்பதில் ஈழத் தமிழர்கள் தெளிவாக இருக்கவேண்டும். தமிழர் தரப்பினர் இந்தியா மீது விரல்களை நீட்டுவதைக் கைவிட்டு உளப்பூர்வமாகக் கைகளை நீட்டவேண்டும். ஈழத் தமிழர் தரப்பின் அரசியற் செயற்பாடுகள் குறித்து அதிருப்தியும் சலிப்பும் நம்பகமற்ற தன்மையும் கொண்டுள்ள இந்தியா அப்படியான மனப்பாங்கில் இருந்து விடுபட்டு 1987 க்கு முன்பிருந்ததுபோல் ஈழத் தமிழர்களை நம்புகின்ற வகையில் ஈழத் தமிழர்கள் தமது எதிர்கால அரசியலைக் கட்டமைத்துக்கொள்ளவேண்டும். இதனைத் தற்போது அரசியல் அதிகாரங்களை வைத்திருக்கும் அதாவது தேர்தல்களில் வென்று மக்களது அங்கீகாரங்களை வைத்திருக்கும் போலித் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள். அவர்களது ஒரே கனவு ஆசனங்களே (கதிரைகளே) தவிர வேறில்லை. எனவே எதிர்வரும் எல்லாத் தேர்தல்களிலும் ஈழத் தமிழர்கள் இப்போலித் தமிழ்த் தேசியவாதிகள் எல்லோரையும் நிராகரித்து இந்தியா நம்பிக்கை வைக்கக்கூடிய புதிய மாற்று அரசியல் அணியொன்றை அடையாளம் கண்டு அதற்குத் தங்கள் அங்கீகாரத்தை வழங்கிப் பார்க்கவேண்டும். அத்தகைய செயற்பாடு ஒன்றுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரும் .