— வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கையின் துறைமுகங்களுக்கு பல நாடுகளின் கப்பல்கள் வந்துபோகின்றன. எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை. ஆனால் சீனக்கப்பல்கள் வருகின்ற வேளைகளில் எல்லாம் இந்தியா கிளப்புகின்ற ஆட்சேபனை இலங்கைக்கு ஒரு இராஜதந்திரச் சிக்கலை ஏற்படுத்துகிறது.
கடந்த வருடம் ஆகஸ்டில் யுவான் வாங் 5 என்ற சீன ஆய்வுக்கப்பல்
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தபோது இலங்கை எதிர்நோக்க வேண்டியிருந்ததைப் போன்ற இக்கட்டு நிலை இம்மாத பிற்பகுதியில் மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வங்குரோத்து நிலையடைந்த இலங்கை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடியினால் அவலத்துக்குள்ளாகியிருந்தபோது இந்தியா 400 கோடி அமெரிக்க டொலர்கள் அவசர தொடர் கடனை வழங்கி உதவிக்கொண்டிருந்தவேளையில் அந்த கப்பல் வந்தது. இந்தியாவின் ஆட்சேபனைக்கு மத்தியிலும் இலங்கை அந்த சிக்கல் நிலையை ஒருவாறாக சமாளித்துக் கொண்டது.
இரு வாரங்களில் வரவிருப்பதாக கூறப்படும் ஷி யான் 6 என்ற சீனக்கப்பல் தொடர்பில் ஏற்படக்கூடிய சிக்கலை இலங்கை எவ்வாறு சுமுகமாகக் கையாளப்போகிறது என்பது இப்போது முக்கியமான கேள்வி.
யுவான் வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தபோது ஆட்சேபனை தெரிவித்ததற்கு முன்வைத்த காரணத்தையே ஷி யான் 6 கப்பலின் வருகை தொடர்பிலும் இந்தியா கூறுகிறது.
சீனக்கப்பல் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று காரணம் கூறியே புதுடில்லி அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கோ அல்லது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கோ வருவதற்கு இலங்கை அனுமதியை மறுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் கப்பல் சமுத்திரவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதாகவும் எந்த வழியிலும் எந்தவொரு நாட்டினதும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை அது தோற்றுவிக்காது என்றும் சீனா கூறுகிறது.
கடந்த மாதம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு மேற்கொள்விருந்த விஜயம் இறுதிநேரத்தில் கைவிடப்பட்டதற்கு புதுடில்லி தரப்பில் வேறு காரணங்கள் கூறப்பட்டபோதிலும் கூட சீனக்கப்பலின் வருகைக்கு இந்தியா தெரிவித்த ஆட்சபனைக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை எதுவும் வெளிக்காட்டப் படாதமையே முக்கிய காரணம் என்றும் நம்பப்படுகிறது.
சீனக்கப்பல்களின் வருகை தொடர்பில் மூளும் பிரச்சினைக்கு இலங்கை இந்தியாவையோ அல்லது சீனாவையோ அசௌகரியப்படுத்தாத ஒரு தீர்வைக் காணவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி வந்திருக்கிறது.
இலங்கையின் துறைமுகத்தில் தரித்துநிற்கும் நாட்களில் எந்தவொரு ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே கடந்த வருடம் யுவான் வாங் 5 கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துநிற்க அரசாங்கம் அனுமதித்தது.
சீனக்கப்பல்களின் இலங்கை வருகை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற இந்தியாவின் விசனம் சான்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதா அல்லது இலங்கை விதித்த நிபந்தனையின் அடிப்படையில் கடந்த வரும் சீனக்கப்பல் ஆராய்ச்சி எதையும் செய்யவில்லையா என்பது யாருக்கு வெளிச்சம்?
இந்தியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் நெருக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் அரசாங்கம் முன்னைய அணுகுமுறையின் அடிப்படையிலேயே தற்போதைக்கு ஒரு வழிவகையைக் கண்டுபிடித்திருப்பதாக கூறப்பட்டது. அதாவது தேசிய நீரியல் ஆராய்ச்சி நிறுவனமான ‘நாரா’ வின் பிரசன்னம் இல்லாமல் இலங்கையின கடற்பரப்பில் ஷி யான் 6 எந்தவிதமான ஆராய்ச்சிப் பணியையும் செய்யக்கூடாது என்று அரசாங்கம் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகின.
அதேவேளை, மண்டலமும் பாதையும் செயற்திட்ட உச்சிமகாநாட்டில் (Belt and Road Initiative Summit ) பங்கேற்பதற்காக விரைவில் சீனாவுக்கு விஜயம் செய்யவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி சி ஜின்பிங்குடன் பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் இந்த விவகாரத்தையும் கலந்தாலோசிப்பதற்கு வசதியாக கப்பலின் வருகையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தபோதிலும் அதற்கு பெய்ஜிங் இணங்க மறுப்பதாகவும் இந்த மாதமே கப்பலின் வருகை இடம்பெறவேண்டும் என்று உறுதியாக நிற்பதாகவும் நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.
இம்மாதம் கொழும்பில் இந்துசமுத்திர கரையோர நாடுகள் சங்கத்தின் உச்சிமகாநாடு ( Indian Ocean Rim Association Summit ) நடைபெறவிருப்பதால் அது தொடர்பிலான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதையும் காரணமாகக் கூறி அரசாங்கம் கப்பலின் வருகையை தாமதிக்குமாறு சீனாவிடம் கேட்டது என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
இந்தியா மாத்திரமல்ல இப்போது அமெரிக்காவும் ஜப்பானும் கூட சீனக்கப்பலின் வருகை தொடர்பில் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் சிக்கல் மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த முத்தரப்பு நெருக்குதல்களை ஜனாதிபதி விக்கிரமசிங்க எவ்வாறு கையாளப்போகிறார்?
அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் புவிசார் அரசியல் அக்கறைகள் இருக்குமானால் அவை குறித்து நேரடியாகவே இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்றும் இலங்கை விவகாரத்தில் மூன்றாவது நாடொன்றின் அக்கறைக்காக அந்த நாடுகள் குரலெழுப்பத் தேவையில்லை என்றும் அண்மையில் நியூயோர்க்கில் அமெரிக்க இராஜாங்க இணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்டைச் சந்தித்தவேளை வெளியுறவு அலி சப்ரி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு சார்பாகவே சீனக்கப்பலின் இலங்கை வருகை விவகாரத்தில் அமெரிக்காவும் ஜப்பானும் தலையிடுகின்றன என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது என்பதை இது காட்டுகிறது.
இத்தகைய பின்னணியிலேயே ஜனாதிபதி விக்கிரமசிங்க அண்மைய நாட்களில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்தக் கூட்டத்தொடர் உட்பட பல சர்வதேச மகாநாடுகளில் வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டாபோட்டியினால் மூன்றாம் உலக நாடுகள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக முறையிட்டு நிகழ்த்திய உரைகளை நோக்கவேண்டும்.
நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பாடுபடும் இரு நிறுவனங்கள் ( Carnegie Endowment for International Peace and Sasakawa Peace Foundation ) நியூயோர்க்கில் ஏற்பாடுசெய்த ‘தீவுகள் பேச்சுவார்த்தை ‘ (Islands Dialogue ) மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய விககிரமசிங்க சீனாவின் உளவுக்கப்பல் எதுவும் இலங்கைக்கு வந்ததில்லை என்று கூறினார்.
“இலங்கைக்கு உளவுக்கப்பல்கள் வருகின்றன என்பதை நிரூபிப்பதற்கு எவரிடமும் எந்த சான்றும் இருந்ததில்லை. இலங்கையின் தேசிய நீரியல் ஆராய்ச்சி நிறுவனத்துடனும் பல பல்கலைக்கழகங்களுடனும் சீன விஞ்ஞான அகாடமி உடன்படிக்கைகளை செய்திருப்பதனால் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் வருகின்றன. கடந்த பத்து வருடங்களாக ஆராய்ச்சிக்கப்பல்கள் வந்தன. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த ஆராய்ச்சிக் கப்பல்கள் உளவு வேலைகளுக்காக பயன்படுத்தப்படக்கூடும் என்று ஒரு சில நாடுகள் பிரச்சினை கிளப்பின.
“வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அனுமதி வழங்குவதற்கு கடற்டையினால் வகுக்கப்பட்ட தரம்வாய்ந்த செயற்பாட்டு நடைமுறை யொன்றை இலங்கை கொண்டிருக்கிறது. அந்த நடைமுறை குறித்து இந்தியாவுடன் அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்தியாவினால் விதந்துரைக்கப்பட்ட திருத்தங்களையும் இலங்கை சேர்த்திருக்கிறது.
“அதனால் இப்போது இலங்கை வருகின்ற எந்த கப்பலும் இந்தியாவுடன் ஆலோசனை கலந்து நாம் கொண்டு வந்திருக்கும் நடைமுறைக்கு உட்படவேண்டும். அதனால் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய எந்தவொரு கப்பலும் வருவதாக என்னால் காணமுடியவில்லை” என்று ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டார்.
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலோ அல்லது இராணுவக் கப்பலோ எதுவென்றாலும் இலங்கைக்கு வருவதாகக் கூறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தனது பாதுகாப்பு குறித்து இந்தியா வெளிப்படுத்துகின்ற அக்கறைகள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருப்பதாக சந்தேகிக்கும் சில அவதானிகள், இந்தியா அதன் ஏவுகணைகளை அல்லது அணுவாயுதங்களை எங்கெல்லாம் நிலைவைத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு சீனா இலங்கைக்கு கண்காணிப்புக் கப்பல்களை அனுப்ப வேண்டியதில்லை. சீனாவிடம் உளவுச் செய்மதிகள் இருக்கின்றன. இந்த செய்மதிகளை விண்வெளியில் வைத்திருக்கும் நாடொன்றுக்கு வேறு எந்த நாட்டினதும் இரகசிய ஆயுதங்கள் அதிர்ச்சியைத் தரப்போவதில்லை. அந்த அளவுக்கு இன்று செய்மதி தொழில்நுட்பம் அபார வளர்ச்சி யடைந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
அதன் காரணத்தினால் தான் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் துறைமுகங்களில் சீனாவின் முதலீடுகள் குறித்து அமெரிக்காவோ அல்லது வட அத்திலாந்திக் ஒப்பந்த (நேட்டோ) நாடுகள் அமைப்போ பெரிதாக சர்ச்சையைக் கிளப்புவதில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டவும் செய்கிறார்கள். அதனால் இலங்கை மீதான இந்தியாவின் நெருக்குதல் சீனக்கப்பல்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொடர்பிலான விசனத்தின் விளைவானது என்பதையும் விட இந்து சமுத்திரத்தின் தெற்காசியப் பிராந்தியத்தை அதன் ஆதிக்கத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற விருப்பத்தின் விளைவானது என்றும் அந்த அவதானிகள் நம்புகிறார்கள்.
இலங்கையை இந்தியா அதன் செல்வாக்குப் பிராந்தியத்தினதும் பாதுகாப்பு புறஎல்லையினதும் பகுதியாக கருதுகிறது. ஆழமான வரலாற்று மற்றும் சமகால கலாசார ரீதியானதும் மதரீதியானதுமான பிணைப்புக்களைக் கொண்ட இயற்கையான ஒரு நேச நாடாகவும் இலங்கையை இந்தியா பார்க்கிறது. அதனால் ஒரு பிரத்தியேகமான உறவுமுறையை புதுடில்லி கொழும்பிடம் இருந்து எதிர்பார்க்கிறது. இந்தியாவின் போட்டி நாடுகளை அல்லது அதனுடன் பகைமைகொண்ட எந்தவொரு சக்தியையும் இலங்கை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். மேலும் ‘அயலகத்துக்கு முன்னுரிமை’ ‘ ( Neighborhood First policy) என்ற கொள்கை மற்றும் கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் ஊடாக இந்தியா அதன் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புக் குடையின் கீழ் இலங்கையைக் கொண்டுவருவதற்கு மிகுந்த அக்கறையுடன் முயற்சிக்கின்றது என்று கொழும்பில் இருந்து இயங்கும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே. பாலச்சந்திரன் கூறுகிறார்.
ஆனால், இந்தியா நெருக்குதல் கொடுக்கிறது அல்லது வேண்டுகோள் விடுக்கிறது என்பதற்காக சீனாவுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கக்கூடிய நிலையில் இலங்கை இல்லை. கடந்த வருடம் படுமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியபோது வழங்கிய அவசரக் கடனுதவிக்கு கைம்மாறு செய்யும் வகையில் கொழும்பின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே சீனக்கப்பல்களின் வருகைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து வருகிறது என்று எண்ணம் இலங்கையில் பரவலாக இருக்கிறது. கொழும்பு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் பலவும் இது குறித்து ஆசிரிய தலையங்கங்களை தீட்டியிருக்கின்றன.
தனது கோரிக்கையை இலங்கை மதிக்கவில்லை என்பதற்காக இந்தியாவும் கூட இலங்கையுடன் கடுமையாக நடந்து கொள்வதில்லை எனலாம். முற்றுமுழுதாக சீனாவிடம் இலங்கை சரணடைந்துவிடுவதற்கு வழிவகுக்கக்கூடிய நடவடிக்கைகளில் இறங்குவதும் மூலோபாய அடிப்படையில் இந்தியாவுக்கு பாதகமானதாகவே அமையும்.
இலங்கைக்கு மிகவும் கூடுதலான இரு தரப்புக் கடனுதவியை வழங்கிய நாடான சீனா முக்கியமான உட்கட்டமைப்பு துறைகளில் 650 கோடி டொலர்களுக்கும் அதிகமான நிதியை முதலீடு செய்திருக்கிறது. இந்தியா உட்பட இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு ஆர்வம் கொண்டிருக்கும் வேறு எந்தவொரு நாடும் சீனாவின் உதவிக்கு நிகராக எதையும் செய்துவிடவும் முடியாது.
வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்கும் இலங்கையின் திட்டத்துக்கு தயக்கத்துடன் முன்னர் ஒத்துக்கொண்ட சீனா கொழும்பின் எதிர்பார்ப்புக்கு ஏற்றமுறையில் அது விடயத்தில் நடந்துகொள்ளவில்லை என்பது அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு இலங்கை வந்த பின்னரே வெளியில் தெரியவந்தது.
சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கடந்தவாரம் செய்தியாளர்கள் மகாநாட்டில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறினார். பாரிஸ் கழக நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளுடன் ஒப்பிடும்போது சீனாவுனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் தாமதமாகிறது என்ற செய்திகளை மறுத்துரைக்கையிலேயே அவர் அவ்வாறு கூறினார்.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க பெய்ஜிங்கில் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் கடன் மறுசீரமைப்பு அதி முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கும் என்று உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஷி யான் 6 கப்பலின் வருகை தொடர்பில் சீனாவுக்கு விசனத்தைத் தரக்கூடிய எந்த அணுகுமுறையையும் இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடியது சாத்தியமில்லை. இந்தியாவையும் சீனாவையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தக்கூடிய தீர்மானம் ஒன்றை இலங்கை எடு்ப்பதும் நடைமுறைக்கு சாத்தியமானதல்ல.
( ஈழநாடு )