அரசியல்- சமூக- வரலாற்று நாவல்
(‘அரங்கம்’ தொடர் நாவல்அங்கம் – 02)
— செங்கதிரோன் —
பின்னோக்கிச் சுற்றிய காலக்கடிகாரம் 1966 ஆம் ஆண்டில் வந்து தரித்தது. 1966ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் கடைசி வாரத்தில் ஒரு நாள். கோகுலனுக்கு அப்போது வயது பதினாறு.
மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்தியமகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த கோகுலன் அந்தவருடம் இறுதியில்தான் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதி முடித்திருந்தான். விடுதியில் தங்கியிருந்து கல்விகற்ற கோகுலன் தன்னோடு பரீட்சையெழுதிய தனது ஏனைய வகுப்பு நண்பர்கள் நண்பிகளைப் போலவே வீட்டுக்குப் பயணமாகும் வேளை.
வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தின் முன் அமைந்திருந்த பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து நீலநிறக் கட்டைக் காற்சட்டையும் வெள்ளை அரைக் கைச் சேர்ட்டும் அணிந்து கொண்டு கையில் புத்தகங்கள், கொப்பிகள், உடுப்புகள் அடங்கிய ‘றங்கு’ப் பெட்டியுடன் ‘வாழைச்சேனை – மட்டக்களப்பு’ என்ற பெயர்ப்பலகையுடன் வந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் – இ.போ.ச – சொந்தமான ‘பஸ்ஸுக்குக் கையைக் காட்டி நிறுத்தி அதில் ஏறினான்.
‘பஸ்’ கொம்மாதுறை செங்கலடி – ஏறாவூர் – ஆறுமுகத்தான் குடியிருப்பு – மயிலம்பாவெளி – தன்னாமுனை – பிள்ளையாரடி ஊர்களைக் கடந்து மட்டக்களப்பு பஸ் நிலையத்தை அடையும்போது பொழுது பட்டுவிட்டது.
மட்டக்களப்பு பஸ் நிலையம், ‘கோட்டைமுனைப்’ பாலம் புளியந்தீவுக்குள் தலைநீட்டும் அந்தத்தில் வாவிக்கரையோரம் வலதுபுறத்தில் அமைந்திருந்தது. ‘பஸ்சை’ விட்டிறங்கிய கோகுலன் தனது ‘றங்கு’ப்பெட்டியுடன் வாவியோரம் நின்றிருந்த அரசமரத்தின் கீழ் இருந்த ‘சர்பத்’ கடைக்கருகில் பொத்துவில் போவதற்காகக் காத்துநின்றான்.
கோகுலன் பொத்துவிலுக்குப் போய்ச் சேர வேண்டும். பொத்துவில் ஊர் மட்டக்களப்பிலிருந்து இலங்கையின் கிழக்குக் கரையோரமாகத் தெற்கே கொழும்பு – இரட்மலான – வெல்வாய – மட்டக்களப்பு வீதிவழியே பின்னோக்கிச் சுமார் 67 மைல் தூரத்தில் அமைந்திருந்தது. கிழக்குமாகாணத்தின் தென்கோடிக்கிராமம்தான் பொத்துவில்.
கோகுலனின் தாய்தந்தையர் பூர்வீகமாகக் காரைதீவைச் சேர்ந்தவர்கள். கோகுலன் ஒருவயதுக் குழந்தையாயிருக்கும்போதே காரைதீவிலிருந்து அவனது பெற்றோர் வீடுவளவையெல்லாம் விற்றுவிட்டு பொத்துவிலுக்குக் குடிபெயர்ந்திருந்தார்கள். கோகுலன் பிறந்த கட்டில் காரைதீவு எனினும் அவனைத் தொட்டில் ஆட்டி வளர்த்தது பொத்துவில்தான். கோகுலன் ஆரம்பக் கல்வி பயின்றது பொத்துவில் மெதடிஸ்தமிசன் பாடசாலை. அங்கு பயின்று ஐந்தாம் ஆண்டு அரசினர் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பேரில் மட்டக்களப்பு வந்தாறு மூலை மத்தியமகாவித்தியாயம் சென்று விடுதியில் தங்கியிருந்து படிக்க வாய்ப்புக் கிடைத்தது. வந்தாறுமூலைக்குப் படிக்கச் சென்ற 1962ஆம் ஆண்டிலேயே அவனது தந்தை நோய்வாய்ப்பட்டுக் காலமாகிவிட்டிருந்தார். இளவயதிலேயே தந்தையை இழந்துவிட்ட கோகுலன் தாயின் வழிகாட்டுதலிலேயே வளர்ந்தான்.
வந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலயம் “நல்லையா மாஸ்ரர்” மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த காலத்தில் அவரது முயற்சியால் நிர்மாணிக்கப்பெற்ற பெரிய பாடசாலையாகும். அரசினர் நடாத்தும் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரீட்சையில் திறமையாகத் தேறிய மாணவர்கள் அங்கு விடுதியில் தங்கியிருந்து படிக்கும் வசதியைப் பெற்றார்கள். மாணவர்களுக்கு ஆண்கள் விடுதியும் மாணவிகளுக்குப் பெண்கள் விடுதியும் இருந்தன. புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகள் மட்டக்களப்புக்கு வடக்கே திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் கிராமத்திலிருந்து மட்டக்களப்புக்குத் தெற்கே அம்பாறைமாவட்டத்தில் பொத்துவிலுக்கும் அப்பால் பாணமைக் கிராமம் வரையிலும் பரவலாக இருந்தார்கள். இவர்களைத் தவிர வெளியூர்களிலிருந்து வந்து கட்டணம் செலுத்திப் படிக்கும் வசதியான குடும்பத்து மாணவர்களும் விடுதியில் தங்கியிருந்தனர். வந்தாறுமூலையின் அயல் கிராமங்களிலிருந்து வெளிமாணவர்களும் இப்பாடசாலையில் கல்வி பயின்றனர். கிழக்கு மாகாணத்தின் எந்தக் கிராமத்துக்குச் சென்றாலும். அங்கு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் படித்த ஒரு மாணவனாவது இருப்பான் எனப் பேசிக் கொள்வார்கள்.
மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்:
இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் அந்திமக்காலம் நெருங்கிக்கொண்டிருந்தபோது, அவர்களது மேலாண்மையின்கீழ் உருவாக்கப்பட்ட சட்டசபையில் (State council) கல்வியமைச்சராக C.W.W. கன்னங்கரா விளங்கினார். இலங்கையில் இலவசக்கல்வியின் தந்தையெனப் பின்னாளில் வர்ணிக்கப்பெற்ற இவர், இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாகப் பின்தங்கிய கிராமங்களை உள்ளடக்கியதாக மத்திய கல்லூரிகளை அறிமுகம் செய்தார்.
அப்போது (1945) மட்டக்களப்பு வடக்குத் தொகுதியைச் சட்டசபையில் பிரதிநிதித்துவப்படுத்திய வ.நல்லையா (நல்லயா மாஸ்டர்) தனது தொகுதிக்குள் அமையத்தக்கதாக ஒரு மத்தியகல்லூரியைப் பெற்றார். இதற்கென ஒரு புதிய கட்டிடத்தை மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 18 கிலோமீற்றர் தூரத்தில் உருவாக்கும்வரை வந்தாறுமூலை எனும் அழகிய பழந்தமிழ்க் கிராமத்திலே உள்ள ஒரு ஆரம்பப்பாடசாலையிலே (தற்போதை விஸ்ணுவித்தியாலயம்) 02.07.1945 அன்று தற்காலிகமாக வந்தாறுமூலை அரசினர் மத்தியகல்லூரி எனும் பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் வந்தாறுமூலையில் சகலவசதியையும் உள்ளடக்கியதாகப் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பெற்ற கட்டிடத் தொகுதிக்கு (தற்போது கிழக்குப் பல்கலைக்கழகம் நிலைகொண்டுள்ள இடம்) 07.01.1952 இல் இடம்மாறியது. அப்போது நல்லையா மாஸ்டர் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தார்.
வந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலயம் இவ்வாறு நிரந்தரமாக நிலைகொண்ட இடத்தில் (தற்போது கிழக்குப்பல்கலைக்கழகம்) இயங்கத் தொடங்கு முன்னர் தற்போது வந்தாறுமூலை விஸ்ணுமகாவித்தியாலயம் இருக்கும் இடத்தில் செயற்பட்டது. அதனையொட்டியதாகப் பெண்கள் விடுதியும் – வந்தாறுமூலைக் கிராமத்திற்கு சுமார் மூன்று கிலோமீற்றர் வடக்கே பிரதானவீதியில் அமைந்திருந்த மாவடிவேம்பு எனுமிடத்தில் தம்பியப்பா என்பவரின் தனியார் தென்னந்தோட்டத்தில் அமைந்திருந்த தனியார் வீட்டில் ஆண்கள்விடுதியும் இயங்கின. பின்னர் இவ்விடுதிகள் 1952 இல் புதிய கட்டிடத்தொகுதிக்கு நிரந்தரமாக இடம்மாறின. ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பெற்றுவரும் மாணவர்களுடன் இப்பகுதியின் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்களும் இக் கல்லூரியில் அனுமதிக்கப் பெற்றனர். பின்னர் K.W.தேவநாயகம் கல்குடாத்தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவும் நீதி அமைச்சராகவும் விளங்கிய காலத்தில் இக்கல்லூரியின் கட்டடித் தொகுதி கிழக்குப்பல்கழகத்திற்கெனச் சுவீகரிக்கப்பட்டதால் 19.10.1980 இலிருந்து தற்போது நிலைகொண்டுள்ள சித்தாண்டிக்கு மட்/வந்தாறுமூலை மத்தியமகாவித்தியாலயம், சித்தாண்டி என்ற பெயர்ப்பலகையுடன் இடம்மாறியது.
உசாத்துணை: “உதயம்” (1995), மட்/வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய 50 ஆவது ஆண்டு, பொன்விழா நிறைவு மலர், வெளியீடு: – பழைய மாணவர் ஒன்றியம், மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், சித்தாண்டி.
மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல்யம் பெற்ற பாடசாலைகளான சிவானந்தாவித்தியாலயம் – மெதடிஸ்த மத்தியகல்லூரி – அர்ச்.மைக்கல்ஸ் கல்லூரி – வின்சன்ற் மகளிர் கல்லூரி – அரசினர் கல்லூரி ஆகியன போன்று கல்வி மற்றும் புறக்கிருத்திய விடயங்களில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயமும் தலைநிமிர்ந்து நின்றது.
பொழுதுபட்ட நேரத்தில் மட்டக்களப்பு பஸ் நிலையத்தை வந்தடைந்த கோகுலன் பொத்துவிலைச் சென்றடைய நள்ளிரவையும் கடந்துவிடும் எனச் சற்று யோசித்தான்.
கோகுலனின் பெற்றோர்கள் காரைதீவைச் சேர்ந்தவர்களென்பதால் அவனது அம்மம்மா மற்றும் அம்மாவின் – அப்பாவின் கூடப் பிறந்தவர்கள் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் காரைதீவில்தான் வசித்தனர்.
தனது தாயார் கூறியிருந்த அறிவுரை அவனுக்குள் தலைநீட்டியது. பொத்துவில் ஊரில் நடுநிசியில் வந்திறங்குவதைத் தவிர்த்துக் கொள்ளும்வகையில் இடையில் காரைதீவில் இறங்கி அம்மம்மாவுடன் தங்கியிருந்துவிட்டு மறுநாளோ அல்லது அதற்கடுத்த நாளோ புறப்பட்டுப் பொத்துவிலுக்கு வரலாம் என்பதுதான் அந்த அறிவுரை ஆகும். ஆனாலும், இடையில் காரைதீவில் தங்கல் ஏதும் இல்லாமல் பொத்துவிலுக்கு நேரே வீட்டுக்குச் செல்வதுதான் கோகுலனின் விருப்பமாகவிருந்தது.
மாதக் கணக்கில் விடுதிச் சாப்பாட்டில் அலுத்துப் போயிருந்தவனுக்கு வீடுசென்று அம்மா கையால் சமைத்த சாப்பாட்டை அம்மாவே அன்போடு பரிமாறுவதை அனுபவிக்கும் ஆசையே மேலோங்கி நின்றதால் இடையில் காரைதீவில் இறங்கிச் செல்வதான தாயின் அறிவுரை அடிபட்டுப் போயிற்று.
காரைதீவு, மட்டக்களப்புக்கும் பொத்துவிலுக்கும் நடுவில் கல்முனையை அடுத்து அமைந்திருந்த கிழக்குக் கரையோரக் கிராமம். கோகுலன் அன்னையின் அறிவுரையை அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே ‘பொத்துவில்’ பெயர்ப்பலகையுடன் இ.போ.ச ‘பஸ்’ சொன்று மட்டக்களப்பு பஸ்நிலையத்தில் வந்து தரித்துவிட்டது.
கோகுலன் இடையில் காரைதீவில் இறங்கிச் செல்லும் எண்ணத்தை மறந்து ஒரேயடியாக நேரே பொத்துவில் செல்லும் தீர்மானத்துடன் ‘பஸசில்;’ ஏறி அமர்ந்தான்.
இரவு 8.00 மணி போல் ‘பஸ்’ உறுமிக்கொண்டு ஓட்டத்தை ஆரம்பித்தது.
(தொடரும்….. அங்கம் 03)