(மௌன உடைவுகள் -47)
— அழகு குணசீலன்—
“கண்டா வரச்சொல்லுங்க … அவரைக்கையோடு கூட்டி வாருங்க” இந்த பாடலை மட்டக்களப்பு தமிழ், முஸ்லீம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நஸீர் அகமட் எம்.பி. அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியையும் பெற்றிருப்பவர்.
கோத்தபாய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 20 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த 6 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் 20 ஐ எதிர்த்து வாக்களிப்பது என்ற முடிவை புறந்தள்ளி, கட்சியின் கட்டுப்பாட்டை, கூட்டுப் பொறுப்பை மீறி முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார்கள்.
இதற்கு எதிராக கட்சியின் உயர்பீடம் இவர்களிடம் விளக்கம் கோரியிருந்தது. நஸீர் அகமட் தவிர மற்றையவர்கள் தலைமையின் அழைப்பை ஏற்று விசாரணைக்கு சமூகமளித்து 20 ஐ ஆதரித்ததற்கான தமது தரப்பு நியாயத்தை முன்வைத்தனர். அதில் ஒருவர் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஹரிஷ். இவர் சொன்ன காரணம் கல்முனையில் தமிழர்களுக்கு தனியான பிரதேசசெயலகம் கிடைப்பதை தடுப்பதற்கான தந்திரோபாயமாகவே ஆதரவு வழங்கினேன் என்பதாகும்..
கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவியை நிபந்தனையின்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுத்த நன்றியையும் மறந்து , தமிழருக்கு குறுக்கே நிற்கின்ற இந்த நியாயமற்ற ஹரிஷின் முடிவை ஹக்கீம் தலைமை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்தது. இது ஹக்கீமின் இரட்டை அரசியல். இது போன்று தான் ரிஷார்த் பதியூதினின் கட்சியைச் சேர்ந்த மற்றொரு அம்பாறை மாவட்ட எம்.பி. முஸாபிர் , ரிஷாத்தை சிறையில் இருந்து வெளியில் எடுப்பதற்காகவே தான் 20 ஐ ஆதரித்ததாக கூறித்திரிகிறார். இந்த எம்.பி.களும், இவர்களின் தலைவர்களும் தான் அரசநிர்வாகத்தில், நீதித்துறையில் அரசியல் தலையீடு, ஊழல் , இலஞ்சம் என்று வாய்கிழிய பேசுகிறார்கள் என்பதை மக்கள் உணரவேண்டும்.
நஸீர் அகமட் இந்த விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை. 20 ஐ மட்டுமன்றி, வரவு செலவுத் திட்டத்தையும் கட்சியின் முடிவுக்குமாறாக ஆதரித்தார். இவர் விசாரணைக்கு போய் ஹரிஷ் எம்.பி. போன்று மட்டக்களப்பு மாவட்ட காணிப்பிரச்சினைக்காகத்தான் , விகிதாசார நில ஒதுக்கீடு கோரி அரசாங்கத்தை ‘காக்கா’ பிடிக்கிறேன் என்று சொல்லியிருந்தால் ஹக்கீம் நஸீர் அகமட்டை மன்னித்து, வாயாரவாழ்த்தி வழியயனுப்பி வைத்திருப்பார். பிராயச்சித்தம் கிடைத்திருக்கும். இந்த முகத்தை தமிழர் அரசியல் எப்போது அடையாளம் காணும்?
இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்ட நிலையில் தான் தன் பதவியை பாதுகாத்துக்கொள்ள அண்மைக்காலங்களில் அகமட் விகிதாசார காணிப்பங்கீட்டை சத்தமாக உச்சரித்தார். பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று நாகரிகமற்ற வகையில் பேசினார். ரணில் அரசாங்கத்திலும் அமைச்சரானார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜங்க அமைச்சர்களோடு பாராளுமன்றத்தில் கடும் சொற்பிரயோகங்களை பயன்படுத்தி வாதிட்டவர் நஸீர் அகமட். ஊடக நேர்காணலில் கடும் விமர்சனங்களை செய்தார். முஸ்லீம் மக்களுக்கான காணிப்பிரச்சினை நியாயமாகத் தீர்க்கப்பட வேண்டியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நஸீர் அகமட்டின் இனவாத, மதவாத அணுகுமுறையில் ஒரு இணக்கத்தைக் காண்பது இலகுவானதல்ல. இது பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குவதுடன் தீர்வுக்கான கதவை மூடிவிடுவதாகும்.
ஆக, முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை நீக்கியதை செல்லுபடியற்றது என்று தீர்ப்பளிக்குமாறு அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து, நீக்கப்பட்டது சட்டரீதியானது என தீர்ப்பளித்துள்ளது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதி நஸீர் அகமட்டுக்கு. இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதால் முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலின் அடுத்த வேட்பாளர் அலிஸாகிர் மௌலானாவின் பெயரை முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி காரியப்பர் தேர்தல் திணைக்களத்திற்கு சிபார்சு செய்திருக்கிறார்.
கட்சிமாறிகள்….!
—————-
இலங்கை அரசியலில் கட்சி விட்டு கட்சி தாவுதல் ஒன்றும் புதிய விடயமல்ல. இந்தத் தாவலை முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் செய்திருக்கிறார்கள். அதைவேளை சிங்கள, தமிழ் எம்.பிக்களும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல.
குறிப்பாக கிழக்கில் பொத்துவில் தொகுதியில் தமிழர்விடுதலைக்கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.சி. கனகரெட்ணம் ஐக்கியதேசியக்கட்சிக்கு மாறி மாவட்ட அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார். பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சோ.உ. தம்பிராசா ஐக்கியதேசியக்கட்சியில் வெற்றி பெற்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்தார்.
செ. இராசதுரை தமிழர் விடுதலைக்கூட்டணியில் வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சரானார். வியாழேந்திரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் புளொட் சார்பில் வெற்றி பெற்று பொதுஜன பெரமுன ஆட்சியில் பதவி பெற்றார். பஸீர் சேகு தாவுத் ஈரோஸ் இராஜினாமாச் செய்தபின் மட்டகளப்பு பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்டபோது மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக பாரளுமன்ற உறுப்பினரானார். இங்கு மட்டக்களப்பு தமிழ்மக்களின் ஆணையை அவர் மதிக்கவில்லை. இது ஈரோஸின் பாராளுமன்ற அரசியலில் ஒரு கறைபடிந்த நிகழ்வு. அது மட்டுமின்றி முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்து கொண்டார்.
செ. இராசதுரையின் கட்சி மாற்றம் மற்றையவர்களுடன் ஒப்பிடக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் மட்டக்களப்பில் காசி ஆனந்தனை தனக்கு எதிராக நிறுத்தியிருப்பது நியாயமற்றது என்றும் தனக்கு வாக்களிப்பதன் மூலம் மக்கள் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மக்கள் காசி ஆனந்தனை நிராகரித்து இராசதுரை தெரிவுசெய்தனர். இது தமிழர்விடுதலைக்கூட்டணிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக மட்டக்களப்பு தொகுதி மக்கள் அளித்த தீர்ப்பு என்பதால் இது வேறுபடுத்தி நோக்க வேண்டிய ஒன்று.
பொதுவாக நோக்குகையில் கட்சிமாறுதல் பதவி, அதிகாரம் சார்ந்த ஒன்றாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனவர்கள் அமைச்சர் பதவிக்காக மாறுகிறார்கள். ஒரு கட்சியில் எம்.பி.பதவிக்காக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள், இன்னொரு சந்தர்ப்பத்தில் வெற்றி பெறக்கூடிய ஒரு கட்சிக்கு தாவுகிறார்கள்.ஆனால் சட்டம் ஒரு கட்சியில் வெற்றி பெற்று இன்னொரு கட்சிக்கு தாவுவதையே தடை செய்கிறது.
1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் வெற்றியை பெற்றிருந்த நிலையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன திகதி இடப்படாத இராஜினாமாக் கடிதங்களை எம்.பிக்களிடம் பெற்றிருந்தார். இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முரணானது என்ற விமர்சனங்களையும் பெற்றிருந்தது. 1989 சுயேட்சையாக போட்டியிட்ட ஈரோஸ் அமைப்பினர் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜே.ஆர்.பாணியில் திகதி இடப்படாத இராஜினாமாக் கடிதங்களை பெற்றிருந்தனர். இந்த கடிதங்களே ஈரோஸின் 13 எம்.பிக்கள் 1990 இல் கூண்டோடு இராஜினாமாச் செய்தபோது பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அலிஸாகிர் மௌலானா…!
—————————-
நஸிர் அகமட்டின் வெற்றிடத்திற்கு அலிஸாகிர் மௌலானாவை நியமனம் செய்திருப்பதாக காரியப்பர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மௌலானா குறித்து இரு பார்வைகள் உண்டு.
1. இனவாத அரசியல் செய்யாத, தமிழ் – முஸ்லீம் இன உறவில் ஒரு பாலமாக செயற்படக்கூடியவர். சமூகம் சார் அரசியல் பிரச்சினைகளை மாவட்டத்தின் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தீர்வுகாண வேண்டிய கூட்டுப் பொறுப்பை ஏற்கக்கூடியவர். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் என்ற வகையில் ஏராளமான தமிழ் நண்பர்களைக்கொண்டவர். இவர்கள் கல்வியாளர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், துறைசார் நிபுணர்கள்.இந்த வாய்ப்பும், வளங்களும் மட்டக்களப்பின் இன நல்லுறவை மீளக்கட்டுவதில் அவருக்கு உதவியாக அமையும் என்று நம்பலாம். மௌலானாவின் அரசியல் மற்றையவர்களுக்கு முன்மாதிரியாக அமையும்.
2. விடுதலைப்புலிகள் பிளவுபட்ட போது கருணா அம்மானுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே தொடர்பாளராக இருந்தவர். ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆலோசனையில் கருணா அம்மான் கொழும்பு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தவர்.
இதனால் வந்த கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்காவில் அஞ்ஞாதவாசம் செய்து 2009 க்கு பின் நாடு திரும்பினார். தமிழர்களில் ஒருபகுதியினர் அலிஸாகிர் மௌலானாவை இன்னும் துரோகியாகவே பார்க்கிறார்கள்.
நஸீர் அகமட்டின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது ஹிஸ்புல்லா – ஹக்கீம் உறவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. அப்போது அரசியல் ஆய்வாளர்களிடையே ஒரு சந்தேகம் இருந்தது. தீர்ப்பில் நஸீர் அகமட்டின் பதவி பறிக்கப்பட்டால் அந்த இடத்தை ஹிஸ்புல்லா குறிவைக்கிறார் அல்லது ஹக்கீம் அவரை தயார் செய்கிறார் என்பதுதான் அது. ஆனால் அந்த சந்தேகங்கள் கழைந்து விட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி கிராமங்களுக்கிடையே கட்சிகளைக் கடந்த ஒரு ஊர்ப்பற்று நிலவுவது வழக்கம். தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் இந்த ‘ஊர்ப்பற்று’ கணிசமாக பங்கை வகிக்கிறது. இந்த வகையில் நஸீர் அகமட்டின் ஏறாவூருக்கே மீண்டும் பதவி வழங்கப்படுகிறது. அலிஸாகிர் மௌலானாவும் ஏறாவூரைச் சேர்ந்தவர். கல்வித் தகைமையில் இருவரும் பொறியியலாளர்கள். எனவே முஸ்லீம் காங்கிரஸ் இந்த முடிவை சட்டரீதியாக, முஸ்லீம் கிராமங்களுக்கிடையே பகைமையைத் தவிர்த்து சரியாகவே கையாண்டிருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய , மற்றும் மாற்று அணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அலிஸாகிர் மௌலானாவை அரசியல் எதிரியாக, துரோகியாக பார்க்காது , அவரை அங்கீகரித்து மாவட்ட மக்களின் உரிமைக்கும், அபிவிருத்திக்கும், இன நல்லுறவுக்கும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். அதுவே மக்கள் நலன் சார்ந்த அரசியல்.