பச்சிலைப்பள்ளி : திட்டமிட்ட  மீள்குடியேற்றம் தேவை

பச்சிலைப்பள்ளி : திட்டமிட்ட மீள்குடியேற்றம் தேவை

 — கருணாகரன் —

வரலாற்று முக்கியத்துவம் மிக்க பச்சிலைப்பள்ளியின் சிறப்பு அடையாளங்களில் ஒன்று, அதனுடைய இயற்கை வளமாகும். இன்னொரு வகையாகச் சொன்னால், இந்த இயற்கை வளமே பச்சிலைப்பள்ளியைத் தனித்துச் சிறப்பாக  இனங்காட்டுகிறது.  மிக நீண்ட காலமாக – ஆயிரமாண்டுகளாக – மக்கள் வாழ்ந்து வருகின்ற பிரதேசமாக இருப்பதற்கு இங்குள்ள இயற்கை அரணும் இயற்கை வளங்களும் பயன்பட்டுள்ளது.

தொல்மக்களின் வாழ்க்கை பெருமளவுக்கும் இயற்கையோடு இணைந்திருந்தது. அந்த வாழ்க்கைக்கு இயைபாக இருக்கும் அமைவிடங்களையே அவர்கள் தெரிவு செய்தனர். அல்லது, இயற்கையில் பெறக்கூடியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். நீரை இலகுவாகப் பெறக்கூடிய, விவசாயத்தையும் வேட்டையையும் செய்யக் கூடிய இடங்களே அன்றைய மனிதர்களின் வாழ்க்கைத் தெரிவாக இருந்தது. இப்பொழுது நாம் நகரங்களை நோக்கி, அங்கே கிடைக்கக் கூடிய வளமான கல்வி, உயர் மருத்துவம், சிறப்பான வணிகம், உத்தியோக வாய்ப்புகள் மற்றும் தொழில் நுட்பத்தின் வழியான தொழில்துறைகள் இவற்றின் மூலமாகக் கிடைக்கும்  வசதியான வாழ்க்கையை நோக்கி ஓடுகிறோம். அன்றைய நிலவரம் வேறு. அன்று இப்போதுள்ளதைப்போல தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. விவசாயமும் கடற்றொழிலும் பனைத் தொழிலுமே அன்றைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தன. இதனால் தண்ணீரை இலகுவாகப் பெறக்கூடிய ஆறுகள், குளங்கள் அதிகமாக இருந்த இடங்களையே தெரிவு செய்தனர். ஆற்றங்கரை நாகரீகம் உணர்த்துவது இந்த உண்மையையே. அல்லது கடலை அண்மித்த பகுதிகளில் குடியிருந்தனர். எப்படியோ நீரே வாழ்க்கையின் ஆதாரமாக இருந்தது.

பச்சிலைப்பள்ளிப் பிரதேசம், ‘நெய்தல்’  ‘மருதம்’  ‘முல்லை’ என்ற மூவகை நிலங்களையும் கொண்டது. முக்கியமாக நீரை இலகுவில் பெறக்கூடிய மணல்நிலம் பச்சிலைப்பள்ளியினுடையது. இதனால் இங்கே  மக்கள்  குடியேறினர்.  அப்படிக் குடியேறியவர்கள், தமக்குத் தேவையான நீரைப் பெறுவதற்காகக் குளங்களையும் துரவுகளையும் பூவல்களையும் அமைத்தனர். மணல் இதற்கு இலகுவான வாய்ப்பை அளித்தது. இந்தக் குளங்களை அண்டிய பகுதிகளில் மக்கள் நெற்செய்கையை மேற்கொண்டனர்.  மேட்டு நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டார்கள். இங்கே துரவுகளையும் பூவல்களையும் தோண்டி நீரைப் பெற்றனர். இவற்றிலிருந்து  எடுத்த நீரைக் குடிப்பதற்கும் ஏனைய விவசாயப் பயிர்ச்செய்கைக்கும் பயன்படுத்தினார்கள். காடுகளில் வேட்டையாடினர். வீடுகளை வேய்ந்து கொள்வதற்கும் உணவுத் தேவைக்கும் பனம் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். அதற்கேற்ப வேண்டிய அளவுக்கு பனைகள் இருந்தன. பனந்தொழில் சிறப்பாக நடந்தது.  பிற்காலத்தில் தென்னைகளையும் மரமுந்திரிகளையும் நாட்டினர். பிறகு மாமரங்கள் என இது விரிந்து இன்று முருங்கைச் செய்கை வரை வளர்ந்துள்ளது.

பச்சிலைப்பள்ளியின் பிற்கால  வாழ்க்கையிலும் வரலாற்றிலும் பனை, தென்னை வளப் பொருளாதாரம் முக்கியமாக இருந்தது. இதில் பனை பெரும் பங்கை வகித்தது. பனை மட்டை, ஓலை, பனையில் மேற்கொள்ளப்படும் கைவினைப் பொருட்கள் (பாய், பெட்டி, கடகம், பட்டை, உமல், பறி போன்றவை) உணவுப் பொருட்கள் (பனங்கிழங்கு, பனாட்டு, ஒடியல், புளுக்கொடியல்) ஊமல் போன்றவை யாழ்ப்பாணத்துக்கும் பிற இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. பச்சிலைப்பள்ளிப்பிரதேசத்தின் அன்றைய பொருளாதாரத்தில் பனையின் இடம் பெரியதாக இருந்தது. பின்னர் தென்னைச் செய்கை வளர்ச்சியடைந்ததை அடுத்து தென்னைப் பொருட்கள் ஏற்றுமதியாகின. இவையெல்லாம் ஏறக்குறைய இயற்கையோடிணைந்த விவசாயச் செய்கைகளும் பொருளாதார நடவடிக்கைகளுமாகும். ஆகவே இயற்கைச் சூழலில், பசுமைச் சூழலிலேயே பச்சிலைப்பள்ளி தொடர்ந்தும் இருந்தது.

பச்சிலைப்பள்ளியின் சமூக அமைப்பை ஆய்வு செய்யும் எவரும் மேற்சொன்ன அடிப்படைகளை இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில்தான் குடிசன விரிவாக்கமும் அதனுடைய  சமூக, பொருளாதார, கலை பண்பாட்டு நடவடிக்கைகளும் இலக்கிய முயற்சிகளும் விளங்கின; வளர்ச்சியடைந்தன.

நீண்டகாலமாக மக்களின் இருப்பிடமாக இருந்தபடியால் பச்சிலைப்பள்ளிக்குரிய வரலாற்றுச் சுவடுகளும் உண்டு. 

முகமாலை, அரசர்கேணி, கிளாலி, தம்பகாமம், முகாவில், மாசார், இயக்கச்சி ஆகிய பிரதேசங்கள் வரலாற்றுச் சிறப்புக்குரியனவாக உள்ளன. இங்கெல்லாம் வரலாற்றுச் சுவடுகளாகக் கருதப்படும் புராதன கோயில்கள், கட்டிடங்கள், கோட்டைகள் ஆகியவற்றையும் அவற்றின் எச்சங்களையும் இன்றும் காண முடியும்.

ஆனால், நாட்டில் ஏற்பட்ட யுத்தம், இந்தப் பிரதேசத்தை பெருமளவுக்கும் அழித்தது. ஆனையிறவு, இயக்கச்சி, முகமாலை, கிளாலி ஆகிய இடங்களில் நடந்த பெரும்போர்கள் இந்தப் பிரதேசத்தின் இருப்புக்குப் பெரும் சவாலாகியது.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு லேமாக  இந்தப்பிரதேசத்திலிருந்த மக்களை முற்றாகவே வெளியேற்றியது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியறாமல் வாழ்ந்து வந்த மக்கள், இடம்பெயர்ந்து சிதறிப்போனார்கள். அந்த வெளியேற்றம் இந்த மக்களின் வாழ்க்கையிலும் அவர்களுடைய பண்பாட்டிலும் ஆழமான எதிர்த்தாக்கத்தை உண்டாக்கியது. இங்கே நடந்த இயற்கை அழிவு சாதாரணமானதல்ல. லட்சக்கணக்கான பனைகளையும் தென்னைகளையும்  அழித்தது. காடுகளும் வெளிகளும் கூடப் பற்றி எரிந்தன. இதனால் இந்தப்பிரதேசத்தின் நிலக்காட்சியே மாறியது.

யுத்தம் முடிந்த பின்பு காணப்பட்ட இந்தப் பிரதேசத்தின் காட்சிகள் இதற்குச் சான்று. பல்லாயிரக்கணக்கான மொட்டைப் பனைகளும் தென்னைகளும் இந்தச் சனங்களின் வாழ்க்கைக்கு ஆழமான குறியீடுகளாகியது. பிக்காஸோவின் குவார்னிகா ஓவியத்தைப் பிரதிபலிப்பதாக பச்சிலைப்பள்ளி மாறியிருந்தது. அதனுடைய பசுமைச் சூழல் பாதிக்கும் மேலே காணாமற் போயிருந்தது. ஆனாலும் இயற்கை எதையும் சமனிலைப்படுத்தி விடும் என்பதற்கிணங்க வடலிகள் வளர்ந்தன. காடுகள் துளிரெறிந்து செழிக்கத் தொடங்கின. மக்களும் மெல்ல மெல்லத் தங்களுடைய ஊர்களுக்கு வரத் தொடங்கினார்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பச்சிலைப்பள்ளியை உயிர்ப்பூட்டியது.

ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் பச்சிலைப்பள்ளியை மீளுருவாக்கம் செய்யும் திட்டங்கள் ஆழமான பிரக்ஞையோடு முன்னெடுக்கப்படவில்லை. இது பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்துக்கு மட்டும் நேர்ந்த துயரம் மட்டுமல்ல. எல்லா மீள்குடியேற்றப் பிரதேசங்களுக்கும் நடந்துள்ள தவறே. முற்றாகவே மக்கள் வெளியேறி யுத்தம் நடந்த பிரதேசங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் என்பது, அந்தப்பிரதேசங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியோடும் சூழல் பாதுகாப்போடும் முன்னெடுக்கப்பட்டிருக்க  வேண்டும். அதற்கமையவே திட்டமிடல் அமைந்திருக்க  வேண்டும். இந்தத் திட்டமிடலின்போது வரலாற்றாசிரியர்கள், சூழலியலாளர்கள், பண்பாட்டாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பிரதேசங்களின் மூத்த – இளைய பிரஜைகள் அடங்கிய குழுவோ அணியோ உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நிகழவில்லை. அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு பொதுவான வேலைத்திட்டம் அப்படியே எல்லாப் பிரதேசங்களுக்குமாக அமுல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக இந்தக் கட்டுரையாளர் உட்படச் சிலர் அப்பொழுதே அழுத்தமாக மீள் குடியேற்ற அமைச்சு உள்பட அன்றைய ஒருங்கிணைப்புக்குழுக்கள், மாவட்டச் செயலர்கள், திட்டமிடற் பிரிவுகள் போன்ற தரப்புகளுக்கு எடுத்துரைத்தனர். ஆயினும் அவை உரிய கவனத்திற் கொள்ளப்படவில்லை. இதனால் மீள் குடியேற்றம் என்பது, அந்தந்தக் கிராமங்களில் மக்கள் குடியேறியதாக அமைந்ததே அல்லாது மீளுயிர்ப்புப் பெற்றதாக அமையவில்லை. அதாவது குடியேறல்கள் நடந்தனவே தவிர, வரலாற்றின் இழைகளையும் மரபின் கண்ணிகளையும் உயிரப்பூட்டுவதாகவும் அமையவில்லை. ஆயினும் எல்லாவற்றையும் விட மக்கள் வலியவர்கள் என்பதால் அவர்கள் தங்களுடைய நினைவுகளின் வழியே சென்று தங்களால் முடிந்தளவுக்குத் தங்கள் ஊர்களை மீளுயிர்ப்புச் செய்தனர். இப்பொழுது காணப்படும் பச்சிலைப்பள்ளி என்பது அவ்வாறு மக்களால் வடிவமைக்கப்பட்டதே.

இங்கேதான் இன்னொரு பாரிய பிரச்சினையும் உருவாகியது. யுத்தம் இந்தப் பிரதேசத்தின் சமூகக் கட்டுமானத்தையும் சிதைத்திருந்ததால் மீள் குடியேற்றத்தின்போது எல்லையற்ற விதமாக இயற்கை வளப்பாதிப்புச் செயற்பாடுகள் இங்கே நிகழத் தொடங்கியது. சட்ட விரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மது உற்பத்தி (கசிப்புக் காய்ச்சுதல் – விற்பனை செய்தல்) மரங்களைக் கண்டபாட்டுக்குத் தறித்தல், காடழிப்பு, பனை அழிப்பு போன்றவை கட்டற்ற முறையில் நிகழத் தொடங்கின. பச்சிலைப்பள்ளியின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில் இப்படி முன்னர் ஒரு போதுமே நிகழ்ந்ததில்லை. புதிய தொழில்முறையாக இவற்றில் பலரும் எந்தத் தயக்கமும் கூச்சமும் இன்றி ஈடுபட்டனர். இவை உண்டாக்கக் கூடிய பாதிப்பைப் பற்றிய அக்கறையும் அறிவும் பலரிடத்திலும் இல்லாதிருந்தது. இதைப்பற்றி விழிப்புணர்வூட்டக் கூடிய கட்டமைப்புகளும் செயற்பாடுகளும் துலக்கமான அளவில் இந்தப்பிரதேசத்தில் நிகழவில்லை என்பது அடுத்த பெரும் துயரமாகும். இருந்தாலும் பிரதேச செயலகத்தினரும் மக்களும் அங்கங்கே தம்மால் முடிந்தளவுக்கு இதற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுண்டு. ஆனால் அது எதிர்பார்த்த  நல் விளைவுகளைத் தரவில்லை. இதனால் பச்சிலைப்பள்ளியின் இயற்கை வளம் பெருமளவுக்கும் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது. இன்றைய பச்சிலைப்பள்ளி என்பது வறண்ட, உவர் நிலம், உவர் நீர்ப் பரவலை எதிர்கொள்ளக் கூடியதாகவே உள்ளது. இன்னும் இயற்கை வள அழிப்பைக் கட்டுப்படுத்த முடியாத அளவிலேயே உள்ளது. இது இன்று பச்சிலைப்பள்ளி எதிர்நோக்கியிருக்கும் மிகப் பெரிய சவாலாகும். அதாவது யுத்த காலத்தையும் விட அதிக பாதிப்பையும் மக்கள் இடப்பெயர்ச்சியையும் உண்டாக்கக் கூடிய சவால் இது. மட்டுமல்ல எதிர்காலத்தில் மக்கள் குடியேறவோ வாழவோ முடியாத அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் விதமான சவாலாக உள்ளது.

யுத்தமாவது அதன் தீவிரம் குறையும் போது அல்லது அது முடியும்போது மக்கள் மீள் வாழ்வைத் தொடங்குவதற்கான இடத்தை அளிக்கும். ஆனால், இயற்கை வள அழிப்பினால் உண்டாகும் நில அமைப்பின் மாற்றங்களும் நீர் மாறுறுதலும் மக்கள் வாழவே முடியாத நிலையையே உருவாக்கும். ஆகவேதான் இன்று மிகப் பெரிய ஆபத்தின் மத்தியில் பச்சிலைப்பள்ளிப் பிரதேசம் உள்ளது என்கிறோம். ஏறக்குறைய இது நெருப்பின் மேலே நிற்பதற்குச் சமம். எனவே இதைக்குறித்துப் பிரதேச மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். பிரதேச மட்டத்திலான அமைப்புகள் இதைக்குறித்துத் தீவிரமாகச் சிந்திப்பது அவசியமாகும்.

இப்பொழுதும் காடழிப்பும் பனை அழிப்பும் மணல் அகழ்வும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதைச் செய்கின்றவர்கள் அநேகமாக பிரதேச வாசிகளேயாகும். அதைப்போல சட்டவிரோத மது உற்பத்தியையும் மது விற்பனையையும் செய்கின்றவர்களும் பிரதேச மக்களே. இவற்றைக் கட்டுப்படுத்தினால்தான் பச்சிலைப்பள்ளிக்கு எதிர்காலமுண்டு. ஏன் நிகழ்காலமே உண்டு. எதிர்காலமும் நிகழ்காலமும் சிதையக் கூடிய நிலையில் இருக்கும் பிரதேசமொன்றில் கலை, பண்பாட்டுச் செயற்பாடுகளைப் பற்றியும் இயல்பான வாழ்க்கையைப் பற்றியும் எப்படிச் சிந்திக்க முடியும்? எப்படி இவற்றைப் பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் முடியும்?

பச்சிலைப்பள்ளியின் இயற்கை வளத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டு தொழிற்துறைகளை உருவாக்க முடியும். பாரம்பரியமான விவசாயம், பனை, தென்னைவளத் தொழில்கள், கடற்தொழில் போன்றவற்றுக்கு அப்பாலான நவீன தொழில்களையும் விருத்தி செய்ய முடியும். அதற்கான வளமும் இட அமைவும் உள்ளதே பச்சிலைப்பள்ளியாகும். எடுத்துக்காட்டாக இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha என்ற சுற்றுலாத்தளமும் பாற்பொருள் உற்பத்தி நிலையமும் உள்ளன. புலோப்பளையில் உள்ள காற்றலை மின் உற்பத்தி மையம். இந்த வரிசையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள “இராவணன் வனம்” இன்னொன்றாகும். இப்படி இயற்கையோடிணைந்த சிறிய – பெரிய தொழில் மையங்களையும் தொழிற்துறைகளையும் உருவாக்க முடியும். கிளாலி, முகமாலை, மாசார், பளை எனப் பல இடங்கள் இதற்கு வாய்ப்பாக உள்ளன. போக்குவரத்து, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை – ஆதார வசதிகள் இதற்கு வாய்ப்பாக உள்ளது  அதற்கான பொருளாதார வலுவோடு முதலீடுகளைச் செய்யக் கூடிய – தொழிற்துறைகளை உருவாக்கக் கூடியவர்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். எதற்கும் மிஞ்சியிருக்கும் இயற்கை வளத்தை நாம் அவசரமாகப் பாதுகாக்க வேண்டும். இயற்கை வளத்தை மீளுருவாக்கம் செய்ய வேண்டும். இதில் அகழப்பட்ட மண்ணை மீள் நிரப்பவே முடியாது. காடுகளை உருவாக்க முடியும். பனை, தென்னை, மரமுந்திரிகை மரங்களை நடலாம். ஆனால், மண்ணை அப்படி மீளுருவாக்க முடியுமா?

பச்சிலைப்பள்ளியின் அடையாளத்துடன் கூடிய சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்ப முடியும். கேரளச் சுற்றுலாத்துறை என்பது அந்தப் பிரதேசத்தின் அடையாளத்தையும் சிறப்புகளையும் அடிப்படையாகக் கொண்டதேயாகும். அங்குள்ள உணவுகள், அங்கே ஆடப்படும் நடனம், கூத்து, அங்குள்ள கலை வடிவங்கள், அந்த மக்களின் கொண்டாட்டங்கள், சடங்குகள், மருத்துவம், அங்கே உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை.  அத்தகையதொரு சுற்றுலா முறையையை பச்சிலைப்பள்ளியிலும் உருவாக்கி அபிவிருத்தி செய்ய முடியும்.

இயற்கை வளம் சிறப்பாக உள்ள  எந்த இடமும் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருக்கும். அந்த வளத்தை வைத்து உருவாக்கப்படும் திட்டங்களும் மேம்பாடுகளுமே அந்தப் பிரதேசத்தை மேலும் கவர்ச்சிகரமாக்குவதுண்டு. அதுவே அதை மேலும் வளர்த்துச் செல்வதாகவும் இருக்கும்.

பச்சிலைப்பள்ளிக்கு இயற்கையாகவே அமையப் பெற்றுள்ள பனைகளும் காடும் வெளியும் கடலும் களப்பும் வயலும் குளங்களும் அதற்கு அழகைக் கொடுக்கின்றன. இவையே பொருளாதார ரீதியிலும் பங்களிப்பைச் செய்கின்றன. இவையே பச்சிலைப்பள்ளியின் தனித்துவத்தைப் பேணியும் வந்துள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தனிச் சிறப்புப் பெற்ற பிரதேங்களில் ஒன்றாகவும் வரலாற்றுச் சின்னங்களை அதிகமாகக் கொண்ட இடமாகவும் பச்சிலைப்பள்ளி உள்ளது. கிளாலியிலும் பளையிலும் புல்லாவெளியிலும் உள்ள புராதன தேவாலயங்கள், பளை, இயக்கச்சி, முகாவில் பகுதிகளில் உள்ள பழைய கோயில்கள், முகமாலை, இயக்கச்சி போன்ற இடங்களில் உள்ள (ஒல்லாந்தர் காலக்) கோட்டைகள் எனப் பலவுண்டு.

இதைப் பேணுவதன் மூலமும் நவீனத்துவத்துடன் அபிவிருத்தி செய்வதன் மூலமும் மேலும் இந்தப்பிரதேசத்தை வளமாக்க முடியும். இதற்கு சூழலுடன் இணைந்த அபிவிருத்திப் பொறிமுறை அவசியம். அதற்கு நிபுணத்துவ அறிவுடையோரின் பங்களிப்பும் நிறுவன மயப்பட்ட அதிகாரமும் அவசியமாகும். இவை ஒருங்கிணைந்து செயற்படும்போதுதான் நாம் எதிர்பார்க்கின்ற சிறப்பு இலக்கினை எட்ட முடியும்.

ஆனால், இதற்கு எதிர்மாறான நிலவரமே பச்சிலைப்பள்ளியில் இப்பொழுது காணப்படுகிறது. இப்பொழுது என்பதன் அர்த்தம், போருக்குப் பிந்திய சூழல் – அதாவது கடந்த பத்து ஆண்டுகள் என்பதாகும். இதனை அனைவருமாக இணைந்து மாற்றியமைக்க  வேண்டும். அது முடியும்.