வாக்குமூலம்-79

வாக்குமூலம்-79

(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

“இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு முழுமையான தீர்வாக அமையாது. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி அரசியல் தீர்வையே தமிழரசுக் கட்சி முன்னெடுக்கும்”

என்று தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா மட்டக்களப்பில் 21.08.2023 அன்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். (‘ஈழநாடு’, 22.08.2023)

13 ஆவது திருத்தம் இலங்கையின் இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு என்று தமிழ் அரசியல் பொதுவெளியில் செயற்படுகின்ற எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது. 13 ஆவது திருத்தத்தை அனுசரித்து அதனை அமுல்படுத்துவதற்கு முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட முன்னாள் ஈ பி ஆர் எல் எஃபின் செயலாளர் நாயகம் பத்மநாபா கூட அப்படி எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.

இப்போது, 13-ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் எத்தனங்களில் ஈடுபட்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்கூட 13 ஆவது திருத்தமே இனப்பிரச்சனைக்கான முழுமையான தீர்வு என்று கூறவில்லை.

அப்படியிருக்க, இதுவரை தமிழர் தரப்பிலிருந்து எவருமே கூறாத கூற்றைத் தமிழரசுக் கட்சியினர் செல்லுமிடமெல்லாம் உச்சரித்துக் கொண்டிருப்பதால் என்ன ஆகப் போகிறது? அதனால் மட்டும் ‘சமஸ்டி’ வானத்திலிருந்து தமிழர்களின் மடியில் வந்து விழுந்து விடுமா? 

1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த பின்னர் அதன் ஸ்தாபக தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) ‘சமஸ்டி’ யையே இனப் பிரச்சனைக்கான திருப்தியான தீர்வாக அரசியல் அரங்கிலே முன்வைத்த போதிலும், 1957 இல் பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும் 1965 இல் டட்லி – செல்வா ஒப்பந்தத்தையும் கைச்சாத்திட்டார். இவ் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேறு விடயம்.  ஆனால், இவ் ஒப்பந்தங்களைத் தன்னால் முன் வைக்கப்பட்ட அரசியல் இலக்கினை அடைவதற்கான படிமுறைகளாக – அணுகுமுறைகளாகக் கருதியே செயற்பட்டார். அப்படிச் செயற்பட்ட அவர்கூடச் சென்ற இடமெல்லாம் ‘பண்டா செல்வா ஒப்பந்தம்’ தமிழ் மக்களுக்கு முழுமையான தீர்வாக அமையாது என்றோ, ‘டட்லி – செல்வா’ ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு முழுமையான தீர்வாக அமையாது என்றோ சொல்லிக் கொண்டு திரிந்ததில்லை.

13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட்டால் இலங்கை இரண்டாகப் பிளவு பட்டுவிடும் எனத் தென்னிலங்கையில் உள்ள இனவாத சக்திகள் குரல் எழுப்பிக் குழப்பிக் கொண்டிருக்கும் ஒரு களநிலையில் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போன்று மடமைத்தனமாக மாவை சேனாதிராசா இவ்வாறு,

“இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு முழுமையான தீர்வாக அமையாது. சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி அரசியல் தீர்வையே தமிழரசுக் கட்சி முன்னெடுக்கும்” எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிப்பதன்மூலம் மாவை சேனாதிராசா எதனைச் சாதிக்கப் போகிறார்.இது எதிர்மறையான பிரதிபலிப்பையே ஏற்படுத்தும். உண்மையிலேயே சமஷ்டிக் கட்டமைப்பு என்பதை எவ்வாறு நீங்கள் அடையப்போகிறீர்கள் என்று மாவை அவர்களிடம் காதோடு காதாகக் கேட்டுப் பார்ப்பவர்களுக்கு அதற்கான அவரின் விளக்கம் பூச்சியமாகவே இருக்கும். இதுதான் இலங்கைத் தமிழர்களின் தலைவிதியும் சாபக்கேடுமாகும். 

இவை ஒரு புறமிருக்கட்டும். 1949 இலிருந்து இன்றுவரை (2023) கடந்த 74 வருடங்களாகச் சமஸ்டி பற்றியே கூறிவரும் தமிழரசுக் கட்சியிடம் அதனை அடைவதற்கான வழி வரைபடமோ-வேலைத் திட்டமோ இருந்ததுண்டா? அல்லது இப்போதாவது இருக்கிறதா? என்றால் அது இல்லவே இல்லை.  

தந்தை செல்வா 1949 இலிருந்து புதிய குடியரசு அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்ட 1972 வரை சமஸ்டிக்காகச் சுமார் 23 வருடங்கள் அரசியல் ரீதியாகப் (அகிம்சாவழியில்) போராடிவிட்டு முடியாமல் போனதாலேயே தனது அரசியல் தோல்வியை நேர்மையாக ஒப்புக்கொள்ளும் வகையில் ‘தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறிவிட்டுப் பின்னர் கண்ணை மூடினார். 

1976 இலிருந்து ‘தமிழீழத்’ தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டம் தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். அதன் விளைவாகத்தானும் சமஷ்டி சாத்தியப்படவில்லை. இப்போது 2009 இல் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்த பின்னர் தமிழரசுக் கட்சி தமிழர்களுக்குச் சமஸ்டியை எப்போது? எவ்வாறு பெற்றுத்தரப் போகிறது? மாவை சேனாதிராசாவின் கூற்று சுத்த ஏமாற்று அரசியலாகும். அதாவது தமிழர்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு என்பது என்னவென்று தெளிவில்லாமல் பேசும் அரசியலற்ற அரசியல் ஆகும். 

மேலும், மட்டக்களப்பில் 21.08.2023 அன்று நடந்த மேற்படி செய்தியாளர் சந்திப்பின் போது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதில் தமக்கு (தமிழரசுக் கட்சிக்கு) ஆட்சேபனை இல்லை என்றும் மாவை அறிவித்திருந்தார். ஏதோ தமிழரசுக் கட்சி ஆட்சேபித்தால் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட மாட்டாது;  ஆட்சேபிக்காவிட்டால் அது முழுமையாக அமுல் செய்யப்பட்டுவிடும் என்பது போல தனது அரசியல் சிறுபிள்ளைத்தனத்தையும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

‘சமஸ்டி’ விடயம் ஒரு புறமிருக்க, 13 ஆவது திருத்தத்தைத்தானும் முழுமையாக அமுல் செய்வதற்கு அது நிறைவேற்றப்பட்ட 1987 இலிருந்து இன்று வரை (2023) கடந்த 36 ஆண்டுகளாகத் தமிழரசுக்  கட்சியோ அல்லது தமிழரசுக் கட்சியைப் பிரதான கட்சியாகக் கொண்டு விளங்கிய முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியோ அல்லது தமிழரசுக் கட்சியையே மீண்டும் பிரதான கட்சியாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ ஆற்றிய அரசியல் ரீதியான பங்களிப்பு என்ன? எதுவுமே இல்லை.

1987-இல் நடந்த வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்த முதலாவது மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தல் (அச்சுறுத்தல்) விடுத்தபோது அதனை நிராகரித்து முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்கள் தேர்தலில் பங்குபற்றி வாக்களிக்கும்படித் தமிழ் மக்களை ஊடக அறிக்கை மூலம் கேட்டுக் கொண்ட ஒரு துணிகரமான நற்காரியத்தைத் தவிர (அதற்காகவே புலிகளால் அமிர்தலிங்கம் 13.07.1989 அன்று கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார்), அமிர்தலிங்கம் மறைந்து இன்றுவரை கடந்துவிட்ட 34 ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியோ-தமிழர் விடுதலைக் கூட்டணியோ-தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கு ஆற்றிய அரசியல் ரீதியான பங்களிப்பு என்ன? விடை பூச்சியமே.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்குத் தமிழரசுக் கட்சியோ- தமிழர் விடுதலைக் கூட்டணியோ-தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ ஒரு சிறு துரும்பைத்தானும் தூக்கிப் போட்டதில்லை. மாறாக, அதனைச் சீர் குலைக்கச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தென்னிலங்கைச் சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கங்களுக்கும் சக்திகளுக்குமே துணை போயின.

இந்த உண்மைகள் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு மூடி மறைக்கப்பட்டதனால்தான்-முறையாக வெளிப்படுத்தப்படாதபடியினால்தான் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பான்மைத் தமிழ் மக்கள் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் (தமிழரசுக் கட்சிக்கும்) தேர்தல்களில் வாக்களித்து வந்தார்கள். 

13 ஆவது திருத்தத்தையே முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதில் தனது அரசியல் கையாலாகத்தனத்தைக் காட்டியுள்ள தமிழரசுக் கட்சி இப்போதும் ‘சமஸ்டி’ யை முன்னெடுப்பதாகக் கூறுவது ‘கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போன’ கதையாகத்தான் உள்ளது. இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், தங்கள் கதைகளைக் கேட்பவர்களெல்லோரும் ‘கேணையர்’ கள் என்று. அதனால்தான் ‘கேட்பவன் கேணையன் என்று நினைத்தால் கதைப்பவன் கைலாயம் போனதாகக் கதை கூறுவானாம்’. இன்னமும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைத்துக் கொண்டா இப்படியான ஏமாற்றுக் கதைகளைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராசா அவிழ்த்து விட்டிருக்கின்றார்.

உண்மையில், அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தால் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ள 13-ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் செயற்பாட்டினையாவது முழுமனத்தோடு ஆதரிக்காமல் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்ற தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் எந்தவிதமான கருணையும் காட்டாது வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்காலத்தில் நிராகரிப்பது மட்டுமே தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் நேர்மறையான நிகழ்வுகள் இடம் பெறுவதற்குச் சாதகமான இடைவெளியை ஏற்படுத்தும். 

காலிலே போட்ட செருப்பு காதறுந்து போய்விட்டால் அதனை எறிந்து விடுவதைப்போல அல்லது எறிய மனம் வராவிட்டால் இறப்பிலே சொருகி வைப்பது போல அரசியல் கையாலாகத்தனமுடைய-காலாவதியாகிவிட்ட இவ்வாறான ‘போலி’த் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளை ஒதுக்கிவிட்டு அல்லது ஓரம் கட்டிவிட்டு இனிமேல் எறிகிறவன் கையில் பொல்லைக் கொடுப்பதற்குத் தமிழ் மக்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் ‘மாற்றம்’ நிகழும்.