(மௌன உடைவுகள் – 37)
— அழகு குணசீலன் —
அரங்கம் பத்திரிகையின் மௌன உடைவுகள் :36 , தயாமோகனின் அரசியல் துறை பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக ஒரு பத்தியை எழுதியிருந்தது. அது குறித்து குறிப்பாக பேசாது பொதுவாக தமிழ்த்தேசிய அரசியலை அரங்கம் ஆய்வாளர்கள் விமர்சனம் செய்வதை குற்றம் சாட்டுகிறார் அரியநேந்திரன்.
இம்சைப்படுத்துகிறார்கள், பிரதேசவாதம் பேசுகிறார்கள், வடக்கு -கிழக்கு இணைப்பை மறுதலிக்கிறார், மேட்டுக்குடி என்று கூறுகிறார்கள் என்று தமிழ்த்தேசிய அரசியலுக்கு மதில்கட்டி அதற்குள் வசதியாக மறைந்து கொண்டு குற்றப்பத்திரிகை ஒன்றை பட்டியலிட்டு தாக்கல் செய்துள்ளார்.
இது தமிழ்த்தேசிய ஆயுத, மற்றும் பாராளுமன்ற அரசியலை விமர்சனம் செய்கின்ற மாற்றுக்கருத்தாளர்கள் மீது சாட்டுகின்ற குற்றச்சாட்டுத்தான். ஒட்டுமொத்தத்தில் பொதுவாக “தேசியம்” குறித்தும், சிறப்பாக “தமிழ்த்தேசியம்” குறித்தும் ஒரு தத்துவார்த்த தளம்பல் அவரிடம் வெளிப்படுகிறது. அதை கவிட்டு கொட்டியதற்கு நன்றி.
தேசிய இனம் குறித்த வேறுபட்ட சர்வதேச வரைவிலக்கணங்களும் ஈழத்தமிழர்களை ஒரு தேசிய இனமாக வரையறை செய்கிறது. மொழி, பொருளாதாரம், கலாச்சார பண்பண்பாடு, பாரம்பரிய நிலம் என்பன இதன் அடிப்படைகள். இவற்றிற்கும் மேலாக இன்று ஒரு இனமாக, தேசமாக உள்ளூர உணர்கின்ற உளவியலும் சேர்ந்துகொள்கிறது.
இந்த அடிப்படையில் தேசியம் அல்லது தமிழ்த்தேசியம் சார்ந்த அடிப்படைக் கோட்பாட்டில் அரங்கம் ஆய்வுகள் எங்கு , எப்போது முரண்பட்டு நிற்கின்றன என்பதைக் கூறாது வெறுமனே தேசியத்தின் பேரிலான நாடாளுமன்ற கட்சி அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் அரங்கம் வைக்கின்ற விமர்சனங்களை அம்மியில் போட்டு கூட்டு அரைக்கிறார்.
தேசிய இனங்கள் சார்ந்த தேசியம் – தமிழ்த்தேசிய தத்துவார்த்தம் வேறு, தமிழ்த்தேசிய பாராளுமன்ற கட்சி அரசியல் வேறு என்ற தெளிவு அரியநேந்திரனிடம் இல்லை. அரங்கம் பத்திகள் தேசியத்தின் பெயரில் இடம்பெறும் பித்தலாட்ட கட்சி அரசியலை விமர்சிக்கின்றனவே அன்றி
தேசியத்தத்துவார்த்த கோட்பாட்டை விமர்சிக்கவில்லை. அந்த விமர்சனங்கள் உங்களைப்போன்ற கதிரைக்கு காத்திருப்பவர்களுக்கும், கதிரையை கட்டிப் பிடித்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் அஜீரணக்கோளாறு – ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் அரங்கத்திற்கு தெரியாமல் அல்ல.
அதற்காகத்தான் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகளுக்கு வாந்தி எடுக்கவும் , வயிற்றால போகவும் அரங்கம் வைத்தியம் செய்கிறது. கொஞ்சமாவது ஊத்தையை ஊத்திக் கழுவ முடிந்தால் அது ஊடகம் ஒன்றின் பணி. அப்படி இல்லையேல் தமிழ்த்தேசியம் விரும்புவதை அரங்கத்தில் எழுதுவதற்கு அரங்கம் பத்தியாளர்கள் எதற்கு ? எங்காவது இருக்கும் ஒரு அச்சகத்தை தூக்கி கொண்டு போய் அதை நீங்களே செய்துவிட்டு போகலாமே…!
தமிழ்த்தேசிய அரசியல் ஜனநாயகம்.
——————————-
தேசிய இனங்களின் தத்துவார்த்த விடுதலை அடிப்படை ஜனநாயகத்தில் கட்டியெழுப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் இந்த உட்கட்சி ஜனநாயகம் அகிம்சை பேசிய போதும் இருக்கவில்லை , ஆயுதம் தாங்கிய போதும் இருக்கவில்லை. தமிழர் தேசத்தில் ஜனநாயகம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதற்கு அரியநேந்திரனுக்கு வெளியே மௌன உடைவுகள் தேடுதல் வேட்டை நடாத்தத்தேவையில்லை.
உங்கள் பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தை விடவும் வேறு என்ன ஆதாரம் தேவை. மட்டக்களப்பின் தமிழ்த்தேசிய கட்சி அரசியலிலும், ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த போதும் கிங்ஸ்லி இராசநாயகம் யார் ? என்பதை மட்டக்களப்பு மண் நன்கு அறிந்தே இருந்தது. ஜனநாயகத்திற்கு முரணாக மட்டக்களப்பு மக்களின் ஜனநாயகவிருப்புக்கு மாறாக அவரை தமிழ்த்தேசிய விடுதலையின் பெயரில் தூக்கிய துப்பாக்கியை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கச்செய்தது அரியநேந்திரனுக்கு ஜனநாயகம்தான்.
அதுமட்டுமா ? 2004 தேர்தலில் உங்களை விடவும் மட்டக்களப்பு மக்களின் அதிகவிருப்பு வாக்குகளை (38,638) பெற்றவர் . இராஜினாமா செய்தபின்னரும் சுட்டுக்கொன்ற தமிழ்த்தேசிய துப்பாக்கி ஜனநாயகத்தில் இரத்தக்கறை காயும் முன் சிறிலங்கா நாடாளுமன்ற இருக்கையில் அமர்ந்தவர் நீங்கள்.
மட்டக்களப்பு நகரில் இயங்கிய ஊடகமொன்றின் இயந்திரங்களை இரவோடு இரவாக கொள்ளை அடித்துச் சென்று ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையில் பதவியும் பெற்றுக்கொண்ட நீங்கள் இப்போது ஜனநாயகம், ஊடகதர்மம் பற்றி பேசுகிறீர்கள். தமிழ்த்தேசிய போராட்டத்தில். இந்த ஜனநாயக மறுப்புக்கள், அத்துமீறல்கள் விமர்சிக்கப்படவேண்டியவையா? இல்லையா? தமிழ்த்தேசியம் புனிதக்கோயில் என்றால் கும்பிட்டு குட்டி , தோப்பிக்கரணமும், அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு போங்கள். அதை விமர்சிக்கக் கூடாது என்ற தமிழ்த்தேசிய நிலைப்பாடு ஊடக உரிமையை மறுப்பது.
.
வடக்கு – கிழக்கும் பிரதேசவாதமும் …
——————————–
தேசிய இனங்கள் குறித்த நிர்ணயம் குறித்த இனத்திற்கு ஒரு பாரம்பரிய பிரதேசத்தை வேண்டி நிற்கிறதே அன்றி நிர்வாக ரீதியில் அந்த பிரதேசம் ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாகப்பிரிவாக இருக்கக்கூடாது என்று கோரவில்லை. வடக்கும் , கிழக்கும் இணைந்து ஒரே நிர்வாக அலகாக இல்லாவிட்டால் தமிழர் தாயகம் துண்டாடப்படுகிறது , பாரம்பரிய தாயகம் என்ற அந்தஸ்தை தமிழர்தாயகம் இழந்துவிடும் என்பது அடிப்படை அற்ற அரசியல்.
நிர்வாகப்பிரிவுகள் நடைமுறை செயற்பாடுகளை இலகுபடுத்தவே செய்யப்படுகின்றன. உள்ளூராட்சி பிரிவுகள், மாவட்ட நிர்வாகப்பிரிவுகள், தேர்தல் தொகுதிகள், தேர்தல் மாவட்டங்கள், மாகாணங்கள் இவை அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்புகள் . இவை பிரித்து நிர்வகிக்கப்படுவதால் தமிழரின் பாரம்பரிய பிரதேசம் அதன் தாயக அந்தஸ்த்தை இழந்துவிடும் என்பது வெறும் மேட்டுக்குடி மேலாண்மை சித்தாந்தம். மற்றையமக்களையும் சேர்த்து ஆட்சி செய்வதற்கான அதிகார – பதவி வெறி.
வடக்கும் கிழக்கும் இணைந்து இருக்கவேண்டும் என்று கோரும் தமிழ்த்தேசியத்திடம் ஒரு ஒரு கேள்வி…!
விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பிரிவு வட தமிழ்ஈழம், தென் தமிழீழம் என்று பிரித்துதானே நிர்வகிக்கப்பட்டது அப்போது இந்த இணைப்பு வாதம் எங்கே போனது? பிரிந்து இருந்தாலும் “நாங்கள்” ஆண்டால் சரி. இணைந்து இருந்தாலும் “நாங்கள்” ஆண்டில் சரி. இதுதான் கிழக்கு மக்களின் விருப்பத்திற்கு மாறாக இணைப்பை கட்டாயப்படுத்தும் கோரிக்கையின் பின்னணி.
தேசியப்பட்டியல் நியமன விவகாரத்தில் சமபந்தர் ஐயாவே “பிரதேசவாதம்” என்ற பிரச்சினையை கிளப்பிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். அண்மையில் தமிழரசு முக்கியஸ்த்தர் சி.வி.கே சிவஞானம் “மட்டக்களப்புக்கு தமிழரசுக்கட்சி செயலாளர் பதவி போகவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் மட்டக்களப்பா? அது எங்க கிடக்குது என்று கேட்கிறார்கள்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சம்பந்தரும் , சிவஞானமும் யாரை நோக்கி சுட்டு விரலை நீட்டுகிறார்கள்? அவர்கள் உடைத்தால் அது மண்குடம் என்று சொல்லப்போகிறாரா? அரியநேந்திரன்.
தமிழ்த்தேசிய இம்சை
——————
அரியநேந்திரனின் சில்லறைச் சிதறல்களில் அவர் குறிப்பிடும் ஒரு விடயம் “இம்சை”. அதாவது தமிழ்த்தேசியத்தை அரங்கமும், அதன் அரசியல் பத்தி எழுத்தாளர்களும் இம்சைப்படுத்துகிறார்களாம். இன்னும் சொல்லப்போனால் புண்படுத்துகிறார்கள் – சித்திரவதை செய்கிறார்கள் என்று மனித உரிமைகள் சபையில் ஜெனிவாவில் முறையிடுவது போன்று உள்ளது அவரது குற்றச்சாட்டு. சித்திரவதை பற்றி யார் பேசுவது என்பது பற்றி விபஸ்த்தை வேண்டாமா?
தமிழ்த்தேசியத்தை அதன் அரசியலை யார் சித்திரவதை செய்தார்கள் என்றும், அந்த சித்திரவதைகளை பட்டியல் இட்டால் இங்கு சொல்லி மாளாது. ஒரு ஊடகம் அதன் ஜனநாயக கடமையை , மாற்றுக்கருத்தை, வெளியிடும் உரிமை தமிழ்த்தேசியம் மீதான சித்திரவதையாக – இம்சையாக உங்களுக்கு தெரிந்தால் அது உங்கள் மனநிலையின் கோளாறு. இன்னும் சொன்னால் மனநோய்.
தமிழ்த்தேசியத்தின் பெயரில் இடம்பெற்ற அரசியல்தலைவர்களின் கொலைகள், சகோதர இயக்கப்படுகொலைகள், உள் இயக்கப்படுகொலைகள், மரணதண்டனைகள் இவை யாவும் தமிழ்த்தேசியத்தை இம்சைப்படுத்தி அழித்தவை.
சகோதர இனங்கள் மீதான தாக்குதல்கள், மதங்கள் மீதான தாக்குதல்கள் தமிழ்த்தேசியத்தை இம்சைப்படுத்தி தோற்கடித்தவை.
சந்தர்ப்பவாத அரசியலையும், ஏகபோக தனியுரிமை அரசியலையும் கையில் எடுத்து அரசியல் பன்மைத்துவத்தை இம்சைப்படுத்தி தமிழ்த்தேசியத்தை கொலை செய்தவை.
மாகாண சபை அரசியல் தீர்வை சிதைத்து , செயற்பாட்டை இழக்கச்செய்து, கலைத்து சிங்களத்தோடு அண்ணன், தம்பி உறவு கொண்டாடி தமிழ்த்தேசியத்தை இம்சைப்படுத்தியதால் மாகாணசபை இன்று ஊனமுற்று இருக்கிறது.
இப்போது சொல்லுங்கள் தமிழ்த்தேசியத்தை இம்சைப்படுத்தி கொலைக்களத்திற்கு இழுத்துச் சென்றவர்கள் ஊடகங்களா? தமிழ்த்தேசியத்தின் போக்கு தவறானது என்று விமர்சனம் செய்த விமர்சகர்களா? அல்லது தமிழ்த்தேசிய தனியுரிமையாளர்களா?
தமிழ்த்தேசியத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு அது என்ன தனியார் கம்பனியா? அல்லது மாபியாக்கும்பலின் கூடாரமா?
தேசியம் மக்களுக்கான அரசியல் அதை விமர்சனத்திற்கு உட்படுத்துவது, மீளாய்வு செய்வது ஊடகங்களின் வரலாற்றுக்கடமை.
விமர்சனம் இல்லாத அரசியல் மக்களை கண்ணைக்கட்டி , வாயைக்கட்டி, காதைக்கட்டி திக்குத்தெரியாத காட்டில் இருட்டில் கொண்டு நிறுத்துவது.
இந்த இடத்தில்தான் இன்று தமிழ் மக்கள் நிற்கிறார்கள். அதற்கு தமிழ்த்தேசிய அரசியலை பொறுப்பு . அதில் உங்களுக்கும் பங்குண்டு.
முடிந்தால் தமிழ்த்தேசியம் கடந்துவந்த பாதையை திரும்பிப்பார்த்து , அந்த சுடுகாட்டைப் பார்த்து ஒரு பெரு மூச்சாவது விடுங்கள்.
புண்ணியம் கிடைத்தாலும் கிடைக்கும்!