(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
– தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்-
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் 1987 இல் கைச்சாத்தாகி முப்பத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவ்வொப்பந்தத்தில் (தமிழர்களுக்காகக்) கையெழுத்திட்ட இந்தியா அதனை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதில் அவ்வொப்பந்தத்தின் மற்றக் கைச்சாத்தியான இலங்கை அசிரத்தையாக இருக்கையில், இந்தியா, இலங்கை அரசாங்கங்களின் மீது முறையான அழுத்தத்தைக் கொடுக்காமல் ஏன் பாராமுகமாக இருந்து வருகிறது? என்பது அடுத்த கேள்வியாகும். இக்கேள்வி தர்க்கரீதியாக நியாயமானதே.
அதேவேளை, இதற்கான பதிலையும் தர்க்கரீதியாக நோக்குதலே தகும்.
எந்தத் தமிழர் தரப்புக்கு இந்தியா உதவியதோ /உதவ முன்வந்ததோ அந்தத் தமிழர் தரப்பே (தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே) எதிரியுடன் (பிரேமதாஸாவுடன்) இணைந்து கொண்டு இந்தியாவையும், இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் முழுமையான முறையான அமுலாக்கலையும் எதிர்க்கும்போது அவற்றையெல்லாம் மீறி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்ய வேண்டிய ‘வில்லங்கம்’ இந்தியாவுக்குத் தேவையில்லைத்தானே. தமிழர்களுக்குத்தானே அது தேவை.
இந்தப் பின்னணியில்தான் இந்த விவகாரத்தை நோக்கவேண்டுமேதவிர, சும்மா ‘பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள்;’ போன்று அவ்வப்போது சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் இதுவரை முழுமையாகவும், முறையாகவும் அமுல் செய்யப்படாமைக்கு இலங்கை அரசாங்கங்களையும் இந்தியாவையும் மட்டுமே தமிழ்த் தேசியக் கட்சிகள் குற்றம் சாட்டுவது தவறான அணுகுமுறையாகும். இது பிரச்சினையைத் தீர்க்க உதவமாட்டாது.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் முழுமையான முறையான அமுலாக்கலைச் சீர்குலைத்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே என்ற விடயத்தை தற்போதுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் மூடி மறைக்கின்றன – அடக்கி வாசிக்கின்றன. அல்லது அதனைக் கடந்தே சிந்திக்கின்றன. இந்தப் போக்கு மாறவேண்டும். உண்மையை யதார்த்தத்தை நெஞ்சுத் துணிவுடனும், நேர்மையுடனும் வெளிப்படையாகவும் பேசவேண்டும்.
சரி நடந்தது நடந்துவிட்டது, அதனை மீண்டும் மீண்டும் கிளறுவதாலும் ஆராய்வதாலும் எதுவும் ஆகப் போவதில்லை. அப்படியானால், இலங்கைத் தமிழர்கள் – இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் இனி என்ன செய்ய வேண்டும்.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பெற்ற 1987 இலிருந்து இன்றுவரை (கடைசிப் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 2020 வரை), 1988 இல் நடைபெற்ற (வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்த) மாகாணசபைத் தேர்தல் மற்றும் 1989 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரு தேர்தல்களும் தவிர்ந்த அனைத்துத் தேர்தல்களிலும் (உள்ளூராட்சித் தேர்தல்கள் உட்பட) இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழர்கள் பெரும்பான்மையாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான அல்லது அவர்களின் பதிலிகளாக – முகவர்களாகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளையே ஆதரித்து வருகிறார்கள். இதற்குத் தமிழர்களுடைய புலிசார் உளவியல் மற்றும் அரசியல் களநிலைகள் காரணமாக இருக்கலாம். இது சரியா? பிழையா? என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் இதனை இந்தியா விரும்பவில்லை. விரும்பவும் மாட்டாது. ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களின் முகவர்களையும் இந்தியாவின் எதிரியாக – இந்திய நலன்களுக்கு எதிரானவர்களாகவே இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களும் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உயர்மட்ட அதிகாரிகளும் கருதுகிறார்கள்.
இந்த நிலைமை நீடிக்கும்வரை இலங்கையில் யார் ஆட்சித் தலைவராக வந்தாலும் சரி – எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி அதேபோல் இந்தியாவில் யார் ஆட்சித் தலைவராக வந்தாலும் சரி – எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் சரி 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்யபப்படப் போவதில்லை. இது சற்றுக் கசந்தாலும் இதுதான் அரசியல் யதார்த்தம்.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த நிலைமையை நீடிக்கவிடக்கூடாது. இந்த நிலைமை நீடிக்குமானால் தமிழர்கள் மென்மேலும் சமூக, பொருளாதார, அரசியல் பின்னடைவுகளையே எதிர்கொள்ள வேண்டி நேரிடும்.
இதற்கு மாற்றுவழி என்னவெனில், இலங்கையில் இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும் (பாராளுமன்ற – மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள்) இலங்கையின் வடக்குக் கிழக்கு தமிழர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பாக – பதிலிகளாக – முகவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் (அவ்வாறு குறிசுட்டுக்கொண்ட கட்சிகளை) முற்றாக நிராகரித்து, புலிகளின் முகவர்களல்லாத தமிழ்க் கட்சிகளை அல்லது அவ்வாறான கட்சிகளின் கூட்டைப் பெருவாரியாக ஆதரித்து அவர்களிடம் ‘தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம்’ என்ற அங்கீகாரத்தை வழங்க வேண்டும். புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் இச்செயற்பாட்டிற்குப் பூரண ஆதரவு வழங்கவும் வேண்டும்.
இத்தகைய அரசியல் மாற்றமொன்றினூடாகவே இந்தியாவின் மனப்போக்கை மாற்ற முடியும். அதாவது டில்லியை ஈழத் தமிழர்களுக்குச் சார்பாக மீண்டும் அசைய வைக்க முடியும்.
இந்த அரசியற் செயற்பாடு இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் புலிசார் உளவியலில் ஊறிப்போயுள்ள பெரும்பான்மையான தமிழர்களுக்குக் கசக்கலாம். ஆனால், தீராத நோயொன்றைக் குணப்படுத்துவதற்கு மாற்று மருந்தொன்று இல்லாத நிலையில், வேறு வழியில்லாமல் ‘அறுவைச் சிகிச்சை’யொன்றினைத் தவிர்க்கமுடியாமல் மேற்கொள்வது போன்ற அறிவுபூர்வமான செயற்பாடே இதுவாகும். இதனைவிடுத்து சர்வதேசம் ‘தமிழீழம்’ அல்லது ‘சமஸ்டி’யைப் பெற்றுத்தரும் எனக் காத்திருந்தால், கடல் வற்றி மீன் பிடிக்கலாம் எனக் காத்திருந்து குடல் வற்றிச் செத்த கொக்கின் கதையாகத்தான் ஈழத்தமிழர் ஆகுவர்.
நாம் விரும்புவது கிடைக்கச் சாத்தியமில்லாதபோது கிடைக்கக்கூடியதை / கிடைத்ததை விரும்புவதுதான் அறிவுபூர்வமானது.