— அழகு குணசீலன் —
தயாமோகன் !
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர். நந்திக்கடல் இறுதியுத்தத்தின் போது மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர்.
இருந்தவர் என்பதைவிடவும், கிழக்கு மாகாண முன்னாள் புலிகளின் கருத்தில்” தலைவரால்/ அண்ணேயால் நியமிக்கப்பட்ட அரசியல் துறை உயர் நியமனம் இது. இது விடுதலைப்புலிகளின் தலைமையின் ஏக அதிகாரத்திற்கு உட்பட்டது.
இறுதியுத்தத்தின் போது உயிர் தப்பி , புலம்பெயர்ந்து வாழும் விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய பதவிகளில் இருந்தவர்களுள் தயாமோகன் முக்கியமானவர். குறிப்பாக புலிகளின் பிளவுக்குப்பின்னர் கிழக்கில் மட்டக்களப்பு- அம்பாறையில் தயாமோகனதும் மற்றும் ரமேஷ், கௌசல்யன், கரிகாலன் போன்றவர்களின் பங்கு கிழக்கை புலிகள் மீண்டும் மீட்பதில் முக்கியமானது.
இந்த அணியினரின் வாகரைத்தாக்குதல் – படுகொலைகளே கருணா அணியை சிதைத்து, புலிகளை மீட்டவை. இதனால் இன்று இருப்பவர்களில் கிழக்கில் மட்டுமன்றி, வடக்கிலும், புலம்பெயர்ந்த சூழலிலும் தயாமோகனின் வகிபாகம் புலிகளுக்கு முக்கியமானது.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் உதிரியாக சிதறிக்கிடந்த முன்னாள் புலி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அரசியல் பிரிவாக செயற்பட வைத்ததில் தயாமோகன் முக்கியமானவர். பிரபாகரனால் நியமிக்கப்பட்ட அரசியல் துறை பொறுப்பாளர் அந்தஸ்த்தின் அடிப்படையில் தயாமோகனே மீளுருவாக்கம் செய்யப்பட்ட அரசியல் பிரிவுக்கும், மறுவாட்டில் இலங்கையில் ஜனநாயகப்போராளிகள் கட்சியின் செயற்பாடுகளுக்கும் ஒருங்கிணைப்புக்கும் பொறுப்பாக இருந்துள்ளார். யுத்தத்தின் பின்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயற்திறன் அற்றிருந்த புலம்பெயர்ந்த புலிகளுக்கு உருவேற்றியவர் தயாமோகன் அண்ணன் என்று கூறுகிறார்கள் புலம்பெயர்ந்த கிழக்குப்புலிகள்.
இப்போது தயாமோகனின் இந்த அரசியல் துறைப்பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது பிரபாகரனால் வழங்கப்பட்ட நியமனம் அதை மீறுவதற்கு எந்தப்புலிக்கு அதிகாரம் இருக்கிறது? ஆகவே பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் அவரின் உத்தரவில் தான் இது நடந்திருக்கிறது என்று சிலருக்கு எண்ணத்தோன்றும் . அதுதான் இல்லை.” பிரபாகரன் உயிருடன் இல்லை” என்ற தயாமோகனின் அறிவிப்பே அவரின் பதவிக்கு காலனாக அமைந்து விட்டது.
பதவி பறிப்பின் பின்னணியில்……!
——————————-
இந்தப் பதவி நீக்கம் தொடர்பாக பல்வேறு ஊகங்களும், கருத்து மோதல்களும் , விமர்சனங்களும், கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. எப்போதும் தமிழ்த்தேசிய சண்டைகளை தமது “ஊடக தர்மம்” சார்ந்து ஊதிப்பெருப்பிப்பதும், அல்லது கண்டும் காணாததுமாக – இனம்தெரியாதவையாக இருந்துவிடுவதும் அந்த ஊடகங்களின் பாணி.
இந்த வகையில் தயாமோகனின் விடயத்தில் கண்டும் காணாத இரண்டாவது தெரிவையே பிரதான தமிழ்த்தேசிய ஆதரவு ஊடகங்கள் கடைப்பிடிக்கின்றன.
இந்த போக்கு பதவி பறிப்பின் பின்னணியில் உள்ள சந்தேகங்களை மக்கள் மத்தியில் குறிப்பாக கிழக்குமாகாண மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கிழக்குமாகாண முன்னாள் போராளிகள் பலரும் இது குறித்து தமக்குள் விசனமடைந்துள்ளதை அறியமுடிகிறது.
அண்மையில் புலம்பெயர்ந்த சமூகத்தில் செயற்படும் ஊடகம் ஒன்றுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பேச்சாளர் என்று கூறப்படும் கீதன் என்பவர் தயாமோகனின் பதவி நீக்க முடிவு அதற்குப் பொறுப்பான குழுவின் தீர்மானம் என்றும், இவ்வாறான பதவி “மாற்றங்களும்”, புதிய நியமனங்களும் வழமையானவை என்றும் தெரிவித்துள்ளார். அது பிரபாகரனின் இராணுவ தலைமை காலத்தில் வழமையாக இருக்கலாம். இன்று ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ளோம் என்ற கூற்றின் பின்னணியில்……. இந்த வார்த்தைகளுக்குள் மறைந்து கிடக்கின்ற உண்மைகள் எவை?.
இந்தக் குழுவின் பெரும்பான்மை ஜனநாயக முடிவாக இதைக் காட்டமுயற்சிக்கப்படுகிறது. ஆனால் இந்தப் பெரும்பான்மையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அந்தக் குழுவில் ஜனநாயக ரீதியாக வடக்குக்கும், கிழக்குக்கும் பங்கிடப்பட்டுள்ள அங்கத்துவம் 50:50 என்றால் சரி. இல்லையேல் நீங்கள் பேசுகின்ற அதே பெரும்பான்மை ஜனநாயகத்தைதானே சிங்களதேசியவாதம் பேசுகின்றது. இங்கு அதிகாரமும், மேலாண்மையும் உண்மையான ஜனநாயகத்தை பிரதிபலிப்பதில்லை.இது புலிகளிடம் மட்டும் அல்ல வடக்கு அரசியல் தலைமைகள் அனைத்திற்குமான பொதுப்பண்பாடு.
1. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு மீள் உருவாக்கத்தை அரசியல் துறை பொறுப்பாளர் என்ற வகையில் தயாமோகன் ஊடகவாயிலாக அறிவித்திருந்தார். அப்போது மேலைத்தேய ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் தாம் செயற்பட இருப்பதாகவும் , ஏற்கனவே புலிகளின் தடைகளுக்கு காரணமான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்பதும் அவரின் கருத்தின் சாராம்சமாக அமைந்தது. இதில் ஆரம்பத்தில் இருந்தே சிலருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.
2. சுவிஸில் விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கம் என்றும், கட்டாய நிதி சேகரிப்பு குறித்தும் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், நீதிமன்றம் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லை என்றும், நிதியை மக்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கினார்கள் என்றும் தீர்ப்பளித்திருந்தது. இதன் உண்மைத்தன்மை தெரிந்தவர்களுக்கு தெரியும் .
சட்டம் ஒரு இருட்டறை என்ற வகையில் இந்த தீர்ப்பு அரசியல் பிரிவு ஆழச்சுவாசிக்க அனுசரணையாக அமைந்ததுடன் சுவிஸில் இந்தியதூதரகத்தினுடனான உறவுக்கும் வழிவிட்டது. சுவிஸில் முரளி காலத்து “அடாவடித்தனங்கள்” மீண்டும் ஏற்படக்கூடாது என்ற நிலைப்பாட்டுடன், இறுதிப்போரில் இந்தியாவின் வகிபாகத்தையும் தயாமோகன் வெளிப்படையாக பேசி வந்துள்ளார். இதுவும் அவர்மீது மற்றவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தியுள்ளது.
3. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது தமிழ்த்தேசிய அரசியல் கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒரு நிகழ்வு எதிரும் புதிருமாக இடம்பெற்றது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் கீழ் இயங்கும் ஜனநாயக போராளிகள் கட்சி இன்னும் வாழ்த்துவதற்கு வார்த்தைகள் உண்டா? என்று கேட்கும் அளவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வாயார வாழ்த்தி அறிக்கை விட்டிருந்தது.
இந்த அறிக்கைக்கு பின்னால் தயாமோகன் இருந்தார் என்று நம்பப்படுகிறது. இதற்கு அந்த அறிக்கை மட்டக்களப்பு பாலையடிவட்டை, வெல்லாவெளி முகவரியில் இருந்து வெளியிடப்பட்டிருந்ததும் ஒரு காரணம். தயாமோகன் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர். மட்டக்களப்பில் இருந்து முகவரியிட்டு புலிகளின் அறிக்கை ஒன்று வெளிவந்ததும் தயாமோகன் மீது விமர்சனங்கள் எழுவதற்கு காரணமாக இருந்துள்ளது. இதன் மூலம் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைமையும், தலைமையகமும் மட்டக்களப்பிலா? என்ற கேள்விக்கு அவலாக அமைந்தது.
4. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவை கையாளும் பொறுப்பு லண்டனில் உள்ள இந்தியத்தூதரகத்தின் கைக்கு மாறியது. அண்ணாமலையின் அண்மைய லண்டன் வரவு கூட இந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே. மத்திய ஐரோப்பாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ள அனைத்து நாடுகளைவிடவும் இந்துத்துவாவை முன்நிலைப்படுத்தக்கூடிய வட இந்திய, வட இலங்கை மடங்களை கொண்ட லண்டன் களம் மிகவும் பொருத்தமானதாக இந்தியாவால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் பொறுப்பில் மாற்றம் ஒன்றை செய்யவேண்டிய தேவை இந்த மடங்களுக்கு இருந்தது. இதை துரிதப்படுத்திய உடனடிக்காரணமே ” பிரபாகரன் உயிர்த்தெழுந்த கதை”.
5. இந்திய இந்துத்துவ மடங்களும், யாழ் மையவாத லண்டன் மடங்களும், அதற்கு துணைபோக பழ.நெடுமாறன், காசி. ஆனந்தன் அன் கோ கம்பனியும் போட்டதிட்டத்திற்கு தயாமோகன் பலியாகி இருக்கிறார். ஒரு தரப்பு துணைபோகிறது மறு தரப்பு பயன் படுத்துகிறது.
ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு…..!
———————————————————————————————————————-
விடுதலைப்புலிகளின் வரலாற்றில் ஒருவரைத் “தட்ட” நினைத்தால் முதலில் செய்யப்படுவது அவர்மீதான தவறுகளை(?) பட்டியல் இடுவதும் , பொருத்தமான கனதியான காரணம் ஒன்று கிடைக்கும் வரையும்- மக்களை நம்பவைக்கும் உறுமீன் காரணம் வரும்வரையும் காத்திருப்பதும் .இப்போது அந்தக் காலம் கனிந்திருக்கிறது, தயாமோகனின் அரசியல் பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அந்த உறுமீன் தான் உடனடிக்காரணம் . அது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற மாயை.
இறுதியுத்தத்தின் போது களத்தில் நின்ற முக்கிய போராளி – பொறுப்பாளர் என்ற வகையில் பிரபாகரனின் மரணத்தை தயாமோகன் ஒன்றுக்கு பலமுறை அறிவித்திருக்கிறார். 2009 மே 16 ம் திகதிவரையும் தனக்கு இலக்கியன் என்பவருடன் தகவல் பரிமாற்றம் இருந்தது என்று கூறுகிறார் தயாமோகன். அதேவேளை “மே 7ம், 8ம் திகதி களில் தலைவரின் மகளும், சோதியா படையணியின் வைத்தியப்பிரிவு போராளியுமான துவாரகாவும் , அண்ணியும் வீரச்சாவடைந்து அவர்களின் உடல்கள் உரிய இடங்களில் முறையாக விதைக்கப்பட்டுவிட்டன. அவர்களின் உடல்கள் எதிரியின் கைகளில் சிக்கவில்லை, இதனால் அவர்கள் பற்றிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை”. என்று தர்க்கரீதியாக அவர் நிறுவுகிறார்.
“மே 17 இல் தலைவர் வீரச்சாவடைந்தார் என்பதை உறுதிப்படுத்தியபின் , மே 18 க்கும் மே 27 க்கும் இடையில் தலைவரின் வீரச்சாவை அறிவிப்பதா? இல்லையா? என்று டெலிபோன் உரையாடல்களை நடாத்தி எடுக்கப்பட்ட முடிவின்படியும், அரசியல் துறைப் போராளி என்றவகையில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் படியும் நான் அதனை அறிவித்தேன். இந்த விடயங்களை பழ.நெடுமாறன் , காசி. ஆனந்தன் உள்ளிட்டவர்களும் அறிந்திருந்தார்கள், ஏற்றுக்கொண்டார்கள் ” என்று விலாவாரியாக விளக்குகிறார் தயாமோகன்.
தயாமோகன் கூறும் இந்த உண்மையை முதலில் ஏற்பதுபோல் நடித்தவர்கள் இப்போது குத்துக்கரணம் அடிக்கிறார்கள். இவர்கள் “பணமுதலைகள்” நிதி சேகரிப்பதற்காக இந்தப் பொய்யை கட்டவிழ்த்துவிடுகிறார்கள் என்று சாடுகிறார் தயாமோகன்.
இவர்களின் ஏற்பாட்டில் தான் மதிவதனியும், துவாரகாவும் லண்டனில் முக்காட்டுடன் காரில் பயணிக்கிறார்கள், சில வீடுகளுக்கு வந்தார்கள் என்றெல்லாம் ஐரோப்பாவில் “FINANCE NEWS” வெளியிட்டு சில ஊடகங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தின. இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை மறுகா, மறுகா ஊழையிட்டு இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றன.
எது எப்படியோ தயாமோகன் உண்மைக்கு கொடுத்தவிலை அரசியல் பொறுப்பாளர் பதவி.
இது கிழக்கிலும்,புலம்பெயர்ந்த தேசங்களிலும் ஏற்படுத்தப்போகும் தாக்கத்திற்கான பதில் காலத்தின் கரங்களில் இருக்கிறது.