(மௌன உடைவுகள் – 35)
***************************
– அழகு குணசீலன் –
இலங்கை இராணுவத்திற்கும் , தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் புதைகுழி அரசியல் ஒன்றும் புதிதல்ல. கடந்தகால அனுபவங்களின் வரிசையில் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் இறுதியானதாகவும் இருக்கமுடியாது.(?).
தோண்டத் தோண்ட குறையாத போராட்ட / எதிர்ப்போர் எச்சம்.
இதன் அர்த்தம் போரில் சம்பந்தப்பட்ட இருதரப்பு மனிதப் படுகொலைகளை, யுத்தமீறல்களை, சித்திரவதை முகாம்களை, சிறைகளை நியாயப்படுத்துவதல்ல. மாறாக புதைகுழி அரசியலுக்குள் புதைக்கப்படுகின்ற உண்மைகளை தோண்டுவதாகும்.
ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் படுகொலைகளை சகோதர, உள், இயக்கப் படுகொலைகளை , வாகரைப்படுகொலைகளை , கொழும்பில் உணவில் நஞ்சு கலந்த படுகொலைகளை கண்டும் காணாதவர்களாக கடந்து சென்ற தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகள் கொக்குத்தொடுவாய் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.
குறிப்பாக சி.சிறிதரன், ம.ஆ. சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இக் கேள்வியை எழுப்ப என்ன அரசியல் நேர்மை இருக்கிறது? சிறிதரன், சுமந்திரன் ஆகியோரின் கருத்துக்களை அவர்களின் வழமையான அரசியலாக கழித்துவிட்டாலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மனப்புதைகுழியை தோண்டாமல் விட முடியாது.
” மனிதப் புதைகுழி தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா அம்மான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறியிருக்கிறார் கஜேந்திரகுமார். அவரது கருத்து தமிழ்த்தேசிய சட்டமாஅதிபர் பாணியில் ஒலிக்கின்றது.
விடுதலைப்புலிகளின் கட்டளைத்தலைமையகம் அமைந்திருந்த, அதன் தலைவர் பிரபாகரனினதும், பொட்டு அம்மானினதும், மற்றைய பல தளபதிகளினதும் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிக்கு கருணாவை காரணம் காட்டி மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடவேண்டிய தேவை கஜேந்திரகுமாருக்கு ஏன் ஏற்பட்டது? சோழியன் குடும்பி சும்மா ஆடுமா…?
1. விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் நம்புகிறார். அதனால்தான் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால்…. என்று இழுக்கிறார்.
2. இராணுவம்தான் இந்தக் கொலைகளுக்கு காரணம் என்று மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றைக்காலில் நிற்பதை, இக்கூற்றின் மூலம் அவர் கஜேந்திரகுமார் மறுதலிக்கிறார்.
3. சாத்தியமாக இருக்கக்கூடிய இராணுவம் அல்லது வன்னிப்புலிகள் என்ற இரு நிகழ்தகவு வாய்ப்பை மறைத்து, இறுதிப்போரில் சம்பந்தப்பட்ட இருதரப்பையும் காப்பாற்றி, கருணாவின் தலையில் கட்டி விடப்பார்க்கிறார். புதைகுழி விவகாரத்தை புலிகள் பாணியில் கிழக்கு நோக்கி திருப்புகிறார்.
4. இராணுவம் அல்லது புலிகள் இந்தப் புதைகுழிக்கு யார் காரணம் என்பதை வெளிப்படையாக பேச கஜேந்திரகுமார் தயாரில்லை.
5. கஜேந்திரகுமாரின் வார்த்தைகளின் உளவியல் அவருக்கு இராணுவத்தை விடவும் புலிகள் மீது அதிக சந்தேகம் இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால் புலிகள் என்று சொல்லாமல் கருணா என்று சொல்வதால் கொல்லப்பட்டவர்களை இன்னும் ஒருமுறை அவரே கொன்று புதைப்பதுடன் , குழிக்குள் உண்மையையும் போட்டு புதைக்கிறார்.
கருணா அம்மான் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்தவர். அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்களில் பல படுகொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. பிரபாகரனைப்போன்று கருணாவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. இறுதி யுத்த காலத்தில் கருணா இராணுவத்திற்கு தனக்கு தெரிந்த தகவல்களை வழங்கியிருக்க முடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
கருணா புலிகளில் இருக்கும் வரைக்கும் அம்மானின் செயற்பாடுகளுக்கு மௌனமே சம்மதமாக இருந்து, அங்கீகாரம் வழங்கிய புலிகள் பிளவுக்கு பின்னர் அவை எல்லாம் கருணாவின் செயல் என்று கூறினார்கள். அந்தப் பாணியில் வடக்கில் அதுவும் புலிகளின் அதிஉயர் பாதுகாப்பு பிரதேசத்தில் உள்ள புதைகுழிக்கு கருணாவை பொறுப்புக்கூறுகிறார் கஜே. இது காலாகாலமாக வடக்கு அரசியல் தலைமைகள் செய்வதை எல்லாம் செய்துவிட்டு கிழக்குமீது சுமத்துகின்ற அரசியல் பழி.
ஆயுதப்போராட்டம் படிப்படியாக உத்வேகம் அடைந்த 1974 இல் பிறந்து,
கொழும்பு குயின்ஸ் வீதியில் மாளிகைக்கு மேலான உயரத்திற்கு கட்டப்பட்ட மதிலுக்குள்ளும், கொழும்பு றோயல் கல்லூரி அதிஉயர் பாதுகாப்பு வலைய மதிலுக்குள்ளும் , கொழும்பு சாய்மனைக்கதிரை முதலாளிகளின் உயர்குடி பிள்ளைகளின் வகுப்பில் பெரும்பான்மை சிங்கள பௌத்த மாணவர்கள் அனுபவித்த அத்தனை வசதிகளையும் பெற்று வளர்ந்த கஜேந்திரகுமார் கருணா மீது தனது சுட்டுவிரலை நீட்டுகிறார். இதுதான் மேட்டுக்குடி அப்புக்காத்து தமிழர் அரசியல்.
நீங்கள் கொழும்பில் குபேர வாழ்க்கை வாழ்ந்தபோது, கொழும்பாலும், யாழ்ப்பாணத்தாலும் கிழக்குக்கு மறுக்கப்பட்ட சமூக நீதியின் மத்தியிலும் தமிழ் மக்களுக்கான விடுதலைக்காக தன் பள்ளிப்படிப்பை கைவிட்டு 1983 கலவரத்தை தொடர்ந்து புலிகள் இயக்கத்தில் இணைந்தவர் கருணா. கருணா அம்மான் துப்பாக்கி ஏந்தி போராடிய வேளை நீங்கள் கொழும்பில் – லண்டனில் படித்துக் கொண்டிருந்தவர்.
அப்போது இது “வேலையில்லாத வேலுப்பிள்ளையின் பொடியனின் தேவையில்லாத வேலை” என்றவர்களின் வாரிசு நீங்கள் . இப்போது பதவிக்காக கொழும்பில் அகில இலங்கை அரசியலையும்(ACTC), வடக்கில் ஒரு நாடு இரு தேசம் அரசியலையும் (TNPF) பேசி இரட்டை வேடம் போடுகிறீர்கள். இதற்காக நீங்கள் கருணாவை பலியாக்க நினைப்பதில் உள்ள அரசியல் பின்னணி என்ன?
1997 இல் இலங்கை திரும்பிய பின்னர் விடுதலைப்புலிகளின் ஆசியோடு உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் கதிரைக்காக இணைந்து 2001,2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் உங்களால் வெற்றிபெற முடிந்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த கிழக்கின் புத்திஜீவிகளுக்கு, அன்றைய புலிகளின் தளபதியாக இருந்த கருணாவின் ஆசியும், அனுசரணையும் இருந்தது என்பதை நீங்கள் அறியாமல் இருக்க நியாயமில்லை.
இப்போது புதைகுழிப் பூதமாக கருணாவைக்காட்டி – உள்ளே தள்ளி அரசியல் செய்ய திட்டம் போடுகிறீர்களா? இந்த அப்புக்காத்துத்தனம் கிழக்கு மக்களுக்கு ஒன்றும் புதுவிடயமல்ல. அமிர்தலிங்கம் முதல் சுமந்திரன் வரையும் கண்டவைதான். பிள்ளையானை உள்ளே தள்ளி அதன்மூலம் கிழக்கில் அதிகாரம் செலுத்த சுமந்திரன் செய்த சதிக்கு கிழக்கு -மட்டக்களப்பு மக்கள் கடந்த தேர்தலில் தமிழ்த்தேசியத்திற்கு கற்பித்த பாடத்தை மறந்துவிட்டீர்களா?
குறுக்குவழி அப்புக்காத்து அரசியலுக்கு இது போன்ற பாடங்கள் இன்னும் தேவைப்படுமாயின் அதற்கு வகுப்பெடுக்க கிழக்கு மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு தயாராகவே உள்ளனர். வடக்கில் துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் தமிழ்த்தேசிய அரசியல் இனிமேலும் கிழக்கில் வந்து தமிழர் ஒற்றுமை பற்றி வாய்கிழிய பேசி மக்களை ஏமாற்ற முடியாது.
கருணா அம்மான் -பிரபாகரன் பிளவு மார்ச் 2004 இல் வெளிப்பட்டது. 2009 மே மாதம் புலிகளின் ஆயுதங்கள் தோல்வியால் மௌனிக்கின்றன.
இந்த இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் கருணாவுக்கும் வடக்குக்கும் இருந்த தொடர்பு என்ன? புலிகளின் அதிஉயர் கட்டுப்பாட்டு பிரதேசமான முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாயில் புதைகுழி எப்போது வந்திருக்கும் என்பது உங்களைப்போன்ற கட்டுக்கதை சொல்லும் அரசியல் வாதிகளுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும். ஏனெனில் இந்தியப்படையினர்கூட இந்தப் பகுதியில் முழுமையான கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை.
இறுதியுத்தத்தின் போது புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுத்திருந்தனர். மக்களை கேடயமாகப் பயன்படுத்தினர் . கட்டுப்பாட்டை மீறி வெளியேறியவர்களை சுட்டுக்கொலை செய்தனர். புலிகள் இயக்க உறுப்பினர்கள் சீருடையோடும், சீருடைகளை கழட்டி வீசி விட்டும் தப்பி ஓடினர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்களை எல்லாம் தமக்கு இயன்றவரை ஒரு குழியில் போட்டு பொதுமக்களே அடக்கம் செய்துள்ளனர்.
இவ்வாறு இராணுவத்தினரும் மக்களையும், புலிகளையும் கொலைசெய்துள்ளனர். இருதரப்பு மோதலுக்குள் சிக்கி இவர்களில் ஒரு பகுதியினர் இறந்தனர். ஜதார்த்தமாகப் பார்த்தால் தப்பியவர்கள் ஓடித்தப்ப, எஞ்சியவர்கள் சடலங்களை புதைத்திருக்கிறார்கள். இதன்போது மக்கள் இராணுவத்திற்கும் , இராணுவம் மக்களுக்கும் உதவிசெய்திருக்கிறார்கள். தமிழ்த்தேசியம் இன்னும் கடவுளாக நம்புகின்ற ஐ.நா.இந்த வண்டவாளங்களை நன்கே தெரிந்து வைத்திருக்கிறது.
அதேவேளை இராணுவத்திடம் சரணடைந்தவர்களை, குடும்பத்தவர்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு , காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு இலங்கை அரசாங்கம் ” அவர்கள் தங்களிடம் இல்லை” என்று பலமுறை பதிலளித்திருக்கிறது. அதற்கு யுத்தமீறல் சர்வதேச நீதிமன்றத்தில் கஜேந்திரகுமார் ஏற்ற வேண்டியது கருணாவை அல்ல, இலங்கை அரசாங்கத்தை. அதற்கு முதலில் உங்களுக்குள்- வடக்கு மேட்டுக்குடி அரசியல் தலைமைகளுக்கு இடையே ஒற்றுமை வேண்டும். முதலில் அதைச் செய்யுங்கள்.
நாட்டில் புனர்வாழ்வழிக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளையும், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள முன்னாள் புலிகளையும் விசாரணை செய்ய வேண்டும். அதேபோல் யுத்தகளத்தில் நின்ற இராணுவத்தரப்பையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இராணுவத்தரப்பை மட்டும்தான் விசாரிக்க வேண்டும் என்ற உங்களின் குருட்டு நியாயத்தினால்தான் காணாமல்போனவர்களின் உறவுகள் பதினான்கு ஆண்டுகள் கடந்தும் நிர்க்கதியற்று இன்னும் வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் ஏந்திப் போராடுகின்ற மேற்குலக எஜமான்களின் கொடிகளைப்பார்த்து தமிழ்த்தேசியம் வெட்கித் தலைகுனிய வேண்டும். அதற்கு முதலில் சூடு , சுரணை வேண்டும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே….!
” மனித புதைகுழி தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் அதற்காக கருணா அம்மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற உங்கள் கோரிக்கைக்கு ஒரு மாற்றுக்கோரிக்கை இது.
பழ.நெடுமாறன் , காசி.ஆனந்தன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுங்கள். அவர்களுக்கு தெரியுமாம் பிரபாகரன் உயிரோடு இருப்பதும், அவர் எங்கே இருக்கிறார் என்பதும்.
இராணுவம் பொறுப்பு என்றால் அதற்கு பொறுப்பானவர்கள் நாடாளுமன்றத்தில் உங்களுக்கு அருகில்தான் இருக்கிறார்கள்.
அதுவே புதைகுழிப் பூதங்களை கண்டறிய இலகு வழி….!