வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன?

வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன?

         — கருணாகரன் —

வடமாகாணத்தில் மாணவர் வரவின்மையினால் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கடந்த வாரம் (24.06.2023) தெரிவித்திருக்கிறார் வடமாகாண ஆளுநர் பீ.எஸ். எம். சார்ள்ஸ். இதைப் போல கிழக்கு மாகாணத்திலும் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், பிறப்பு வீதம் குறைவாக இருப்பது ஒன்று. இன்னொரு காரணம், கிராமங்களை விட்டு மக்கள் நகரங்களை நோக்கிச் செல்வதாகும்.

இப்படி ஆட்கள் குறைந்த பிரதேசங்களாக யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதி, வடமராட்சி கிழக்கு முதல், கிளிநொச்சியில் பூநகரி, அக்கராயன், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருக்கும் தொலைதூரக் கிராமப்புறங்களைக் குறிப்பிடலாம். அடுத்தது, தொடர்ச்சியாக நடைபெறும் புலப்பெயர்வு. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சந்ததிப் பெருக்கத்தை உருவாக்கக் கூடியவர்களில் ஒரு தொகையினர் புலம்பெயர்ந்து சென்றிருப்பதாகும்.

 இவையெல்லாம் ஆட்தொகையைச் சடுதியாகக் குறைக்கின்றன.

மூடப்பட்ட பாடசாலைகளை விட ஏனைய பாடசாலைகளிலும் ஆண்டு ஒன்றில் சேர்க்கப்படும் மாணவரின் தொகை குறைவாகவே உள்ளது. இது இன்னும் நெருக்கடியை எதிர்காலத்தில் கொடுக்கப்போகிறது. இதைத்தான் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.  இந்த மாதிரியான காரணங்களினால் பாடசாலைகள்தானே மூடப்படுகின்றன என்று இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆட்தொகை வீழ்ச்சியானது எதிர்காலத்தில் வடமாகாணத்தின் அல்லது தமிழ்ப் பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின், மாகாணசபை உறுப்பினர்களின்  பிரதிநிதித்துவத்திலும் வெட்டு விழப்போகிறது. கூடவே நிதி ஒதுக்கீடு, பிரதேச அபிவிருத்திக்கான வளப்பகிர்வு போன்றவற்றையும் மட்டிறுத்தக் கூடிய அபாயமுண்டு.

ஏற்கனவே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஏழாகக் குறைந்துள்ளது. இது மேலும் குறைவடையலாம். இது எதிர்காலத்தில் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களின் தொகையிலும் வெட்டை உண்டாக்கும்.

1980 களில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அன்றைய  சனத்தொகையை இன்னும் யாழ்ப்பாணமும் எட்டவில்லை. வடமாகாணமும் எட்டவில்லை. அந்தச் சனங்களில் பாதிக்கும் மேலானவை வடக்கிற்கு வெளியே நாட்டின் பிற இடங்களிலும் புலம்பெயர் தேசங்களிலுமாகச் சிதறிப் பரந்துள்ளனர்.

இதற்கு யுத்தம் ஒரு காரணமாக இருந்தது. அதை விட சமூகப் பொருளாதாரக் காரணங்களும் வலுவாக உண்டு. இந்தச் சமூகப் பொருளாதாரக் காரணங்களை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

யுத்தம் முடிந்த பிறகும் புலப் பெயர்வு தொடர்கிறது என்றால், இடம்பெயர்வுக்கும் புலம்பெயர்வுக்கும் தனியே யுத்தம் மட்டும்தான் காரணம் என்றில்லை எனத் தெரிகிறது அல்லவா! புலப்பெயர்வுக்குக் காரணம், சாதிய வேறுபாடுகள், வேலை வாய்ப்பின்மை, உறுதியற்ற பொருளாதார நிலை, நாட்டின் ஸ்திரமற்ற அரசியற் சூழல் போன்றவை பிரதான காரணங்கள்.

இதில் பிரதேசங்களில் நிலவும் அபிவிருத்தியற்ற நிலையும் பொருளாதாரச் சிக்கல்களும் ஆட்தொகையைக் கணிசமாகக் குறைக்கின்றன. இது இரண்டு வகையான ஆட்தொகை வீழ்ச்சியை உண்டாக்குகிறது. ஒன்று, பிறப்பு வீதம் குறைவடைவதால் நிகழ்வது. இரண்டாவது, பிரதேசங்களை விட்டு மக்கள் வெளியேறுவதால் ஏற்படுவது. 

பிறப்பு வீதம் குறைவடைவதற்கும் சில காரணங்கள் உண்டு. யுத்தத்தில் (போராட்டத்தில்) ஈடுபட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் இழப்பு இப்பொழுது பிறப்புக்கான வீதத்தைக் குறைக்கக் காரணமாகியுள்ளது. அத்துடன் கணிசமான தொகையில் அன்றைய இளையோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமையும் இன்னொரு காரணமாகும். இரண்டாவது முன்னரைப் போலல்லாமல் இப்பொழுது ஒன்று இரண்டு பிள்ளைகளுடன் குடும்பங்களைக் கட்டுப்படுத்துகின்ற போக்கு வலுப்பெற்றுள்ளது. மிஞ்சினால் மூன்று பிள்ளைகள். முன்னர் அப்படியல்ல, குறைந்தது, ஐந்து ஆறு பிள்ளைகளாவது ஒரு வீட்டில் (குடும்பத்தில்) இருக்கும்.

இவ்வாறான காரணங்கள் பாடசாலைகள், மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மட்டும் குறைப்பதல்ல. வடக்கின் சமூக பொருளாதார பிரதேச அபிவிருத்தியிலும் தாக்கத்தை உண்டாக்கப்போகிறது. அடையாளப் பிரச்சினைகளையும் உருவாக்கக் கூடிய சூழல் உண்டு.

இதனால்தான் அரசியல் முன்னெடுப்பில் விடுதலையுடன் கூடிய அபிவிருத்தியும் அபிவிருத்தியுடன் கூடிய விடுதலையும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் கூட ஓரளவுக்கு இந்தக் கண்ணோட்டத்திலும் இந்த நிலைப்பாட்டிலும் இருந்தனர். அவர்கள் பொருளாதார ரீதியாக தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருக்க முயன்றதை இங்கே அறிந்தவர்கள் நினைவிற் கொள்ள முடியும். ஒன்றின்றி, ஒன்றில்லை. அதாவது, அபிவிருத்தியில்லாத விடுதலை என்பது அடிமைத்தனத்தையே உருவாக்கும். அது பிறரில் தங்கியிருக்கும் நிலையைக் கொண்டு வரும் என்ற தெளிவுடன் இருந்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு வகையான கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தனர். துறைசார் நிபுணர்களையும் நிபுணத்துவ அறிவையும் நாடினர்.

இதற்கு களப்பணி அவசியமாகும். புலிகளிடம் அந்தக் களப்பணி தாராளமாக இருந்தது. புலிகளுக்கு முந்திய சூழலில் பல இயக்கங்கள் இயங்கிய 1980 களின் நடுப்பகுதியில் கூட விடுதலைக்கான போராட்டம் என்பது, பொருளாதாரப் பாதுகாப்பையும் அதற்கான ஏற்பாடுகளையும் கொண்டதாகவே இருந்தது. இயக்கங்கள் பல இடங்களிலும் பண்ணைகளையும் தொழில் மையங்களையும் உருவாக்கியிருந்ததுடன், பொருளாதாரச் சிந்தனையை முக்கியப்படுத்திச் செயற்பட்டதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

ஆனால், மிதவாத அரசியல் இதற்கு மாறாகவே இயங்கியது. இயங்கிக் கொண்டிருக்கிறது. அது வெறுமனே வாய்ப்பேச்சு, ஊடக அறிக்கை, அரசியற் கோரிக்கை என்ற அளவில் எந்தப் புதுமையும் வினைத்திறனும் இல்லாமல் காய்ந்து சுருங்கிக் கிடக்கிறது.

“அபிவிருத்தியைப் பற்றிப் பேசினால் அது, அரசுடன் ஒத்தோடுவது, இனவிடுதலைக்கு எதிரானது” என்ற கருத்தை உற்பத்தி செய்து தமிழ் அரசியல், ஊடகப் பரப்பில் வலுப்பெற வைத்துள்ளது. களப்பணியை முற்றாகவே புறக்கணித்துவிட்டது. வெறுமனே அரசியல் சுலோகங்களை முன்னிறுத்துவதன் விளைவாக உருவாகிய நிலை இது. அந்த அரசியற் சுலோகங்களில் அரச எதிர்ப்புணர்வு மட்டும் வலுவூட்டப்பட்டது. இறுதியில் அரச எதிர்பு அல்லது எதிர்ப்பு அரசியல் மட்டுமே விடுதலை அரசியல் என்று கட்டமைக்கப்பட்டது. இதற்கு இனவாத உணர்வு நன்றாகத் தீனி போடுகிறது. அல்லது இனவாத உணர்வை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது மிதவாத அரசியல்.

ஆனால் விடுதலைக்கான அரசியல் என்பது இதற்கு அப்பாலானது. அது சமூக பொருளாதார விருத்தியையும் உள்ளடக்கியது. மட்டுமல்ல, தேசியம் என்ற கருதுகோள் ஒரு கற்பிதமாக இருப்பினும் அதற்குக் கூறப்படும் வரன்முறையான விளக்கத்தின் அடிப்படையில், மொழி, நிலம், பண்பாடு போன்றவை அதற்கு முக்கியமானவையாகும்.

இவற்றின் செழுமையும் வளர்ச்சியும் வரலாற்றுத் தொடர்ச்சியும் சரியாகப் பேணப்பட்டால்தான் குறித்த தேசியம் வலுவானதாக இருக்கும். தமிழ்த்தேசியம் என்ற கருதுகோளை முன்னிறுத்துவோரில் பலரும் அதனுடைய நிலத்தைக் குறித்தும் மொழி மற்றும் பண்பாட்டைக் குறித்தும் பேசும் அளவுக்கு, அந்த மக்களுடைய பொருளாதாரப் பாதுகாப்பு, பொருளாதார வலுபற்றி ஆழமாகச் சிந்திப்பது குறைவு.

ஆனால், உண்மையில் இவை மிகமிக அவசியமானவையாகும். அதிலும் பொருளாதார அடிப்படை தளர்ந்து, பிரதேசங்களின் அபிவிருத்தி இல்லாதிருக்குமானால் மக்கள் அந்தப் பிரதேசங்களை விட்டு தாமாகவே வெளியேறுவர். மக்கள் வெளியேறினால் அனைத்தும் பாதிக்கப்படும்.

அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் தங்களுடைய பிரதேசங்களில் வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கு நல்ல பாடசாலைகள் வேண்டும். நல்ல வீதிகள் தேவை. நல்ல மருத்துவமனைகளும் மருத்துவச் சேவைகளும் அவசியம். தொழில்வாய்ப்புகள் சரியாக இருக்க வேண்டும். பொருளாதார விருத்திக்கான ஏற்பாடுகள் சீராக அமைய வேண்டும். போக்குவரத்தும் சமூகப் பாதுகாப்பும் அவசியம். இவையெல்லாம் இல்லையென்றால் என்னதான் பற்றும் பிடிப்புமிருந்தாலும் சொந்த வீட்டையும் பிறந்த மண்ணையும் விட்டு விட்டே பெயர்ந்து போய் விடுவார்கள்.

இதைத் தமிழ் மிதவாதத் தலைமைகளால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுடைய வர்க்க நிலை அப்படியானது. காரணம், தமிழ் மிதவாத அரசியல் தலைமைகள் ஒருபோதும் அந்த மக்களோடு மக்களாக தங்கள் பிரதேசங்களில் வாழ்ந்ததே இல்லை. அவர்களுடைய வாழ்க்கை முறையும் அரசியல் உறவும் வேறானது. அது மக்களுக்கு வெளியே அந்நியமானது.

போராளிகள் அப்படியல்ல. அவர்கள் மக்களுடன் மக்களாக மக்களின் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள். போராட்ட அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இன்னும் அதனைப் பேணுகிறார்கள். அவர்களிடம் சில குறைபாடுகளிருந்தாலும் மக்களுக்கான விடுதலை, பிரதேச அபிவிருத்தி, சமூகப்பொருளாதாரக் கட்டமைப்பு, சமூக நீதி போன்றவற்றில் கூடிய கரிசனை உண்டு. இந்தத் துல்லியமான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மிதவாதத் தலைமைகளிடம் உள்ள வர்க்க வேறுபாட்டினால்தான் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டாம் என்ற துணிபு அவர்களுக்கு வந்தது. அதாவது எந்த நிலையிலும் தாம் பாதிக்கப்பட மாட்டோம் என்ற துணிபு. ஒரு சிறிய உதாரணம், 1958, 1977, 1981, 1983 போன்ற இன வன்முறைகளில் எல்லாம் எந்த ஒரு தமிழ்த் தலைவரும் பாதிக்கப்படவில்லை. எந்தத் தமிழ் அரசியல்வாதிக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எஸ்.ஜே.வி. செல்வநாயம், திருச்செல்வம், நாகநாதன், சுந்தரலிங்கம், ஜீ.ஜீ. பொன்னம்பலம் போன்றவர்களுடைய வீடுகளும் சொத்துகளும் கொழும்பிலும் தென்பகுதியிலும் இருந்தன. அவற்றிற்கு ஒரு சிறிய சேதமும் ஏற்படவில்லை.அவர்கள் அகதியாகவும் இல்லை.

ஏனென்றால் அவர்களுடைய தரிப்பும் வாழ்க்கைப் புலமும் கொழும்பை மையப்படுத்தியது. அல்லது நகரங்களை. வர்க்க உறவை அடிப்படையாகக் கொண்டது.

மக்களின் நிலையே வேறு. அவர்கள்தான் எப்போதும் பாதிக்கப்படுவோராக உள்ளனர்.இனவன்முறை நடந்தால் அதிலும் அவர்களே பாதிக்கப்படுகிறார்கள். யுத்தம் நடந்தால் அதிலும் அவர்களே பாதிக்கப்படுகிறார்கள். இனவாத அரசியலும் அவர்களே பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி பாதுகாப்புத் தேடியும் பொருளாதார விருத்தியைத் தேடியும் இடம்பெயர்வது, புலம்பெயர்வது என்பதுதான்.

இது நிதர்சனமான உண்மை. மட்டுமல்ல, உயிரியல் உண்மையும் கூட.

உணவும் நீரும் சரியாக இல்லையென்றால் அவற்றைத் தேடி விலங்குகளும் பறவைகளும் கூட இடம்பெயரும் என்பது உயிரியல் விதியல்லவா!

நமது சூழலில் மொழிப் பேணுகையைப் பற்றியும் மொழி வளர்ச்சியைப் பற்றியும் கதைக்கும் அளவுக்கு அதனை உரிய முறையில் மேம்படுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதில்லை. அப்படித்தான் பண்பாட்டு நடவடிக்கைகளும். மேற்கொள்ளப்படும் பண்பாட்டுப் பெருவிழாக்களில் பலவும் கோமாளித்தனமானவையும் பெறுமானம் குறைந்தவையுமாகும்.

அறிவார்ந்த தளத்தில் மேற்கொள்ளப்படாத பண்பாட்டு நடவடிக்கைகள் எவையும் வளர்ச்சிக்குரியன அல்ல. இதைக்குறித்து அறிவார்ந்த தளத்தில் சிந்திப்போர் வலியுறுத்தும் கருத்துகளை முன்வைத்தாலும் அதிகாரத் தரப்பினரும் அரசியல் தலைமைத்துவத்தினரும் அதைக் கவனத்திற் கொள்வதில்லை. எனவேதான் இவை நெருக்கடி நிலையை எட்டியுள்ளன.

இப்படித்தான் நிலம் தொடர்பான நிலைப்பாடும் உள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு, தமிழரின் தாயகபூமி என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அந்த நிலத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மிகச் சிக்கலானவையாகவே உள்ளன. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமாக தமிழர்களின் பாரம்பரிய நிலப்பிரதேசம் அபகரிக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால், இவ்வாறு வலியுறுத்துகின்றவர்கள், அந்தப் பிரதேசங்களை எப்படிப் பாதுகாக்கலாம். தமிழர் நிலங்களில் மக்கள் தொகையை எப்படி வலுப்படுத்தலாம், அதிகரிக்கலாம் என்று சிந்திப்பதில்லை. அல்லது அதற்கான காரணங்களும் வழிமுறைகளும் தெரிந்தாலும் அவற்றைப் பேசுவதோ முன்னெடுப்பதோ இல்லை.

இதற்கு முக்கியமான காரணம், களப்பணியைச் செய்யத் தவறுவதும் அந்தக் களப்பணியில் முக்கியமாக இருக்கும் அபிவிருத்தியை மேற்கொள்ளாமல் விடுவதுமாகும். இதனால்தான், அபிவிருத்தி அரசியலை அரசாங்க சார்பு அரசியலாகச் சித்தரித்து அதை ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. இது சமூகத்தை முடக்கும் நிலைக்குக் கொண்டு வரும் என்று பலரும் கருதியிருக்கவில்லை. இதனால் நீண்டகாலமாக தமிழ் அரசியற் பரப்பிலும் ஊடகங்களிலும் அபிவிருத்தி அரசியல் என்பது அரசாங்க சார்பு அரசியல், ஒத்தோடும் அரசியல், துரோக அரசியல் என  இந்தக் கருத்துச் செல்வாக்குப் பெற்றிருந்ததால் மக்களிலும் பெரும்பாலானோர் இதன்வழியே பயணித்தனர். ஏறக்குறைய “எதிர்ப்பு அரசியல்” என்ற வழியில்.

இதனால் தமிழ்ப் பிரதேசங்களின் முன்னேற்றமும் அபிவிருத்தியும் தடைப்பட்டது. இந்தப் பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் காணப்பட்டன. இதைக் கிழக்கில் தெளிவாகக் காணமுடியும். அங்கே தமிழ்ப் பிரதேசங்களையும் விட முஸ்லிம் பிரதேசங்களும் சிங்களப் பிரதேசங்களும் முன்னேற்றமாக உண்டு. வடக்கில் இந்த ஒப்பீட்டுக்கு வாய்ப்பில்லை என்பதால் அந்த வித்தியாசத்தை உணர முடிவதில்லை.

இதைக் கடந்து அபிவிருத்தியைப் பற்றிப் பேசியவர்களும் அந்த அரசியலை முன்னெடுத்தவர்களும் தவறானோராகச் சித்தரிக்கப்பட்டனர். அபிவிருத்தியைப் பற்றிப் பேசியவர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனவிடுதலையும் அபிவிருத்தியும் இரு கண்களைப் போன்றவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இரண்டும் சமாந்தரமானவை. ஒன்றை விட்டு ஒன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது என்ற நோக்குடையவர்கள். இரண்டாவது, அரசாங்கத்துடன் இணைந்து நிற்பதன் மூலமாகவே அபிவிருத்தியைச் செய்ய முடியும். அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதன் வழியாக அபிவிருத்தியைச் செய்ய முடியும் என்று கருதியவர்கள். இவர்கள் இணக்க அரசியலை முன்வைத்தனர். இலங்கையில் இணக்க அரசியல் என்பது அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட அரசியலாகவே இருக்கிறது. அதன் பெறுமானத்தைப் புரிந்து கொண்டு அதை மேம்படுத்தும் போக்கை அரசாங்கமும் சிங்களத் தரப்பும் மேற்கொள்ளவில்லை. இதனால் அபிவிருத்தி அரசியலையும் இணக்க அரசியலாகவும் ஒத்தோடும் அரசியலாகவும் பார்க்கின்ற போக்கு வலுப்பெற்றது. இதை இணக்க அரசியலை முன்னெடுப்போர் கவனத்திற் கொள்வது அவசியம். வழமையான வாய்ப்பாட்டை அவர்கள் தூக்கி எறிந்து விட்டு புதிய – மாற்று அரசியலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தின் பயன்பாட்டு அரசியலுக்குப் பலியாக வேண்டியிருக்கும்.

இதேவேளை எதிர்ப்பு அரசியலும் சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. பழைய நிலை இன்றில்லை. நிலைமை அவ்வாறில்லை என்பதே இதற்குக் காரணம். மக்களுக்கு இன்னு வாழும் வழிகள் தேவை. வேலை வாய்ப்பு, பிரதேச அபிவிருத்தி போன்றவை அவசியமாகி விட்டன. எதன் பொருட்டும் அவர்கள் இதை விட்டு விடுவதற்குத் தயாரில்லை.

எனவே இந்த யதார்த்தம் எதிர்ப்பு அரசியலில் (தமிழ்த்தேசியவாத அரசியலில்) உடைப்பை உண்டாக்கியுள்ளது. இதனால் இப்பொழுது எதிர்ப்பு அரசியலோடு அபிருத்தியும் பேசப்படுகிறது. விடுதலை அரசியலும் பேசப்படுகிறது. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்ற புரிதல் ஏற்பட்டுத்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்றில்லை. தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால், வாக்காளர்களைச் சமாளித்துக் கொள்ளும் உத்தியாகவே இதைப் பேசுகிறார்கள். உண்மையான புரிதல் ஏற்பட்டு இந்தச் சமாந்தர அரசியலை இவர்கள் முன்னெடுப்பதாக இருந்தால் அதற்கான பொறிமுறையையும் கட்டமைப்பையும் உருவாக்கியிருப்பார்கள். அல்லது அதை நோக்கிச் செயற்படத் தொடங்கியிருப்பார்கள்.

ஆகவேதான் இதை முன்னேற்றகரமானதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், மெய்யாகவே அப்படியான புரிதலுடன் இவர்கள் செயற்படுகின்றார்களா என்று கேட்குமளவுக்கு இதைப்பற்றிய குழப்பகரமான பேச்சுகளும் தடுமாற்றங்களும் நிலவுகின்றன. இது எப்போது தெளிவடையும்?