(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
– தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் –
தமிழ்ச் சூழலில் அரசியல் ஆய்வாளர்களென்றும் ‘அறிவுஜீவி’ களென்றும் குறிசுடப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் தமிழர்களுடைய அரசியல் பற்றி அலசியவர்களாகவே அல்லது தமிழர் தரப்பு அரசியலைப் பற்றி ‘அரட்டை’ அடித்தவர்களாகவே அதாவது தமிழர் தரப்பு அரசியலைப் பற்றிச் Subjective ஆகப் பேசியும் எழுதியும் தங்கள் வித்துவத்தை மேற்போக்காகப் ‘பிடி’ கொடுக்காமல் வெளிப்படுத்தினார்களே தவிர தமிழர் தரப்பு இனி என்ன செய்ய வேண்டுமென்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் Objective ஆகச் சிந்திக்கவும் இல்லை; செயற்படவுமில்லை. ஏனெனில் அதற்கான ‘அகத்தூண்டல்’ அத்தகையோரிடம் இருக்கவில்லை. காரணம் ‘பாம்புக்கும் நோகாமல் பாம்படித்த கம்புக்கும் நோகாமல்’ சிந்திக்கின்ற-எழுதுகின்ற-செயற்படுகின்றவர்களாக எல்லோருக்கும் ‘நல்ல பிள்ளை’ யாக இருந்து தங்கள் ‘பிழைப்பு’ க் கெடாமல் பார்த்துக் கொண்டார்கள். நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் மிகுந்த மருந்து கச்சல் மருந்தாய் இருப்பதால் முகஞ்சுழிப்பார்கள் என்று அவற்றை விலக்கி நோயைத்தரும் ‘அல்வா’ வையே வழங்கும் மனப்போக்குடையோர் இவர்கள். இத்தகையோர் மரம் பழுத்தால் அதனை நாடி வருகின்ற ‘வௌவால்’ களே தவிர மரத்தை நட்டு அதற்கு உரமிட்டு நீர்பாய்ச்சிப் பராமரித்து அதனை வளர்ப்பவர்களல்ல. தமிழர்களிடையே ‘அறிவு ஜீவி’ களெனத் தங்களை அடையாளப்படுத்தியவர்களில் அனேகம் பேர் இன்றும்கூட இப்படியாகத்தான் உள்ளனர். இத்தகையோர் எப்பொழுதுமே அதிகாரமையத்தைச் சுற்றி மட்டுமே இயங்குபவர்கள். இத்தகையோரால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது.
அதேவேளை, அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயற்படுபவர்கள் தமிழர்களிடையே இல்லாமலில்லை. இவர்களே உண்மையில் மக்களுக்காக உழைப்பவர்கள். ஆனால், இத்தகையோர் ஒப்பீட்டளவில் சிறு தொகையினராகவே உள்ளனர்.
ஆனாலும், அண்மைக்காலமாக இந்த நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அதற்குக் காரணம் இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழர்களுடைய அரசியற் பொதுவெளியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் (09.04.2021) உருவான அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் அறிவுபூர்வமான செயற்பாடாகும்.
வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குமிடையில் 15.05.2023 அன்று நடந்த சந்திப்பின் போது இந்த அதிகாரப் பகிர்வு இயக்கத்தினால் வெளிப்படுத்தப்பட்ட, 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கான ‘ஊக்கி’ யாகத் (Catalyst) தொழிற்படக்கூடிய ஆலோசனைச் சபை யோசனை அடங்கிய அறிக்கை -ஆவணம் தற்போது உரிய முறையிலே தமிழர் தரப்பில் உள்ள அரசியல் ஆய்வாளர்களினதும்-‘அறிவு ஜீவி’ களினதும் (புலம்பெயர் தமிழ்ச் சமூகம் உட்பட) கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுவரை காலமும் தேசிய மற்றும் பிராந்திய ரீதியாக வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில்-குறிப்பாக வார வெளியீடுகளில் அரைத்த மாவையே அரைத்து-தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டுமே மீண்டும் மீண்டும் போற்றித் துதிபாடிப் பக்கங்களை நிரப்பிப் பத்திரிகை வியாபாரத்தைத் திறம்பட நிகழ்த்திய பத்திரிகையாளர்களும் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் இப்போது மனம் மாறி அல்லது மனம் திருந்தி தமிழர் தரப்பு அரசியலை யதார்த்த பூர்வமாக நோக்கத் தலைப்பட்டுள்ளனர். இப் பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்களில் கூட இந்த மாற்றம் தெரிகிறது. இது ஓர் நல்ல அறிகுறியாகும். ஆரோக்கியமான சூழலுமாகும்.
இந்தக் கட்டத்தில் இலங்கையிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வெளி வருகின்ற அச்சு மற்றும் மின் தமிழ் ஊடகங்களின் பொறுப்பாசிரியர்களிடமும் அதன் உரிமையாளர்களிடமும் அவ் ஊடகங்களில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகள்/பத்திகள் எழுதும் அரசியல் ஆய்வாளர்களிடமும்/பத்தி எழுத்தாளர்களிடமும் பின்வரும் வேண்டுகோளை இப்பத்தி முன் வைக்கிறது.
தமிழர்களுடைய அரசியற் பொது வெளியில் கடந்த காலங்களில் நடந்த சரி பிழைகளெல்லாம் நடந்தவைகளாக இருக்கட்டும். அவற்றிலிருந்து பாடங்களை மட்டும் படித்துக் கொண்டு இனிமேல் நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கச் சிந்தியுங்கள். 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுப்புகளைத் தொடங்கியிருக்கும் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தை மக்கள் மயப்படுத்துவதற்கான முழுமையான ஆதரவைத் தமிழ் ஊடகங்கள் அத்தனையும் வழங்க வேண்டும். அதற்குச் சமாந்தரமாக அதிகாரப் பகிர்வுக்கான இயக்கமும் அதனை மக்கள் மயப்படுத்துவதற்கான வெகுஜன நடவடிக்கைகளை ஜனநாயகப் பொறிமுறைகளுக்கூடாக மேற்கொள்ளவும் வேண்டும். இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் பாரிய பங்களிப்பை வழங்க முடியும். குறிப்பாக அண்மையில் (15.05.2023) உருவாகியுள்ள ‘இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு’ (Well Wishes of Tamils in Sri Lanka – WTSL) வெகுவாக உதவ முடியும்.