‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-62

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-62

    — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

‘ஈழநாடு’ பத்திரிகையின் ‘இப்படியும் நடக்கிறது….!’ பத்தியின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நடக்கும் வரை ஆலோசனைச் சபையொன்றை நியமிக்கக் கோரும் கடிதம் தொடர்பாக, அவ்வாறு ஆலோசனைச் சபைக்கான கோரிக்கையை முன் வைப்பதற்கு இது பொருத்தமான நேரம் அல்லவென்று 06.05.2023 அன்று கூறப்பட்டிருந்த கருத்துக்கு லண்டனில் இருந்து ‘தம்பா’ என்பவர் ஆற்றியிருந்த எதிர்வினையின் விபரங்களை 08.05.2023 அன்று வெளியிட்டு வைத்து, ஈற்றில் ஈழநாட்டின் கருத்தாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் மாகாண சபை நடந்துகொண்டிருக்கும்போது மாகாணத்தைக் கொண்டு நடத்த முடியாத அசாதாரண நிலை ஏற்படும் போது மட்டுமே ஆலோசனைச் சபையை அமைக்கலாம் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், முன்பு யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது இது போன்ற ஆலோசனைச் சபை யோசனை முன் வைக்கப்பட்ட வேளை, அப்போது அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த சட்டப் பேராசிரியரான ஜி எல் பீரிஸ் அதனை நிராகரித்தார் எனவும் எடுத்துரைக்கப்பட்டிருந்தது. 

வாக்குமூலம் -62 பத்தி முதலில் கூற விரும்புவது ஈழநாட்டின் மேற்படி இரு கூற்றுக்களுமே தவறானவை.

மட்டுமல்லாமல், முன்பு 06.05.2023 அன்று ஆலோசனைச் சபைக்கான கோரிக்கையை முன்வைப்பதற்கு இது பொருத்தமான நேரம் அல்லவென்று கூறிய ஈழநாடு இரண்டு நாட்களின் பின் 08.05.2023 அன்று அரசியலமைப்பின்படி அப்படி ஒரு ஆலோசனைச் சபையை அமைக்க இடமில்லை எனக் காட்ட முயன்றிருப்பது ஈழநாட்டிற்கே தனது அரசியல் நிலைப்பாட்டில் முரண்பாடும் தெளிவின்மையும் உள்ளதைப் பகிரங்கபடுத்துகிறது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை இயங்காத காலகட்டத்தில் அதற்கான பொருத்தமான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்பதே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயமாகும். அந்த மாற்று ஏற்பாடு இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எந்த இடத்திலும் குறித்துக் கூறப்படவில்லை. அந்த ஏற்பாடு ஆலோசனைச் சபை வடிவத்திலோ அல்லது இடைக்கால நிர்வாக சபை என்ற வடிவத்திலோ இருக்கலாம். அதை முடிவு செய்யும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கே உண்டு.

இப்படியொரு யோசனை (அது ஆலோசனைச் சபை அல்ல; இடைக்கால சபையாகும்) திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் அவர் தானாகவே முன்வந்து செயற்படுத்த விரும்பிய விடயமாகும். அப்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு ஒற்றை மாகாண சபையாக இருந்த காலம். அப்போது ஜி.எல்.பீரிஸ் அமைச்சராகவிருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அது அன்று அமையாமல் போனமைக்கு ஜி.எல். பீரிஸ் அதனை நிராகரித்தமைதான் காரணம் என்று ஈழநாடு கூறியிருப்பது தவறானதாகும்.

அன்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி (இரா. சம்பந்தனைச் செயலாளர் நாயகமாகக் கொண்டிருந்த) அந்த இடைக்கால சபையில் அன்று பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை விடவும் அதிக எண்ணிக்கை உறுப்பினர்களைக் கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ பி டி பி) பிரதிநிதிகள் பெரும்பான்மையாக இடம் பிடித்துவிடுவர் என்ற ஒரே காரணத்திற்காக அந்த யோசனையை அன்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி விரும்பவில்லையென்பதே அன்று அது சாத்தியப்படாமல் போனமைக்கு உண்மைக் காரணமாகும். மட்டுமல்லாமல் அன்று அமையவிருந்த வடக்கு கிழக்கு இணைந்த இடைக்கால சபையின் தலைவராக எந்திரி கலாநிதி விக்னேஸ்வரன் நியமிக்கப்படவிருந்தார் என்பதால் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக அதனையும் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி விரும்பியிருக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் கட்சிகள் எல்லாமே மக்கள் நலனை விடத் தத்தம் கட்சி நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்பதும் தத்தம் கட்சி நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களைப் புறந்தள்ளி விடவும் – தமிழ் மக்களின் நலன்களுக்கெதிரான தீர்மானங்களை எடுப்பதற்கும் கூட அவர்கள் பின்வாங்க மாட்டார்கள் என்பதுமே அப்பட்டமான உண்மைகளாகும். 

ஈழத் தமிழர் அரசியல் தரப்பு எப்போதும் தமது பிழையை உணராமல் அல்லது தமது செயற்பாடுகளைச் சுய விமர்சனம் செய்யாமல் மூன்றாம் தரப்பொன்றின் மீது குற்றம் சாட்டும் தமிழ்த்தேசிய உளவியலைத்தான் ஈழநாடும் ஜி.எல். பீரிஸ்சின் பெயரை இழுப்பதன் மூலம் பிரதிபலித்திருக்கிறது. 

ஈழத் தமிழர்களின் இன்றைய கையறு நிலைக்குத் தமிழ் ஊடகங்களும் பிரதான காரணமாகும் என்பது ‘வாக்குமூலம் -60’ பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அப்பத்தியில், ‘காலைக்கதிர்’ மின்னிதழின் 18.04.2023 காலைப் பதிப்பின் ஆசிரியர் தலையங்கம் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.  அதனோடு சேர்த்து இப்போது ஈழநாடு பத்திரிகையின் 08.05.2023 ‘இப்படியும் நடக்கிறது….!’ பத்தியையும் மேற்கோள் காட்டலாம். 

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கட்சிகளின் (?) தலைவர்கள் திருந்துகிறார்களோ இல்லையோ முதலில் தமிழ் ஊடகங்கள் திருந்த வேண்டும். தமிழ்த் தேசியக்கட்சிகளின் (?) போலித் தமிழ்த் தேசிய அரசியலுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பழக்கத்தை இந்தத் தமிழ் ஊடகங்கள் நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால், மடியிலே பூனையைக் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பது போல்தான் ஆகிவிடும் தமிழர்களின் அரசியல் பயணம்.