மௌன உடைவுகள் – 30 இலங்கையில் துருக்கி தேசிய வாதத்தின் நிழல்..!

மௌன உடைவுகள் – 30 இலங்கையில் துருக்கி தேசிய வாதத்தின் நிழல்..!

சமகால உலக அரசியல் அரங்கில் தேசிய எல்லைகளை கடந்த உலக மயமாக்க பொருளாதார பரிமாற்றங்களுக்கு மத்தியிலும் அரசியலில் தேசியவாதத்தின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. America First, Brexit, பிரான்ஸ் மரினே லெ பெனின் Frexit, உக்ரைன்- ரஷ்ய போர், மோடியின் இந்துத்துவா….. போன்ற பல உலக அரசியல் நிகழ்வுகள் இதற்கு சாட்சியங்கள்.

இந்த சூழலில் துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இருந்த வரையே இன்னும் தொடர்ந்தும் இருக்க துருக்கி மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கிறார்கள். இத்தனைக்கும் எர்டோகான் அரசியல் அமைப்பை மாற்றி மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிட  விரும்புகிறார். இஸ்லாமிய கடும் போக்காளரும், தேசியவாதியும், மேற்குலகின் எதிரியும், சீனா- ரஷ்யா என்பனவற்றின் நண்பனுமான எர்டோகானை துருக்கி மக்கள் தேர்தலில் தெரிவு செய்யக் காரணம் என்ன? 

குர்தீஸ் விடுதலை இயக்கத்திற்கு – பயங்கரவாதத்திற்கு எதிரான போரை வெற்றிகரமாக மேற்கொண்டவர் என்று பெரும்பான்மை துருக்கியர்கள் கருதுகிறார்கள். அதுபோன்று ராஜபக்சாக்கள் தான் புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்று சிங்கள மக்கள் கருதுகிறார்கள். இந்த “தேசத்தின் காவலன்” அந்தஸ்து தேசிய வாதத்தின் அடிப்படையாக அமைகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் துருக்கியர்கள் எர்டோகானுக்கு அதிகளவு வாக்களித்திருக்கிறார்கள். அதேபோன்று புலம் பெயர்ந்துள்ள இலங்கையர்களிலும் அதிகமானவர்கள் தேசியவாதத்தையே ஆதரிப்பர். ஏனெனில் இலங்கையில் மாற்று என்பது வெறுமனே ஆட்களை மாற்றுகின்ற தேசியத்திற்கு தேசியமே பதிலீடு.

மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்திற்கு எதிரான ஒரு பலமான, விட்டுக் கொடுப்புக்களை செய்யாத ஒரு தலைமைத்துவமாக அவர்கள் எர்டோகானை பார்க்கிறார்கள். இதனால் தான் வேலையின்மை, பணவீக்கம், விலை வாசி உயர்வு, நாணயப் பெறுமதி வீழ்ச்சி, அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை, துண்டு விழும் வரவு செலவுத் திட்டம், ஊழல், நீதி, நிர்வாகத்தில் அரசியல் தலையீடு, மனித உரிமை மீறல்கள், ஊடக, கருத்துச் சுதந்திர மறுப்பு, பெண்கள் உரிமைகள் குறித்த பல கேள்விகள்….. எல்லாம் உள்ள போதும் மீண்டும் எடோகான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இதில் இருந்து வேறுபட்ட ஒன்றாக இலங்கையின் எதிர்கால தேர்தல்கள் இருக்கப் போவதில்லை.

தேர்தலுக்கு முன்னர் மேற்குலக ஊடகங்கள் மேற்குறிப்பிட்ட பட்டியலை இராப்பகலாக ஓயாமல் ஓதி எர்டோகானுக்கு எதிராக கருத்துருவாக்கம் ஒன்றைச் செய்வதில் தோல்வியடைந்த நிலையில், வெற்றியின் பின் மேற்குலகத் தலைமைகள் “நான் முந்தி நீ முந்தி” என்று பாராட்டுக்களை அள்ளி வழங்கியுள்ளனர். எர்டோகானை மேற்கின் நண்பன் என்றும், பங்காளிஎன்றும், கூட்டாளி என்றும் புகழாரம் சூட்டினர். இதை எர்டோகான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்த்த சீன, ரஷ்ய, ஆபிரிக்க, மத்திய கிழக்கு தலைமைகள் கூட  இந்தளவுக்கு மெச்சவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ரணில் மட்டும் அல்ல யார் ஜனாதிபதியானாலும் அவர்கள் இதையே செய்வர்.

மூக்குடைபட்ட மேற்குலக ஊடகங்களுக்கு மக்கள் இவ்வாறு பதிலளித்தனர். “பொருளாதார நெருக்கடிக்கு எடோகான் ஆட்சி பொறுப்பல்ல. கொரோனா நெருக்கடி, உக்ரைன் போர், உலக மயமாக்க சர்வதேச சூழல், இயற்கை பாதிப்பு- நில நடுக்கம் போன்றவையே காரணம். மேற்குலக நாடுகளில் நிலவும்  பொருளாதாரப் பிரச்சினைகளை எந்தவகையிலும் துருக்கியை விடவும் குறைத்து மதிப்பிட முடியாது. உலக பொருளாதார சுற்றோட்டத்தில் எல்லா நாடுகளையும் போன்று துருக்கியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எர்டோகான் அல்ல எவர் ஆட்சியில் இருந்தாலும் இது தவிர்க்க முடியாதது” இவ்வாறு ஊடகங்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்கள் துருக்கி மக்கள்.

இலங்கை மக்களும் இந்த நிலையை அறகலய காலத்தைவிடவும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளனர்.

இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்ன வெனில் மேற்குலக அரசியல் பேசுகின்ற ஜனநாயக, மனித உரிமை, ஊழல், நீதி, நிர்வாகத்தில்  அரச தலையீடு தொடர்பான விடயங்கள் பற்றி மக்கள் பேசவில்லை. தங்களை நேரடியாகப் பாதித்த/ பாதிக்கின்ற பொருளாதார நிலை குறித்து பேசியிருக்கிறார்கள். அதே வேளை கட்சி அரசியலுக்கு அப்பால் அதற்கான சர்வதேசசூழலையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியில் எர்டோகான் வெற்றியின் நிழல் இலங்கை அரசியலில் விழுந்திருக்கிறது என்பதற்கு நிறையவே காரணங்கள் உண்டு. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தனியே ராஜபக்ச குடும்பம் மட்டும் காரணமா? ராஜ பக்சாக்கள் இல்லாமல் வேறு யாராவது ஆட்சியில் இருந்திருந்தால் இந்த நெருக்கடிகளை தவிர்த்திருக்க முடியுமா? என்ற கேள்வியை துருக்கியின் அரசியல் நிழலில் இலங்கையில் எழுப்ப வேண்டி உள்ளது. 

சிறிசேன, சஜீத், அனுரகுமார, அழகப்பெரும போன்றவர்கள் இந்த தேசிய எல்லைகளைக் கடந்த சர்வதேச தாக்கத்தின் விளைவான நெருக்கடியை எப்படி தீர்த்திருக்க முடியும்? துருக்கி மக்கள் இரண்டாம் பட்சமாக கருதுகின்ற ஜனநாயகம் சார் அரசியல் பிரச்சினைகளுக்கு எர்டோகான் ஆட்சி எப்படி பொறுப்புச் சொல்ல வேண்டுமோ அவ்வாறே ராஜபக்சாக்களின் ஆட்சியும் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. ஏனெனில் இவை சர்வதேச தாக்கங்கள் அற்ற வகையில் இலங்கையின் தேசிய எல்லைக்குள் இடம்பெற்றவை. இதில் ஒரு பங்கு துருக்கிய, இலங்கை தேசிய வாதங்களுக்கும்  உண்டு.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் படிப்படியாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஆரம்பிக்கப்பட்டது. அப்போது காலிமுகத்திடல் அறகலய முதல் அனைத்து அரச எதிர்ப்பு நடவடிக்கைகளும் குறைவடைந்தன. மக்கள் ஆதரவு அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு குறைவடைந்தது. இன்று துருக்கி மக்கள் பேசுவதைத் தான் அன்று இலங்கை மக்கள் உணர்ந்துகொண்டனர். சமூக, பொருளாதார, அரசியல் பிர்ச்சினைகளை மறைக்க தேசியவாதம் இன, மத, மொழி ரீதியான பிரச்சினைகளை முதன்மைப்படுத்துகிறது.  இதை துருக்கியிலும் காணலாம், இலங்கையிலும் காணலாம். இலங்கையில் இடம்பெறுகின்ற மதச்சண்டைகள், காணி அபகரிப்புக்கள், ஏட்டிக்குப்போட்டியான நினைவேந்தல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.

இந்த அடையாள அரசியல் -தேசியவாதம் பெரும்பான்மைக்கு மட்டும் உரியதல்ல. தமிழ்த் தேசியவாதமும், முஸ்லீம் தேசியவாதமும் ஒன்றை மற்றொன்று மறுத்தும், எதிர்த்தும் கொண்டும் அதையேசெய்கின்றன. இந்த பொதுப் பண்பை துருக்கியில் பெரும்பான்மை தேசியவாதத்திலும், சிறுபான்மை குர்தீஸ் தேசிய வாதத்திலும் அடையாளம் காணமுடியும். எர்டோகான் தேசியவாதத்திற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் கூட்டுச்சேர்ந்த ஆறு கட்சிகளால் அவர்களின் இலக்கை அடைய முடியவில்லை. இரண்டாம் முறையான வாக்கெடுப்பில் ஆறு கட்சிகளின் கூட்டணி அகதிகளுக்கு எதிராக கடும்போக்கு பிரச்சாரங்களை மேற்கொண்டு கதிரைக்காக எந்த தேசியவாதம் தவறு என்றார்களோ அதையே தேர்தல் வெற்றிக்கான இறுதி ஆயுதமாக கையில் எடுத்தும் தோற்றுப் போனார்கள்.

முதற்கட்ட வாக்களிப்பில் மூன்றாவது இடத்திற்கு வந்த தேதியவாத வேட்பாளர் இரண்டாம் கட்ட வாக்களிப்பில் எர்டோகானை ஆதரித்ததன் மூலமும் , எதிரணி வேட்பாளர் வெற்றிபெற முடியாது என்ற மக்களின் மனச்சோர்வும் எர்டோகானுக்கு இந்த வெற்றியையும், 52.1 வீத பெரும்பான்மையும் பெறுவதை இலகுவாக்கியது. இலங்கையின் அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் ராஜபக்சாக்களின் தேசிய வாதத்திற்கு விமல்வீரவன்ச, அநுரகுமார போன்றவர்கள் பல தடவைகள் சாமரை வீசி கூட்டாட்சி நாடாத்தியிருக்கின்றனர் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஆக இனம் இனத்தைச் சேரும்….!

இலங்கையிலும் இந்த தேசிய வாத எதிர்ப்பு முரண்பாட்டை இப்போது இருந்தே தெளிவாகக் காணமுடியும். ராஜபக்சாக்களை கடும்போக்கு தேசியவாதிகளாகக்காட்டி ஆட்சியைப் பிடிக்கும் இலக்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு இருக்கிறது. சமகால இலங்கை அரசியலில் பொதுஜன பெரமுனையினரை விடவும் அல்லது உதயன் கம்பன்வெல, சரத்வீரசேகரவை விடவும், விமல்வீரவன்ச, அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் அவ்வப்போது தேசியவாதத்தை கையில்எடுக்கின்றனர். தேசியவாதக் கருத்துக்களை அநுரகுமார, விமல் வீரவன்சவின் பாராளுமன்ற உரைகளில் கேட்கமுடிகின்றது. சஜீத் அணி இப்போதைக்கு பதுங்குகின்றது போன்று தோன்றினாலும் கதிரைக்கான காலம் வரும்போது அவர்களுக்கும் இறுதி ஆயுதம் தேசியவாதமே. 

இலங்கையின் அடுத்த தேர்தல்கள் யாருடைய தேசியவாதத்தை யார் தோற்கடிப்பது என்பதாக இருக்குமேயன்றி, தேசியவாதத்தை முற்றாக நிராகரிப்பதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதுவே தேர்தல் வெற்றியின் பரம இரகசியம். இதையே தமிழ், முஸ்லீம் தேசியங்களும் செய்யப்போகின்றன. இதற்கான மணியோசை உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரங்களில் கேட்கத் தொடங்கிவிட்டது. யார் யாருக்கு சுட்டு விரலை நீட்டினாலும் மற்றைய நான்கு விரல்களும் தங்களைத் தாங்களே காட்டுவதாக உள்ளது. ஒட்டு மொத்தத்தில் இலங்கை அரசியலில் முதலாளித்துவம் பேசினாலும், சோஷலிசம் பேசினாலும் அல்லது உரிமை அரசியல் என்றாலும் அபிவிருத்தி அரசியல் என்றாலும் அதன் மறைபொருள் தேசியவாதமே.