— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 24.02.2023 அன்று கண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்களினால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டவேளை அந்த திருத்தச்சட்டம் அவசியமென்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அதே கருத்தைக் கொண்டிருக்கவில்லையென்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லையென்று நாம் நினைக்கின்றோமென்றும் பதிலளித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் இவர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யூ.என்.பி.யைச் சேர்ந்தவராயிருந்த போதிலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களாக அரசாங்கத்தை அமைத்திருப்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான்.
இனப் பிரச்சனைக்கு அதி குறைந்தபட்சத் தீர்வாகவேனும் 13 ஆவது திருத்தச் சட்டம் முறையாகவும் முழுமையாகவும் அமுல்படுத்தப்பட்டு இலங்கையில் இன நல்லிணக்கம் எதிர்காலத்தில் ஓரளவுக்காவது துளிர்விடும் என நம்பி இருந்தவர்களுக்கெல்லாம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இக் கூற்று அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் எதிர்காலத்திற்கு இது நல்ல அறிகுறியல்ல.
1987இல் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனை எதிர்த்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தராக மஹிந்த ராஜபக்ஷ அப்போது விளங்கினார். ஆனால் ஒருபோதும் பகிரங்கமாக அவர் எதிர்ப்புக் காட்டியதில்லை.
ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் மேலதிகமாக அதிகாரப்பகிர்வுடன் ‘இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியம்’ (Sri Lanka shall be an Union of regions) என்னும் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியல் பொதியையும் கூட மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக எதிர்க்கவில்லை. பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் அவரது உடன்பாடின்மையை அமைதிவழி வெளிப்படுத்தினாரே தவிர வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் அவ் அரசியல் பொதியை அவர் எதிர்த்திருக்கவில்லை.
2009இல் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனான சந்திப்பின்போது அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதிமூன்றாவது திருத்தச்சட்டத்தை அமுல் நடத்தப் போவதாகவே வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன் பின்னர் நிகழ்ந்த இந்திய விஜயத்தின் போதும் இந்தியப் பிரதமர் மற்றும் ராஜதந்திரிகளுடனான சந்திப்பின்போதும் 13க்கும் அப்பால் சென்று (13+) இனப்பிரச்சினையைத் தீர்க்கப் போவதாகப் பல தடவைகள் கூறிவந்தவர்தான் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட போது ’13+’ க்கு ஆதரவு என்று கூறியவர்தான் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.
ஆனால், இப்போது 13 ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று கூறி அவர் ‘அரசியல் குத்துக்கரணம்’ அடித்திருப்பது இன நல்லிணக்கத்தையும் அதனுடாக இலங்கை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும் சுயாதீனத்தையும் நேசிக்கும் சக்திகளைக் கவலை கொள்ளவைத்துள்ளது.
பலவிதமான எதிர்ப்புகளுக்கும் சவால்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் மத்தியிலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முறையான – முழுமையான அமுலாக்கத்தின் மூலம் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்ளாவது ஓரளவு திருப்தியான அதிகாரப்பகிர்வை அடைந்து கொள்வதற்கு அவாவி நிற்கும் தமிழர் தரப்பு அரசியற் சக்திகளை மஹிந்த ராஜபக்சவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் அவநம்பிக்கை கொள்ள வைத்துள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட அமுல்படுத்துவதற்கு மூர்க்கமான எதிர்ப்புக் காட்டும் பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளை மஹிந்த ராஜபக்சவின் இந்த அறிவிப்பு உஷார்ப்படுத்தி உசுப்பேற்றக்கூடும். மட்டுமல்லாமல் 13 ஆவது திருத்தத்தை ஆதரிக்கும் சிங்கள முற்போக்குச் சக்திகள் கூட தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கக் கூடும் அல்லது அவைகளை மௌனிக்க வைக்கக்கூடும்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்த எதிர்மறையான அறிவிப்பைத் தொடர்ந்து தென்னிலங்கை ஊடகமொன்றிக்கு ஜே வி பி முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி 13 ஆவது திருத்தச்சட்டத்தைத் தாம் எதிர்க்கப்போவதாகக் கூறியுள்ளார். (அண்மையில்தான் ஜே வி பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்காலத்தில் தாம் எதிர்க்கப்போவதில்லையெனக் கூறியிருந்தார்)
இத்தகையதொரு களநிலையைத் தமிழர்தம் அரசியல் தரப்பு வழமைபோல் வெறும் வீரவசனங்களாலும் சண்டித்தனத்தாலும் ஏனையவர்கள் மீது குற்றம் சுமத்துவதாலும் கையாள முற்படாமல் நிதானமாகவும் இராஜதந்திர அணுகுமுறைகளுக்கூடாகவும் எதிர்கொள்வதற்குத் தம்மைத் தயார்படுத்த வேண்டும். இதற்கு முதலில் தேவை தமிழர் தரப்பிலான அரசியல் ஐக்கியமும் ஒருமித்த ஒற்றைக் கோரிக்கையுமாகும்.
1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போகாத தமிழர் தரப்பின் (தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின்) அரசியல் ஞானமற்ற போக்குத்தான் தமிழ்த் தேசிய அரசியலைத் தவறான பாதையில் இட்டுச் சென்று இறுதியில் 2009 யுத்தத்தில் தமிழ் மக்களைப் பேரழிவுக்குள்ளாக்கியதென்பதை அனுபவமாகக் கொண்டு இன்று எழுந்துள்ள தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் களநிலைகளைக் கவனத்திலெடுத்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் தமிழ் மக்கள் தமக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கான அறிவுபூர்வமான – தந்திரோபாயமான அரசியலை நோக்கித் தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தக்கூடிய ‘மாற்று அரசியல்’ சக்திகள் தமக்குள் ஐக்கியப்பட்டு ‘அரசியல் திரட்சி’யடைய வேண்டும். அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. தமிழ் மக்களும் வழமைபோல் வைக்கோல் இழுத்த வழிப்பாட்டிலேயே செல்லாமல் அத்தகைய மாற்று அரசியல் சக்திகளை அங்கீகரிக்க முன்வரவும் வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு தமிழ் மக்களுக்கு அறிவூட்டுவது இதைத்தான்.