இளையோரை ஆற்றுப்படுத்துவது யார்?

இளையோரை ஆற்றுப்படுத்துவது யார்?

— கருணாகரன் —

இன்றைய இளைய தலைமுறைய ஆற்றுப்படுத்துவது எப்படி? அவர்களைக் கையாள்வது எவ்வாறு? அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாப்பது எங்ஙனம்? என்ற கேள்விகள் இன்று பலரிடத்திலும் உண்டு. காரணம், நாட்டில் வேலைவாய்ப்பின்மையும் பொருளாதார நெருக்கடியும் இளையோரை அதிகமாகப் பாதிக்கிறது. அதைவிடப் பிரச்சினை, சூழல் பாதமாக மாறியிருப்பது. பாடசாலைப் பருவத்திலேயே போதைப் பொருள் பழக்கத்துக்குள்ளாகும் அபாய நிலை உருவாகியுள்ளது. போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டோரைப் பராமரிக்கிற – அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கிற மையங்கள் உருவாகியுள்ளன. பெண்களுக்கு இன்னொரு பிரச்சினை. இளவயதிலேயே முறையற்ற பாலியல் தொடர்புகளால் அவர்கள் கர்ப்பமாகி விடுகின்றனர். அவர்களைப் பராமரிப்பதற்காக மாவட்டந்தோறும் பராமரிப்பு நிலையங்களை அரசாங்கமே உருவாக்கி வைத்துள்ளது.

இதைவிட இன்னொரு பெரும் பிரச்சினை, இளையோரிடத்திலே காணப்படுகிற வன்முறைகள். ஆவா குறூப் தொடக்கம் பல ஆயுதக் குழுக்கள் அடிதடி, வாள் வெட்டு, கொலை முயற்சி என்று நம் கண்முன்னாலேயே இயங்கிக் கொண்டிருப்பது. இதனால் பெற்றோர் நிம்மதியற்றிருக்கின்றனர். நம்முடைய பிள்ளையும் இப்படி ஏதாவது ஒன்றில் சிக்கிவிடுமோ என்ற கலக்கம். இதனால் சமூக அக்கறையுடையோர் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். பொலிஸ் மற்றும் நீதித்துறையினர் கலங்கிப் போயிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம், இளையோரை ஆற்றுப்படுத்தும், வழிப்படுத்தும் செயற்பாடுகளும் கட்டமைப்புகளும் இன்று இல்லாமற் போயிருப்பது. அல்லது அவை தளர்ந்திருப்பதாகும்.

முன்னர் கிராமங்கள் தோறும் சனசமூக நிலையங்களோ முன்னேற்றச் சங்கங்களோ இருக்கும். அல்லது விளையாட்டுக் கழகங்கள் இருக்கும். அல்லது மதம் சார்பான மன்றங்கள் இருக்கும். அல்லது இலக்கிய அமைப்புகள், நாடக மன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த அமைப்புகள் அல்லது மன்றங்களின் பெயரிலேயே இளையோரின் துடிப்பைக் காண முடியும். புதியன விளைதலைப் பார்க்க முடியும். பாரதி சனசமூக நிலையம். மறுமலர்ச்சி மன்றம். காந்தி வாசிகசாலை. வாலிப முன்னேற்றச் சங்கம். அண்ணா படிப்பகம். கிராம அபிவிருத்திச் சங்கம். இப்படிப் பல பெயர்களில்.

இவற்றில் ஏதோ ஒன்றில் இளைய தலைமுறையினர் நிச்சயமாகத் தொடர்புபட்டிருப்பர். இவை அவர்களை  ஆற்றுப்படுத்தும். வழிப்படுத்தும். இதனால் கலை, இலக்கியம், விளையாட்டு, பொதுப்பணிகள், ஊர் முன்னேற்றத்துக்கான செயற்பாடுகளில் இளைய தலைமுறை உற்சாகமாக ஈடுபடும். அல்லது அரசியல் இயக்கங்களும் செயற்பாட்டு மையங்களும் அன்று சிறப்பான முறையில் இருந்தன. அவை இளையோரை சமூகப் பிரக்ஞை உள்ளோராக வளர்த்தெடுத்தன. சாதியொழிப்பு, சமூக நீதி, குடிநீர்ப்பிரச்சினை என சமூகப் பிரச்சினைகளிலும் சமூகத் தேவைகளிலும் முன்னின்று செயற்பட வைத்தன. ஒரு காலத்தில் விடுதலை இயக்கங்களுக்குச் சென்றவர்களில் பெரும்பாலானோர் வாசிகசாலை அல்லது சனசமூக நிலையங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். 

இன்று இந்தச் சூழலே இல்லாமற் போய் விட்டது. யுத்தமும் பிற நிலவரங்களும் இதை மாற்றிவிட்டன. மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையிலான வெளி அதிகரித்துவிட்டது. உலகமயமாதலில் இன்றைய தொழில் நுட்பமும் ஊடகக் கலாச்சாரமும் இதற்கொரு வலுவான காரணமாக இருந்தாலும் அதையும் கடந்து, இளைய தலைமுறையை ஆற்றுப்படுத்தும் – வழிப்படுத்தும் செயற்பாட்டு மையங்கள் தளர்வடைந்துள்ளமையே பிரதான காரணமாகும். எல்லாவற்றையும் வணிகமாகப் பார்க்கின்ற நிலை வளர்ந்துள்ளது.  பெற்றோரே பிள்ளைகளை போட்டி உலகத்துக்குத் தயார்ப்படுத்துகின்ற – அதற்குள் தள்ளி விடுகின்ற – அவலச் சூழல் உருவாகியுள்ளது. நான்கு, ஐந்து வயதிலிருந்தே பிள்ளைகளை படிப்புப் படிப்பு என்று ஓய்வின்றி ஓட வைக்கின்ற நிலை வளர்ந்துள்ளது. அவர்களை நெருக்கடிக்குள்ளாக்குகின்ற போக்கு உருவாகியுள்ளது. இதனால் பிள்ளைகளுக்கான இயல்புச் சூழல் மறுதலிக்கப்படுகிறது. அவர்கள் பதின்பருவத்தை எட்டும்போது – அவர்களுடைய சுயாதீன நிலைக்குரிய வயதை அடையும்போது – இந்த நெருக்கடியிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். அதற்கான வாய்ப்பு வீட்டிலும் சமூகத்திலும்இல்லாத நிலையில் அவர்கள் திமிறிக் கொண்டு வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அல்லது தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கி விடுகிறார்கள். இதொரு கையறு நிலையே.

இன்றைய இளைய தலைமுறையினரைக் குறித்த ஆய்வுகளில் இந்தக் காரணங்களே கண்டறியப்பட்டுள்ளன. அப்படியென்றால் இதை எப்படி மாற்றி அமைப்பது? பாதுகாப்பது? அவர்களை எப்படி ஆற்றுப்படுத்துவது? என்ற கேள்விகள் எழுகின்றன.

இன்றைய இளைய தலைமுறையின் தேவை என்ன? அவர்களுடைய ஈடுபாடுகள் எப்படியானவை? அவர்களுடைய உலகம் எப்படியானது? என்பதைக் குறித்த ஆழமான புரிதல் நமக்குத் தேவை. இதற்கு உலகளாவிய ரீதியில் உருவாகியிருக்கின்ற வளர்ச்சியும் பண்பாட்டுப் போக்கும் எப்படி உள்ளது என்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த அறிதலின் மூலம் பெறுகின்ற விடயங்களை நம்முடைய சமூகச் சூழலுக்கு ஏற்ற மாதிரி பொருத்திக் கொள்ள வேண்டும். அல்லது இவைளை அடிப்படையாகக் கொண்டு புதியவைகளை உருவாக்க வேண்டும். இது காலத்தின் நிபந்தனையாகும்.

“அப்படியென்றால், எங்களுடைய சமூகத்திலே எல்லாமே அழிந்து விட்டனவா?” என்ற கேள்வியைச் சிலர் கேட்கக்  கூடும். “அப்படியென்றால், எப்படி இவ்வளவு வன்முறையும் சீரழிவும் உருவானது? இளைய தலைமுறையைக் குறித்த உங்களுடைய பதட்டம் ஏன்?” என்ற பதில் கேள்விகளைத்தான் நாம் கேட்க முடியும்.

இன்றும் சமூகத்திலே விளையாட்டுக் கழகங்களும் கிராம முன்னேற்றச் சங்கங்களும் உள்ளனதான். அங்கங்கே ஒரு சில வாசகசாலைகள் இயங்கிக் கொண்டுதானுள்ளன. சில இடங்களில் கலைச் செயற்பாடுகள் நடக்கின்றன. அன்றைய நாடக மன்றங்களின் இடத்தை இன்று யுடியூப்பும் குறும்படங்களும் எடுத்துள்ளன. இதற்கான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் ஒரு தரப்பு உருவாகியுள்ளது. அப்படியான இடங்களில் – சூழலில் – பிரச்சினைகளும் குறைவு. அல்லது இல்லை எனலாம். ஏனென்றால் அங்கே இளையோர் ஆற்றுப்படுத்தப்படுகின்றனர்.

இதில்லாத இடங்களில் கொந்தளிப்பும் பிரச்சினையுமே. இந்தச் சூழலில்தான் நாம் பண்டத்தரிப்பிலுள்ள மறுமலர்ச்சி மன்றம், கொக்குவிலில் உள்ள வளர்மதி முன்னேற்றச் சங்கம் போன்றவற்றைப் பற்றி ஆழமாகக் கவனிக்க வேண்டும். பண்டத்தரிப்பு மறுமலர்ச்சி மன்றம் ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. கொக்குவில் வளர்மதி முன்னேற்றச் சங்கம் அறுபதாவது ஆண்டில் கால் வைக்கிறது. இரண்டும் இன்றும் புத்திளமையோடு இயங்குகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறுமலர்ச்சி மன்றம் பெரிய அளவில் கலை, இலக்கிய, விளையாட்டுத்துறைளுக்கான போட்டிகளை நடத்தியது. மிகப் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன. வெற்றிபெற்ற சிறுகதை ஒன்றுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் இந்தப் பரிசுகள் அமைந்திருந்தன. பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து மறுமலர்ச்சிக் கதைகள் என்ற பேரில் சிறுகதைத் தொகுதி ஒன்றும் வெளியிடப்பட்டது. பெரிய அளவில் ஆண்டு நிறைவு விழாவும் நடந்தது. மன்றத்தை உள்ளுரில் உள்ளவர்களும் புலம்பெயர்ந்திருக்கும் உறவுகளும் வளப்படுத்தி வருவதே இதற்குக் காரணமாகும். இன்னொரு காரணம், மறுமலர்ச்சி மன்றம் 1980 களிலிருந்தே “காலைக்கதிர்” என்றொரு சஞ்சிகையை வெளியிட்டு வந்தது. யுத்தத்தின் காரணமாக அது இடை நின்று போனாலும் அதன் செயற்பாட்டு முனைப்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதன் விளைவே இதுவாகும்.

இதைப்போல இப்பொழுது கொக்குவில் வளர்மதி முன்னேற்றக்கழகம் மிகப் பெரிய அளவிலான போட்டிகளை கலை, இலக்கியம், விளையாட்டுத் துறைகளில் நடத்துகிறது. இதற்காக அது ஏறக்குறைய 20 லட்சம் ரூபாய் அளவில் செலவு செய்கிறது. தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசை ஒவ்வொரு துறையிலும் வெற்றியீட்டுவோருக்கு வழங்குகிறது. எல்லாப் போட்டிகளும் இளையதலைமுறையினருக்காகவே நடத்தப்படுகின்றன. அவர்களை வழிப்படுத்தவும் மேம்படுத்தவுமே சிந்திக்கிறது வளர்மதி. இதனால்தான் இதை இங்கே சிறப்பாகக் குறிப்பிடவும் வேண்டியுள்ளது.

வளர்மதி முன்னேற்றக் கழகம் 1980 களில் “உள்ளம்” என்ற ஒரு இதழை வெளியிட்டது. இப்பொழுதும் அந்த இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.  1989 இலிருந்து இன்று வரையில் முப்பதற்கு மேற்பட்ட இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இதழின் தொடர்ச்சியை யுத்தமும் அதன் விளைவான இடப்பெயர்வு, புலப்பெயர்வுகளும் தடைப்படுத்தின. இருந்தாலும் அதை மீள மீளக்கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புக் குறையவில்லை. அதனால்தான் இப்பொழுது உள்ளத்தின் மீள் வருகை சாத்தியமானது. இதற்குக் காரணம், சமூக அக்கறையே. அதிலும் இளையதலைமுறையினரைக் குறித்த கரிசனையே.

கலை, இலக்கியம், அறிவியல் துறைகளை மையப்படுத்திய இதழ் உள்ளம். உள்ளம் இதழே இப்பொழுது மிகப் பெரிய அளவிலான பண்பாட்டு நிகழ்ச்சியையும் நடத்துகிறது. எதிர்வரும் 09.04.2023 அன்று வவுனியாவில் நடக்கவுள்ள இந்தப் பண்பாட்டுப் பெருவிழாவில் இந்தியாவிலிருந்து கதை சொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை சிறப்பாளராகக் கலந்துகொள்கிறார். இங்கேதான் போட்டிகளில் வெற்றியீட்டிய விளையாட்டுக் கழகங்களுக்கும் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படுகின்றன. இதை விட நாடகம், இசை நிகழ்ச்சிகள், பங்களிப்புகளுக்கான விருதுகள் எனப் பலவும் நிகழவுள்ளன.

இந்தப் பண்பாட்டுப் பெருவிழா இளைய தலைமுறையின் உள்ளத்திலும் நடத்தைகளிலும் வாழ்விலும் பண்பாட்டை உருவாக்கும் நிகழ்வாகவே வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இளையோரைக் குறித்து கவலைப்படுவதை விடுத்து, அவர்களைக் கண்டனம் செய்வதையும் முகம் சுழிப்பதையும் விட்டு விட்டு அவர்களுடைய எதிர்காலத்தை எப்படி வடிவமைக்கலாம். அல்லது அதற்கு எப்படித் தூண்டலாகவும் பக்கபலமாகவும் இருக்கலாம் என்பதற்கு இந்த நிகழ்வு சான்று. அவர்களை இந்தத் துறைகளில் ஈடுபட வைப்பது, பங்கேற்றச் செய்வது என்பவற்றின் மூலமாக ஒரு நல்ல தொடர்புறுத்தலை உள்ளமும் வளர்மதி முன்னேற்றச் சங்கமும் செய்கின்றன. இப்படி ஊர்கள் தோறும் அமைப்புகளும் மன்றங்களும் சிந்தித்துச் செயற்பட்டால் மாற்றம் அதிக தொலைவில் இல்லை. இதில் இன்னொன்றையும் சேர்த்திருக்கலாம். இளைய சாதனையாளர்கள், தொழில் முயற்சிகளுக்கான மதிப்பளிப்பு. அது முன்னோடிகளை, முன்னுதாரணர்களை அறிமுகப்படுத்துவதாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.

ஊருக்கு நாலுபேர் நல்லவர்களா இருந்தால் ஊர் மட்டுமல்ல, இந்த உலகமும் உய்யும் என்பார்கள். அதை உள்ளம் உணர்ந்து செயற்படுகிறது.