இதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அறிந்துகொள்ளுங்கள்

இதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அறிந்துகொள்ளுங்கள்

     உழைக்கும்போதே செலுத்தும் செலுத்தும் வரி (Pay As You Earn — PAYE) முறையின் கீழ் அரசாங்கம் வேறுபட்ட வருமான வரைமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறது. 100,000 ரூபாவுக்கும் 141,667 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறும் ஒருவர் 100,000 ரூபாவுக்கு மேலாக பெறுகின்ற சம்பளத்துக்கு 6 சதவீத வரியைச் செலுத்தவேண்டும். அதேபோன்றே 141,667 ரூபாவுக்கும் 183,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறுபவர் 12 சதவீத  செலுத்தவேண்டும்.

183,333 ரூபாவுக்கும் 225,000 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 18 சதவீதத்தையும் 225,000 ரூபாவுக்கும் 226,267 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 24 சதவீதத்தையும் 226,267 ரூபாவுக்கும் 308,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 30 சதவீதத்தையும் வரியாக செலுத்தவேண்டும்.

ஒவ்வொரு சம்பளத் திட்டத்திலும் அடிநிலையாக இருக்கின்ற தொகைக்கு மேலதிகமாக சம்பாதிக்கின்ற தொகையே வரிக்கு உட்படுத்தப்படுகிறது. மாதாந்தம் 308,000 ரூபாவுக்கும் அதிகமான சம்பளத்தைப் பெறுபவரிடமிருந்து 36 சதவீத வரி அறவிடப்படும்.

பல்வேறு பதவிநிலைகளில் இருக்கின்ற உயர்ந்த சம்பளங்களைப் பெறும் திறத்தொழிலர்களும் (Professionals) வரி அறவீட்டுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதே போன்றே கௌரவ சேவை செய்பவர்கள் என்று கருதப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் இருந்தும் வரி அறவிடப்படுகிறது. அவர்கள் ஒரு ஐந்து வருடங்களுக்கு சேவையில் இருக்கிறார்கள். அந்த பதவிக்காலம் முடிவடைகின்றபோது அவர்கள் ஓய்வூதியத்துக்கும் உரித்துடையவர்கள்.

   உதாரணத்துக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு ஐந்து வருட பதவிக்காலத்துக்காக 18,091 ரூபாவை மாதாந்த ஓய்வூதியமாக பெறுகிறார். மறுபுறத்தில் அமைச்சர்களும் எதிர்க்கட்சி தலைவரும் தங்களது சேவைக்காக 21,666 ரூபாவை ஓய்வூதியமாக பெறுகிறார்கள். சபாநாயகர் தனது ஐந்து வருட சேவைக்காக 22,833 ரூபா 50 சதத்தை ஓய்வூதியமாக பெறுகின்ற அதேவேளை ஐந்து வருட பதவிக்காலத்தை பூர்த்திசெய்யும் ஒரு பிரதமருக்கு ஓய்வூதியமாக 23,500 ரூபாவை கிடைக்கிறது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மொத்தச் சம்பளம் பெருமளவுக்கு அவர் பெறுகின்ற கொடுப்பனவுகளை (Allowances ) உள்ளடக்கியதாக இருக்கிறது. பிரதமர் மாதாந்த அடிப்படைச் சம்பளமாக 71,500 ரூபாவை பெறுகிறார். பாராளுமன்ற சபாநாயகரின் சம்பளம் 68,000 ரூபாவாக இருக்கின்ற அதேவேளை பிரதி சபாநாயகரின் அடிப்படைச் சம்பளம் 63,500 ரூபாவாக இருக்கிறது.

  கபினெட் அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் அடிப்படைச் சம்பளமாக 65,000 ரூபாவை பெறுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவருக்கும் அதே சம்பளம்.

   பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அடிப்படைச் சம்பளமாக 54,285 ரூபாவை பெறுகிறார்கள். அவர்கள் போக்குவரத்து கொடுப்பனவாக 15,000 ரூபாவையும் தொலைபேசி கொடுப்பனவாக 50,000 ரூபாவையும் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கும் ஒவ்வொரு தினத்துக்கும் கொடுப்பனவாக 2,500 ரூபாவையும் பெறகிறார்கள். மேலதிகமாக பொழுதுபோக்கு கொடுப்பனவாக 4,500 ரூபாவையும் அலுவலகம் ஒன்றைப் பேணுவதற்கான கொடுப்பனவாக 100,000 ரூபாவையும் அவர்கள் மாதாந்தம் பெறுகிறார்கள்.

  பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு அவர்கள் தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு — தற்போதைய எரிபொருட்களின் விலைகளில் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களின் உழைக்கும் போதே செலுத்தும் வரி அடிப்படைச் சம்பளத்தையும் இந்த கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய தொகையை வைத்து கணிப்பிடப்படுகிறது.

  மேற்கூறப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒரு மோட்டார் வாகன பெர்மிட் வழங்கப்படுகிறது. சில அமைச்சர்கள் தங்களது அமைச்சுக்களில் மூன்று அல்லது நான்கு வாகனங்களையும் கூட பயன்படுத்துகிறார்கள். 15 பேர் வரையிலான உதவி பணியாளர்களை வைத்திருக்க அமைச்சர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மாதாந்தம் 100 மணித்தியாலங்கள் மேலதிக நேர வேலை (Overtime ) கொடுப்பனவை பெறுவதற்கு உரித்துடையவர் என்பதுடன் தற்போதைய விலையின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

   பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு உதவியாளராக ஒரு ஊழியரை (Personal support staff ) நியமிக்கலாம். அந்த ஊழியர்கள் பெரும்பாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்.

   இந்த பணியாளர்களும் உத்தியோகபூர்வ வாகனங்களையும் தொலைபேசி கொடுப்பனவுகளையும் பெறுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 6 பேரை உள்ளடக்கிய உதவி பணியாளர்கள் குழு வழங்கப்படுகிறது. தொலைதூர மாகாணங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா வாடகைக்கு மாதிவெல வீடமைப்பு திட்டத்தில் வீடும் வழங்கப்படுகிறது.

   அமைச்சர்கள் தங்களது பதவிக் காலத்தில் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களுக்கு உரித்துடையவர்கள். மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வருடாந்தம் 50 இலட்சம் ரூபாவும் 20 இலட்சம் ரூபா வரையான காப்புறுதியும் கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் அல்லது விபத்தில் இறந்தால் அவரது குடும்பத்துக்கு 60 இலட்சம் ரூபா வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகைகள் எல்லாம் அவர்களுக்கு ஐந்து வருட சேவைக் காலத்தின் போது கிடைக்கிறது.

   பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தனது சம்பளத்திலும் வாழ்க்கையிலும் வருமான வரியின் தாக்கம் குறித்து அண்மையில் விசனம் தெரிவித்தார். தனது சம்பளத்தில் 36 சதவீதம் (77,466 ரூபா 72 சதம் ) வருமான வரியாக கழிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். அடிப்படைச் சம்பளமும் சகல கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக அவரின் மாதாந்த சம்பளம் 350,000 ரூபாவுக்கும் அதிகமாகும்.

  ஆனால் குருநாகல் மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் தங்களின் வருமானங்கள் பெறகின்ற கொடுப்பனவுகளைப் பொறுத்து வேறுபடுகிறது என்று சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினரதும் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரதும் கொடுப்பனவுகள் வேறுபட்டவை என்று அவர் கூறினார். மாதாந்தம் தனது சம்பளத்தில் சுமார் 83,000 ரூபா வருமான வரியாக கழிக்கப்படுகிறது என்று தனது சம்பளம் சுமார் 300,000 ரூபா என்றும் அவர் குறிப்பிட்டார்.

  பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் 54, 285 ரூபா. அவர்கள் எரிபொருள் மற்றும் அலுவலக கொடுப்பனவுகளுக்கும் உரித்துடையவர்கள். எரி பொருட்களின் விலைகள் உயர்ந்தபோது கடந்த காலத்தில் எரிபொருள் கொடுப்பனவு மாத்திரம் அதிகரிக்கப்பட்டது. வழங்கப்படுகின்ற எரிபொருளின் அளவும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது என்று அந்த குருநாகல் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

  ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மாத்திரமே எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது.

  தனது சம்பளத்தில் இருந்து வருமான வரியாக சுமார் 100,000 ரூபா கழிக்கப்பட்டதாக கபினெட் அமைச்சர் ஒருவர் கூறினார். இராஜாங்க அமைச்சர் ஒருவரின் சம்பளத்தில் இருந்து சுமார் 85,000 ரூபா வருமான வரியாக கழிக்கப்பட்டதாகவும் அந்த அமைச்சர் கூறினார்.

   பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றால் தின மொன்றுக்கு 2,500 ரூபா கிடைக்கிறது. மாத மொன்றுக்கு 8 அமர்வுகளே இடம் பெறுகின்றன. அமைச்சர்களின் சம்பளம் எரிபொருள்கொடுப்பனவு உட்பட அவர்கள் பெறுகின்ற பல்வேறு கொடுப்பனவுகளின் அடிப்படையில் வேறுபடுகிறது. அடிப்படைச் சம்பளத்துடன் இந்த கொடுப்பனவுகளையும் சேர்த்த தொகையில் இருந்தே உழைக்கும்போதே செலுத்தும் வரி கழிக்கப்படுகிறது.

  கழிக்கப்படுகின்ற அண்ணளவான வரியை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மாதச் சம்பளத்தை எம்மால் கணிப்பிடமுடியும். உதாரணமாக மாதாந்தம் சுமார் 100,000 ரூபா வரியாக கழிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். (சம்பள அடிப்படையில் வருமானவரி கழிப்புகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிட்டவாறு) மொத்தத் தொகை  173, 500 ரூபாவை எட்டுவதற்கு 73,000 ரூபாவைக் கூட்டவேண்டும். இந்த தொகையை 36 ஆல்வகுத்து 100 ஆல் பெருக்கினால் அண்ணளவான மொத்தச் சம்பளத்தை தெரிந்துகொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு அமைச்சரும் பெறுகின்ற வேறுபடுகின்ற கொடுப்பனவுகளின் அடிப்படையில் இந்த தொகை வேறுபடலாம்.

  2023 ஜனவரியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது சம்பளத்தில் இருந்து வரியாக 76,566 ரூபா 72 சதத்தை செலுத்த வேண்டியிருந்தது. அந்த தொகையுடன் 73,500 ரூபாவை சேர்த்தால் 150,066 ரூபா 72 சதமாகிறது. இந்த தொகையை 36 ஆல் வகுத்து 100 ஆல் பெருக்கினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தை நாம் அறிந்துகொள்ளலாம். அதன்படி அவரின் சம்பளம் 416,852 ரூபாவாகும்.

  வருமான வரியாக 100,000 ரூபாவை செலுத்துகின்ற அமைச்சர் ஒருவரின் சம்பளத்தை அறிய அதனுடன் 73,500 ரூபாவை சேர்க்க வேண்டும்.    பிறகு அதை 36 ஆல் வகுத்து 100 ஆல் பெருக்கினால் 426,388 ரூபா 88 சதம் வரும். அதுவே அவர் பெறும் மொத்தச் சம்பளம். 85,000 ரூபாவை வருமான வரியாக செலுத்தும் ஒரு அமைச்சரின் சம்பளத்தைை இந்த முறையைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளமுடியும். அதாவது 85,000 ரூபாவுடன் 73,500 ரூபாவை சேர்த்தால்வருகின்ற தொகையை 36 ஆல் வகுத்து 100 ஆல் பெருக்கினால் 440,277 ரூபா 77 சதம் வரும்.

  அரசாங்க ஊழியர்களோ அல்லது தனியார்துறை ஊழியர்களோ தங்களது 60 வருட சேவை பூராவும் இத்தகைய எந்த வரப் பிரசாதங்களையும் பெறுவதில்லை. அதே வேளை தங்களது ஐந்து வருட பதவிக் காலத்தில் அமைச்சர்கள் இவற்றையெல்லாம் பெறுகிறார்கள்.

  (பிரகீத் சம்பத் கருணாதிலக, டெயிலி மிறர் )