சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (6)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (6)

—சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா—

‘இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’

படிக்கும் காலத்தில் அடிக்கடி படம் பார்க்கவும் செல்வோம்!
பலகைகள் தொடர் இருக்கைகளாக அமைந்திருந்த
‘கலரி’யிலே அமர்ந்திருந்து விசிலடித்து இரசித்ததுண்டு
இதயம் பொறுக்காதே எம்ஜீஆர் படம் போட்டால்!

மட்டுநகரில் விஜயாதியேட்டர், இராஜேஸ்வரா தியேட்டர்,
இம்பீரியல் தியேட்டர், கல்லடியில் சாந்தி தியேட்டர் மற்றும்
கல்முனையில் ஹரிசன், தாஜ்மஹால் ஆகிய தியேட்டர்கள்
நிரந்தர கட்டிடங்களில் படமாளிகைகளாக இருந்தன.
அங்கெல்லாம், ஒவ்வொரு படமும் திரையிடப்படும்போது
எங்கள் ஊர்களுக்கும்கூட ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து வருவார்கள்.
மோட்டர் வாகனத்திலிருந்து ‘நோட்டீஸ்’ எனப்படும் பிரசுரங்கள்
வீசப்படும்.

பலநிறங்களில், பெரியபெரிய அளவுகளில் அந்த நோட்டீஸ்கள் இருக்கும்.
நடிகர் நடிகைகளின் படங்களும் படத்தின் கதைச் சுருக்கமும் அச்சிடப்பட்டிருக்கும்.
சிறுவகுப்புப் படிக்கும் காலத்தில் வாகனத்தின் பின்னால் ஓடிச்சென்று,
அவற்றைப் பொறுக்கி எடுப்போம். பத்திரமாகச் சேகரித்து புத்தகங்கள், கொப்பிகளுக்கு உறைபோட்டு மகிழ்வோம்.

களுவாஞ்சிகுடியில் ஆரம்பத்தில் படமாளிகை இருக்கவில்லை.
‘டூரிங் டாக்கீஸ்’ எனப்பட்ட சினிமாக் கொட்டகைகள்
அவ்வப்போது தலைகாட்டும்.
இந்தக் கொட்டகைகளை திரு த. நமசிவாயம் அவர்கள்
கொண்டுவந்து படங்களைத் திரையிடுவார்.
திரு. விஸ்வலிங்கம் அவர்களும் குறுகியகாலம்
திரைப்படக் கொட்டகையொன்றை நடத்தியமை
நெஞ்சின் இன்னும் மறையாத நினைவாக உள்ளது.
அவர் களுவாஞ்சிகுடியிலும் பின்னர் மண்டூரிலும்
வெவ்வேறு காலங்களில் அமைத்திருந்ததாக நினைக்கிறேன்.
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர், பிரபல தொழில் அதிபர் திரு.வி.இரஞ்சிதமூர்த்தி அவர்களின், அம்மப்பாவின்
இளைய சகோதரரே திரு விஸ்வலிங்கம் ஆவார்.
எனது உறவினரும்கூட.
சில வருடங்களில் அவர் திரைப்படக் கொட்டகைத் தொழிலை
விட்டுவிட்டார்.

திரு த.நமசிவாயம் அவர்கள், சாரதா, வெலிங்டன் என்ற பெயர்களில்
ஒரே நேரத்தில் மூன்று திரைப்படக் கொட்டகைகளின்
உரிமையாளராக இருந்தவர்.
பிரபலமான சில சிங்களப் படங்களின்
இணைத் தயாரிப்பாளராகவும் அவர் இருந்திருக்கிறார் என்பது
பிற்காலத்தில் அவரோடு பேசக்கிடைத்தபோது
நான் அறிந்துகொண்ட தகவல்.

ஆரம்பத்தில்,
காலத்திற்குக் காலம், தற்காலிக கொட்டகைகளை (Tents)
களுவாஞ்சிகுடி, அக்கரைப்பற்று, செங்கலடி
ஆகிய இடங்களில் நடாத்திவந்தார்.
ஒரு படமாளிகைக்கு ‘சாரதா’ என்று, தனது
மருமகளின் பெயரை வைத்திருந்தார்.
நமசிவாயம் அவர்களின் ஒரு தங்கையின் மகளே சாரதா.

பாலர் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை
பாடசாலையில் எங்களுடன் ஒன்றாகப் படித்தவர் சாரதா.
திரு. இ. கிருஸ்ணபிள்ளை ஆசிரியர் அவர்களின் மனைவியாக வாழ்ந்து, சிலவருடங்களுக்கு முன்னர் காலமானார்.

களுவாஞ்சிகுடியில் திரைப்படக் கொட்டகையை அமைப்பதற்கு
காணியை துப்பரவு செய்கிறார்களாம் என்ற செய்தி வந்தால் அது எங்கள்
காதுகளில் தேனாகப் பாயும்.
ஊரின் எல்லையிலேதான் ஒவ்வொரு தடவையும்
‘டூறிங் டோக்கீஸ்’ என்று கொட்டகை போடப்படும்

ஒரேயொரு தடவை, எங்கள் வீட்டுக்கு அருகாமையில்,
இப்போது கல்வித்திணைக்களம் இருக்கும் இடத்திற்கு எதிரில்
படமாளிகை(கொட்டகை) வந்தபோது
நாங்கள் அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை.
கொட்டகை அமைப்பதற்குக் கூனி அடிக்கத் தொடங்கிவிட்டால்
மட்டில்லா மகிழ்ச்சியில் எங்கள் மனமெல்லாம் திளைக்கும்.
பட்டிருப்புத் தொகுதியின் பட்டி தொட்டிகளில் இருந்தெல்லாம்
படம்பார்க்க மக்கள் வருவார்கள்.
படுவான்கரையில் இருந்து மாட்டுவண்டிகளில் பலர் வருவார்கள்
புராணப் படங்கள் திரையிடப்பட்டால்
எண்ணிக்கையற்ற மாட்டு வண்டிகள் படுவாங்கரையின்
எல்லா ஊர்களில் இருந்தும் வரும்.
இரண்டாம் காட்சி முடிந்ததும் வீதியிலே வரிசையாக
திரும்பிச்செல்லும் ‘கரத்தை’களின் சத்தம் நள்ளிரவில்
பாதையோரத்து வீட்டுக்காரரை எழுப்பும், நித்திரையைக் குழப்பும்.
இரவு நேரத்தில் தங்கள் தங்கள் ஊருக்குத்
திரும்பிச்செல்லும் வண்டிகளில் பெரும்பாலும்
எல்லோருமே நித்திரையாகி விடுவார்கள்
வண்டிக்குள் பாய் விரித்து அனைவரும் படுத்திருப்பார்கள்.
வண்டியோட்டிகளும் சிலவேளை வசதியாகத் தூங்குவார்கள்.
முன்னால் போகும் வண்டிக்காரர் மட்டும் விழித்திருப்பார்
பின்னால் போகும் வண்டிகள் சாரதியின் துணையின்றியே
பின்தொடர்ந்து கொள்ளும்.
பாதை தவறாமல் மாடுகள் தங்கள் வண்டிகளைப்
பாதுகாப்பாக இழுத்துச் செல்லும்.
அரிக்கேன் லாம்பு ஒன்று (Hurricane lamp)
ஒவ்வொரு வண்டியிலும் கீழ்ப்பக்கத்தில்
ஒய்யாரமாக ஆடிக்கொண்டே இருக்கும்.
வரிசையாகச் செல்லும் வண்டிகளின் ஓசையும்
அதற்கேற்ப அசைகின்ற அரிக்கேன் லாம்புகளின் ஒளியும்
தாளமும் ராகமும் தப்பாத நாட்டியமாய்
பாதை நெடுகப் பவனிபோல் நகரும்.

கந்தன்கருணை படம் திரையிடப்பட்டபோது
நிரந்தரமான படமாளிகை நிறுவப்பட்டுவிட்டது.
மூன்று வாரங்களுக்கு மேலாகத் தினமும்
மும்மூன்று இரவுக்காட்சிகள் நடத்தப்பட்டன.
மாட்டுவண்டிகள் பக்கத்தில் இருந்த வளவுகளிலும்,
வீதியிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
வீதியில் நின்றிருந்த வண்டிகளின் வரிசைகள்
திரையரங்கத்திலிருந்து இருந்து பிள்ளையார் கோவில் வரை
பாதையின் இரண்டு பக்கங்களும் நீண்டிருந்தன.
இரண்டு மூன்று நாட்கள் இப்படி நடந்தது.
இப்போது எவரும் இதை நம்ப மாட்டார்கள்.

தற்காலிகக் கொட்டகைக்குப் பதிலாக நிரந்தரமான
திரையரங்கம் கட்டப்படப் போகிறது என்ற செய்தி
வந்தநாளில் எங்கள் சிந்தையெல்லாம் பூத்துக்குலுங்கியது
அந்தநாளில் இருந்து அது ஆகுநாள் வரைக்கும்
சொந்த விடயம்போல அடிக்கடி தூக்கம் கலைந்தது.
எப்போது எங்கள் ஊரில் ‘தியேட்டரில்’ படம் ஓடும் என்று
எதிர்பார்த்துக் காத்திருந்த எமக்கு
.நிரந்தரமான ‘தியேட்டர்’ ஒன்று எங்கள் ஊரில் அமைவது
நெஞ்சிலே தித்திப்பான உணர்வுகளைத் தெளித்தது.

திரையரங்கின் கட்டுமானப் பணிகளைத்
திரையரங்க உரிமையாளர் திரு நமசிவாயம் அவர்கள்
எத்தனை நாட்கள் போய்ப் பார்த்திருப்பார் என்கின்ற
கணக்கு அவருக்கே தெரிந்திருக்காது!
ஆனால், அத்திவாரம் வெட்டப்பட்ட நாள்முதல்
புத்தம் புதிதாக – முதலாவது படம் – திரையிடப்பட்ட நாள்வரை
அனேகமாக ஒவ்வொரு நாளும், மாலை நேரத்தில்
அங்கே நேராகச் சென்று, கட்டுமானப் பணி
சீராக நடக்கிறதா என்பதைப் பார்த்து மகிழ்ந்தோம்.

அத்தகைய படமாளிகை இருந்த அடையாளமே தெரியாமல்
இப்போது இடிக்கப்பட்டு, இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது.
கடந்த 2016 ஜூலைமாதம் 9 ஆம்திகதி மட்டுநகரை நோக்கி
நான் சென்றுகொண்டிருந்தபோது
எனது ஊரின் எல்லையை அண்மித்ததும் எதிர்ப்பட்ட காட்சியால்
இதயத்திலே இனம் புரியாத ஒரு வலி ஏற்பட்டது. நெஞ்சு கனத்தது.
சாரதா படமாளிகை உடைத்து நொருக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சொந்த வீடு ஒன்று இடித்து அழிக்கப்படுவதைக் காண்பதைப்போல சோகமாக இருந்தது எனக்கு.
பள்ளிப்பருவத்தில் எங்கள் உள்ளங்களைச் செப்பனிட்ட கலைக்கோவிலாகவே சாரதா படமாளிகையை நினைத்திருந்தோம். எத்தனை கதைகள், எத்தனைகனவுகள், எத்தனை நினைவுகள் எல்லாவற்றுக்கும் களம் அமைத்த அந்தத் திரையரங்கு,
கல்லும், மண்ணும் உதிரக் கனரக இயந்திரத்தால் சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
பயணம் முழுவதும் படமாளிகை நினைவுகள்
நெஞ்சிலே படமாக ஓடிக்கொண்டிருந்தன.
பனித்த கண்கள் அடிக்கடி என்பார்வையை மறைத்தன.
திரும்பி வரும்போது செல்லிடத் தொலைபேசியில்
அரைவாசி உடைந்து கிடந்த கட்டிடத்தைப் படம்பிடித்து,
மனதைத் தேற்றிக்கொண்டேன்.

இந்த இடத்தில் ஒருவிடயத்தை நான் எழுதியே ஆகவேண்டும்!
பட்டிருப்புத் தொகுதி மக்களுக்கு அறிவு ஊட்டிய பெருமைக்குரியவராக
எனது நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்திருப்பவர்
திரு த.நமசிவாயம் அவர்கள்.

(திரு நமசிவாயம் அவர்கள் தனது திரையரங்கிற்கு முன்னால் மோட்டார் சைக்கிளில்)

படமாளிகை நடாத்துகின்ற ஒரு தொழில் அதிபராக மட்டும்
நமசிவாயம் அவர்களை நான் பார்க்கவில்லை
பட்டிருப்புத் தொகுதிக்கு பகுத்தறிவைக்கொடுப்பதில்
பங்காற்றிய நல்லதொரு சமூக சேவையாளராகவே
அவரை நான் நன்றாக அளந்து வைத்திருந்தேன்
அந்த நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள் மக்களுக்கு
அறிவூட்டும் பணியில் அளப்பரிய பங்கினை
ஆற்றின என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
அந்தவகையில் பட்டிருப்புத் தொகுதியில் ஒரு
படமாளிகையை அமைத்தமையைப்
பணம் ஈட்டும் ஒரு தொழிலாக மட்டும் கருதிக்கொள்ள முடியாது.
அதற்கும் மேலாக,
அறிவூட்டிய பணியாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனால்தான்,
எதிர்பாராத விதமாக தலைவர் இராசமாணிக்கம் அவர்கள்
எம்மைவிட்டுச் சென்று அமரர் ஆனபின்னர்
அடுத்த பா. உ ஆக வருவதற்கு ஆராரோவெல்லாம்
அங்கலாய்த்துத் திரிந்தபோது
நமசிவாயம் அவர்களை நல்லவர்கள் சிலர் முன்மொழிந்தார்கள்.
சொந்தங்கள் சில செய்த சூழ்ச்சிகளும்
கட்சித் தலைமையின் கண்கட்டு வித்தைகளும்
பாதாளம் வரை பாய்ந்த பணபலமும்
நமசிவாயம் அவர்களை பின்வாங்கச் செய்துவிட்டன.
இதுபற்றிய விடயங்களைப் பின்னர் விரிவாக
எழுதவிருக்கிறேன்.

(நினைவுகள் தொடரும்)