எத்தனை கோணம்…? எத்தனை பார்வை ! (சிறுகதை)

எத்தனை கோணம்…? எத்தனை பார்வை ! (சிறுகதை)

— முருகபூபதி —

“இரண்டுபேரும் ஷொப்பிங் சென்றால், வீடு திரும்பியதும் யார் முதலில் குளித்து தோய்வது ..? “ என்று வீண் சர்ச்சை வரும். ஒரு நாளைக்கு நீங்கள் மற்றும் ஒரு நாளைக்கு நான் போகிறேன். தண்ணீர் பில்லும் குறையும்“ என்றாள் எனது மனைவியான  சிக்கன சுந்தரி. 

எதிலும் அவளுக்கு முன்னெச்சரிக்கை அதிகம். 

இந்த வைரஸ் வந்து பரவியதும்  அந்த முன்னெச்சரிக்கை பன்மடங்காக அதிகரித்துவிட்டது.  ஒரு மருத்துவரின் மகளாகவும், பாடசாலையில் முன்னர் ஆசிரியப்பணியிலிருந்தபோது மாணவருக்கு சுகநலன் பாடம் எடுத்தமையாலும், இந்த வைரஸ்  பற்றி தினம் தினம் கணினிக்கு முன்னால் அமர்ந்து ஆராய்ந்துகொண்டிருப்பவள். 

எனது காரிலும் வைரஸ் படிந்திருக்கும் என்பதால், அதில் ஏறாமல், அருகிலிருக்கும் ஷொப்பிங் சென்டருக்கு நடந்தே சென்று, நடந்தே திரும்பிவிடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டாள். 

எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டில் முடங்கியிருப்பது. எனக்கிருக்கும் மற்றும் ஒரு சொந்தம் இந்த நீரிழிவு உபாதை. நானும் நடந்தால்தான் அதன் அன்புத்தொல்லையை  கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். 

 “சரி… நானும் காரை எடுக்கவில்லை. நடந்தே சென்று நடந்தே திரும்புகிறேன். என்ன என்ன வாங்கவேண்டும் என்ற லிஸ்டை எழுதித்தாரும்“ என்றேன். 

அரைப்பக்கத்திற்கு எழுதி அதனை நீட்டியவள்,  “நான் சொல்வதை கேளுங்க. பணத்தை நீட்டி சாமான் வாங்கவேண்டாம்.  மிகுதிப்பணத்தையும்  நோட்டாகவோ சில்லறையாகவோ வாங்கவும் வேண்டாம் உங்கட பேங் கார்டை கொடுத்து வாங்குங்கோ..? சரியா… ? பின்புறம் கேட்டை திறந்து வைக்கின்றேன். வந்ததும் குரல் கொடுங்கள். பின்கதவை திறந்துவிடுகிறேன்.“  என்று சொல்லி வழியனுப்பிவைத்தாள். 

‘இந்த கொரோனா, இவளின்ட இந்த அலைப்பறைக்காகவாவது ஓடித்துலையவேணும் இறைவா… மனதிற்குள் வேண்டிக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டேன். 

“எக்காரணம்கொண்டும் முகத்திலிருக்கும் மாஸ்க்கை கழற்றவேண்டாம். “ என்று பின்னாளிருந்து குரல் கொடுத்தாள்.  

எனக்கு எரிச்சல் பற்றியது. 

“ஓமோம்… தெருவில் எவளுக்காவது கிஸ் அடித்துவிடுவேன் என்று பயமா “ என்று சற்று சத்தமாகவே  சொல்லிக்கொண்டு சென்றேன்.  

“இப்போது அது ஒன்றுதான் குறை  “ என்று அவளும் சற்று கத்திக்கொண்டு வாயில் கதவை அடித்து மூடினாள். 

அவளது எரிச்சல் அந்த வாய்பேசாத கதவில் காண்பிக்கப்பட்டது. கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா உயிரையும்  எடுக்கும் எரிச்சலையும் கொடுக்குமோ..?!  

நாம் வசிக்கும் பிரதேசம் புறநகரம். வீதியில் மக்களின் நடமாட்டம் எப்பொழுதும் குறைவாகத்தான் இருக்கும். இந்த  கொரோனா வந்து   மேலும் குறைத்துவிட்டது. அந்த வெற்றிடத்தை எங்கிருந்தோவெல்லாம் வந்த பெயர் தெரியாத பறவை  இனங்கள் ஆக்கிரமித்துக்கொண்டு ஆங்காங்கே “கீச் கீச் “ என ஒலியெழுப்பிக்கொண்டு பறக்கின்றன. 

என்றைக்கும் இந்தப்பிரதேசத்தில் நான் கண்டிறாத பல வர்ணக்கிளிகளின் நடமாட்டத்தையும் காணமுடிகிறது. வீடுகளின்  முற்றங்களில் வெட்டித் துப்புரவாக்கப்பட்ட புற்தரைகளில் குருவிகள் இரை தேடுகின்றன. புற்களை செதுக்கியதனால்,  மண்  புழுக்கள் ஊர்ந்துகொண்டிருக்கும் என்ற நம்பிக்கை இந்தக் குருவிகளுக்கு. 

வீதியோரத்து நடைபாதையில் நடந்துகொண்டிருக்கின்றேன். 

எனக்கு எதிர்ப்புறமாக அதே நடைபாதையில் ஒரு அழகிய இளம் யுவதி நடந்து வந்துகொண்டிருந்தாள். 

அவள் எத்தகைய அழகு.. அவளது முகம், கூந்தல், கண்கள், நாடி, இதழ்கள், கன்னக்கதுப்பு என்று நான் எதனையும் வர்ணிக்கவரவில்லை. ஒரு காலத்தில் சரித்திரக்கதைகள் எழுதிய சாண்டியல்யன்  தனது முதிய வயதிலும் இதுவிடயத்தில் உச்சம்  தொட்டவர்.  

அந்த இளம் அழகி கைத்தொலைபேசியில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டு சுமார் இருபத்தியைந்து மீட்டர்  தொலைவில் வந்தவளைக்கண்டதும் நான் சற்று விலகி ஒதுங்கி நடந்தேன். மறுமுனையிலிருந்து அவளுடன் பேசுபவருக்கு கேட்கவேண்டுமென்பதற்காக, அவள் தனது முகக்கவசத்தை சற்று கீழிறக்கியிருந்தாள். 

அவள் எனது பாதுகாப்பிற்காகவோ, அல்லது எனது சுவாசத்திலிருந்து தன்னை காப்பதற்காகவோ, நடைபாதையிலிருந்து  விலகி புற்தரையில் கால்களை பதித்து நடந்து என்னைக் கடந்தாள். 

முகக்கவசத்தை தாழ்த்தி பேசிக்கொண்டு வரும் அவளிடமிருந்து என்னை பாதுகாக்க நான்தானே அவளை விலக்கி  புற்தரையினூடாக நடந்திருக்கவேண்டும். 

அவளைக்கடந்து, இரண்டு அடி தூரம் நடக்கையில்  “ஷிட்“ என்று பெருங்குரல் பின்னாளிருந்து வந்தது. திரும்பிப்பார்த்தேன். 

அவள் புற்தரையில் நின்று வலது காலை உதறிக்கொண்டும் நிலத்தில் தேய்த்துக்கொண்டுமிருந்தாள். ஏதும் ஊரும்  ஜந்துக்களோ என்ற எண்ணத்தில், அவளுக்கு உதவுவதற்கு திரும்பி வந்தேன்.  

கைத்தொலைபேசியை அணைத்துவிட்டு, தொடர்ந்தும் வலதுகால் பாதத்தை நிலத்தில் தேய்த்தாள். துர்மணம் வந்தது. 

அவள் தெரியாத்தனமாக புல்லில் கிடந்த நாய் மலத்தில் காலை வைத்துவிட்டது தெரிந்தது. வாய்க்குள் புறுபுறுத்தாள்.  நல்லவேளையாக நாம் நின்ற இடத்திற்கு அருகிலிருந்த வீட்டின் முற்றத்தில் பூமரங்களுக்காக பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் குழாய் எனது கண்ணுக்குத் தென்பட்டது.   

அதனைக்காண்பித்து, அவள் அணிந்திருந்த பாதணியை கழுவச்சொன்னேன். நன்றி சொல்லிக்கொண்டு கெந்திக்கெந்தி  நடந்துவந்து பாதணியையும் கால்களையும் கழுவிக்கொண்டாள். 

அவளது ஆடையின் கீழ்விளிம்பும் சற்று நனைந்துவிட்டது. கைகளிலும் ஈரம்.   

நான் எப்போதும் எனது கைபேக்கில்  சிறிய வெள்ளை ரிசுபெட்டி வைத்திருப்பவன். இந்த கொரோனா வந்தது முதல் அதுவும் என்னுடன் எப்போதும் பயணிக்கும். 

அடிக்கடி பருவகாலம் மாறும் தேசத்தில் தடிமன், இருமல் ஏன் வருகிறது…? எப்போது வருகிறது..? என்ற மயக்கத்தில் நாட்களை கடத்தும் காலத்தில் அல்லவா வாழ்கின்றோம். வெளியே செல்லும்போது ரிசுபொக்ஸும் எடுத்துச்செல்லவேண்டும் என்பதும் எனது இல்லத்தரசி – முன்னெச்சரிக்கை சுந்தரியின் கட்டளை.  

எனது  இல்லத்தரசிக்கு இக்காலத்தில் நான் சூட்டியிருக்கும் பெயர்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.  

சிக்கன சுந்தரி –முன்னெச்சரிக்கை சுந்தரி – கட்டளை சுந்தரி -கண்டன சுந்தரி. அது அது அந்தந்த நிலைமைகளின் பின்னணியில் எனது வாயிலிருந்து உதிரும். 

நாய் மலத்தை மிதித்தவளுக்கு தண்ணீர் குழாயும் காண்பித்து, அவளது கைகளை துடைக்க எனது ரிசு பெட்டியையும்  நீட்டினேன். 

மாநகர சபை அழகாக அமைத்திருக்கும் நடைபாதையிலேயே அவள் வந்திருக்கலாம். என்னை விலத்தி புற்தரையில்  நடந்தவள், நாய் மலத்தை மிதித்து அவஸ்தைப்பட்டாள். 

இக்காலத்தில் ஒன்று தசம் ஐந்து மீற்றர் இடைவெளி பேணி நடமாடவும் வாழவும் வேண்டும் என்ற விதிமுறையினால்,  அவள் என்னை விலத்திச்சென்று, நாய்மலத்தை தேய்த்துக்கொண்டாள். 

இப்போது, அவளுடைய மூச்சுக்காற்றும் எனது மூச்சுக்காற்றும் பரஸ்பரம் முகக்கவசங்களின் ஊடாக நெருங்கும் வகையில் கைதுடைக்க ரிசு கொடுக்கின்றேன். 

அவளைப்பார்க்க பாவமாக இருந்தது. 

“கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டு நடந்து சென்றாலும் தரையையும் பார்த்துக்கொள்ளவேண்டும்“ என்றேன்.  

அவள் ரிசு பெட்டியை திருப்பித்தந்து , நன்றியும் சொல்லிக்கொண்டுசென்று அடுத்திருந்த வீட்டின் முன்னாலிருந்த குப்பை கொட்டும்  தொட்டியில் கைதுடைத்த ரிசுவை போட்டாள். 

மீண்டும் திரும்பி எனக்கு நன்றி சொன்னாள். 

ஷொப்பிங் முடிந்து வீடு திரும்பியபோது வீதியில் நடந்த சம்பவத்தை மனைவியிடம் சொன்னேன். 

இவளிடம் ஏன் அதனையெல்லாம் சொல்கிறேன்…? என்று அவள் அதற்குச்சொன்ன வக்கனையான வார்த்தைக்குப் பிறகு  மனம் வருந்தினேன்.  

அவள் சொன்னது இதுதான்: 

“யாரும் ஆம்பிளைகளுக்கு அப்படி  நடந்திருந்தால்… இப்படி காலும் கழுவிவிட்டு,  ரிசுவும் கொடுத்து துடைக்கச் சொல்லுவீங்களா…? அவளின்ட காலைத்தூக்கி கையில் ஏந்தியா துடைத்தீர்கள்…?  “   

இனி இவளை “ வக்கணை சுந்தரி “ என்றுதான் அழைக்கவேண்டும்.