ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 2)

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 2)

— பேராசிரியர்சி.மௌனகுரு—

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்

சாதி ஆய்வுகளை மேற்கொள்வோரும்  

ஆய்வின் தன்மைகளும்  

இவ்வாய்வுகளைச் செய்பவர்களை ஆறு வகையினராகப் பிரிக்கலாம்.  

முதலாவது பிரிவினர் எந்த விதமான ஆய்வுநெறி முறைகளுமறியாது சாதி அபிமானம் காரணமாக சாதி இன வரலாறு எழுதுபவர்கள்.  

இரண்டாவது பிரிவினர் கிறிஸ்தவ பாதிரிமார்கள். இவர்கள்தான் தமிழகத்தில் கீழ்நிலைச் சாதிகளின் வரலாற்றை எழுதியவர்கள். பிராமணர் செல்ல முடியாத சாதியாக கீழ்நிலைச் சாதிகளை இவர்கள் இனம் கண்டனர்.  கிறித்தவத்தையும், மேற்கத்தைய நாகரிக விழுமியங்களையும் அவர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல இவ்வாய்ப்புகள் கிறித்தவர்கட்குப் பெரும் உதவி புரிந்தன.  

மூன்றாவது பிரிவினர் சரித்திராசிரியர்கள். ஆய்வு நெறிமுறைகட்கியைய வரலாறு எழுதுபவர்கள். இவர்கள் கல்வெட்டு, புதைபொருள், பிறநாட்டார் குறிப்பு கொண்டு வரலாற்றை எழுதுபவர்கள். பெரும்பாலும் இவற்றைப் பயன்படுத்தி வரலாற்றை எழுதுவதால் பொதுவாக சரித்திர வரலாறுகள் மேனிலைப்பட்டோர் வரலாறாகவும், ஆளுமை நடத்திய அரசர்களின் வரலாறாகவும் அமைந்துவிடுகின்றன.  

நான்காவது பிரிவினர் வரலாற்றின் வாய்மொழி மரபினையும்,அடிநிலை மக்களையும் உள்ளடக்கி ஆளப்பட்ட மக்களின் வரலாறாக பொருளியல் மாற்றங்களை மையமாக வைத்து வரலாற்றினை எழுதியவர்கள், எழுதுபவர்கள். இவர்கள் மாக்ஸிய நெறி சார்ந்தவர்கள்.  

ஐந்தாவது பிரிவினர் விளிம்பு நிலை மக்களிற் கவனம் செலுத்தி அவர்கள் பார்வையில் வரலாற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்துவோர்.  பின் நவீனத்துவ சிந்தனையாளர்களான இவர்கள் ஆண்ட மேனிலைப்பட்டோரை மையப்படுத்திச் சரித்திரம் படைத்த பூஷ்வா ஆராய்ச்சியாளரின் மையங்களின் தடத்திலேயே வைதீக மாக்ஸிய ஆராய்வாளர் மறுதலையாக்கம் செய்வதை விமர்சித்து, அந்த மையத்துள் வராத விளிம்புநிலை மக்களைப் பற்றி அம்மக்கள் (உதாரணமாக மிகக் கீழ்ப்பட்ட சாதியினர், நாடோடிகள், மலைவாழ் ஜாதிகள்) பார்வையில் எழுதுபவர்கள்.  

ஆறாவது பிரிவினர் சமூகவியல் மானிடவியலாளர்கள். இவர்கள் ஒரு சமூகத்தின் மாற்றத்தை இயற்கையை, வாழ்வை, சமூகவியல் மானிடவியல் அறிவியல் முறையில் அணுகுபவர்கள்.  

இவ்வகையில் தமிழ்நாடு, இலங்கையின் சாதி அமைப்பு பற்றி நிறைய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. எம். டி பூணூரீனிவாசன், மைக்கல் றொபர்ட், ஹார்ட் கிறேவ், எம். டி. ராகவன்,கெயல் ஒம்வெத், ஆந்திரே பெடேல், அம்பேத்கர், இந்திரஜித்குகா, குப்தா,தீபங்கர் குப்தா, கில்பர்ட் சிலேட்டர், குணா, கா. சிவத்தம்பி, கோ. கேசவன்,  அ. மார்க்ஸ், ரவிக்குமார் போன்றோர் இவ்வாய்வாளர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள்.  

தமிழ்நாட்டிலே இந்த சாதி ஆய்வுகளை முதலிலே முன்னெடுத்தவர்கள் கிறிஸ்தவப் பாதிரிமார்களாவர். முன்னரே கூறியபடி அதற்கான தேவைகளும் அவர்கட்கிருந்தன. கிறித்தவ மதத்தைப் புகுத்தும் இடைவெளிகளையும் அங்குதான் அவர்கள் கண்டனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.  

1850இல் கால்டுவெல் (Caldwell) பாதிரியார் எழுதிய (History of Thirunelvely Saanar) திருநெல்வேலிச் சாணார்களின் வரலாறு எனும் நூல் சாணார் பற்றியது. சாணார்கள் கள்ளிறக்கும் தொழிலை அப்பகுதியிற் செய்து கொண்டிருந்தவர்கள். இவர்களிற் கணிசமான தொகையினர் கிறித்தவர்களாகி ஆங்கிலக் கல்வி கற்று, சமூக அசைவியக்கத்தினால் அரசியல் பொருளாதாரத்தில் மேம்பாடுற்றனர்.  

அத்தோடு சாணார் எனப்படும் இவர்கள் அரசியலில் பெரும் சக்தியுமாகினார்கள். இது இன்று ஒர் எழுச்சிபெறும் சமூகக் குழுவாயிருக்கிறது (Emerging Community). ஆனால் இதே நூலினை பின்னால் திருப்பி அச்சிட முடியாது போயிற்று.  

காரணம், கால்டுவெல் நூல் எழுதிய காலத்தில் வாழ்ந்த சாணார் பெண்கள் இடுப்புக்கு மேல் உடுப்பு அணியாமல் வாழ்ந்திருக்கிறார்கள் என்று கால்டுவெல் உண்மையை எழுதியமையினாலேயே. பிற்காலத்தில் பொருளாதார, கல்வி வளர்ச்சி, அரசியலதிகாரம் பெற்றுவிட்ட சாணார் குழுமத்திற்குத் தமது பழைய யதார்த்தங்கள் இழிவைத் தரும் என்பதனாலேயே அப்புத்தகத்தை மீள் பிரசுரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  

தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் வருகையினாலும், கிறித்தவத் தாக்கத்தினாலும், புதிய பொருளாதார மாற்றங்களினாலும் மேனிலையாக்கம் பெற்ற இன்னொரு குழுவினர் நாடார் ஆவர்.  

ஹார்ட் கிறேவ் (Hard Grave) எழுதிய தமிழ்நாட்டின் நாடார்கள்(Nadars of Tamil Nadu) எனும் நூல் முக்கியமான ஒரு நூலாகும். தமிழ்நாட்டில் நாடார் சமூகம் பற்றியும் அச்சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இந்நூல் கூறுகிறது.  இதேபோல் தமிழ்நாட்டில் முக்கிய சாதிக்குழுமமான முதலியார் குடும்ப வரலாறு பற்றி மைக்கல் றொபர்ட்டின் நூலும் குறிப்பிடத்தக்க நூலாகும். இதேபோல் கொங்கு நாட்டு மக்களின் வரலாறு பற்றியும் நூல்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டு அரசியல் எழுச்சியில் கொங்கு நாட்டு மக்களின் இடத்தை இந்நூல் ஆராய்கிறது. அண்மைக் காலமாக தமிழ்நாட்டின் அரசியல் சாதி அரசியலாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார மாற்றம் இட ஒதுக்கீட்டுக் கொள்கை புதிய சிந்தனைகளின் வரவு காரணமாக தமிழ்நாட்டில் சாதிச் சண்டையாகவே அரசியல் மாறியுள்ளதைக் காணமுடிகிறது.  வன்னியர் எழுச்சி, தலித்துகளின் எழுச்சி என்பன இன்று தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடம் பெறுகின்றன. இவர்கள் பற்றிய நூல்களும் வெளிவருகின்றன.  

இன்றைய தமிழ்நாட்டுச் சமூக மாற்றத்தை அவ்வச் சாதிக் குழுமங்கள் எதிர்கொள்ளுவதனையே இந்நூல்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் விளக்குகின்றன.  

இலங்கையிலும் இவ்வகையில் சாதி வரலாறுகள் வந்துள்ளன.  கிறிஸ்தவ மிஷனரிகளே இதில் ஆரம்பத்தில் செயற்பட்டன. கத்தோலிக்க மதம் ஆரம்பத்தில் பிராமணர் ஊடுருவ முடியாத, மீன்பிடிப்போர் சமூகத்தில் ஊடுருவியமை, தாழ்த்தப்பட்ட பலர் கிறித்தவ மதத்திற்கு மாறியமை, சாதி வரலாறுகளைச் சரியானபடி ஆராய்ந்து எழுதிக் கிறித்தவ பாதிரிமார் அச்சமூகங்களுக்குள் உள்ளிட்டதன் காரணமாகவே எனலாம். யாழ்ப்பாணத்தின் சைவ வேளாளருக்கும் கத்தோலிக்கருக்குமிடையே இருந்த சண்டைகள் (வெளிப்படையாகவும், மறைமுகமாகவும்) இலக்கியங்களிலும்,  நாடகங்களிலும் வாய்மொழிக் கதைகளிலும் சரித்திரக் குறிப்புகளிலும் காண முடிகிறது. இது உண்மையில் சமயச் சண்டையன்று. முரண்களின் அடிவேரைத் தேடிச் சென்றால் அங்கே, யாழ்ப்பாணச் சமூக அமைப்பு அடக்கும் சாதி – அடக்கப்படும் சாதி என்ற இரு பிரிவாக நின்று முரண்பட்டுக் கொண்டமைதான் தெரியவரும்.  

சிங்கள சமூகத்தில் கொய்கம சாதியே உயர்ந்த சாதியாகும். இது தமிழ் இனத்தின் வேளாளரை நிகர்த்த சாதி. இச்சாதியினர் கண்டி கொய்கம, கரையோர கொய்கம எனத் தமக்குள் பிளவுபட்டு நின்றனர். கோட்டை ராச்சியம், கண்டி ராச்சியம் என இரண்டாகப் பிரிந்து நின்ற வரலாற்றுக் காலம் தொடக்கம் இன்றைய அரசியல் வரை அது தொடர்வதைக் காணலாம்.  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் யு. என். பி. கட்சியினதும் அடி ஆழங்களில் கொய்கம இரண்டாகப் பிரிந்து நிற்பது தெரியவரும். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின்னணியில் கண்டிக் கொய்கம சாதியினரின் செல்வாக்கும் யு.என்.பி.யின் பின்னணியில் கரையோர கொய்கம சாதியினரின் செல்வாக்கும் உண்டு என்பர். இரண்டு கட்சிகளும் தமது இருப்புகளுக்கும் ஆட்சிப் பலத்துக்கும் ஏனைய சாதிகளை இணைத்துக் கொள்வதையும் காணமுடியும்.  

கொய்கமவுக்கு அடுத்ததாக பெரும்பான்மை மிக்க இனமாக இருப்பது கறாவ சாதியாகும். இவர்கள் கொய்கம வகுப்பைக் சார்ந்து வாழாதோர்.  மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருப்போர். இலங்கையின் பொருளாதார, கல்வி மாற்றம் காரணமாக இவர்கள் மத்தியில் சமூக அசைவியக்கம் ஏற்பட்டது. இவர்கள் மேனிலைப்பட்டபோது, இவர்களின் சமூக வரலாறுகள் எழுதப்படலாயிற்று. இவர்கள் பற்றிக் குறிப்பிடத்தக்க பல நூல்கள் வந்துள்ளன. எம். டி. ராகவனின் இலங்கைக் கறாவர்கள் (Caravas of Ceylon) நூல் பிரசித்தமானது. 1971 ஜனதா விமுக்தி பெரமுனையில் பின்னணியில் நின்றவர்களிற் பெரும்பான்மையோர் இச்சமூகத்தைச் சேர்ந்த படித்த மேனிலை பெற்ற இளைஞர்கள் என்பது ஆய்வாளர் முடிவு.  

இவ்வியக்கத்தின் எழுச்சியை அரசாங்கம் அடக்கியது என்பதை விட கறாவ சமூகத்தின் எழுச்சியை கொய்கம சமூகம் அடக்கியது என்று மறுவாசிப்புக்குட்படுத்திப் பார்த்தல் விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு உதவும்.  

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைமலையடிகள் பற்றி தமிழறிஞர் மத்தியில் பெரு மதிப்புண்டு. அவர் எழுதிய நூல்களுள் ஒன்று வேளாளர் நாகரிகம் என்பதாகும்.  

இந்நூல் இன்று அத்துணை முக்கியம் பெறுவதில்லையாயினும் இந்நூல் வந்த காலத்தில் யாழ்ப்பாணத்து வெள்ளாளர் மத்தியில் இது பெற்ற முக்கியத்துவமும் அது யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்திற்குத் தந்த கருத்து நிலைப் பின்புலமும் ஒரு சமூகவியல் மாணவருக்கு சுவாரஸ்யமான விடயங்களாகும்.  

இச்சாதிகளின் எழுச்சி சாதி அசைவியக்கம் ஏற்படுகின்ற பொழுது தோன்றுகின்றது என்பது பெறப்படுகின்றது.  

இச்சாதி அசைவியக்கம் பொருளாதாரம், கல்விமுறை, அரசியல், கருத்து நிலைமாற்றங்களினால் ஏற்படுகின்றன.  

சமனற்ற பொருளாதார வளர்ச்சி கொண்ட (Uneven Economic Development) ஒரு நாட்டில் இவை நடப்பது இயல்பு. இவ்வகையில் சமூக அசைவியக்கம் உள்ள, மேநிலைக்கு ஏற்கெனவே வந்த, வந்து கொண்டிருக்கின்ற சாதிகள் அனைத்தும் தம் வரலாற்றினை ஆவணப்படுத்துவதன் மூலம் தமது முக்கியத்துவத்தினை முக்கியமாக தமது தனித்துவத்தினை  (Identity) அழுத்திக் கூற முனையும். சாதி ஒருமைப்பாடு பேசுவதும், சாதி என்ற முறையில் ஒன்று திரள்வதும் அவர்களின் பாதுகாப்பிற்குரிய அத்தியாவசிய தேவை என்று அவை உணர்வதினாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. கூர்ந்து நோக்கின் எந்தச் சமூகத்திலும் எந்தச் சாதியிலும் இரண்டு பகுதியினர் காணப்படுவர். ஒரு பகுதியினர் தமது பொருளாதார அதிகார பலத்தினால் மற்றவரை அடக்குவர். இன்னொரு பகுதியினர் இவ்வடக்குபவரில் தங்கி வாழ்வதனால் அடக்கப்படுபவர். ஒரு சமூகத்தின் அடக்குகின்ற, பொருளாதார அதிகாரப்பலம் பெற்ற மேநிலைப் பகுதியினரே தமது சாதித் தனித்துவம், சாதி ஒற்றுமை பற்றி அதிகம் பேசுவோராயிருப்பர். இவர்களில் மேநிலைக்கு வந்த படித்தவர்களே தம் சாதி வரலாற்றை எழுதுவார்கள். இவ்வகையில் எழுதப்படும் சாதி வரலாறுகள் அச்சாதியின் மேநிலையாக்கம் பெற்றோரின் வரலாறுகளாகவே (குறிப்பாகச் சில குடும்பங்களின் வரலாறுகளாக) அமைந்து விடுவதில் ஆச்சரியமில்லை.  

(தொடரும்)