பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு இன்றியமையாததான சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கு உதவியாக கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதி உறுதிமொழிகளை பெறுவதில் இலங்கை புதுவருட ஆரம்பத்தில் இருந்து கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. ஆனால், இதுவரையில் பெறக்கூடியதாக இருந்த உறுதிமொழிகள் போதுமானவையல்ல என்று நாணய நிதியம் கூறியிருக்கிறது.
தற்போதைய நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிவாரணத்தை இலங்கை பெறுவதற்கு இதுவரையில் கடன் வழங்குநர்களினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் போதுமானவையல்ல என்று நாணயநிதியத்தின் பேச்சாளர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“போதுமான உறுதிமொழிகள் பெறப்பட்டு எஞ்சிய தேவைகளும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட உடனடியாக இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டை நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கக்கூடியதாக இருக்கும்” என்று அந்த பேச்சாளர் கூறினார்.
இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாடு தொடர்பிலான நடப்பு நிலைவரம் குறித்து தகவல் வெளியிட்ட அவர் நிதி உறுதிமொழிகளை பெறுவதற்கு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றது என்பதையும் உள்நாட்டு சீர்திருத்தங்களை முன்னெடுக்கிறது என்பதையும் நாணய நிதியம் ஏற்றுக்கொள்கிறது என்று குறிப்பிட்டார்.
ஆனால், 290 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவிக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைத் தொடர்ந்து இலங்கைக்கு நிதி உறுதிமொழிகளை வழங்குவது தொடர்பில் பாரிஸ் கிளப் வெளியிட்ட அண்மைய அறிக்கையை நாணய நிதியம் வரவேற்றிருக்கிறது. இலங்கைக்கு நிதி உறுதிமொழிகளை வழங்கிய முதல் நாடு இந்தியாவேயாகும். இந்தியா அதன் நோக்கத்தை நாணய நிதியத்துக்கு நேரடியாகவே அறிவித்தது.
கடந்த வார முற்பகுதியில் பாரிஸ் கிளப்பை சேர்ந்த கடன் வழங்கும் நாடுகள் நிதி உறுதிமொழிகளை வழங்கின. இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் உள்ள கடப்பாட்டை அவை உறுதிப்படுத்தின. தாங்கள் செய்ததைப் போன்று நாணயநிதிய திட்டத்தின் வரையறைகளுக்கு இணங்க செயற்படுமாறு சீனா உட்பட ஏனைய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளை பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டன.
சீனாவிடம் இருந்து வரவேண்டிய உறுதிமொழிக்காக இலங்கை அயராது காத்துக்கொண்டிருக்கிறது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா இன்னமும் உறுதியானதும் நேரடியானதுமான அறிவிப்பை வெளியிடவில்லை.
சீனாவின் எக்சிம் வங்கி இலங்கைக்கான அதன் கடன்கள் மீது இரு வருட கால அவகாசத்தை வழங்குவதாக பெப்ரவரி 3 ஆம் திகதி அறிவித்தது. குறிப்பிட்ட அந்த காலகட்டத்துக்கு இலங்கை கடனின் முதல் மற்றும் வட்டியை மீளச்செலுத்த வேண்டியதில்லை. சீனாவின் இந்த தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை இலங்கை பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கிய ஒரு முயற்சியாக இருக்கின்ற போதிலும், அது போதுமானதல்ல. சீனாவின் அறிவிப்பு ஏனைய கடன் வழங்குநர்கள் வழங்கிய உறுதிமொழிகளை ஒத்ததல்ல.
கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசாங்கம் சீனாவுடன் நேரடிப் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாக கூறினார்.
“சகல தரப்புகளிடம் இருந்தும் சாதகமான பதில்களை நாம் பெற்றிருக்கிறோம். ஏனைய நாடுகளினதும் சீனாவினதும் அணுகுமுறைகளை ஒன்றிணைப்பதை நோக்கி நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
சீனா அதன் கடன் கொள்கைகளை மாற்றவேண்டியிருக்கிறது. ஏனென்றால், குறைந்த வருமானமுடைய நாடுகள் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றன என்று நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்ராலினா ஜோர்ஜீவா கடந்த வார முற்பகுதியில் கூறியிருந்தார். சீனர்கள் தாங்கள் வழங்கிய கடன்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பல வருடங்களாக தயக்கம் காட்டிவருவதை சுட்டிக்காட்டிய அவர் சீனா கடன் கடப்பாடுகளை மறுசீரமைப்பதில் நாடுகள் கேட்கும்வரை காத்திராமல் தன்முனைப்புடன் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.