— சபீனா சோமசுந்தரம் —
‘இந்தா இந்த காப்பு ரெண்டையும் போடு… உனக்கு ஒன்டும் போடாம வெளிக்கிடுத்தி கொண்டு வந்திருக்கிறன் என்டு உன்ர கொப்பர் என்னை தான் திட்டுவார்.. கெதியா வெளிக்கிடு…’ என்று அவசரப்படுத்திவிட்டு போகும் தாயை பார்க்க எரிச்சலாக இருந்தது அவளுக்கு. காத்திருந்து அவரசமாக கன்னத்தில் விழுந்து கரை புரண்டோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டு தாய் கொடுத்த வளையல்களை எடுத்து கையில் மாட்டினாள் அவள்.
அவளுடைய பெரியம்மாவின் மகளின் திருமணம் இன்று. வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பல மாதங்களாக இந்த திருமண நாளிற்காக அவள் கூட காத்திருந்தாள்தான். அக்காவின் திருமணம் என்றால் அது பெரிய கொண்டாட்டம் தானே? திருமண பேச்சுதொடங்கிய நாளிலிருந்து ஒரே கொண்டாட்டம் தான்.
ஆனால் இன்று அங்கு போகும் மனநிலை இல்லை அவளுக்கு. கையினுள் நுழைய மறுக்கும் வளையலை அழுத்தி தள்ளினாள், அந்த மெல்லிய வளையல் அவள் அழுத்திய வேகத்தில் சற்று நெளிந்து கையின் மணிக்கட்டை கீறியது.. ‘ஸ்ஸ்ஸ்…’ என்று கையை உதறியபடி கண்ணாடிமுன்னால் கிடந்த கதிரையில் அமர்ந்தாள்.
தொண்டைக்குழியில் நெருப்பால் சுட்டது போல் ஓர் வலி, கண்கள் எரிந்து கொண்டு பொறுமையிழந்த கண்ணீர் வெளியே கொட்டியது. விம்மி விம்மி அழுதாள். அழுகையை அடக்க முடியவில்லை.
மகளை இன்னும் காணவில்லை என்று தேடி வந்த அவளது தாய் அவள் அழுவதை பார்த்துவிட்டு அருகில் ஓடிவந்து ‘என்னடி பிள்ள ஏன் அழுறாய்..’ என்று பதட்டத்தோடு கேட்கவும், அவளுக்கு பேச்சு வரவில்லை, அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒன்றும் சொல்லாமல் விம்மி விம்மி அழும் மகளை பார்க்க அவள் தாய்க்கு பயமாக இருந்தது. அப்போதுதான் மகளின் கையை கவனித்தாள். வளையல் நெளிந்து கையிலும் கீறி ரத்தம் காய்ந்து போயிருந்தது.
மகள் அழுவதற்கான காரணம் தெரியவும் ஒரு பெருமூச்சோடு ‘என்ன விசரடி உனக்கு… இதுக்கே உப்பிடி அழுறாய்.. இஞ்ச கொண்டுவா அந்த காப்பை… இதை நீ போட வேண்டாம்.. கண்ணை துடைச்சிட்டு கெதியா வா… அப்பா வெளிக்கிட்டார்..’ என்று சொல்லி அவளின் கையிலிருந்த வளையல்களை வாங்கிக்கொண்டு மகளின் தலையை வருடிவிட்டு போனாள் அவள் தாய்.
அந்த வளையல் கீறியதற்காகவா அவள் அழுகிறாள்? கையில் காய்ந்த அந்த ஒரு சொட்டு இரத்தம் அந்த அழுகைக்கு காரணமில்லை.. அவள் மொத்த இரத்தத்தையும்; உறையவைத்துவிட்டு உயிர்பிரிந்து போய்விட்ட அவள் காதல்தான் காரணம்.
இன்று அவள் காதலனின் இறுதி பயணம் உயிர் பிரிந்த அவனது உடல் ஆறடி மண்ணை நோக்கிபோகும் நேரம் நெருங்கி கொண்டிருந்தது. ஆசை ஆசையாய் ரசித்து காதலித்த அவன் முகத்தை கடைசி நொடி கூட பார்க்க வாய்க்காமல் அலங்கரித்துக்கொண்டு அமர்ந்திருந்து அழுது கொண்டிருக்கிறாள் அவள்.
யாரிடம் சொல்ல முடியும்? அவள் ஐந்து வருடமாக காதலித்தவன் இறந்து விட்டான் என்று. அவள் அப்பாவிற்கு இதெல்லாம் பிடிக்காது சின்ன சின்ன விசயங்களுக்கு கூட ‘மானம் போச்சு மரியாதை போச்சு நான் தூக்கில் தொங்க போகிறேன்’ என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார். அப்படி இருக்கையில் தான் ஐந்து வருடமாக ஒருவனை காதலித்தேன் என்றோ அல்லது அவன் இன்று ஒரு விபத்தில் இறந்து விட்டான் அவனை போய் வழியனுப்பி வைத்துவிட்டு வருகிறேன் என்றோ எப்படி தகப்பனிடம் அவளால் சொல்ல முடியும்?
அவள் ஒரு பிறவிக் கோழை அல்லவா? அந்த கோழைப் பெண்ணின் தைரியம் அவன் தானே? அந்த தைரியத்தை இன்னும் சில நேரத்தில் மண்ணோடு போட்டு புதைக்க போகிறார்கள்.
அதை நினைத்து உச்சி வெயிலில் மணலில் விழுந்த புழுவாய் துடித்து குமுறிக்கொண்டிருந்தாள். ஐயோ… இப்போதே இந்த உயிர் போனால் என்ன என்று இருந்தது அவளுக்கு. கடைசியாக என்றாலும் ஒருமுறை அவன் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் தவிப்பும் அவளை வாட்டியது.
எப்படி போவது? தகப்பனிடம் என்ன சொல்லிவிட்டு வீட்டிலிருந்து போவது? அங்கு போய் அவனை அந்த கோலத்தில் பார்த்ததும் தன்னை எப்படி கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் அவளால்? என்ன உரிமையில் அவனை தொட்டு தழுவி அவனுக்கு விடை கொடுப்பது?
இறுதியாக அவளை சந்தித்துவிட்டு போகும் போது கூட திரும்பி நின்று பாத்து புன்னகைத்து விட்டுபோனானே அதை நினைக்க அவளுக்கு வாய்விட்டு கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. அப்பவே சொன்னானே.. வீட்டில் சொல்லுவோம்… என்ன நடந்தாலும் நான் பாத்துக்குவேன் என்று… நான்தானே ஒவ்வொரு முறையும் பயத்தில் வேண்டாம் வேண்டாம் என்றேன்.. பாவி.. நான்.. இன்டைக்கு உரிமையோட அழக்கூட இல்லாம போச்சோ..’ என்று அவள் மனது புலம்பியது.
அவனை நினைக்க நினைக்க கண்கள் இருட்டிக்கொண்டு மயக்கம் வந்தது அவளுக்கு. மேலே நிமிர்ந்து பார்த்தாள் சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறியை. ‘அவனோடு போய்விடு… அவன் இல்லாமல் உன்னால் வாழ முடியாது..’ என்றது அவள் மனம்.
வேகமாக எழுந்து அலுமாரியை திறந்து சேலை ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பவும் கதவை திறந்து கொண்டு அவள் தங்கை உள்ளே ஓடி வந்தாள். ‘அக்கா வாடி.. நேரம் போயிட்டு.. அப்பா அம்மா தம்பி எல்லாரும் வெளிக்கிட்டாங்க.. நீ தான் லேட்..’ என்றாள் சிரித்துக்கொண்டு.
‘ஐயோ…’ என்றிருந்தது அவளுக்கு. புன்னகையோடு நிற்கும் தங்கையை பார்க்க குற்ற உணர்ச்சி அவளைக் கொன்றது. ‘நான் இதை செய்தால் நாளை என் தங்கை தம்பியின் எதிர்காலம் என்னவாகும்…? என் பெற்றோரின் நிலை? சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் செத்துவிடுவேன் என்று மிரட்டும் அப்பாவின் நிலை? நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருந்தது அவளுக்கு.
கண்ணை துடைத்துக்கொண்டு வெளியே போனாள். ‘என்னடி உது? கண் சிவந்துபோய் வீங்கிகிடக்கு? அழுதனியோ..? என்றாள் தாய்.
தொண்டையை செருமிக்கொண்டு ‘அது பௌடர் போடும் போது ப்ரஸ் கண்ணுல குத்திட்டு அம்மா.. கண்ணீர் நிக்கிதே இல்லை..’ என்றாள் தளதளத்த குரலில்.
‘சரி சரி பிறகு வந்து ஆஸ்பத்திரிக்கு போகலாம்.. கெதியா வெளிக்கிடு…’ என்ற தந்தையின் கடுமையான குரலில் எல்லை மீறிய அவள் கண்ணீர் கன்னத்தில் விழாது கண்களுக்குள்ளேயே தேங்கியது.
கண்ணை நெருடும் தூசியை துடைக்கும் பாவனையில் மனதை நெருடும் அவன் நினைவுகளால் ஓயாமல் ஒழுகும் கண்ணீரை துடைத்தபடி பெற்றோரின் பின்னால் நடந்தாள் அவள்.
–முற்றும்–