பூமி மனிதர்

பூமி மனிதர்

       — அகரன் —

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெர்சைக் கோட்டையின் வலது கைப்பக்கம் ஒரு குட்டித் தமிழ் உணவகத்தில் டாவிட் ஸ்மித் என்ற பிரெஞ்சு நபரைச் சந்தித்தேன்.

வீதியால் சென்று கொண்டிருந்த போது EELAM என்று ஓர் எழுத்தைப் பார்த்து அதிர்ந்துபோனேன். அப்பகுதியில் தமிழர் அதிகம் இல்லை. பிரெஞ்சிலும் ஏதாவது EELAM என்ற பெயரில் சொல் இருக்குமா? என்று அவதானித்த போது அது புதிய தமிழ் உணவகம் என்று தெரிந்தது.

அவசரமாக வயிற்றில் பசி வந்து சேர்ந்தது. அங்கு நுழைந்தபோது 10 பேர் இருக்கக்கூடிய அந்த குட்டி உணவகத்தில் ஒரே ஒரு வாடிக்கையாளர் இருந்தார்.  அவர் வெள்ளை நிறத்தவர். ஆனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தமிழ் குட்டிப் பையனை விட அழகான சென்னைத் தமிழைப் பேசிக்கொண்டிருந்தார்.

நான் ‘வணக்கம்’ சொல்ல முன்னதாகவே அவர் எனக்கு வணக்கம் சொன்னார். என்னை தனக்கு முன்னமர்ந்து உணவருந்தும் படி கேட்டுக்கொண்டார். எனக்கு அந்தச் சூழல் வியப்பையும் அதிர்ச்சியையும் தந்தது.

டாவிட் பேசிய தமிழ், சென்னைத் தமிழ் தம்பதிக்கு பிரெஞ்சுப் பிள்ளை பிறந்து விட்ட அதிசயம்போல இருந்தது. அவருக்கு தமிழ்நாடு, கேரள உணவுகள், நம்மாழ்வார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, கண்டி, புலிகள், ஆமி, சண்டை, முள்ளிவாய்க்கால், ஜெயலலிதா, கருணாநிதி எல்லாம் தெரிந்திருந்தது.

புன்னகையும், உற்சாகமும் அலையைப் படம் எடுத்த கன்னங்களுமாக முசுறு எறும்பின் சுறுசுறுப்போடு இருந்தார்.

அவர் யோகா, இயற்கை விவசாயத்தில் உள்ள பற்றில் நம்மாழ்வாரைப் பற்றி அறிந்து தமிழ் நாடு சென்று இரு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். அந்த இரு வருடத்தில் அவர் கற்ற தமிழையும், தமிழர்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறார்.

‘தமிழ் எனக்குப் பிடிக்கும். அதனால் கற்கிறேன்’ என்று இலகுவாகக் கடந்து போனார். நான் பேசியபோது ஒரு சொல் தனக்கு புரியவில்லை என்று அதன் விவரத்தை கேட்டு பையில் வைத்திருந்த குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொண்டார். உசாத்துணையாக எனது முகவரி, இலக்கத்தையும் குறித்துக் கொண்டார்.  நான் வாய் பார்த்தவாறு இருந்தேன்.

மூன்றாவது நாள் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அப்படி ஒரு விடயம் அதற்கு முன் வந்ததில்லை. வருவதெல்லாம் கட்டணங்கள், வரிகள், தண்டப்பணப் பற்றுச்சீட்டுகள், அதையும் தாண்டினால் விளம்பரங்கள். கடிதத்தை திறந்தால் அழகான தமிழ் எழுத்து. சந்தித்த மகிழ்வை ஓர் எழுத்துப் பிழையுமற்று நீலநிற மையால் எழுதி அன்புடன் -டாவிட் சிமித்- என்று கையெழுத்திட்டிருந்தார்.

என்னைப் போன்ற தாய் மொழியை மட்டும் வைத்திருக்கும் திறமையான பற்றாளனுக்கு டாவித் சிமித் எப்படியான வியப்பைத் தருவார் என்று எல்லோரும் ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

அதன் பின்பு டாவீத்தின் வாழ்வை அரிக்கன் சட்டியில்  அரிசியில் கல்லுப் பொறுக்குவது போல் பொறுக்கினால் அவ்வளவும் ரத்தினங்கள்.

டாவிட் தன் தாய் மொழிக்கு நிகராக ஜப்பான் மொழியை உபயோகிப்பார். சீன மொழியைப் புரிந்துகொள்ள முடியும். ஆங்கிலம், டொச் மொழிகளை இலகுவாகக் கையாள்வார். ஆபிரிக்கா, ஜப்பான், ஆசியா என்று உலகின் எல்லைகளெங்கும் பயணித்திருக்கிறார். தனது எட்டு வயதில் இருந்தே யோகா பயின்று இன்று ஆசிரியராக உள்ளார். அடிப்படையில் அவர் கற்றது மென்பொருள் பொறியியல். அவருக்கு 50 வயது கடந்தாலும் 30 வயது தோற்றத்தில் இருந்தார்.

‘அரசுகள் பூமியை நஞ்சாக்குகின்றன. இன்றைய ஜனநாயகம் மற்றொரு முடியரசாகிவிட்டது. உணவுப் பொருட்களும் நஞ்சு கலந்து விட்டது’ என்று இயற்கையை பாதுகாக்கும் அமைப்பில் சேர்ந்து போராட்டம் செய்கிறார்.

அவரின் வீட்டுக்குள் நுழைந்தால் எங்கும் இயற்கையான பொருட்கள். வீதியில் எறியப்பட்ட பலகைகளை எடுத்து தனக்கான கட்டிலை தானே செய்துள்ளார். அறையில் எங்கும் ஒரு நெகிழி துண்டைக் கூட காண முடியாது. மிக நேர்த்தியாக சுத்தமாக ஓர் ஆலயம் போல் அறை இருந்தது.

டாவிட்டை பார்க்கும் போதெல்லாம் பார்ப்பவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவரிடம் இருந்து கற்பதற்கு ஒவ்வொரு சந்திப்பிலும் விடயங்கள் ஊற்று நீர்போல் இருக்கும்.

அண்மையில் ‘காற்று, மணல், நட்சத்திரங்கள்’ என்ற மொழிபெயர்ப்பு நாவல் படித்தேன். வெ. ஸ்ரீராம் நேரடியாக பிரஞ்சில் இருந்து மொழிபெயர்த்த நாவல். பிரஞ்சு இலக்கியத்தின் உலகப் பிரசித்தி பெற்ற ‘குட்டி இளவரசன்’ என்ற படைப்பை எழுதிய ஒந்துவான் து செந் எக்சுபெரி’ உடைய நாவல். அவரது குட்டி இளவரசன் இதுவரை 253 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு காலம் நீள நீள பெறுமதியாகும் பிரஞ்சு வைன் போல் விற்பனையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

நாவலை படித்ததும் ஆச்சரியம் எல்லை மீறி பறந்தது. ஒரு விமானியின் பார்வையில் வானம், நட்சத்திரங்கள் மேக மலைகள், சூரியன், நிலவு என்று புதியதோர் உலகை தந்தது. ‘எவ்வளவு உயரமாக பறந்தாலும் காலை உணவுக்காக கீழே இறங்க வேண்டிய ஒரே கிரகமாக பூமி இருக்கிறது’ என்ற அவர் வரிகள் மிக முக்கியமாகப்பட்டது. மனித பார்வையை விசாலமாக்கி, பார்க்காத உலகங்களை நூல் காட்டியது. இந்நூல் எழுதி 75 ஆண்டுகள் கடந்தும் தமிழில் இப்படிப்பட்ட பார்வை கொண்ட உலகைத் தரும் நூல் இது என்று சொல்லலாம்.

அவர் தன் வாழ்நாள் எல்லாம் விமானியாக இருந்தவர் 1900 இல் பிறந்து தனது 44 வயதில் மர்மமாக இறக்கும் போது ஐந்து நாவல்களை எழுதி இருந்தார். அஞ்சல் விமானி, பாதைகளை கண்டடையும் விமானி, யுத்த விமானி என்று இருந்தவர் இலக்கிய மனம் உடைய எழுத்தாளராக இருந்ததால்தான் அரிய படைப்புகளை எழுதினார்.

‘’கவித்துவ பிரஞ்சு மொழியின் சிகரமாக உள்ளது இவர் உரைநடை” என்று பிரபல பிரஞ்சு கவிஞர் Paul Claudel கூறியிருக்கிறார். மற்றொரு கவிஞர் லோன் போல் போர்ஜ் இவருக்கு எழுதிய கடிதத்தில் ‘’நாங்கள் குடிக்கும் சூப்பில் நட்சத்திரத்தை விழச் செய்கிறீர்கள்” என்றார். இவை எல்லாம் அவர் இறுதியாக 1943 எழுதிய ‘குட்டி இளவரசன்’ என்ற படைப்புக்கு முன்கிடைத்த புகழாரங்கள். குட்டி இளவரசன் வெளியாகி ஒரு வருடம் முடிய முதல் வானில் பறந்த எக்சுபெரி காணாமல் போனார். 1998 வரை அந்த மர்மம் நீடித்தது.

அவர் எழுதிய நாவல்களை விட அவர் வாழ்வு ஆச்சரியங்கள் நிறைந்தது. 1926 இல் தன் 26 வது வயதில் விமானியானார். அவர் விமானியான காலத்தில் தொழில் நுட்பம் ஆரம்ப நிலையில் இருந்து. அன்று 150கும் மேற்பட்ட விமானிகள் விபத்தால் இறந்து விட்டிருந்தனர்.

வானையும் நட்சத்திரங்களையும் அங்கிருந்து மனிதன் வாழும் கிரகத்தையும் பார்ப்பதைவிட மரணம் ஒன்றும் பெரிதல்ல என்று அவர் வானுக்கு பறந்தார்.

ஆரம்பத்தில் பிரான்சின் தென்பகுதியில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு அஞ்சல் விமானியாக இருந்தார். ஒரு தடவை சஹாரா பாலைவனத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி ஆறு நாட்களாக பாலைவன தனிமையில் இருந்து மீண்டார். அப்போது ஏற்பட்ட அனுபவப் புனைவே குட்டி இளவரசனாக இலக்கியமானது.

மற்றொரு முறை இரு விமானங்களில் பயணித்த போது அவருடைய விமானம் சஹாராவில் இயந்திர கோளாறாகி விட்டது. அஞ்சல்களை மற்றய விமானத்தில் அனுப்பி விட்டு அந்த விமானத்தில் இவருக்கு இடம் இல்லாததால் தன் விமானத்துடனே சஹாரா பாலைவனத்தில் காத்திருந்தார்.

அதற்கிடையில் சஹாராவில் இருந்த மோர் பழங்குடி தீவிரவாதிகள் அவரை சிறை வைத்தனர். வேறு வழியின்றி அவர்களுடன் இருந்து அவர்களது மொழி, பழக்க வழக்கங்களை கற்று தீவிரவாதிகளின் நண்பனாக மாறிப் போனார். அதன் பின்னர் அவர்களால் ஏற்கனவே கைது செய்துவைத்திருந்த பல பிரெஞ்சு நாட்டவர்களை அவரின் நட்பான அணுகுமுறையால் விடுவித்தார். இந்த செயலுக்கு பிரெஞ்சு அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது.

1939 காலத்தில் அமெரிக்காவில் இருந்து அர்ஜென்டினா வுக்கான புதிய விமான தடங்களை கண்டுபிடிக்கும் பணியில் இருந்த போது அவர் விமானம் விபத்துக்குள்ளானது. அவர் உடல் 8 இடங்களில் முறிவை சந்தித்தது. அப்படியான நிலையில் நீண்ட ஓய்வை எடுக்கும்படி வைத்தியர்கள் வேண்டிக் கொண்டனர். எக்ஸ்பெரியின் நிலைமை தெரியாத ஹிட்லர் இரண்டாம் உலக யுத்தத்தை ஆரம்பித்து விட்டிருந்தார்.

வேறு வழியற்று நேசநாட்டு விமானிகள் குழுவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்துவிட்டார். இரண்டாம் உலக யுத்தம் முடியும் தறுவாயில் இருந்தபோது அமெரிக்கா புதிய ‘P38 லைட்நிங்’ என்ற அதிவேக விமானத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. பறத்தலில் நீண்ட அனுபவம் வைத்திருந்த எக்ஸ்பெரி அதை கற்றுக் கொண்டு 1944 ஜூலை 31 ஆம் தேதி கோர்சிகா தீவிலிருந்து மத்தியதரைக் கடலுக்கு மேல் பறந்து பிரான்சின் தென்பகுதியில் இருந்த ஜெர்மனிய நிலைகளையும், விமான பாதைகளையும் அறிந்து வர புறப்பட்டார். அது ஒரு இரகசிய பயணம். அவர் திரும்பி வரவே இல்லை.

1945 செப்டம்பர் 8’ல் ‘நாட்டுக்காக உயிர் துறந்த பிரஞ்சு குடிமகன்’ என்ற விருதை வழங்கினாலும் அவருக்கு என்ன நடந்தது, அவர் விமானம் எங்கே என்பது மர்மமாகவே இருந்தது.

54 ஆண்டுகள் கடந்து 1998 இல் பிரான்சின் தென்பகுதியான மார்சையைச் சேர்ந்த மீனவர் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர் வலையில் ஒரு தகடு சிக்கியது. அது ஒரு காப்பு வடிவில் இருந்தது. அதை அவர் சுத்தம் செய்து பார்த்தபோது எக்சுபெரியின் பெயரும் இலக்கமும் இருந்தது.

அரை நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் நிலத்துக்காக விழுந்த வீரனையும் அந்த மகத்தான எழுத்தாளனின் வரலாற்றையும் பூரணப்படுத்த பிரெஞ்சு அரசு முடிவு எடுத்தது. கடலை உழுதுதேடியது. ஐந்து ஆண்டுகள் கடந்து 2003இல் அவர் ஓட்டிச் சென்ற விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மன் விமானம் ஒன்றின் தாக்குதலால் அவர் கடலில் விழுந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு நிற்வில்லை. அந்த நாளில் ஜெர்மன் விமானியாக இருந்து தாக்குதல் நடத்தியவரையும் கண்டுபிடித்து உறுதிப்படுத்தினார்கள்.

எழுத்து மட்டுமல்லாமல் தன் வாழ்வை கூட விறுவிறுப்பு உள்ள நாவலாக வாழ்ந்து எழுதியவர் ஒந்துவான் து செந் எக்சுபெரி. அவரது நாவல்களில் முக்கியமான ‘குட்டி இளவரசன்’ மற்றும் ‘காற்று, மணல், நட்சத்திரம்’ ஆகியவை வெ.ஸ்ரீராம் என்பவரின் அழகு மொழி பெயர்ப்பில் தமிழில் வெளியாகி உள்ளது.

பிரஞ்சு நாட்டின் மக்கள் தொகையும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் கிட்டதட்ட ஒரேஅளவானது. தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கூறலாம். பிரஞ்சு மக்கள் இத்தனை உயரவாழ்வியலையும், வரலாற்றையும் வைத்திருப்பதற்கு காரணம் மேலே வந்த இருவரின் கதைசொல்லும் என்று தான் நம்புகிறேன். சொல்லாவிட்டால் அது என் பிழை.