— அழகு குணசீலன் —
இலங்கைத்தமிழர் அரசியலில் மக்கள் நலன் சார்ந்த தலைமைத்துவம் கடந்த 75 ஆண்டுகளில் எப்போதும் இருந்ததில்லை. ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம், இ.சம்பந்தர் எல்லோரும் இந்தத் தொடர் துயரத்திற்கு உரிமையாளர்கள். இந்த அடுக்குமாடி மேலாதிக்க தலைமைகள் சமூக நீதி மறுப்பு, சுய அரசியல் லாபம், பதவிகளுக்கான கோசங்கள், இனம், மதம், பிரதேச பிரிவினை, ஜனநாயக மறுப்பு என்பனவற்றை ஊக்குவிக்கின்ற தலைமைத்துவங்களாகவே இருந்தனர். ஆயுதப்போராட்ட தலைமைகளைக்கூட இதில் இருந்து தவிர்த்து நோக்குவது கஷ்டம்.
2023 பெப்ரவரி 4ம் திகதிய 75 வது சுதந்திரதினம் ஏதோ இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமே சுதந்திரம் -உரிமைகள் இல்லை என்பது போலவும், பறங்கி, முஸ்லீம், சிங்கள மக்கள் அனைத்து சுதந்திரங்களையும் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்றும் தமிழ்த் தேசிய அரசியலால் காட்சிப்படுத்தப்படுகிறது. அதுவும் பெரும்பான்மை சிங்கள மக்கள் தமிழர்களின் உரிமைகளைப் பறித்து, அதையும் சேர்த்து அளவுக்கதிகமான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்று காட்ட முற்படும் மாயை எவ்வளவு அபத்தமான அரசியல்.
சுதந்திரம் என்பதன் அர்த்தம் ஆட்சி அதிகாரம் “ஆண்டபரம்பரையின்” கையில் இருப்பதுதான் என்பதே தமிழ்த்தேசிய அகராதி. அது அவர்களின் கையில் இல்லை என்றால் கறுப்பாம். இருந்தால் வெள்ளையாம். சகல இனமக்களினதும் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகள் சார் சுதந்திரம் பற்றிய உண்மையை பேசுவதற்கு தமிழ்த் தேசிய அகராதி தயாரில்லை.
இது அவர்களின் சுய இலாப அரசியலுக்கு சேதாரம் ஏற்படுத்திவிடும் என்ற அச்சம். தமிழ்த் தேசியம் சமூக, பொருளாதார சுதந்திரம் பற்றி அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகள், வர்க்க வேறுபாடுகள் பற்றி பேசுவதில்லை. யாழ்.மேட்டுக்குடியினரால் சொந்த மக்களுக்கே மறுக்கப்பட்ட அல்லது அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளுக்கும் சிங்களத் தலைமைகளையே பொறுப்பாக்குகின்றனர்.
தமிழரசுக் கட்சியே தமிழ் மக்களுக்கான சமஷ்டி கோரிக்கையை முதலில் முன்வைத்தது போன்ற பிரமை ஏற்படுத்தப்படுகிறது. எஸ்.ஜே.வி.செல்வநாயகமே சமஷ்டியின் தேசபிதா என்ற புனைவு வேறு. பெயரளவில் கட்சியின் பெயரில், அதுவும் ஆங்கிலத்தில் அது சிங்கள மக்களை வெருட்ட தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதே அச்சுறுத்தும் அந்தஸ்த்தில் தான் தமிழீழம் என்ற வார்த்தையாடலும் உள்ளது.
தமிழ்த்தேசிய போலி கறுப்பு சுதந்திரப் போராட்டம் தொடர்பாக வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. 1920களின் ஆரம்பத்தில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா “CEYLON FEDERATION” என்ற கருத்தை முன்வைக்கிறார். இலங்கையின் எதிர்கால இன ஐக்கியத்திற்கும், சமத்துவத்திற்கும் இதுவே ஒரே அரசியல், தீர்வுமாதிரி என்பது அவரது அசையாத நம்பிக்கை. 1927 இல் கண்டி சிங்களத் தலைவர்களும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இலங்கைத் தீவை மூன்று சமஷ்டி அதிகாரப் பிரிவுகளாகப் பிரித்து அதிகாரப்பகிர்வு செய்வது இதன் நோக்கம். கண்டி, கீழ்நாடு, வடக்கு – கிழக்கு ஆகிய மூன்று சமஷ்டிப் பிரதேசங்கள் முன்மொழியப்படுகின்றன. வடக்கும் கிழக்கும் இணைந்த முன்மொழிவு இது. இதனை முதலில் எதிர்த்தவர்கள் ஜேம்ஸ்.ரீ.ரட்ணமும், ஜீ.ஜீ.பொன்னம்பலமும். எஸ்.டபிள்யு.ஆர்.டி . பண்டாரநாயக்கா சமஷ்டிக்கு சார்பாக “CEYLON MORNING LEADER” பத்திரிகையில் தொடர் கட்டுரைகளை வரைந்தார். அதை எதிர்த்து அதே பத்திரிகையில் சமஷ்டியை நிராகரித்து வாதிட்டார் ஜேம்ஸ்.ரி.ரட்ணம்.
ஜேம்ஸ்.ரி.ரட்ணம் கருத்துப்படி சமஷ்டி முறையானது முஸ்லீம்கள், மலாய்யர்கள், பறங்கியர் மற்றும் ஐரோப்பியர்களுக்கு பாதகமாக அமையும் என்பதாகும். இவர்கள் ஒன்றில் சிங்களவர்களின் கீழ், அல்லது தமிழர்களின் கீழ் சிறுபான்மையினராக வாழ வழிவகுக்கும் என்று வாதாடினார் ரட்ணம். இது நாட்டின் ஐக்கியத்திற்கான அரசியலமைப்புக்கு மாறாக அமையும் என்றும் வாதிட்டார். ஆனால் 1956 இல் இனப்பிரச்சினை எரியத் தொடங்கியபோது ரட்ணத்தின் கண்கள் காலம் கடந்து திறந்தன. சமஷ்டியே தீர்வு என்றார். காலம் கடந்த ஞானம். ஐயர் வரும் வரையும் அமாவாசை காத்திருக்குமா… என்ன? சொந்த அரசியல் இலாபங்களுக்காக தமிழர்உரிமைகளை தமிழ்த்தலைவர்கள் விற்றார்களா..? சிங்களவர்கள் பறித்தார்களா…?
1926 இல் பண்டாரநாயக்கா யாழ்ப்பாணம் சென்று சமஷ்டியின் முக்கியத்துவம் குறித்தும் அதுவே சரியான தீர்வு என்றும் “FEDERATION AS THE ONLY SOLUTION TO OUR POLITICAL PROBLEMS” என்ற தலைப்பில் உரையாற்றினார். பொன்னம்பலங்களின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. டொனமூர் ஆணைக்குழு காலத்தில் சமஷ்டியை எதிர்த்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், பின்னர் சோல்பரி ஆணைக்குழுவில் 50:50 கோரிக்கையை முன்வைத்தார். சுத்த யாழ்ப்பாண மேலாதிக்க மேட்டுக்குடி சுயலாப அரசியல் குணாம்சத்தின் வெளிப்பாடு இது.
ஜீ.ஜீ.யின் இந்த 50:50ற்கு பின்னால் உள்ள மேட்டுக்குடி இரகசியம் என்ன? சமஷ்டி மேலாதிக்க வெறிப்பசிக்கு வெறும் அரை வயிற்றையே நிரப்பும். முழு இலங்கையையும் விழுங்க வேண்டுமாயின் 50:50 கோருவதே வழி. சிறுபான்மையினருக்கு கிடைக்கவேண்டிய விகிதாசாரத்திற்கும் அதிகமாக நியாயமற்ற வகையில் அதிக உறுப்பினர்களைப் பெறுவதன் மூலம் இலங்கையின் பிரதமராவதே ஜீ.ஜீ.யின் திட்டம். இதைப் புரிந்து கொண்ட சோல்பரி கமிஷன் 50:50ஐ நிராகரித்தது. இது இடம் கொடுத்தால் மடம் கட்டுகின்ற யாழ்.மேட்டுக்குடி கருத்தியல் மனநிலையன்று வேறென்ன?. இங்கு யாருடைய நலன் சார்ந்து ஜீ.ஜீ. இந்த கோரிக்கையை முன்வைத்தார்..? மக்கள் உரிமை சார்ந்தா…? சொந்த சுய நல பதவிப் பேராசையா..?
இன்று ஜீ.ஜீ.யின் பேரன் கறுப்புக் கொடியோடு ஒரு நாடு இரு தேசம் கேட்கிறார். இதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் இருட்டிப்பு வரலாறு. யாழ்.தலைமை மறுத்தால் மறுக்கவேண்டும் ஏற்றால் ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாடு. பாட்டன் ஜீ.ஜீ.தான் தமிழர் சுதந்திரத்தை-உரிமையைப் பறித்தார் என்று பாட்டனாரின் சிலையில் இவர் கறுப்புக்கொடி கட்டுவாரா…? கொழும்பு அரசிடம் உரிமைகேட்கும் பல்கலைக்கழக மாணவர்கள் முதலில் சுதந்திரத்தைப் பறித்த யாழ்ப்பாண தலைமைகளிடம் உரிமை கேட்கவேண்டும்.
பதவி வெறிக்கு எல்லையில்லை. டி.எஸ்.சேனநாயக்க அரசில் அமைச்சுப் பதவிக்காக ஏழு இலட்சத்திற்கும் அதிகமான மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்க கை உயர்த்தினார் ஜீ.ஜீ.பொன்னம்பலம். சிங்கள பேரினவாதத்திற்கு துணைபோய் மலையக மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பறிக்க உதவினார். உரிமைப்பறிப்பில் இவர்களுக்கு பங்கு உண்டா? இல்லையா..? ஆக, தமிழர்களின் உரிமைகளைப் பறித்தது, உரிமைகள் கிடைக்காது தடுத்தது தமிழரா… ? சிங்களவரா..? அது மட்டும் அல்ல பண்டா – செல்வா ஒப்பந்தத்தை சொந்த அரசியல் நலனுக்காகவும், செல்வாயகத்துடனான அரசியல் போட்டியாலும் எதிர்த்தவர் ஜீ.ஜீ.
ஆக, கிழித்தெறிந்த பண்டாரநாயக்கா பற்றி பேசுபவர்கள், அதை எதிர்த்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தைப் பற்றி மௌனிப்பது ஏன்?
இதே போன்றே தமிழரசுக்கட்சி கூட்டாட்சி நடாத்திய போதும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவைப் பேணிய போதும் கிழக்கு மாகாணத்தில் நிலப்பறிப்புக்கு காரணமாக இருந்துள்ளது. கந்தளாய், கல்லோயா குடியேற்றத் திட்டங்களில் மக்களுக்கு எதிர்காலம் குறித்து ஆலோசனைகளை வழங்கி இராஜதந்திர அணுகுமுறைகளை பின்பற்றி மக்களை வழி நடாத்தவேண்டிய பொறுப்பு ஒரு அரசியல் தலைமைத்துவத்திற்குண்டு. அந்தக் கடமையை தமிழரசுக்கட்சிசெய்யவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தமிழரசுக்கு காவிய எஸ்.எம்.இராசமாணிக்கமும் செய்யவில்லை.
கல்லோயாத் திட்டத்தில் முதல் ஆறு மாதங்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னுரிமை வழங்கி காணிப் பகிர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. கிழக்கு மாகாண மக்களுக்கு பகிர்ந்தளிக்க பின்னர் எஞ்சிய காணிகளுக்கே முழு இலங்கையிலும் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டது. இது யாரின் தவறு கிழக்கு மாகாண மக்களின் தவறா? அவர்களை மந்தைகளாக வழிநடாத்திய தமிழ்த் தேசிய அரசியலின் தவறா?
எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கைகொடுக்கின்ற தமிழ்த் தேசியம் ஆறு மாதக் காலக்கெடுவை நீடித்து மக்களை குடியேற்ற முயற்சி செய்தது ஏன்? ஒரே காரணம்தான் கிழக்கு மாகாண மக்களிடம் சிங்கவர்களுக்கு எதிராக அரசியல் செய்ய இதைவிடவும் வேறு என்ன வாய்ப்புக் கிடைக்கப்போகிறது. சிங்கள பூதம் வருகிறது…. சிங்கள பூதம்… வருகிறது என்று அரசியல் செய்ய இலகுவழி. இது காணித் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருந்த சிங்கள மக்களினதும், அவர்களின் தீர்க்கதரிசனம் மிக்க தலைமைகளின் தவறா? அல்லது தமிழ்த் தேசியத்தின் கையாலாகாத்தனமா..? இதற்குப் பெயர் ஆடத்தெரியாதவன் மேடை சரியல்ல என்ற பம்மத்து அரசியல்.
யாழ்ப்பாணத்தில் மேட்டுக்குடிக்கே காணியுரிமை இருந்தது. இது தேசவழமைச் சட்டத்தின் மூலம் மேலும் இறுக்கமாக்கப்பட்டது. காணியற்ற மக்கள் தங்கள் காணித் தேவையைப் பூர்த்தி செய்ய வன்னியில் குடியேறினார்கள். அங்கு அதை ஊக்குவித்த தமிழ்த் தேசிய அரசியல் கிழக்கில் அதைச் செய்யவில்லை. தேசவழமைச் சட்டம் பக்கத்துக் காணிக் காரருக்கே விற்பனையில் முன்னுரிமை வழங்கியது. இதனால் வெளியார் யாழ்ப்பாணத்தில் காணிகளை வாங்க முடியவில்லை.
வெளியாருக்கு காணி கொள்வனவு உரிமையை மறுத்த மேட்டுக்குடி தேசவழமைச் சட்டம் கொழும்பில் சிங்கள தேசத்தின் பரந்த மனப்பான்மையுடன் கூடிய சட்டத்தின் ஊடாக வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டியை கொள்வனவு செய்தது. யாழ்ப்பாணத்தில் வெளியாருக்கு காணி உரிமைமறுப்பு..! கொழும்பில் வெளியாருக்கு – யாழ்ப்பாணத்தவருக்கு காணி உரிமை கிடைப்பு. யாருடைய சுதந்திரம் மறுக்கப்பட்டது…? யாருடைய சுதந்திரம் கறுப்பு..?
சர்வஜன வாக்குரிமை, பெண்களுக்கான வாக்குரிமை விவகாரங்களிலும் யாழ்.மேட்டுக்குடி தலைமை எதிர்த்தே நின்றது. கல்வியறிவு இல்லாதவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது “சிறுபிள்ளையின் கையில் சவரக்கத்தியை வழங்குவதற்கு சமமானது” என்றவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம். இன்று பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட தமிழர்கள் பெண்கள், ஆண்கள் வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது சிங்களத் தலைவர்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் சேர்த்து வழங்கிய உரிமை. வாக்களிக்கும் சுதந்திரம். இது கறுப்பா…?
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் தமிழ்த்தேசிய அரசியலில் இளவயது பெண்கள், ஆண்களின் பங்கு என்ன? அது இன்னும் கறுப்பாகவே இருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சுதந்திர உரையில் “நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப் பெறுவது பற்றியே பேசப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆம்..! தமிழ்த் தேசிய இனம் யாழ்.மேட்டுக்குடியிடம் இழந்த சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றிப் பேசவேண்டிய காலம் இது .
மக்களே உங்கள் சுதந்திரத்தை திருடியவர்கள் உங்களோடு கூடவே நிற்கிறார்கள் ஜாக்கிரதை…!
“கோழிக்கள்வன் கதை. மௌன உடைவுகள் 22 இலும் தொடரும்..!