சூழ்நிலைக் கைதிகளாக தமிழ்த் தேசியத் தலைவர்கள்

சூழ்நிலைக் கைதிகளாக தமிழ்த் தேசியத் தலைவர்கள்

— கருணாகரன் —

தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் உடைந்து பல துண்டுகளாகச் சிதறிக் கிடப்பதையிட்டு போராளி ஒருவர் கவலையோடு சில விடயங்களைப் பேசினார்.

கூடவே சில கேள்விகளையும் எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள் இதுதான்.

1. தற்போது மேலும் பல துண்டுகளாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்துள்ளது. அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் பல அணிகள் போட்டியிடுகின்றன. இது தமிழரின் அரசியலை பலவீனப்படுத்தும் நடவடிக்கையல்லவா?

2. இப்படிப் பிரிந்தும் உடைந்தும் பல அணிகளாக நிற்பது தவறானது. இந்த நிலையானது ஒடுக்குகின்ற சிங்கள மேலாதிக்கவாதிகளுக்கு வாய்ப்பாகும். ஒடுக்குமுறைக்குள்ளாகியுள்ள மக்களுக்கு பாதகமாகும் என்பதைத் தமிழ் அரசியல்ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர், புலம்பெயர் நாடுகளில் உள்ளோர் போன்றோர் ஏன் கண்டிக்கவில்லை?

3. இப்படி உடைந்தும் பிரிந்தும் நிற்கும் சக்திகளையும் கட்சிகளையும் ஏன் ஓரணிக்குள் கொண்டு வருவதைப் பற்றி யாரும் சிந்திக்காமல் உள்ளனர்? அப்படி யராவது சிந்தித்திருந்தால் அவர்கள் எடுத்த முயற்சிகள் என்ன?

4. மூத்த அரசியல் தலைவர்களான சம்மந்தன், மாவை சேனாதிராஜா, விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா தொடக்கம் அடுத்த நிலையில் உள்ள தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோருடன் இதைக்குறித்து – இந்த அவல நிலையைக் குறித்து யாராவது முறையாகப் பேசியுள்ளனரா?

5. இந்தத் தலைவர்கள் தமிழ் மக்களுடைய விடுதலையைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் எவ்வாறு சிந்திக்கின்றனர்?

6. கடந்த காலத்தில் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி தீவிரமாக வலியுறுத்திக் கொண்டிருந்தவர்கள், நிகழ்காலத்தில் அந்த ஒற்றுமையைச் சிதைப்பவர்களாகவே உள்ளனர்? இதற்கான காரணங்களை இவர்கள் விளக்குவார்களா? அல்லது இவர்களை ஆதரிப்போர் இதற்கான காரணங்களைச் சொல்வார்களா? அல்லது இதைப் பற்றித் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் விளக்கமளிப்பார்களா?

7. இதைக் குறித்து – இந்தச் சீரழிவு நிலையைக் குறித்து தமிழ் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நிலைப்பாடு என்ன? பதில் என்ன?

8. இந்த நிலை தொடருமானால் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் எப்படி அமையும்?

9. அல்லது இப்படிப் பிரிந்து நிற்கும் அணிகளில் எந்த அணி சரியானது? எது உண்மையானது? எது மெய்யாகவே தமிழ் மக்களுடைய அரசியலைச் சரியான திசையில், சரியான முறையில் கொண்டு செல்கிறது என்பதையாவது இவர்கள் மக்களுக்குத் தெரிவிக்கலாம் அல்லவா?

10. அப்படியில்லை என்றால் இந்த அரசியற் கட்சிகளின் சீரழிவுக்கு நிகராகவே இந்தத் தரப்பினரும் உள்ளனர். இவர்களும் வேடிக்கை பார்க்கின்றனர். தங்களால் எதையும் செய்ய முடியாது என்ற கையறு நிலையில் உள்ளனர் என்றே அர்த்தமாகும் அல்லவா? இதை விட்டு விட்டு ஒவ்வொரு தரப்பைப் பற்றியும் விமர்சிப்பதில் என்ன பயன்? என்று கேட்கிறார் நண்பர்.

தமிழ் மக்களின் நிலையையும் அவர்களுடைய அரசியலையும் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு இந்தக் கேள்விகளின் நியாயமும் அதற்கான அடிப்படையும் புரியும். அவர்களுக்கு இந்த நிலை கவலையையே அளிக்கும். காரணம், அந்தளவுக்கு தமிழ்ச் சமூகம் தன்னுடைய அரசியலுக்காகவும் விடுதலைக்காகவும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. சக்திக்கு மீறிப் பெருந்தியாகங்களைச் செய்துள்ளது. இதற்கெல்லாம் பெறுமதியைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாகப் பெரும் பின்னடைவையே அது சந்தித்திருக்கிறது.

அதாவது வரலாற்றை முன்னகர்த்துவதற்குப் பதிலாக தமிழ்த் தேசிய(?) அரசியற் சக்திகள் அதைப் பின்தள்ளியுள்ளன. மேலும் பின்தள்ளிக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவுக்கும் இந்தத் துயர வரலாற்றில், தியாக வரலாற்றில் இணைந்தும் விலகியும் பயணித்தவர்களே இன்று அரசியல் அரங்கில் இருப்பவர்கள். மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றோர் நேரடியாகவே கடினமான அரசியற் பயணத்தின் வழியாக வந்தவர்கள். மேலும் சொன்னால், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோர் கூட நெருக்கடிகளின் வழியே அரசியலைத் தொடர்ந்தவர்கள். இவர்கள் கூட தங்களுடைய கடந்த காலத்தின் பெறுமதியைக் குறைக்கும் விதமாக நடந்து கொள்வது கவலை அளிக்கிறது.

அரசியலில் இதொன்றும் புதியதல்ல. வரலாறே இப்படித்தான் ஏற்ற இறக்கத்தோடு பயணித்திருக்கிறது என்று யாரும் சொல்லக் கூடும்.  

இது தவிர்க்க முடியாத நிலை. இதை விட வேறு எதைச் செய்ய முடியும் என்று இவர்கள் கேட்கக்கூடும். அப்படிக் கேட்டால் – அல்லது அப்படிச் சொன்னால் –  இவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக உள்ளனர் என்றே அர்த்தமாகும்.

அரசியல் தலைவர்கள் ஒரு போதும் சூழ்நிலைக் கைதிகளாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் தலைவர்களில்லை. சூழ்நிலையைச் சரியாகக் கையாளும் ஆளுமை உள்ளவர்களே தலைவர்களாகின்றனர். மற்றவர்கள் வரலாற்றைத் துயரக் குழிக்குள்ளேயே தள்ளி விடுகின்றனர்.

இன்றைய சீரழிவு அரசியலில் துணிவுடன் நிமிர்ந்து நிற்கக் கூடிய, தீர்மானங்களை உறுதியோடு எடுக்கக் கூடியவர்களே வெற்றியடைவர். மக்களுக்கான வெற்றியையும் விடுதலையையும் அவர்களால்தான் அளிக்க முடியும்.

இதற்கு சில விலைகளைக் கொடுக்க நேரிடும். இப்படித் துணிவுடன் நிற்கும்போது பல சவால்களைச் சந்திக்கவும் வேண்டியிருக்கும். ஆனால், அதைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

துயரம் என்னவென்றால், கடந்த காலத்தில் மிகச் சவாலான, உயிராபத்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கடந்து வந்தவர்கள், இன்று மிகச் சாதாரண அரசியல் நெருக்கடிகளைச் சந்திக்கவும் கடக்கவும் பயப்படுகின்றனர்.

இனியும் றிஸ்க் எடுக்க முடியாது என்று சிந்திக்கிறார்களா? அல்லது றிஸ்க் எடுப்பதில் களைப்படைந்து விட்டார்களா?

அப்படிக் களைப்படைந்து விட்டார்களென்றால், அவர்கள் அரசியலில் இருந்து விலகி விடலாம். களத்தில் நிற்பதாக இருந்தால் களமாடத்தான் வேண்டும்.

இதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் மேலும் சில விடயங்களை நினைவூட்ட வேண்டியுள்ளது. தமிழ் அரசியல் பல தடவை இந்த மாதிரி உடைந்து உதிரித்தன்மையைக் கொண்டிருந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிலிருந்து செல்வநாயகம் தரப்பு பிரிந்து சென்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரிந்து சென்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூம் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் பிரிந்து சென்றன. ஏன் ஒரு காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி பிரிந்து சென்றது. அண்மையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிலிருந்து (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) மணிவண்ணன் அணி பிரிந்து சென்றது. அதைப்போல ரெலோவிலிருந்து ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் தரப்புப் பிரிந்து சென்றது.

ஜனநாயகச் சூழலில் இதெல்லாம் வழமை எனச் சிலரும் இது தமிழ் அரசியலில் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம், மலையக அரசியலிலும் நிகழ்வதுதான் என்று வேறு சிலரும் கூறக்கூடும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து மலையக மக்கள் முன்னணியும் பின்னர் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் உருவாகிய வரலாறு இதைச் சொல்லும். அதைப்போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உடைந்தும் பிரிந்தும் சென்ற தரப்புகளையும் இவர்கள் அடையாளம் காட்டலாம்.

ஏன், ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களிலிருந்து உடைவும் பிரிவும் உண்டாகவில்லையா என்றும் நீங்கள் கேட்கலாம். புலிகளிலிருந்து உடைந்து புளொட் உருவாகியதையும் ஈரோஸிலிருந்து உடைந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் உருவாகியதையும் அதிலிருந்து உடைந்து ஈ.பி. டி.பி உருவாகியதையும் இவர்கள் காட்டலாம். மட்டுமல்ல ஈழதேசிய விடுதலை முன்னணி என்ற நான்கு இயக்கங்களின் கூட்டைப் புலிகள் உடைத்து நொறுக்கவில்லையா என்றும் கேட்கலாம்.

இந்தத் தவறுகளின் விளைவுகளைத்தானே தமிழ்ச் சமூகம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இன்று புலிகள் சந்தித்திருக்கின்ற வரலாற்றுத் துயரம் உணர்த்துவதும் இதைத்தானே. ஒரு கட்டத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தாமே தடை செய்த தரப்புகளை ஏற்று அரவணைத்துக் கொண்டதை – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதை – இங்கே நினைவூட்டிக் கொள்ளலாம்.

இதையெல்லாம் கவனத்திற் கொண்டே புதிய – எதிர்காலத்துக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

ஆம், தமிழ் அரசியலை முற்றிலும் புதிதாக – யுத்தத்துக்குப் பிந்திய அரசியலாக முன்னெடுக்கவேண்டும். அதற்குப் பழைய வழிமுறைகளும் பழைய சிந்தனைகளும் ஒரு போதும் உதவாது.

நீங்கள் புதிய முறையில் பந்து வீசினால்தான் மட்டையைப் பிடிப்பவருக்குக் குழப்பமும் தடுமாற்றமும் உண்டாகும். எப்படி அந்தப் பந்தை எதிர்கொள்வது என்று தெரியாமல் தத்தளிப்பார்கள்.

ஆனால், பிரிந்தும் உடைந்தும் சிதறிக் கிடக்கும் அத்தனை தரப்புகளும் பழைய – உழுத்துப்போன அரசியலையே கொண்டுள்ளன. பழைய அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கும் வரை எதிர்த்தரப்பில் உள்ளவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அவர்கள் அதை மிக எளிதாகவே எதிர்கொள்வர்.

இதனால்தான் இவற்றில் எதைத் தேர்வது என்று தெரியாத தடுமாற்றம் பலருக்கும் உள்ளது. இன்னொரு பக்கம் இதைப் பற்றிப் பலருக்கும் தெரியும். தெரிந்து கொண்டே தெரியாததைப்போல, எதையும் புரியாததைப்போல நடிக்கிறார்கள். நான்  உட்படப் பலரும் தமிழ் அரசியலின் பலவீனத்தையும் தவறுகளையும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளோம். அப்படித் தெளிவாகக் குறிப்பிட்டவை, முன்னுணர்ந்து சொன்னவை, விமர்சித்தவை, கண்டித்தவை, குற்றம் சாட்டியவை, சுட்டிக் காட்டியவை அனைத்தும் மெய்யெனக் காலம் நிரூபித்துள்ளது. மேலும் மெய்ப்படுத்தி வருகிறது.

இருந்தாலும் தமிழ் மக்களும் அவர்களிடையே உள்ள மெத்தப் படித்த மேதாவிகளும் அரசியல் அறிஞர்களும்(!) பலதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. புரிந்து கொண்டாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் அவற்றின் தொண்டர்களும் தெரிந்து கொண்டே நடிக்கிறார்கள். அல்லது தெரிந்து கொண்டே பிழைப்பு நடத்துகிறார்கள்.

இதை மாற்றிக் கொள்ளாத வரையில் மீட்சியில்லை.

இது தொடர்பாக யாராவது சிந்தித்தால் அவருக்கு வெற்றி.