— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அந்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும். இந்த நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது’ எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்ததாக ‘காலைக்கதிர்’ மின்னிதழ் தன் 29.01.2023 காலைப் பதிப்பில் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தமிழரசுக் கட்சி தனி வழிசென்ற பின்னர் இரா.சம்பந்தன் எப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகத் தொடர்ந்து விளங்க முடியும்?
கூட்டமைப்பு (Alliance) என்பது இரண்டுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டாகத்தானே இருக்க முடியும். அந்த வகையில் தற்போது ‘ரெலோ’வும் ‘புளொட்’ டும் ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து நிற்கும் கூட்டைத்தானே அதன் சரி பிழைகளுக்குமப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கொள்ளலாம்.
இவை ஒரு புறமிருக்க, 13 ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியேயாக வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதென்பதை இரா.சம்பந்தன் இப்போது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. கடந்த 35 வருட காலமாக இந்தியா அந்த நிலைப்பாட்டில் மாறாமலே உள்ளது என்பது சாதாரண அரசியல் மாணவனுக்கும் தெரிந்த விடயமே.
இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த காலத்தில் (2001-2023) 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்வதற்கு என்னென்ன முயற்சிகளை எடுத்தார் என்பதைக் கூறுவாரா? கூறுவதற்கு ஒன்றுமேயில்லை.
வடக்குக் கிழக்குத் தமிழர்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றம் சென்றதன் நோக்கமென்ன? 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்யும் விடயத்தில் இரா.சம்பந்தனைத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது என்ன? ஒன்றுமேயில்லை.
தாமே கொண்டு வந்த ஜனாதிபதி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்பட்டம் அடித்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், தாமே பிரதமராக்கினோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகவும், முழுக்க முழுக்க அரசாங்கத்தை ஆதரித்து நின்ற இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராகவும் கொண்ட ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்திலாவது (2015-2019) 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்கின்ற விடயத்தில் ஒரு துரும்பைத்தானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுத்துப்போட முடியவில்லை.
இவ்வாறு அரசியல் கையாலாகாத்தனமுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க் கட்சியான தமிழரசுக் கட்சி இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே தனித்து நின்று எதையாவது சாதிக்குமென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளலாமா? இல்லையல்லவா.
அது போலவே, இதுவரை காலமும் தமிழரசுக் கட்சியுடன் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக) இணைந்திருந்த காலத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கும் விடயத்தில் எதையுமே சாதிக்காத ‘புளொட்’டும் ‘ரெலோ’வும் இப்போது தங்களுடன் முன்னாள் ஈ பி ஆர் எல் எப் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் முன்னாள் ‘ரெலோ’ சிறீகாந்தாவையும் சிவாஜிலிங்கத்தையும் (இவர்களும் முன்னர் கூட்டமைப்பில் அங்கம் வகித்த பின் வெளியேறியவர்கள்தான்) ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் இணைத்துக் கொண்டு ‘ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி’ யின் குத்துவிளக்குச் சின்னத்தின் கீழ் தாமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அழைத்துக்கொள்ளும் அணியினரும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்யும் விடயத்தில் எதையாவது சாதிக்கும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளலாமா? இல்லையே.
இந்த இரு அணியினருடனும் சேராமல் தனித்து இயங்கும் சி.வி.விக்னேஸ்வரன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்யும் விடயத்தில் எதையாவது சாதிப்பாரா? என்றால் அதுவும் இல்லவேயில்லை.
‘இரு தேசம்; ஒரு நாடு’ என்று பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கலை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.
இந்தியாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கலுக்கு மேல் எதனையும் செய்யப் போவதில்லை.
இத்தகையதொரு சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் மேற்போந்த கட்சிகள் உச்சரிக்கும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த- அதிகாரங்களை மத்திய அரசு மீளப் பெற முடியாதவாறு அதிகாரம் பகிர்ந்தளிக்கப் பெற்ற ஒற்றை மொழிவாரி மாகாண ‘சமஷ்டி’த் தீர்வை அடைவதற்கான பயணத்தைக்கூட 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டுமென்ற அரசியல் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு- 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அனுசரித்து அரசியல் செய்யக்கூடிய-இந்தியாவும் நம்பிக்கை வைக்கக்கூடிய மூன்றாவது ‘மாற்று அரசியல் அணி’ யொன்றினைத் தற்போதைய தமிழ் அரசியல் பொதுவெளியில் தமிழ் மக்கள் அடையாளங் கண்டு அந்த அணியின் பின்னே ஐக்கியப்பட்டு அணிதிரளும் போது மட்டுமே 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கல் சாத்தியம். அத்தகைய மூன்றாவது ‘மாற்று அரசியல் அணி’ யொன்றின் தோற்றத்திற்கு எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் அடித்தளம் இடட்டும்.