‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-48)

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-48)

தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த்தேசியக் கட்சிகள் எனக் கருதப்படும் தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின்போது, 13 ஆவது திருத்தத்தின் கீழான மாகாண சபை முறையை அமுல்படுத்தும் விடயத்தை வலியுறுத்தியதுடன், தீர்வைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது தீர்வாகாது என்றும், ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தத் தமிழர் தரப்பு ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டுமென்றும் இத்தமிழ்க் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

இந்த விடயத்தையே இவ் அரசியல் பத்தித் தொடர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

13 ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்த ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டிய இத் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எல்லாம் தனித்தனியாகவும் கோஷ்டியாகவும் பிரிந்து நிற்கின்றன. இந்த நிலையில் தமிழர் தரப்பின் ஒருமித்த குரலென்பது வெறுமனே பேசுபொருளாக மட்டுமே உள்ளதே தவிர அந்த ஒருமித்த குரல் நடைமுறைச் சாத்தியமாவது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

தமிழர்களின் அரசியல் களம் இவ்வாறிருக்கையில் ‘ரெலோ’ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பா.உ. தமிழ் மக்களின் நிரந்தரத் தீர்வு விடயம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக ரெலோ, புளொட் தலைமையிலான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புதுடெல்லி பயணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ‘டான்’ தொலைக்காட்சியில் 22.01.2023 அன்று ஒளிபரப்பாகிய ‘ஸ்பொட் லைட்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கருத்து வெளியிடும்போது கூறியுள்ளார். 

இப் பத்தியின் பார்வையில் செல்வம் அடைக்கல நாதனின் இவ்  அறிவிப்பு அவசரத் தன்மைமிக்கதாகவே தென்படுகிறது.

கடந்த எழுபத்தைந்து வருடங்களாகத் தமிழர் அரசியலில் தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் யாவும் ‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய’ கதையாகத்தான் முடிந்திருக்கிறது. செல்வம் அடைக்கல நாதனின் இவ் அறிவிப்பும் இத்தகையதொன்றுதான்.

இந்திய அரசாங்கங்கள் அது எந்த கட்சி அரசாங்கமாகவிருந்தாலும் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை எப்போதுமே வலியுறுத்தியேதான் வந்துள்ளன. ஐநா மனிதஉரிமைகள் பேரவையிலும் இந்தியா இதனைத்தான் கூறியுள்ளது.

அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்கூட இதனையே வலியுறுத்திச் சென்றுள்ளார்.

13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கல் யாருக்குத் தேவையோ அந்தத் தரப்பான இலங்கைத் தமிழர் தரப்பு 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பின் ஓரங்கமாக நிறைவேற்றப்பட்டு இதுவரையிலான சுமார் முப்பத்தைந்து வருட காலத்தில் ஒருபோதுமே ஒருமித்த குரலில் வலியுறுத்தவேயில்லை. சில கட்டங்களில் அதற்கு எதிராகவும் செயற்பட்டுள்ளது.

எனவே, முதலில் செய்ய வேண்டியது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதல்ல. அதற்கு முன்னர் இலங்கைத் தமிழர் தரப்பு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதை ஒருமித்த குரலில் உள்நாட்டில் வலியுறுத்தச் செய்வதற்கான அரசியற் களவேலைகளைத்தான் செல்வம் அடைக்கலநாதனும் அவரோடிணைந்தவர்களும் முதலில் முன்னெடுக்க வேண்டும். 

இந்த அரசியல் கள வேலை என்பது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் குத்து விளக்குச் சின்னத்தில் எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடுவதல்ல. 

அதுமட்டுமல்ல இந்த அரசியற் களவேலையென்பது ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ ப் பெயர்ப்பலகை யாருக்குரியதென்று அடிபடுவதல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? இல்லையா? என்று பட்டிமன்றம் நடத்துவதும் அல்ல.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வெகுஜனச் செயற்பாடுகளை-இயக்கத்தை- போராட்டத்தை வடக்குக் கிழக்கின் உள்ளூர் மட்டங்களிலிருந்தும் மூலைமுடுக்குகளிலிருந்தும் முடுக்கி விட வேண்டும். இதுவே இப்போது தேவையான அரசியற் களவேலையாகும்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 26.01.2023 அன்று கூட்டிய கூட்டத்தில் (சர்வ கட்சிக் கூட்டத்தில்) 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யப் போவதாக மீண்டுமொரு முறை கூறியிருக்கிறார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு அடிக்கடி கூறிக் கொள்வதினாலும் தமிழர் தரப்பு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி வெறுமனே கோரிக்கைகளாக முன்வைப்பதினாலும் காரியமெதுவும் கைகூடப்போவதில்லை. 

அரசியலமைப்பின் ஓர் அங்கமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்செய்வதற்கு இப்படியொரு சர்வ கட்சிக் கூட்டம் தேவையில்லை. 13 ஆவது திருத்தம் நிறைவேறி முப்பத்தைந்து வருட காலமாக முழுமையாக அமுல்படுத்தப்படாமல் இருப்பதைச் சீர் செய்வதற்கு ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரமே போதும். ஆக செய்யவேண்டியது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் வகையில் அரச இயந்திரத்தை முடுக்கி விடுவதுதான்- ஆளியை (switch) அழுத்தி விடுவதுதான். அதனைச் செய்யாமல் ஜனாதிபதி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் நடத்துவேன் என்று இவ்வாறு அடிக்கடி கூறிக்கொண்டிருப்பதனாலும் அதனைத் தமிழர் தரப்பு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதாலும் ஒன்றுமே ஆகப்போவதில்லை.

அடுத்த மாகாண சபை தேர்தல்கள் நடைபெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபைகள் அமையும் வரை மாற்று ஏற்பாடுகளை அரசியலமைப்பின் 154 S ஷரத்து அனுமதிக்கிறது. நிறைவேற்று ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் உள்ளது. ஆனால் அதற்கான அரசியல் அழுத்தம் தமிழர் தரப்பிலிருந்து (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்) இன்னும் முறையாகக் கொடுபடவேயில்லை. அத்தகையதோர் அரசியல் அழுத்தம் தற்போதைய சூழ்நிலையில் வெகுஜன நடவடிக்கைகள் மூலமே சாத்தியம். எனவே தமிழ் அரசியல் கட்சிகள் வெறுமனே மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்வதோடு மட்டும் தம்முடைய நடவடிக்கைகளை மட்டுப்படுத்தாது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் விவகாரத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும். அப்போதுதான் அது அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுக்கும். கட்சி அரசியலுக்கு அப்பால்-தேர்தல் அரசியலுக்கு அப்பால் அதற்கான வெகுஜன இயக்கம் தேவை.

மேலும், அடுத்த மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னரே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் அனைத்து விடயங்களும் பூர்த்தி செய்யப்படவும் வேண்டும். அப்போதுதான் அடுத்த மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை அர்த்தமுள்ளதாக அமையும்.

எனவே, இந்தியப் பிரதமரைச் சந்திப்பதில் அவசரம் காட்டாமல் அதற்கு முன்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய இலங்கை அரசாங்கத்தை (ஜனாதிபதியை) வலியுறுத்தும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவிக்கவும்-செயற்படுத்தவும் செல்வம் அடைக்கலநாதன் தன் கவனத்தைக் குவிக்க வேண்டும்.