—- கலாநிதி ஜெகான் பெரேரா —-
பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவியின் அதிகாரத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவில் நாட்டுக்கும் நினைவுபடுத்தியிருக்கிறார். பாராளுமன்ற கூட்டத்தொடரை திடீரென்று ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதிக்கு வெளிப்படையான காரணம் எதுவுமில்லை. பொது நிதி, அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான முக்கியமான குழுக்கள் உட்பட 40 க்கும் அதிகமான பாராளுமன்ற குழுக்கள் செயலிழந்துவிட்டன.
பெப்ரவரி 4 இலங்கையின் 75 வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு பிறகு பெப்ரவரி 8 பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது 2048 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் வரை நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் புதிய கொள்கைகள் மற்றும் சட்டங்கள் பற்றி ஜனாதிபதி அறிவிப்பார் என்று அவரது அலுவலகம் அறிவித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையாத வறுமைப்பட்ட விவசாய சமுதாயமாக இருந்த சிங்கப்பூரை பிரதமர் லீ குவான் யூ 25 வருடங்களில் உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக மாற்றிக்காட்டினார். அதே போன்று இலங்கையையும் 25 வருடங்களில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கை ஜனாதிபதி கொண்டிருக்கிறார்.
நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க முனைப்புடன் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
அண்மையில் முஸ்லிம் மதத் தலைவர்களின் மகாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் சமூகம் நவீனமயமாக வேண்டும் என்றும் அதே போன்றே மத நடைமுறைகளும் நவீனமயமாக வேண்டிய தேவை இருக்கிறது என்று உறுதிபட கருத்து தெரிவித்தார். பொருளாதாரத்தை மீட்டெடுத்து பிரச்சினைகளை தீர்த்துவைப்பது தொடர்பிலும் தனது நிலைப்பாடுகளை வலுவான முறையில் அழுத்திக் கூறினார்.
வரியிறுப்பாளர்களின் கொள்வனவு ஆற்றலை பலவீனப்படுத்தியிருக்கும் கடுமையான வரி அதிகரிப்புகளுக்கு பரந்தளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முதலில் வரியிறுப்பாளர்கள் பணவீக்கத்தின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்தக்கூடிய நிலையில் இல்லையென்று கூறி அரசாங்கம் வங்குரோத்து நிலையைப்பிரகடனம் செய்தபோது பணவீக்கம் 80 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது. தற்போது வரிகள் 36 சதவீதம் உயர்ந்ததை அடுத்து வரியிறுப்பாளர்கள் தங்களது மெய்யான வருமானம் பெருமளவுக்கு குறைந்துவிட்டதை காண்கிறார்கள்.
ஆனால் அரசாங்கம் நெகிழ்வுப்போக்கை காட்டுவதாக இல்லை. நிதியமைச்சை தனது பொறுப்பில் வைத்திருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க வரிகள் தொடர்பான விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் உணர்வுகளுக்கு எதிராகவே செயற்படுகின்றார். அரசாங்க செலவினங்கள் மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுக்கு பெருமளவில் வரி விதிப்புக்களை தவிர்த்து மானியங்களை மக்களுக்கு வழங்கிய பல தசாப்த கால அரசாங்கங்களின் கொள்கைகளில் இருந்து விடுபடுவதற்கு நாட்டை நிர்ப்பந்திப்பதற்கு அவர் உறுதிபூண்டிருக்கிறார் போன்று தெரிகிறது.
இலங்கையில் வரி அறவீடுகள் மூலம் அரசாங்கம் பெறுகின்ற வருமானம் 8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் அதேவேளை மற்றயை நாடுகளின் வரி வருமானம் 20 — 25 சதவீதமாக காணப்படுகிறது. உள்நாட்டில் வரி அறவீடுகளின் மூலமாக வளங்களைப் பெருக்குவதை விடுத்து வெளிநாட்டு கடன்கள் மூலமாக செலவினங்களை சமாளிப்பதன் விளைவாக நீண்டகாலமாக பொருளாதாரம் மந்த வளர்ச்சியில் இருந்துவருகிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னரும் கூட இதுவே நிலைமை.
13 வது திருத்தம்
உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கும் இன்னொரு விவகாரம் இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளாகும். இனத்துவ தேசியவாதத்துக்கு பணிந்துபோன அரசாங்கங்களினாலும் அரசியல் தலைவர்களினாலும் நீண்டகாலமாக இனநெருக்கடியை தீர்க்க முடியாமல் போய்விட்டது. இலங்கையின் இன, மத பிளவுகளின் பின்னணியில் இனத்துவ தேசியவாதியாக காட்டிக்கொள்வது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, வாக்குகளைப் பெற்று தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு நிச்சயமான ஒரு வசதியாக இருந்து வந்திருக்கிறது.
விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் காணப்பட்ட தீர்வுத்திட்டக்களை இது காலவரையில் இலங்கையில் எந்தவொரு தலைவரினாலும் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. இறுதியாக வந்த தீர்வுத்திட்டம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமாகும். அதற்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட 1957 பண்டாரநாயக்க — செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 டட்லிசேனநாயக்க — செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான தொடக்க முயற்சிகளைக்கூட முன்னெடுக்கமுடியாமல் போய்விட்டது.
இனநெருக்கடி மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் ஆராய்வதற்கு கூட்டிய சர்வகட்சி மகாநாட்டில் அந்த முயற்சிகளை எதிர்ப்பவர்களை மடக்குவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க துணிச்சலை வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு தனக்கு இருக்கக்கூடிய நியாயப்பாட்டை சவாலுக்கு உட்படுத்துவதில் நாட்டம் காட்டிய இனத்துவ தேசியவாத பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற முறையால் எனது பொறுப்பாகும். சுமார் 37 வருடங்களாக 13 வது திருத்தம் அரசியலமைப்பின் அங்கமாக இருந்துவருகிறது. நான் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது யாராவது அரசியலமைப்புக்கான 22 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலமாக கொண்டுவந்து அதை ஒழிக்கவேண்டும். அத்தகைய ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடிக்கப்படுமாக இருந்தால் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கும். அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதுமில்லை, ஒழிக்கப்போவதுமில்லை என்று இரண்டும் இடைநடுவில் நாம் நிற்கமுடியாது” என்று அவர் கூறினார்.
1987 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட காலம் தொட்டு 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுதப்படாமல் இருந்து வருகிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்க அமைச்சராகவும் பிரதமராகவும் இருந்த அரசாங்கங்கள் உட்பட பல அரசாங்கங்கள் அந்த திருத்தத்தை கணிசமான அளவுக்கு குறிப்பாக காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலாக அதிகாரப்பகிர்வுக்கு உள்ளாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு தவறிவிட்டன.
கூட்டத்தொடர் ஒத்திவைப்பிற்கு பிறகு பாராளுமன்றம் மீண்டும் பெப்ரவரி 8 கூடும்போது முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகள் குறித்து பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் உரையாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு வாய்ப்பு கிடைக்கும். தனது தற்துணிபின் அடிப்படையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கு தனக்கிருக்கும் அதிகாரத்தை வெளிக்காட்டிய ஜனாதிபதி இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கான தனது நோக்கையும் தேசிய நல்லிணக்கத்துக்கு பின்பற்றவேண்டிய பாதை வரைபடத்தையும் முன்வைக்கக்கூடியதாக இருக்கும்.
முரண்நகையான கடும் நடவடிக்கை
தற்துணிபின் அடிப்படையில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி பெப்ரவரி 20 பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற கூட்டத்தொடரை திடீரென்று ஒத்திவைத்ததன் மூலம் அதே போன்று திடீரென்று அதை கலைப்பதற்கான அதிகாரத்தையும் விரைவில் பெறப்போகும் செய்தியை ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுக்கும் கூறியிருக்கிறார்.
தற்போதைய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு பெப்ரவரி 20 சரியாக இரண்டரை வருடங்கள் நிறைவடைகின்றது. இரண்டரை வருடங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்புக்கான 20 வது திருத்தம் ஜனாதிபதிக்கு வழங்குகிறது. ஆளும் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்டு பிரசாரம் செய்யக்கூடிய நிலையில் இல்லை. இத்தகைய இடர்மிகு சூழ்நிலையில் அவர்கள் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கவோ அல்லது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அவரின் உறுதிப்பாட்டை எதிர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
மறுபுறத்தில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை வழிக்கு கொண்டுவந்தாலும் கூட அதனால், இனநெருக்கடியில் விட்டுக்கொடுப்பைச் செய்து நிலைபேறான அரசியல் தீர்வொன்று காணப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதில் வெற்றியை உறுதிசெய்யமுடியும் என்று கூறுவதற்கில்லை. இனநெருக்கடி வேறுபட்ட இன, மத சமூகங்கள் மத்தியில் புராதன உணர்வுகளைத் தூண்டுகிறது. அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பல தசாப்தகால இனநெருக்கடிக்கும் போருக்கும் வழிவகுத்த வில்லன்களாக நோக்கப்படுகிறார்கள்.
ஆனால் நாட்டில் உள்ள நெருக்கடி அரசியல் கட்சிகளுக்கும் முந்தியதாகும். இலங்கையின் சமூகத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் 1928 ஆம் ஆண்டு சுயாட்சிக்கு நாடு தயாராக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள ஆணைக்குழுவொன்றை அனுப்பினார்கள். அதன் மதிப்பீடு எதிர்மறையானதாக இருந்தது. பெரிய சமூகத்தின் பிரதிநிதிகள் தங்களது நலன் தேசிய நலன் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்களாக இருந்தார்கள் என்றும் தங்களுக்குள் முரண்பாடுகளைக் கொண்ட சிறிய சமூகங்கள் சகலதினதும் பிரதிநிதிகள் பெரிய சமூகத்துக்கு எதிராக ஐக்கியப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று டொனமூர் ஆணைக்குழு அதன் அறிக்கையில் எழுதியது.
அதனால், காலங்காலமாக நீடித்துவந்த பிரிவினை உணர்வுகளுக்கு இரையாகாமல் இருப்பது சிவில் சமூகத்தின் முக்கிய பொறுப்பாகும். இனநெருக்கடிக்கான தீர்வு மற்றும் 13 வது திருத்தம் சாத்தியமாக்குகின்ற வகையிலான இனங்களுக்கிடையிலான அதிகாரப்பரவலாக்கலின் அவசியம் குறித்து மக்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு சிவில் சமூகத்தில் அறிவார்ந்த தலைவர்கள் பற்றுறுதியுடன் பாடுபடவேண்டும். இதற்கான அறிகுறிகளை அறகலய போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது காணக்கூடியதாக இருந்தது.
அந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய இளைஞர் யுவதிகள் இனம், மதம், சாதி அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி சகலரும் சமத்துவமான குடிமக்களாக இருக்கவேண்டும் என்று பகிரங்கமாக முழக்கத்தை எழுப்பினார்கள். குறுகிய தேர்தல் நோக்கங்களுக்காக இனத்துவ தேசியவாத அரசியல்வாதிகள் மேற்கொள்கின்ற சூழ்ச்சித்தனமான நடவடிக்கைகளுக்கு இரையாகாமல் இருப்பதற்கு அந்த இளைஞர்களும் யுவதிகளும் உறுதிபூண்டார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்கும் அந்த இளம் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொது மன்னிப்பொன்றை வழங்கி பிரச்சினைகளுக்கான தீர்வின் பங்காளிகளாக மாற்றுவதற்கு பதிலாக அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கொடுமையான நடவடிக்கைகளை எடுப்பது ஒரு முரண்நகையாகும்.