— அழகு குணசீலன் —
“மூன்று இனங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் முதலாவது (பெரும்பான்மை) இனம், இரண்டாவது இனத்தை அழிக்கும் மூன்றாவது இனம் அதன் செல்லப் பிள்ளையாக இருக்கும். அது முடிந்தபின் மூன்றாவது இனத்திற்கும் அதே கதிதான் நடக்கும்…”. இது மாமேதை லெனினின் அற்புதமான வார்த்தைகள். இதை நாம் இலங்கை உட்பட பல நாடுகளில் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அண்மைக்காலமாக இலங்கையிலும், இந்தியாவிலும் இடம்பெறுகின்ற சிறுபான்மை மதத்தவர்கள் மீதான அடக்குமுறையும், வன்முறையும், ஜனநாயக மறுப்பும், சமூக அநீதியும் இந்துத்துவாவை பேசுபொருளாக்கி இருக்கிறது. மாமேதை லெனினின் ஜதார்த்தமான இந்த வார்த்தைகளை நாம் இனங்களுக்கு பதிலாக மதங்களைப் பிரதியிட்டு மறுவாசிப்பு செய்யமுடியும்.
“சென்னையில் மழை பெய்தால் யாழ்ப்பாணத்தில் குடை பிடிக்கிறார்கள்” என்று அன்று கூறுவார்கள். இன்று பாரதீய ஜனதாவின் இந்து வெறி மழைக்கு சிவசேனா யாழ்ப்பாணத்தில் குடை பிடிக்கிறது. தமிழ் நாட்டில் திராவிடமாடல் வர்ணாச்சிரத்தை -மனுதர்மத்தை மறுத்தும், பார்ப்பன இந்துத்துவத்தையும் ஹிந்தி திணிப்பையும் எதிர்த்தும் நின்று சமூக நீதியைக் கோருகிறது. தமிழ்நாடு என்று அழைக்கும் உரிமைக்காக போராடுகிறது.
ஆனால் இன்று தமிழ் ஈழம் கேட்டவர்கள், தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் அதற்கு குடைபிடிக்காமல் இந்துத்துவாவை முதன்மைப்படுத்தி சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் பாணியில் போதாக்குறைக்கு பாரதீய ஜனதா என்றும் ஹிந்தி வகுப்புக்களையும் நடாத்திக்கொண்டு சகோதரத்துவ மதங்களையும், மக்களையும் புண்படுத்திக்கொண்டு இந்துத்துவாவுக்கு குடை பிடிக்கிறார்கள். வட்டுக்கோட்டை மாநாட்டின் தமிழீழம் மதசார்பற்ற சமதர்ம அரசாக அமையும் என்ற வெற்றுப்பிரகடனம் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால் வெறும் வெங்காயமாகிவிட்டது.
அரபு உலகத் தொடர்பு இஸ்லாம் அடிப்படைவாதத்தை வளர்க்கிறது என்று குறை கூறுபவர்கள், மேற்குலக உறவு கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றுகிறது என்று குற்றம் சாட்டுபவர்கள், இந்துமதஅடிப்படை வாதத்திற்கு தாமே வழி எடுத்துக் கொடுக்கிறார்கள். இதை ஏட்டிக்குப் போட்டியாகச் செய்து இனம், மதம் என்பனவற்றிற்கு அப்பால் மொழி ரீதியாக, கலாச்சார பண்பாட்டு ரீதியாக, திரட்சி பெற்றுள்ள தமிழ்ச் சமூகத்தை சிதைக்கிறார்கள். இன்றைய தேர்தல் காலத்தில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சியாகவும் இது அமைகிறது.
யாழ். மாநகரசபைக்கான தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்னோல்ட் என்ற கிறிஸ்த்தவருக்கு எதிராக சிவசேனா மறவன்புலவு சச்சிதானந்தன் குரல் எழுப்பியுள்ளார். இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழும் யாழ். மாநகரசபையில் ஒரு கிறிஸ்த்தவரா? தலைமை வேட்பாளர் – மாநகர முதல்வர்…? என்று கேட்கிறார் சிவசேனா தலைவர்.
தடித்த இந்துத்துவ பொன்னம்பலம் வாரிசை எதிர்த்து கிறிஸ்தவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழரசுக்கட்சியை உருவாக்கினார். தமிழ் மக்கள் இந்தத் தலைமையை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை விடவும் அவருக்கு அதிகமான அங்கீகாரத்தை அன்று வழங்கி இருந்தார்கள். யாழ். மாநகர முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா ஒரு கிறிஸ்த்தவர், அப்போதும் இந்துக்களே பெரும்பான்மையாக யாழில் இருந்தார்கள். யாழ்ப்பாணத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக மார்ட்டின் இருந்திருக்கிறார் இவரும் ஒரு கிறிஸ்த்தவர். இவரையும் பெரும்பான்மை இந்துக்களே தெரிவு செய்தார்கள். இப்படி இருக்க யாழ்.மக்களின் காதுகளில் சச்சிதானந்தன் பூச்சுத்துவது ஏன்?
யாழ்ப்பாணம் சிவபூமி அங்கு மதம் மாற்றிகளுக்கு இடமில்லை என்று பாரதீய ஜனதாப் பாணியில் பார்ப்பன அரசியல் பேசுகிறார் இவர். தமிழ்நாட்டில் சுமந்திரன் எம்.பி. சென்றிருந்த போதும் பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களே “மதம் மாற்றியே திரும்பிப் போ” என்று கூக்குரல் இட்டனர். இதனால் இந்த சிவசேனாவுக்கும், அதன் தலைவர் சச்சிதானந்தனுக்கும் பின்னணியில் இருந்து ஆட்டிவிக்கும் சக்தி எது என்பதைக் கண்டறிவது கஷ்டமானதல்ல.
ஐயா! மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களே! கிறிஸ்தவர்களை மதம் மாற்றிகள், அல்லது மதம்மாறியவர்கள் என்று கூறுவதைத் தவிர்த்து இந்துக்களான அவர்கள் ஏன்? மதம் மாறினார்கள் என்று நீங்கள் ஆய்வொன்றைச் செய்தால் அதற்கான பதில் நீங்கள் பூஜிக்கும் வர்ணாஸ்த்திரத்திலும், சனாதன தர்மத்திலும் இருக்கிறது. “எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும்” என்ற சமூகநீதியை வேதாகமங்கள் நிராகரித்தால்தான் அவர்கள் கிறிஸ்தவமதத்தை தழுவவேண்டி ஏற்பட்டது என்ற உண்மையை உணராது இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வண்டி ஓட்டுகிறீர்களே…!
சிவசேனாவின் அரசியலைத்தான் இந்தியாவில் காசி.ஆனந்தனும் செய்து கொண்டிருக்கிறார். சிவசேனா, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்துபரிஷத், பாரதீய ஜனதா போன்ற அடிப்படை இந்து மதவெறி அமைப்புக்களும் கட்சிகளும் தமிழீழத்தைப் பெற்றுத்தருவார்கள் என்று நம்புகிறார். அவர் நம்புவது வேறு அதைச் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றுவது வேறு. மேடைகளில் கார்ள்மாக்ஸ், லெனின், மாவோ, சேகுவேரா, பிடல்கஸ்ரோ, ஹோசுமின் பெயர்களை உச்சரித்த அவர் இன்று காள்மார்க்ஸ் கூறிய அபின் சாப்பிடுகிறார்.
இதுவரை வடக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்துமதத்தவர்களால் அல்லது அமைப்புக்களால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக காசி. ஆனந்தன் வெளியிட்ட கண்டன அறிக்கைகள் எத்தனை? அண்மையில் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சில கிறிஸ்த்தவப் பாதிரியார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு முதுகு சொறிந்திருந்தார். இதற்கு காரணம் உண்டு. அவர்களை உசுப்பேத்தி, தட்டிக்கொடுத்து மோதவிட்டு பயன்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் இலக்குத்தான் அது.
மன்னார் மடுமாதா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதிவளைவை இந்துக்கள் அடித்து உடைத்ததில் வெளிப்படையாக ஆரம்பித்த இந்த அட்டகாசம் படிப்படியாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது ஒட்டுமொத்தமாக சிவசேனா இதைக் கொந்துராத்து (CONTRACT) எடுத்திருப்பது போன்று அல்லது சிசேனாவிடம் கொந்துராத்து கொடுத்திருப்பது போன்று தோன்றுகிறது.
2020 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு கிறிஸ்தவர்களை தமிழ்த்தேசிய அரசியல் இலங்கை கிறிஸ்த்தவர்களிடம் இருந்து பிரித்து வடக்கு கிழக்கு ஆயர்கள் அமைப்பை உருவாக்கினார்கள். இது மதத்தால் இணைந்திருந்த தமிழ், சிங்கள கிறிஸ்த்தவர்களை பிரிப்பதற்கான சதி. இதன்போது தமிழ்…. தமிழர்…. தமிழ்த்தேசியம்…. என்று பிரித்து இரு கூறுகளாக்கி, கிறிஸ்தவர்களை அரசியல் தேவைகளுக்குபயன்படுத்திக்கொண்டு யாழ்ப்பாணம் சிவபூமி எனப் பிரகடனம் செய்யப்படுகிறது. இந்த பிரிப்பானது தமிழ் கிறிஸ்த்தவர்களை தனிமைப்படுத்த, பலவீனப்படுத்த, இனங்களுக்கு அப்பால் இருந்த மதரீதியான உறவை சிதைக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயல்.
சிவசேனா குறித்து ஆயர்களோ, கிறிஸ்த்தவ மத அமைப்புக்களோ, சிவில் அமைப்புக்களோ தமிழ்தேசிய அரசியல் கட்சிகளோ ஏன் மனித உரிமைகள் பற்றிப் பேசுகின்ற சர்வதேச அமைப்புக்களோ, மாற்று மத அமைப்புக்களோ வாயைத்திறக்க தயங்குகின்றன. பௌத்த பிக்குகள் அரசியலில் தலையிடுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ எல்லா மதத்தலைவர்களும் மதம்பிடித்தவர்களாக அரசியலை மதமாக கொண்டு செயற்படுகின்றனர். பாதிரியார் சக்திவேல், வேலன் சாமி உட்பட அனைவருக்கும் இது பொருந்தும்.
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம்மை நேரடியாக இணைத்துக்கொண்டு செயற்பாட்டாளர்களாக விளங்கிய அல்லது இக்கட்டான காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு பேருதவியாக இருந்த கிறிஸ்த்வர்களை மறந்துவிட்டோமா…? டேவிட் ஐயா, பாதிரியார் சிங்கராயர், பாதிரியார் சந்திரா பெர்னாண்டோ, தமிழ் ஆசிரியர் சங்கத்தலைவர் வணசிங்கா போன்றவர்களை மறப்பது தமிழ்த் தேசியத்தின் துரோகத்தனம் இல்லையா…? இன்று கொடிபிடிக்கின்ற காவியுடைக்கார்கள் அப்போது எங்கே இருந்தார்கள். இப்போது யுத்தம் முடிந்து எல்லாம் வசதியான பின்னர் புற்று ஈசல்களாக வெளியேவருகிறார்கள். யாருக்குப் பணிசெய்ய…..? யாரைத் திருப்திப்படுத்த….?
பேரினவாத இனச்சுத்திகரிப்பு பற்றிப் பேசுகின்ற புலிகளின் தமிழ்த்தேசிய அரசியல் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றியதன் மூலம் மதச் சுத்திகரிப்பை ஆரம்பித்துவைத்தது. இப்போது அந்தப் சுத்திகரிப்பை கிறிஸ்த்தவர்கள் மீதும் மேற்கொள்ள சிவசேனா பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
அமைதியாக வாழும் கிழக்கு மாகாண சைவ, கிறிஸ்த்தவ மக்களுக்கு இடையிலும் முரண்பாட்டை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திடீர் திடீரென புதுப்புது அமைப்புக்கள் வெளிநாட்டுப் பணத்துடன் வடக்கில் இருந்து கிழக்கில் வந்து கோயில் அபிவிருத்திகளில் ஆர்வம் காட்டிவருவது அதிகரித்து வருகிறது. இது விடயத்தில் கிழக்கு மாகாண கோயில் நிர்வாகங்கள் கவனமாகச் செயற்பட வேண்டிய காலம் இது. கிழக்கு மக்களின் சிறுதெய்வ வழிபாடுகளைச் சிதைத்து, கிழக்கின் தனித்துவ வழிபாட்டு அடையாளங்களை மறுத்து, ஆகம வழிபாட்டு முறையை உதவி என்ற பெயரில் கொள்வனவு செய்யவும், விற்பனை செய்யவும் சில மத வியாபார அமைப்புக்களும், தனிநபர்களும் களத்தில் இறங்கியிருப்பது அண்மைக்காலங்களில் தொடர்கிறது.
கிழக்கில் தமிழ் -முஸ்லீம் உறவுக்கு ஆப்பு வைத்ததில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு மிக அதிகமான பங்குண்டு. இதில் ஒருபகுதி அயலவரைத் திருப்திப்படுத்த செய்யப்பட்டது. அந்த ருசிகண்ட பூனை கிழக்கில் சைவ, கிறிஸ்த்தவ சமூகங்களுக்கு இடையேயும் முரண்பாடுகளை வளர்க்க அதிகவாய்ப்புண்டு.
யாழ்ப்பாணத்து புனிதப் பசுவின் மணியோசை கிழக்கிலும் மெல்ல… மெல்ல… கேட்கத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. புனிதப்பசு கிழக்கில் நுழையும் காலம் அதிக தூரத்தில் இல்லை. இப்போது மணியோசை தான் கேட்கிறது பசு வருவதற்கும் அதிக காலம் எடுக்காது ஏனெனில் இது “தேர்தல் காலம்”. கிழக்கின் சைவ, கிறிஸ்த்தவ மக்கள் ஓரணியில் திரண்டு மத உரிமையின் பெயரில், மற்றைய மதங்களை நிந்திக்கும், சமூகங்களை உடைக்கப் பயன்படுத்தும் சமூக விரோதிகளுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பைக்காட்ட வேண்டும்.
மௌனிக்கின்ற அனைத்துத் தரப்பினரும் இந்த சமூக அநீதியின் பங்காளிகள்…!