—- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —-
‘ஈழநாடு’ பத்திரிகையின் 30.12.2022 இதழின் ‘அரசியல் கூட்டணிக்கான காலம்’ என்ற தலைப்பிலான ஆசிரிய தலையங்கம் என் கவனத்தை ஈர்த்தது. தலையங்கத்தின் ஒரு பந்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
‘பாராளுமன்றத் தேர்தலில் அதி கூடிய ஆசனங்களைப் பெறவேண்டும். முடிந்தால் வடக்கு–கிழக்கின் அனைத்து தமிழ் ஆசனங்களையும் வெற்றி கொள்ள வேண்டும். ஜனநாயக அரசியல் தளத்தில் ஒரு தரப்பு பேரம் பேசுவதற்கு உள்ள ஒரே வாய்ப்பு அவர்களிடம் உள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டுமேயாகும். கடந்த தேர்தலில் தங்களுக்குள் பிளவுற்றதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மோசமான பின்னடைவுகளைச் சந்தித்திருந்தது. தேர்தலை அனைவரும் ஓரணியாக எதிர்கொள்ளாது விட்டால் அடுத்த தேர்தலிலும் அவ்வாறானதொரு சூழலே ஏற்படும்‘.
இப்பந்தியை எழுந்த மானமாகப் பார்க்கும் போது நல்லதொரு அறிவுரையாகத்தான் உள்ளது. ஆனால், இது மாற்று அரசியலை மறுதலிக்கிறது. மட்டுமல்ல, அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் தற்போதுள்ளதுள்ளதை விட அதிகபட்சமான எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து அனுப்பி வையுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்வதையே உட்கிடக்கையாகக் கொண்டும் உள்ளது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குத் தேர்தல் பிரச்சாரம் பண்ணுவதாகவும் உள்ளது. இங்கேதான் ‘ஈழநாடு’ ஆசிரியர் தலையங்கத்துடன் கருத்தியல் ரீதியாக முரண்பட நேரிடுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒற்றுமைப்பட்ட அணியாக-ஏகப்பிரதிநிதியாக 2001 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் ஏற்படுத்தப்பெற்றது. 2004 ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் உச்சபட்சமாக இருபத்தியிரண்டு (22) பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள்.
தமிழ்த் தேசிய அரசியலில்-தமிழ் மக்களைச் சமூக பொருளாதார அரசியல் ரீதியில் மேம்பாடடையச் செய்வதில் இந்த இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாகச் சாதித்தது என்ன? ஒன்றுமில்லை. அதிகுறைந்தபட்சம் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது யுத்தத்தில் சம்பந்தப்படாத-யுத்த களத்தில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவித் தமிழ்மக்களைத்தானும் காப்பாற்றும் வகையில் போர் நிறுத்தத்தையாவது ஏற்படுத்த இவர்களால் முடிந்ததா? குறைந்தபட்சம் முனைந்தார்களா? இல்லை; இல்லவேயில்லை.
2009 முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தகளத்தில் அகப்பட்டுகொண்ட அப்பாவித் தமிழ்மக்களைக் காப்பாற்றுவது சம்பந்தமாக,
* ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களைக் காப்பாற்றவேண்டும் அன்றேல் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்க வேண்டும்’ எனத் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான ஆனந்தசங்கரி 11.01.2009 அன்று ஊடக அறிக்கை மூலம் விடுத்த வேண்டுகோளைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உதாசீனம் செய்தது. உண்மையில் இவ் இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றப் படிக்கட்டில் அமர்ந்து போர் நிறுத்தம் வேண்டிச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருப்பின் அரசியல் ரீதியாக ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.
* ‘எமது மக்களைக் காப்பாற்றக் கடைசிச் சந்தர்ப்பம்’ என்ற தலைப்பில் 16.03.2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதத்தில் 87 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரம் மக்களின் சாபத்திற்கு ஆளாகவேண்டாம் என்று கேட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.
* 2009 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நாட்டின் அப்போதைய நிலை பற்றி ஆராயவென 26 ஆம் திகதி சந்திப்பிற்கு அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் மிகப் பாரதூரமான விடயம் யாதெனில் யுத்தமும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களுமே. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கூட்டத்தைப் பகிஸ்கரித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்திற்குச் சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்தியிருக்க வேண்டாமா?
* 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை டெல்லி வருமாறு அழைத்தும் கூட அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது. அந்த ஆபத்தான ஒரு கட்டத்தில் இந்திய அழைப்பை நிராகரித்தது எவ்வளவு பொறுப்பற்ற செயல்.
* இந்த யுத்தத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் இரா சம்பந்தன் இந்தியாவில் போய் ஒதுங்கியிருந்தார்/ ஒளித்திருந்தார்/பதுங்கியிருந்தார்.
* இக்கட்டான அக்கால கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசிகள் யுத்தகால இறுதி நாட்களில் இயங்கவில்லை. மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதிருந்த இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது பன்னிரண்டு உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தார்கள். இதற்கு யார் பொறுப்புக் கூறுவது.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் அவர்களின் கட்டளைப்படியே இயங்கிக்கொண்டிருந்ததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மக்கள் நலன் சார்ந்து சுயாதீனமாகச் செயற்பட முடியாமல் போய்விட்டதென்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் யுத்தம் முடிவுக்கு வந்து 2009 மே 18 இல் இருந்து 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரைக்குமாவது (08.04.2010) பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள்?
2010 ஆம் ஆண்டு (26.01.2010) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களிலொருவரான யுத்தத்தை இராணுவத் தலைமையேற்று நடாத்திய-யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்து நின்றது. இதனால் போர்க்குற்ற விசாரணையைக் கோரும் தார்மீகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தது.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலையொட்டித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் யுத்தக் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைக் கோரியோ-பொறுப்புக் கூறலைக் கோரியோ-ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலையீட்டைக் கோரியோ எந்த வசனமும் இருக்கவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போர்க் குற்றங்களைப் பொருட்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
2010 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பதினெட்டாகக் குறைந்த போதிலும் கூட வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பெரும்பான்மையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்திருந்தனர்.
அடுத்து 2015 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பதினான்காகக் குறைந்த போதிலும் கூட வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பெரும்பான்மையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்திருந்தனர்.
இறுதியாக 2020 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாகக் குறைந்த போதிலும் கூட வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பெரும்பான்மையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்று சுமார் பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் குறைந்தபட்சம் தமக்குள்ள அதிகாரத்தையும்- செல்வாக்கையும்-வளங்களையும் பயன்படுத்திக் காணாமல் போனவர்களின் பெயர்ப் பட்டியலையாவது தயாரிக்க முடிந்ததா? கையெழுத்து வேட்டைகளால் எந்த பயனுமில்லை. அவை வெறும் ‘சிலுசிலுப்பு’க்களே.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனாவைத் தாங்கள்தான் ஜனாதிபதியாகக் கொண்டுவந்தோமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘தம்பட்டம்’ அடித்தது. அடுத்துத் தேசிய அரசாங்கத்தை நிறுவி ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது தாமே என்றார்கள். 2015 ஆம்ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின் நல்லாட்சியைத் தாமே ஏற்படுத்தியதாக எக்காளமிட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவராகவும் இரா சம்பந்தன் இருந்தார். 2018 அக்டோபரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது நீதிமன்றம் வரை சென்று ரணில் விக்கிரமசிங்கவின்பிரதமர் பதவியைக் காப்பாற்றினார்கள். இவைகளாலெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காகச் சாதித்தது என்ன? ஒன்றுமேயில்லை.
குறைந்தபட்சம் கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தையாவது உரிய முறையில் தரமுயர்த்திக் கொடுத்தார்களா? இல்லை.
2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்னரும் பின்பு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றவிருந்த அரசியல் வாய்ப்பைத் தமது அரசியல் கையாலாகத்தனத்தால் அல்லது சுயலாபத்திற்காக இரு தடவைகள் இழந்தார்கள்.
இப்படியாகக் கடந்த கால வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் தமது அரசியல் கையாலாகத் தனத்தையே நிரூபித்து வரும்-தமது வினைத்திறனின் மையையே வெளிப்படுத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே அடுத்த தேர்தலிலும் பெரும்பான்மைத் தமிழர்கள் ஆதரிப்பதால் புதிதாக என்ன நன்மை விளையப்போகிறது?