அமைச்சர் டக்ளஸ் இரா.சம்பந்தருடன் பேசவேண்டும் (வாக்குமூலம்-45)

அமைச்சர் டக்ளஸ் இரா.சம்பந்தருடன் பேசவேண்டும் (வாக்குமூலம்-45)

  —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் 

கொழும்பிலிருந்து வெளியாகும் வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், இலங்கை ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் இனப் பிரச்சனை தொடர்பான பேச்சுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையில்லை என்று கூறியுள்ளதாக ‘ஈழநாடு’ பத்திரிகை (26.12.2022) அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தி உண்மையானதா அல்லது திரிபுபடுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. உண்மையாயின் தமிழர் தரப்பிலிருந்து பின்வரும் கேள்வி எழுவது நியாயமானது. அக்கேள்வி என்னவெனில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையா? தேவையில்லையா? என்பது ஒருபுறமிருக்க இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையில்லை என்று சொல்வதற்கு எரிக்சொல்ஹெய்ம் யார்? என்பதே. இப்படிச் சொல்வதற்கான தற்றுணிவு அவருக்கு எப்படி வந்தது?

இலங்கை அரச தரப்பைப் பொறுத்தவரை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை விரும்பவில்லை; விரும்பவும் மாட்டாது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், தமிழர் தரப்பும் அதனை விரும்பவில்லையா? ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனையும் அதன் பேச்சாளராகக் கருதப்படும் சுமந்திரனையும் கூட்டாகச் சந்தித்த பின்னர்தான் எரிக்சொல்ஹெய்ம் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். இனப் பிரச்சனை விவகாரத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இலங்கை அரசையும் தமிழர் தரப்பையும் தாண்டி மூன்றாவது நபர் ஒருவர்- தரப்பு இப்படிக் கருத்துக் கூறுமளவுக்கு இலங்கைத் தமிழர் விவகாரம் மலினமான தொரு விவகாரமாகிவிட்டதா?

இந்த விடயத்தில் எரிக்சொல்ஹெய்ம்மைக் குற்றம் சாட்டுவதை விட தம்மைத்தாமே தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டும். காரணம் தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியமின்மைதான் – பலவீனம்தான் எரிக்சொல்ஹெய்ம்மை இவ்வாறு பேச வைத்திருக்கிறது. எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்ட இலங்கைத் தமிழர் பிரச்சினையை எவரெவரையோ எல்லாம் கையாள வைத்துவிட்டது. அதுதான் நடந்திருக்கிறது.

மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் ஐக்கியப்பட வேண்டுமென்று தமிழ்ச் சூழலின் எல்லாப் பக்கத்திலிருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்- வடக்கு கிழக்கில் உள்ள அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளும்/அமைப்புகளும் ஒன்று கூடித் திரண்டு ஒரு பலமானஅரசியல் வியூகத்தை வகுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கிய நிலையில் அதற்கு மாறாகத் தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியம் நாளுக்கு நாள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது போல போய்க் கொண்டிருக்கிறது.

24.12.2022 அன்று யாழ்ப்பாணம் நல்லூரில் சி. வி. விக்னேஸ்வரன் இல்லத்தில் கூடிய தமிழ்மக்கள் கூட்டணி, தமிழரசுக் கட்சி, ‘ரெலோ’, ‘புளொட்’, ஈ பி ஆர் எல் எப் மற்றும் தமிழ்த் தேசியக்கட்சி ஆகிய ஆறு கட்சித் தலைவர்களின் கூட்டை 26.12.2022 அன்று கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு நிராகரித்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதுள்ள பங்காளிக்கட்சிகள் மட்டுமே (தமிழரசுக் கட்சி, ‘ரெலோ’ ,’புளொட்’) வழமைபோல் கூட்டாக இயங்குவது என்றும் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தில் மேற்படி ஆறு கட்சிக் கூட்டுக் கூட்டத்திலும் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சித் தலைவர் இப்போது ‘செல்லாக்காசு’ ஆகி நிற்கிறார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அதன் பங்காளிக் கட்சிகளிலொன்றான தமிழரசுக் கட்சியுடன் வழுவழுத்த உறவைக் கொண்டிருக்கும் ‘ரெலோ’ வும் ‘புளொட்’ டும் எந்தப் பக்கம் சாயப்போகின்றன என்பதை இனித்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழர்களுடைய அரசியல் தரப்பின் ஐக்கியம் இவ்வாறான ‘இடியப்பச் சிக்கல்’ ஆகஇருக்கும்போது தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் இன்னும் ஒரு சிக்கலைத் தோற்றுவித்துள்ளார். அது என்னவெனில், ‘தற்போதைய நிலையில் மாவைசேனாதிராசாவைத் தலைவராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்படவேண்டும்’ என இணைய ஊடகம் ஒன்றுக்கு 27.12.2022 அன்று வழங்கிய செவ்வியில் அவர் விட்ட அறிவிப்புத்தான்.

சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் எப்போது தமிழர்களுடைய அரசியலில் நுழைந்தாரோ-இராசம்பந்தன் அவர்களால் நுழைக்கப்பட்டாரோ அன்றிலிருந்து அடிக்கடி இப்படியான அரசியல் சிறுபிள்ளைத்தனமான ‘அதிரடி’ அறிவிப்புகளை விடுவது வழமையாகிவிட்டது. ஓய்வு பெற்ற நீதியரசர் என்ற பிம்பத்தை வைத்துக் கொண்டு தமிழர் அரசியலைக் குழப்பிக் கொண்டிருக்கிறார். அவர் கூறுவது போல் மாவை சேனாதிராசாவின் தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்தால் அது ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ யின் ஆட்சி போல் விவஸ்தை கெட்ட விவகாரமாகத்தான் இருக்கும். ஏற்கெனவே மாவைசேனாதிராசாவின் தலைமையில் தமிழரசுக்கட்சி படும்பாடும் அதன் சீத்துவமும் அனைவரும் அறிந்ததே.

சி. வி. விக்னேஸ்வரன் அவர்களிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை. அதுபோல் மாவைசேனாதிராசாவிடம் தலைமைத்துவ  ஆளுமையும் ஆற்றலும் இல்லை. இதை உணராத தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பா.உ. மாவை சேனாதிராசா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் சி. வி. விக்னேஸ்வரனின் யோசனையைத் தாம் வரவேற்ப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சி. வி. விக்னேஸ்வரன் அவலை நினைத்து உரலை இடிக்கிறாரென்றால் செல்வம் அடைக்கலநாதனும் அதனையே செய்திருக்கிறார். ஆம்! சுமந்திரன் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்வே இவர்கள் இவ்வாறான அறிவிப்புகளை விடுவதற்கான அகக்காரணம். அதற்காகச் சுமந்திரன் ‘திறம்’ என்று ஆகிவிடாது. சுமந்திரனும் இரா சம்பந்தனால் இழுத்துவரப்பட்டவர்தான். அரசியலில் சாணக்கியன் ‘சிறுபிள்ளை’த்தனமானவர். ஆனால் சாணக்கியனே சி. வி. விக்னேஸ்வரனைச் ‘சிறுபிள்ளை’த்தனமானவர் என்று கூறுகிறாரென்றால் சி. வி. விக்னேஸ்வரன் அரசியலில் எவ்வளவு பின்னுக்கு நிற்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழர் அரசியலின் தலைவிதி இது.

இந்தச் சில்லறை விவகாரங்கள் (வியாபாரங்கள்) ஒருபுறமிருக்க, இப்போது வடக்குக் கிழக்குத் தமிழர்கள் அனைவரும் அவாவி நிற்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசியல் பொதுவெளியில் இயங்குகின்ற அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளினதும்/அமைப்புகளினதும் ஐக்கியப்பட்டதோர் அரசியல் ‘திரட்சி’ யையே. முன்னாள் பா.உ. மு. சந்திரகுமாரைச் செயலாளராகக் கொண்ட சமத்துவக் கட்சியின் வன்னித் தலைமை அலுவலகம் வவுனியா கந்தசுவாமி வீதியில் 28.12.2022 அன்று திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் (ரெலோ) வினோநோகராதலிங்கம் ‘தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் தீர்வை பெற்றுத்தரமாட்டார்கள். இப்போது இருக்கும் தலைவர்களால் அது முடியாது. தமிழர் தரப்பு ஒரு தரப்பாக அரசுடன் பேச வேண்டும். அந்த பேச்சுத்தான் வெற்றியளிக்கும்’ என்று கூறியுள்ளார்.

எனவே, இன்றைய காலத்தின் கட்டாய தேவையை உணர்ந்து இக்கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றி வைப்பதற்கு ஒட்டுமொத்தத் தமிழர்களின் நலன்கள் மீது அக்கறை கொண்ட அனைத்துச் சக்திகளும் இரா.சம்பந்தன் அவர்களைத் தூண்ட வேண்டும். இந்தப் பொறுப்பு தலைவர்களைச் சார்ந்ததை விட தமிழ் மக்களையே சார்ந்ததாகும்.

அதேபோல, அமைச்சராக இருப்பவரும் அரசாங்கத்தின் மீது தமிழர் தரப்பில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவராகவும் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ பி டி பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பா.உ. 28.12.2022 அன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்று வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக்கூடிய தமிழ்த் தரப்புடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயத்தில் இணைந்து செயல்படத் தயார் என்று கூறியிருக்கிறார். இது ஒரு நல்ல அறிகுறி.

இந்தக் கட்டத்தில் கடந்த காலத்துக் கட்சி அரசியற் பேதங்களையெல்லாம் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் நலன் கருதிக் களைந்து விட்டுத் திறந்த மனத்துடன் இரா சம்பந்தனும் டக்ளஸ் தேவானந்தாவும் சந்தித்துப் பேச வேண்டும். இச்சந்திப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு நல்ல விளைவைக் கொண்டு வரும். இச் சந்திப்பைச் சாத்தியப்படுத்தத் தமிழ் மக்களிடையேயுள்ள கட்சி அரசியல் சாராத பிரமுகர்கள் ‘ஊக்கி’ யாகத் தொழிற்படுவதற்குக் களமிறங்க வேண்டும்.

அதேவேளை, டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அழைப்புக்காகக் காத்திராது இரா சம்பந்தன் அவர்களின் மூப்பைக் கருத்திற் கொண்டு தானாகவே முன்சென்று இரா சம்பந்தனைச் சந்தித்து இது விடயமாகப் பேச வேண்டும் என்று-முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்று இப்பத்தி பணிவுடன் வேண்டுகிறது. இச் சந்திப்புக்குத் தமிழ் ஊடகங்களும் தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் தத்தம் சுயநலங்களுக்காக இந்தச் சந்திப்பைக் குழப்ப முயற்சிக்கக் கூடாது. எண்ணை திரண்டு வருகிற நேரம் இது. தமிழர்களே! எவரும் இத்தருணத்தில் தாளியை உடைத்து விடாதீர்கள்.