—- அழகு குணசீலன் —-
2001 இல் தமிழரசு வீட்டுக்காரரையும், அயல் வீட்டுக்காரரையும் புலிகள் ஒரே வீட்டில் கூட்டுக் குடித்தனம் நடத்துங்கள் என்று வலிந்து சொன்னார்கள். அப்போது வீட்டுக்காரருக்கு பெரிய உடன்பாடு இல்லை என்றாலும் மனதிற்குள் நச்சரித்துக்கொண்டு “ஒற்றுமையின்” உத்தமர்களாக வாய்மூடி இருந்தனர். அது மௌனகாலம்தானே.
அயல் வீட்டுக்கார்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம். எங்களை ஒட்டுக்குழு, முகமூடி, இந்திய, இலங்கை அரச கூலிகள், இரத்தக்கறை படிந்தவர்கள், துரோகிகள் என்றெல்லாம் கூறி அமைப்பையே தடைசெய்து, தலைமைகளை அழித்தவர்கள் இப்போது வெற்றிலை பாக்கு வைத்துஅழைக்கிறார்கள் என்று மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டில் கூட்டுக் குடும்பத்தில் பங்காளிகளானார்கள். தங்கள் மீது பூசிய அனைத்து அழுக்குகளையும் பூசியவர்களே கழுவிவிட்டார்கள் என்ற பெருமை. இதைவிடவும் வேறென்ன வேண்டும்…? யார் செய்த புண்ணியமோ..?
குடியேறியதுதான் தாமதம் புலிகள் மாற்றுக் கருத்தாளர்களுக்கு சொன்னவற்றையே இவர்களும்சேர்ந்து, தங்களின் கடந்தகால நிலைமறந்து மற்றைய மாற்றுக் கருத்தாளர்களுக்கும் சொன்னார்கள். ஆயுதப்போராட்டத்தில் சகோதரர்களை அழித்து ஏகபோகத்தை கையில் எடுத்த புலிகள் அரசியலிலும் இவர்களை மௌனிக்க வைத்து ஏகபோகத்தை எடுத்துக்கொண்டார்கள். தமிழ் மக்களின் ஏகபோக இராணுவ, அரசியல் ஒரே தலைமை தாங்கள்தான் என்று கூறினார்கள். இவர்களும் ஆமா….ஆமா… சாமியே சரணம் என்றார்கள்.
இப்போது இருபது ஆண்டுகளாக தமிழரசு வாடகை வீட்டில் குடியேறி கூட்டுக்குடும்பம் நடாத்திய ரெலோ, புளட் குடும்பத்தை “பிடரியில் பிடித்து” வெளியே தள்ளியிருக்கிறது தமிழரசு. நாங்கள் இனி தனிக்குடித்தனம் என்கிறது தமிழரசு. இல்லை நாங்கள் கூட்டுக்குடும்பம் தான் தொடர்ந்தும் யாரோடாவது நடாத்தப்போகிறோம் என்கிறார்கள் தலைவர்கள் செல்வமும், சித்தார்த்தனும்.
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் உங்கள் வீட்டில் இருந்து தேர்தலை எதிர்கொள்வோம் என்ற ரெலோ, புளட் கருத்தை நிராகரித்த வீட்டுக்காரர் அது சரிவராது தேர்தல் காலத்தில் வீட்டில் உங்களுக்கு அலுவல் இல்லை. வேண்டுமானால் தேர்தல் முடிந்த பின்னர் பார்ப்போம் என்கிறார்கள். அதுவும் கதிரைக்கும் பதவிக்கும் அயலவர் உதவி தேவை என்றால் மட்டுமே சாத்தியம். இல்லையேல் தாழ்வாரத்திலும் ஒதுங்க வாய்ப்பில்லை.
இதற்கிடையில் தேர்தலுக்கு பின்னர் ஹக்கீம் குடும்பத்தை வீட்டில் குடியேற்றி கூட்டுக்குடும்பத்தை நடாத்த பிளான் “B” போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் ரெலோ, புளட்கூட்டுக்குடும்ப பிளான் “A” சரிப்பட்டு வராதுவிட்டால் ஹக்கீம் குடும்பம் கை கொடுக்கும். இதனால்தான் வீடு தேர்தலுக்கு பின்னர் வாடகைக்கு விடப்படும் என்று வீட்டு வாசலில் எழுதித் தொங்கவிடப்பட்டுள்ளது. இது பழைய பங்காளிகளை ஏமாற்றும் அறிவிப்பு. இதற்குப் பெயர் “பொறிமுறை”, “தொழில்நுட்பம்”.
ஒருபுறம் தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்று கோரி உண்ணாவிரதம், மறுபுறம் அதே கோரிக்கையை வைத்து மக்கள் போராட்டம். இதற்கு முற்றிலும் மாறாக இருந்த பங்காளிகளையும் துரத்திவிட்டு வீட்டுக்கதவு தாழ்ப்பாள் போட்டு பூட்டப்பட்டுவிட்டது. இதற்குப் பெயர் தமிழ்த்தேசிய மக்கள் நலன் சார்ந்த கதிரை பொறிமுறை அரசியலாம். ஆனால் ரெலோவுக்கும், புளட்டுக்கும் இது வைக்கப்பட்ட பொறி.
இப்போது வெளியேற்றப்பட்டவர்கள், அவர்கள் என்னத்தைச் சொன்னாலும் நடுரோட்டில் நிற்கிறார்கள். இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று ரெலோவும், புளட்டும் தாம் மூக்குடைபட்ட கதையை தேர்தல் மூலதனமாக்கி தனித்து நின்று மக்களிடம் அனுதாப வாக்கு கேட்பது. மற்றையது ஏற்கனவே விக்கினேஸ்வரன் அணிதிட்டமிட்டுள்ள “மீனில்” இருந்து “மானுக்கு” மாறுகின்ற கூட்டில் மீண்டும் புதிய கூட்டுக் குடித்தனத்தை ஆரம்பிப்பது. இந்த கூட்டிலாவது சேர்ந்தால் மக்கள் கோரிநிற்கின்ற “ஒற்றுமையை” ஏற்றுக்கொண்டதாக ஒரு மாயையை தேர்தலில் ஏற்படுத்தலாம்.
தமிழ்க் காங்கிரஸ் அரசியலில் அதற்கு ஒரு வரலாறு உண்டு. அது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தனித்து சைக்கிள் ஓடும். இந்த தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. ஆனால் அதன் கடும்போக்குக்கு ஈடுகொடுக்க வேண்டிய தேவை இவர்கள் அனைவருக்கும் உண்டு.
முஸ்லீம் காங்கிரஸ்- ஹக்கீம் குடும்பத்திற்கு வீட்டை வாடகைக்கு விடும் திட்டம் இருதரப்பிலும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி தேர்தலில் சேதாரங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான இருதரப்பு தற்பாதுகாப்பு இது. பாராளுமன்ற தேர்தலை விடவும் பிரதேசசபை, மாகாணசபைத் தேர்தல்கள் கிழக்கில் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் முக்கிமானவை. இரு சமூகத்தினதும் வாழ்வாதாரங்களோடு தொடர்புபடட்டவை. இதை ஹக்கீம் விளங்கிக்கொள்கிறார் இல்லை என்ற குற்றச்சாட்டு முஸ்லீம்களிடமும், தமிழ்த் தேசியகூட்டமைப்பு – தமிழரசு சம்பந்தர், மாவை கிழக்கு மக்களின் நிலையை விளங்கிக்கொள்கிறார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்களிடமும் உள்ளது.
கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் சந்தித்துள்ள பின்னடைவையும், உள்ளக மோதல்களையும் சமாளிக்க யாரை அண்டப்புழுகன், ஆகாசப்புழுகன் – என்ட வாப்பா அவன் கையைப்பிடித்து கொஞ்சின கொஞ்சில என்ற கை தேய்ஞ்சி போச்சிகா…. என்றவர் ஹக்கீம். அவர் அதே ஹிஸ்புல்லாவை தேடுகிறார். அதே போல் இவனுக்கெல்லாம் எதுக்குகா பச்சைசால்வை என்று கேட்ட ஹிஸ்புல்லா ஹக்கீமை சந்திக்கிறார். கிழக்கில் கட்சி அதிருப்தியாளர்களைச் சமாளிக்க ஹக்கீமுக்கு வேறுவழியில்லை.
கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவியை இதனால்தான் கூட்டமைப்பு எந்த நிபந்தனையும் இன்றி முஸ்லீம் காங்கிரஸ்க்கு தாரை வார்த்தது என்று கிழக்கு தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இந்த தவறு இனிமேலும் தொடரக்கூடாது என்பது மக்களின் நிலைப்பாடு. ஆனால் இன்றைய நிலைமை அதேபோன்ற சூழலை மீண்டும் பிரதேசசபைகளில் ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்படுகிறது.
ரெலோவையும், புளட்டையும் திட்டமிட்டு தேர்தலுக்கு முன் வெளியேற்றி விட்டு தேர்தலுக்கு பின் முஸ்லீம் காங்கிரஸை எந்த நிபந்தனையும் இன்றி -முற்பணம் கூட இல்லாமல் வீட்டில் குடியேற்றிவிடுவார்களோ …? என்ற கடந்த கால அனுபவரீதியான நியமான அச்சம் இது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் ஒன்று நடக்குமா? இல்லையா என்பதை குறித்து திட்டவட்டமாக கூறமுடியாத நிலையே காணப்படுகிறது. ஆனால் தேர்தல் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பானது அரசாங்கத்தின் மீதான எதிர்த்தரப்பின் கவனத்தை இரவோடிரவாக கதிரைகளின் பக்கம் திருப்பிவிட்டுள்ளது. காலிமுகத்திடல், ராஜபக்சாக்கள், ரணில் தனிநபர் ஜனாதிபதி என்றவற்றை எல்லாம் மறந்தும், சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளை மறந்தும் சகலரும் தேர்தலை குறிவைத்து செயற்படுகின்றனர். கட்சிகளின் ஒவ்வொரு நகர்வும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் தேர்தல் மந்திரத்தையே ஓதுகிறது.
பெரும்பான்மை தரப்பினரும், சிறுபான்மைத் தரப்பினரும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக்கூட ஒரு தேர்தல் வியூகமாக கையாள்வது தெரிகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவுகள் இல்லாத சந்திப்புக்களை நடாத்திக்கொண்டிருக்கிறார், சிங்கள கடும்போக்காளர்கள் அவரின் முடிவைப் பொறுத்து தமது ரியாக்ஷனுக்காக காத்திருக்கிறார்கள். தமிழ்த் தேசிய கடும்போக்காளர்களின் கோரிக்கை வலுக்கிறது. இதன்மூலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணிக்கு வடக்கில் காற்று வசதியாக வீசுகிறது. இதற்காகவே விக்கினேஸ்வரன் தரப்பும் தமது கோரிக்கைகளை இறுக்குகிறது.
இவற்றை எதிர் கொள்ள தனிக்குடித்தனம் நடாத்தும் தமிழரசு படாதபாடு படுகிறது இதனாலேயே பேச்சுக்கள் பற்றிய ஊடகச் சந்திப்புக்களில் சுமந்திரன் எதிர்மறையான – நம்பிக்கை அற்றவராக கருத்துக்களை வெளியிடுகிறார். இது வருகின்ற தேர்தலில் தங்களின் “சாணக்கியத்தை” தக்கவைக்கும் என்று அவர் நினைக்கிறார்.
ரணில் ஏமாற்றிவிட்டார் என்ற அறிவிப்பை தமிழரசு விரைவில் – தேர்தல் நெருங்கும் போது வெளிப்படுத்தும்….!
அப்போது ரணிலின் வீட்டில் இருந்து இவர்கள் தானாக வெளியேறுவார்கள்…! பாராளுமன்ற பழக்கதோசம்…!!
ஆனால் ரணில் எங்களை ஏமாற்றித் துரத்திவிட்டார்… இது எங்களுக்கு எப்பவோ தெரியும் அதனால்தான் அப்பவே சொன்னோம் என்பார்கள்..!
இதைவிட வேறென்ன அரசியல் சாணக்கியம் வேண்டும்…?
இந்த வெளியேற்றம் எப்போது….?
பொங்கலுக்கா…?
சுதந்திரதினத்துக்கா….?
தேர்தலின்போதா….?
அந்த…. அவனுக்கே வெளிச்சம்….!