சேபால் அமரசிங்க: உள்ளேயிருந்து எழும் எதிர்ப்புக் குரல்!

சேபால் அமரசிங்க: உள்ளேயிருந்து எழும் எதிர்ப்புக் குரல்!

     — எம் எல் எம் மன்சூர் —

அறகலயவுக்கு பிற்பட்ட இலங்கையில் அறகலய ஆதரவாளர்களுக்கும், அதன் நேரடி மற்றும் மறைமுக எதிர்பாளர்களுக்கும் இடையில் தீவிரமாக நிகழ்ந்து வந்த ஒரு பனிப்  போரின் உச்ச கட்டமாக சமூக செயற்பாட்டாளரும், பிரபல யூடியூப் பரப்புரையாளருமான சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டிருக்கிறார். பௌத்த மதத்தையும், புனித தந்த தாதுக்களையும் இழிவுபடுத்தும் விதத்தில் தனது யூடியூப் சேனலில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோக்கள் குறித்து மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த ஒரு கடிதத்தையடுத்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

மத நிந்தனை குற்றச்சாட்டின் அடிப்படையில் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாய சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும், அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பத்து வருடங்களுக்கு மேற்படாத கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட முடியும் என்றும் நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 

அவ்வாறு அவருக்கு தண்டனை வழங்கப்படுமானால் அது குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதத்தில் பொது வெளியில் பேசி வருபவர்களுக்கு விடுக்கப்படும் ஓர் எச்சரிக்கையாக இருந்து வர முடியும். ஏனெனில், பௌத்தம் அல்லாத ஏனைய மதங்களை இழிவுபடுத்தும் விதத்திலும், அச்சமூகங்களைச் சேர்ந்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்திலும் பகிரங்கமாக பேசி வந்திருப்பவர்களுக்கு எதிராக (2007 ஆம் ஆண்டு தொடக்கம் அமுலில் இருந்து வரும் இச்சட்டத்தின் கீழ்) இதுவரையில் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சேபால் அமரசிங்க தனது யூடியூப் சேனலில் இலங்கை அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள், பெரு வணிகர்கள், ஊடகங்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகங்கள் ஆகிய தரப்புகள் தொடர்பாக எவ்வித மனத்தடைகளும் இல்லாத விதத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

தன்னை ‘மத நம்பிக்கையற்றவர்’ எனக் கூறிக் கொள்ளும் அவர் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் முன்வைக்கும் அதே இயல்பிலான விமர்சனங்களை இஸ்லாமியர்கள் தொடர்பாகவும், கிறிஸ்தவ அடிப்படைவாத பிரிவினர் தொடர்பாகவும் முன்வைத்து வருகிறார். பல சந்தர்ப்பங்களில் அவருடைய கருத்துக்கள், விமர்சனம் என்பதற்கும் அப்பால் அவர் எதிரிகளாகக்  கட்டமைப்பவர்களுக்கு ஆத்திரமூட்டக் கூடிய வசைச் சொற்களாக அவர்கள் மீது வீசப்படுகின்றன. அது அவருக்கு ஏராளமான எதிரிகளைத் தேடிக் கொடுத்திருக்கின்றது. அதனால் தான் விமல் வீரவன்சவும், லக்ஷ்மன் கிரியல்லவும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக ஒரே குரலில் பேசியிருக்கிறார்கள். 

ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘அறகலய’ மக்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கு சிங்கள மத்திய தர வர்க்கத்தினரை உளவியல் ரீதியில் தயார்படுத்தியதில் ஒரு சமூக ஊடகச் செயற்பாட்டாளர் என்ற முறையில்  சேபால் மிக முக்கியமான ஒரு பங்களிப்பை வழங்கியிருந்தார். மஹிந்த ராஜபக்சவுக்கு ‘கிழட்டு மைனா‘ என்ற பெயரைச் சூட்டியவரும் அவர் தான். 

இந்த மக்கள் எழுச்சி சிங்கள பௌத்த விரோதிகளினால் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்ட ஒரு சூழ்ச்சி என்ற விதத்தில் இப்பொழுது ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் ‘ஹிரு’ டீவி யில் சமுத்தித சமரவிக்கிரம, எல்லே குணவங்ச தேரருடன் நடத்திய (கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்த) உரையாடலில் இது தொடர்பான சர்ச்சைக்குரிய பல கருத்துகளை அத்தேரர் தெரிவித்திருந்தார். 

மக்கள் எழுச்சிக்கு வழிகோலிய ராஜபக்ச அரசாங்கத்தின் பெரும் தவறுகள் எவற்றையும் சுட்டிக் காட்டாமல், அறகலயவின் பின்னணியில் நான்கு தரப்புகள் இருந்து வந்ததாக – வலுவான ஆதாரங்கள் எவற்றையும் முன்வைக்காமல் – குற்றம் சாட்டியிருந்தார் எல்லே குணவங்ச தேரர். கிறிஸ்தவ அடிப்படைவாத மதப் பிரிவொன்றைச் (Born Again) சேர்ந்த (கொரிய பூர்வீகத்தைக் கொண்ட) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், CIA மற்றும் RAW ஆகிய அமெரிக்க, இந்திய உளவு நிறுவனங்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் (INGOs) ஆகிய தரப்புகள் இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகள் ஒரு சிலரின் மறைமுகமான ஒத்துழைப்புடன் திட்டமிட்டு, முன்னெடுத்த ஒரு சூழ்ச்சியாக அவர் அதனைச் சுட்டிக் காட்டுகிறார். 

சிங்கள சமூக ஊடகங்களின் செலபிரிட்டி ஆளுமைகளாக எழுச்சியடைந்திருக்கும் சேபால் அமரசிங்க, உபுல் சாந்த சன்னஸ்கல, தர்ஷன ஹந்துன்கொட, பாரத தென்னக்கோன் மற்றும் சுதந்த திலகசிறி போன்றவர்களின் வீடியோ பரப்புரைகள் அறகலயவின் வெற்றிக்கு கணிசமான அளவிலான பங்களிப்பை வழங்கியிருந்தன. அவை தொடர்ந்தும் உயர் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. இது பெரும்போக்கு ஊடகங்களில் (Main Stream Media) கோலோச்சி வரும் சத்துர அல்விஸ், சமுதித்த சமரவிக்கிரம போன்றவர்களுக்கு மத்தியில் ஒரு விதமான பாதுகாப்பற்ற உணர்வையும், பதற்ற உணர்வையும் தோற்றுவித்திருக்கிறது. அந்த நிலையில், சேபால் கைதுக்கு சார்பான விதத்தில் சிங்கள பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் காலை நேர செய்தி அலசல் போன்ற நிகழ்ச்சிகளை அவர்கள் மிகவும் தந்திரமான விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

அந்த அடிப்படையில், சேபால் அமரசிங்கவின் கைது, சமூக ஊடகங்களில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அவருடைய சக பயணிகள் பலருக்கு மறைமுகமாக விடுக்கப்பட்டிருக்கும் ஓர் எச்சரிக்கையாகவே இருந்து வருகிறது. 

சேபாலின் வெளிப்படையான ஜேவிபி/என்பிபி ஆதரவு மற்றும் அநுர குமார திசாநாயக்கவை ஒரு மாற்றுத் தலைவராகக் கட்டமைப்பதற்கான அவருடைய கடும் பிரயத்தனங்கள் என்பனவும் அவருக்கு எதிராக செயற்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், அவரது கைதை அடுத்து ஜேவிபி அவரை முற்றாக கைவிட்டிருப்பதுடன், ‘எமது கட்சிக்கு அழையா விருந்தாளிகளாக வந்து, எமக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் காரியங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது’ என சுனில் ஹந்துன்னெத்தி ஓர் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

மறுபுறத்தில், ஒரு சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக (Damage Control Exercise) தான் பிறந்து வளர்ந்த சிங்கள பௌத்த பாரம்பரியம் குறித்தும், தனது ஆன்மீக வாழ்க்கையை போஷித்ததில் கிராம பன்சலைகளின் செல்வாக்கு குறித்தும் அநுர குமார திசாநாயக்க பெருமிதத்துடன் பேசியிருக்கிறார். ஜேவிபி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பௌத்த மத விழுமியங்களிலிருந்து விலகிச் செல்லாது என்ற செய்தியை அதன் மூலம் அவர் சிங்கள சமூகத்துக்கு விடுக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. 

தனது யூடியூப் சேனல் வீடியோக்களில் சேபால் அமரசிங்க தெரிவித்து வரும் கருத்துக்களை உன்னிப்பாக அவதானிக்கும் பொழுது, அவர் சிங்கள பௌத்தர்களின் விரோதியாகவோ அல்லது மகா சங்கத்தினரின் விரோதியாகவோ இருந்து வரவில்லை என்பதனை பார்க்க முடிகின்றது. ‘ஜனரஞ்சக பௌத்தம்’ என அழைக்கப்படும் இலங்கையின் அரசியல் மயமாக்கப்பட்ட புத்த மதத்தையும், துறவிகளுக்குரிய ஒழுக்க நெறிகளை அப்பட்டமாக மீறி, பல்வேறு சுயநல நோக்கங்களுக்காக அரசியலில் ஈடுபட்டு வரும் (குறிப்பாக ராஜபக்ச செயல்திட்டத்தின் ஆதரவாளர்களான) பிக்குகளையும் எதிர்த்தே அவர் குரல் கொடுக்கிறார். 

‘உங்கள் இனவாத அணுகுமுறையும், பொறுப்பற்ற பேச்சுக்களும் இறுதியில் சிங்கள சமூகத்தில் சஹ்ரான்களை உருவாக்க முடியும்’ என அவர் அந்த பிக்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். 

சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறிக் கொள்ளும் ‘ஹிரு’ மற்றும் ‘தெரண‘ போன்ற ஊடகங்களின் பௌத்த தர்மத்துக்கு நேர்மாறான செயல்பாடுகளையும் அவர்  அம்பலப்படுத்துகிறார். 

‘நீங்கள் எதுவாக இருந்து வருவதாக பாவனை செய்கிறீர்களோ உண்மையில் அதுவாக இருந்து வரவில்லை; இது போலி வேஷம்’ என்று அவர் சொல்கிறார். தாம் சேவகம் செய்யும் அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கும் பெருந் தொகைப் பணம், வாகனங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் என்பவற்றுக்காக இந்தப் பிக்குகள் பௌத்த மதத்தை முழுவதும் களங்கப்படுத்தி வருகிறார்கள் என்பது அவர் முன்வைக்கும் வாதம்.

இலங்கையில் சமய வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கி பாவனை தொடர்பாகவும், சமய ஊர்வலங்கள் தொடர்பாகவும் மிகவும் துணிச்சலான விதத்தில் சேபால் கருத்துக்களை முன்வைத்து வருகிறார். ஒலி மாசாக்கல் மற்றும் வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் என்பவற்றின் பின்னணியில் அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதற்கு அவருக்கிருக்கும் உரிமையை எவரும் மறுக்க முடியாது. 

அண்மையில் காலி பிரதேசத்தில் ஒரு பன்சலையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய ஊர்வலமொன்று (பெரஹரா) காரணமாக பல மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டு, பொதுமக்கள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் குறித்து (சம்பந்தப்பட்ட ? காணொளியை காட்சிப்படுத்தி) அவர் தெரிவித்த கருத்துக்கள், இலங்கையில் இதுவரையில் எந்த ஒரு சிங்களவரும் பொது வெளியில் முன்வைக்கத் துணிந்திராத கருத்துக்கள் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய நிகழ்வுகளை ‘இலங்கையில் சமயங்களின் பெயரால் நிகழ்த்தப்பட்டு வரும் பயங்கரவாதம்’ என வர்ணிக்கும் அவர், அவற்றுக்கெதிராக கிளர்ந்தெழுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார். 

பெரஹராக்களையும், பன்சலகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதையும் கண்டிக்கும் பொழுது எவ்வாறு சிங்கள பௌத்த மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துகிறாரோ, பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்காக ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பொழுது அதே விதத்தில் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தக் கூடிய சொற்களை பயன்படுத்துகிறார்.

கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினையை முஸ்லிம்கள் தொடர்பான வெளிப்படையான ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் சிங்கள ஊடகங்கள் கையாண்ட பொழுது, சேபால் அமரசிங்கவும் அதே நிலைப்பாட்டை எடுத்திருந்தார். ஒரு நாத்திகர் என்ற முறையில் அவர் இப்பிரச்சினையை விஞ்ஞானம் எதிர் மூட நம்பிக்கை என்ற கோணத்தில் அணுகினார். அது அவருடைய கருத்துச் சுதந்திரம் எனக் கூற முடியும். ஆனால், அதனை தொடர்ந்து அவர் சொன்ன விடயங்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கும் வரையறைகளை வெகு தூரம் தாண்டிச் சென்றிருந்தன. அவை கடும் கண்டனத்துக்குரியவை.

அவரது கைதுக்கு வழிகோலிய தலதா மாளிகை தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவில், தலதா மாளிகையோ அல்லது அதன் சொத்துக்களை நிர்வகித்து வரும் தியவடன நிலமேயோ எந்த விதத்திலும் சிங்கள பௌத்த மக்களின் நலன்களின் சார்பில் செயற்பட்டு வரவில்லை என்ற தனது வாதத்தை நிரூபிப்பதற்கென அவர் முன்வைத்த ஆதாரம் ‘தலதா மாளிகைக்குச் சொந்தமான (சிங்கள பௌத்தர்கள் வசித்து வந்த) பல வீடுகளும், ஏனைய சொத்துக்களும் முறைகேடான விதத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன‘ என்பதாகும். எவ்வித ஆதாரங்களையும் வழங்காமல், அத்தகைய ஒரு பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைப்பது ஊடக தர்மங்களை அப்பட்டமாக மீறும் ஒரு செயல் என்பதை அவர் அறியாமலிருக்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும், அரசியல் களத்தில் முனைப்பாகச் செயற்பட்டு வரும் முதன்மையான பிக்குகளையும் விமர்சிக்கும் பொழுது, கெட்ட வார்த்தைகளையும் உள்ளடக்கிய கடும் வசைச் சொற்களுடன் கூடிய விதத்தில் அவர் பயன்படுத்தும் மொழி அறிவார்ந்த அரசியல் விவாதங்களுக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது. அந்தச் சொற்களைப் பயன்படுத்தாமலேயே அவருடைய வாதங்களை மிகவும் ஆணித்தரமான விதத்தில் முன்வைக்க முடியும். ஓர் அதிர்ச்சி மதிப்பைக் கருத்திற் கொண்டு அவர் அவ்வாறு செய்வது போல் தெரிகிறது. 

எதிரிகளுக்குப் பதிலளிக்கும் பொழுது ஓர் அசாதாரணமான பதற்ற உணர்வு அவரை தொற்றிக் கொள்வதுடன், அது அவரை ஆவேசமடையச் செய்கின்றது. அந்த ஆவேசத்தில் நிதானமிழக்கும் அவர், முதல் சுற்றிலேயே எதிரியின் இடுப்புக்குக் கீழ் தாக்குதல் தொடுப்பதை வழமையாக கொண்டிருக்கிறார். அந்தப் பலவீனமே இப்பொழுது அவருக்கு வினையாக வந்திருக்கிறது.

இதற்கான அண்மைய உதாரணம் கிருலப்பனை தம்மவிஜய தேரர் என்ற இளம் பிக்குவின் யூடியூப் வீடியோக்கள் தொடர்பாக அவர் முன்வைத்து வரும் கடுமையான விமர்சனங்கள். தம்மவிஜய தேரர் சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றி விட்டு, அதிலிருந்து விலகி துறவு பூண்டிருப்பவர். தனது தனித்துவமான பௌத்த மத பிரசங்கங்கள் மூலம் சமீப காலத்தில் சமூக ஊடகங்களில் பிரபல்யமடைந்து வருபவர். சேபால் அவர் மீது முன்வைத்து வரும் முக்கியமான குற்றச்சாட்டு அவர் ராஜபக்சகளின் ஒரு மறைகரமாக செயற்பட்டு வருகிறார் என்பது. 

இருவருக்குமிடையில் நிகழ்ந்த சொற்போரில் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, எல்லை மீறிச் சென்ற சேபால் இப்படி சொல்கிறார்:

‘எனக்குத் தெரியாதா… உன்னுடைய அம்மா ‘தூள்‘(குடு) விற்ற பொம்பளை தானே!’

தம்மவிஜய தேரர் அக்குற்றச்சாட்டை வன்மையாக மறுத்திருந்தது ஒரு புறமிருக்க, ஒரு விவாதத்தின் போது பின்பற்ற வேண்டிய அடிப்படை நெறிமுறைகளை சேபால் இங்கு அப்பட்டமாக மீறியிருக்கிறார் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆனால், அத்தகைய தனி மனித பலவீனங்களையும், குறைபாடுகளையும் மீறி, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் பிரிவினர் சார்பில், குரலற்ற மக்கள் சார்பில் பேசி வந்திருக்கிறார்; சமூக நீதிக்காக குரல் கொடுத்திருக்கிறார். 

2011 இல் ஞானசார தேரர் தனது முஸ்லிம் விரோத பேச்சுக்களை பொது வெளியில் முதல் தடவையாக முன்வைத்த பொழுது அதற்கெதிராக துணிச்சலுடன் எழுந்த குரல்களிலொன்று சேபால் அமரசிங்கவுடையது. அத்தகைய வன்மம் கலந்த பேச்சுகள் இலங்கையின் இன உறவுகளில் பாரதூரமான பின்விளைவுகளை எடுத்து வர முடியும் என அப்பொழுதே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் காரணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (நான்காவது மாடிக்கு) போய் வாக்குமூலம் வழங்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டது. 

கொத்மலை கட்டபுலா தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூன்று தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்ட அவல நிகழ்வு குறித்து வெளியிட்ட பிரத்தியேக வீடியோவில் பெருந்தோட்ட சமூகம் எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான வன்முறை குறித்தும், சமகால பெருந்தோட்ட அரசியலின் அபத்தங்கள் குறித்தும் தனது துல்லியமான பார்வையை அவர் பதிவு செய்திருந்தார். அதன் மூலம் சிங்கள மக்களின் பொதுப் புத்தியில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக பதிந்திருக்கும் சித்திரத்தை கலைத்துப் போடுவதற்கு அவர் எடுத்த முயற்சியை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும்.

கடந்த ஆண்டு ‘Business Today’ சஞ்சிகைக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் ஒரு யூடியூப் பரப்புரையாளர் என்ற முறையில் இலங்கை அரசியல் சமூகத்தில் தான் வகித்து வரும் பாத்திரம் குறித்து சேபால் அமரசிங்க விரிவாக பேசியிருந்தார். இலங்கை சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் வேரூன்றியிருக்கும் ஒருவிதமான மேலாதிக்க உணர்வை (Buddhist Hegemony) எடுத்து விளக்குவதற்கு ஒரு சிறுவனாக தான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை அவர் உதாரணமாக குறிப்பிட்டிருந்தார்:

  ”எனது அப்பா இரத்தினபுரி கச்சேரியில் வேலை செய்தார். கச்சேரி படிக்கட்டுகளில் செருப்பு தைக்கும் ஒரு தொழிலாளி இருப்பார். அவர் தமிழர். அவருக்கு அருகில் ஒரு சிங்கள பிச்சைக்காரர். தினமும் அந்தத் தொழிலாளியை வற்புறுத்தி, அவர் உழைக்கும் பணத்தில் தனக்கு தேநீர் வாங்கி வரச் செய்து, அருந்துவது அந்தப் பிச்சைக்காரரின் வழக்கம்.”  

இலங்கையின் இன உறவுகள் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் அதில் அவர் முன்வைத்திருந்தார்: 

”1980 களில் சிறில் மெத்திவ் உருவாகாதிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார். சிறுபான்மையினருக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்… தமிழர்கள் இந்நாட்டில் எப்பொழுதும் மோசமான விதத்தில் நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த அநீதி எல்லா இடங்களிலும் நிலவி வந்திருக்கிறது… சிங்கள பௌத்தர் அல்லாத ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் ஓர் அச்ச உணர்வைக் கொண்டிருக்கிறார். இலங்கையில் சிங்களவர்களின் மேலாதிக்கம் நிலவி வருகின்றது என்ற விடயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்… இத்தகைய அநீதிகளுக்கு எதிராகக் குரலெழுப்புவது தான் என்னுடைய பணி.”

”நாங்கள் அரசை, மதத்திலிருந்து பிரித்து, வேறுபடுத்திக் கொள்ள வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்… ஆட்சி செய்வதற்கு எங்களுக்கு மத குருமாரின் ஆலோசனைகள் அவசியமில்லை. ஆட்சியென்பது கிருகஸ்தர்களின் ஒரு துறை… மதகுருமார் இந்நாட்டை நிர்மூலம் செய்திருக்கிறார்கள். இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்வதற்கான விதைகளை ஒரு சில தீவிரவாத பிக்குகள் தூவியிருக்கிறார்கள்…”

முன்னெப்பொழுதும் இருந்திராத அளவிலான ஒரு பொருளாதார நெருக்கடியையும், அதன் விளைவாக உருவாகியிருக்கும் சமூக கொந்தளிப்பையும் எதிர்கொண்டு வரும் இன்றைய இலங்கையின் பின்புலத்தில், சேபால் அமரசிங்க போன்ற மாற்றுச் சிந்தனையாளர்களுக்கான தேவையும், தற்போதைய சமூக ஒழுங்குக்கு (Status Quo) எதிராக ஓங்கிக் குரலெழுப்பும் கலகக்காரர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகின்றது. 

ஓரிரு தனித்த சம்பவங்கள் தொடர்பாக அவர் தெரிவித்து வந்திருக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவதிலும் பார்க்க, கடந்த மூன்று ஆண்டுகளின் போது தனது யூடியூப் சேனலில் அவர் வெளியிட்டிருக்கும் எழுநூறுக்கும் மேற்பட்ட வீடியோக்களில் சமகால இலங்கை அரசியல் சமூகத்தின் (Polity) பல்வேறு போக்குகள், நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள் என்பவற்றை அலசி ஆராய்ந்து,  அவர் முன்வைத்து வந்திருக்கும் வாதங்களின் அடிப்படையில் சேபால் அமரசிங்க தொடர்பான இறுதி மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு பிரச்சினையையும் வேறு எவரும் பார்க்காத கோணத்தில் பார்த்து, தனது தரப்பு வாதங்களை ஆணித்தரமாக முன்வைக்கிறார் அவர். 

சிங்கள சமூகத்தில் பெரும்பாலானவர்கள் செவிமடுத்துக் கேட்க விரும்பாத விடயங்கள் குறித்து பேசி, தனது மாற்று கருத்துக்கள் மூலம் சமூகத்தை அவர் சிந்திக்கத் தூண்டியிருக்கிறார். அந்த விதத்தில் அவருடைய குரல் மௌனிக்கப்பட்டால் அது எல்லோருக்குமான ஒரு இழப்பாகவே இருந்து வரும். ஏனெனில், அது சிங்கள சமூகத்துக்கு உள்ளேயிருந்து அதனை விமர்சித்து எழுந்து வரும் ஒரு குரல்.  

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு உள்ளேயும் அத்தகைய மாற்று குரல்களுக்கான தேவை இருந்து வந்தாலும் கூட, பொது வெளியில் அவ்வாறான  குரல்களை மிக அரிதாகவே கேட்க முடிகிறது. ‘மதத்தை அரசியலிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்’ என சேபால் இடையறாது எழுப்பி வரும் கோஷம் குறித்து குறிப்பாக முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோர் மத்தியில் அறிவார்ந்த உரையாடலொன்றை துவக்கி வைக்க வேண்டிய தருணம் இப்பொழுது வந்திருக்கிறது.