WE HAVE THE TIME ..! YOU HAVE THE CLOCK மௌன உடைவுகள் – 16

WE HAVE THE TIME ..! YOU HAVE THE CLOCK மௌன உடைவுகள் – 16

எங்களிடம் நேரம் இருக்கிறது..! உங்களிடம் கடிகாரம் இருக்கிறது..!!”

— அழகு குணசீலன் —

இது ஒரு ஆபிரிக்க முதுமொழி. எங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறது, நேர அழுத்தம் இல்லை. நினைத்த நேரம் வருவோம் போவோம். ஆனால் உங்களுக்கு அந்தளவு நேரம் இல்லை, இதனால் எல்லாவற்றையும் மணிக்கூட்டைப் பார்த்து திட்டமிடுகிறீர்கள், செய்கிறீர்கள் என்று ஆபிரிக்கா ஐரோப்பாவுக்கு சொன்ன வார்த்தைகள் இவை.

இது நேரத்திற்கு ஆபிரிக்காவும், ஐரோப்பாவும் கொடுக்கின்ற இரு வேறுபட்ட சிந்தனை, கலாச்சாரம், கல்வியூட்டல் சார்ந்த மனநிலை இடைவெளி. பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளின் நேரம் குறித்த கருத்தியலும் இதுதான். இதற்கு இலங்கையும்விலக்கல்ல.

இதுவே 21.12.2022 அன்று கொழும்பில் சமூக வலுவூட்டல் அமைச்சில் நடந்த சந்திப்பொன்றில், தென்கொரிய பேரழிவு நிவாரண நிறுவனத்தின் தலைவர் இலங்கை இராஜாங்க அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் வகுப்பெடுக்க காரணம். பாடசாலைகளில் புள்ளிப்பரீட்சையில் சித்திபெற நேரக்கணக்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் வாழ்க்கைப் பரீட்சையில் சித்திபெற நேரத்தின் முக்கித்துவம் கற்பிக்கப்படுவதில்லை. வெறும் நேரசூசி மட்டும் இதைச் சாதிக்க முடியாது. இதுதான் எங்கள் கல்விமுறை.

முன்கூட்டியே இருதரப்பும் இணங்கிக்கொண்ட சந்திப்புக்கு 30 நிமிடங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி, மன்னிப்பும் இன்றி காலதாமதமாக வந்த சமூகவலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபவபாஸ்குவல் மற்றும் அதிகாரிகளைப் பார்த்து தென்கொரிய SKDRF அறக்கட்டளை தலைவர் சோசுங் லியா சொன்னது ஆபிரிக்க முது மொழியை நினைவூட்டுகிறது. இத்தனைக்கும் அமைச்சரின் சொந்த அமைச்சில் நடந்த கூட்டம் இது. 

“IF A MEETING IS SCHEDULED FOR A SPECIFE TIME, IT MUST BEGIN AT THE TIME. IF SUCH MINISTERS CANNOT DO THAT, THERE IS NO POINT IN MEETING SUCH PERSON ” என்று அமைச்சர் அனுபவ பஸ்குவல் முகத்தில் அறைந்துள்ளார் லியா.

லியாவின் கடுமையான, வெளிப்படைத் தன்மையான, முகத்திற்கு நேரே கூறிய இந்த வார்த்தைகளை நெப்போலியன் வார்த்தைகளில் மறுவாசிப்பு செய்வதானால் “கடத்தல்கார்களை மன்னிக்கலாம் நேரத்தை கடத்துபவர்களை மன்னிக்க முடியாது” .

லியாவின் உரை இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியலில் இருக்கின்ற தலைமைத்துவ குறைபாடுகளை கோடிட்டுக்காட்டுகின்றது.

செயற்றிறன் அற்ற அரச நிர்வாகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.

சர்வதேச நாடுகளில் எல்லாவகையிலும் தங்கியிருக்கின்ற இலங்கை போன்ற ஒருநாடு அந்த நாடுகளுடனான தொடர்புகளின் போது ஆகக்குறைந்தபட்சம் நேரத்தின் முக்கியத்துவம், பெறுமதி, தரம் என்பனவற்றைப் பேணவேண்டும். அதைச் செய்யாமல் சிங்கப்பூராக்குவோம், கோலாலம்பூராக்குவோம், தாய்வானாக்குவோம், ஹொங்கொங் ஆக்குவோம் என்பதெல்லாம் வெறும் வெடிகள். முதலில் ஆகக்குறைந்தது அந்த நாடுகள் நேரத்திற்கு கொடுத்திருக்கின்ற முக்கியத்துவத்தையாவது கொடுக்க வேண்டாமா….?

“பொய்சொல்வதும், வாக்குறுதிகளை வழங்குவதும் இலங்கையில் ஒரு கலாச்சாரமாகிவிட்டது. அரசாங்க அதிகாரிகள் அரசர்கள் போல் செயற்படுகிறார்கள். கல்வி முறைமையிலும், சிந்தனை மாதிரியிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும். ” என்று கூறுயுள்ளார் லியா. மேலும்  “கல்வி அபிவிருத்தி என்பது  கட்டிடங்களில் இல்லை சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதில் உள்ளது” என்கிறார் அவர்.

” THERE SHOULD BE A CHANGE IN THE EDUCATION SYSTEM AND THE THINKING PATTERNS OF THE PEOPLE IN SRILANKA “. லியாவின் வார்த்தைகளை பத்தோடு பதினொன்றாக கடந்து செல்ல நினைப்பது ஒரு சமூகத்தை தற்கொலைக்கு இட்டுச் செல்வதற்கு சமமானது. அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் முன்னேற்றம் அடைந்த ஒரு சக ஆசிய நாட்டின் அனுபவத்தை, பார்வையை, மதிப்பீட்டை, இலங்கைக்கு சொல்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் தென்கொரியா எப்படி அபிவிருத்தி அடைந்தது என்பதைக் காட்டுகிறது.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில்  பேசப்படுகின்ற நேரம் தொடர்பான  கூற்று ஒன்றும் உள்ளது. ” எங்களுக்கு நேரம் குறைவாக இல்லை, மாறாக கிடைக்கின்ற நேரத்தில் அதிகளவை நாம் பயன்படுத்துவதில்லை”. இதுதான் இலங்கையில் இருக்கின்ற முக்கியமான பிரச்சினையே அன்றி நேரப்பற்றாக்குறை அல்ல. 

ஏனெனில் ஒருநாளில் 24 மணித்தியாலங்கள் முழு உலகிற்கும் பொதுவானது , வரையறைக்குட்பட்டது. அருமையாக – குறைவாக உள்ள நேரத்தை வரையறை அற்ற  எமது தேவைகளுக்கு இடையே எப்படி பயன்படுத்துவது, பங்கிடுவது என்பதிலேயே நேரப் பயன்பாட்டுதிறன் தங்கியுள்ளது. இது நேர முகாமைத்துவம் “TIME MANAGEMENT” என்று அழைக்கப்படுகிறது. இந்த விடயம் வளர்ச்சியடைந்த நாடுகளில் பாலர் வகுப்பில் இருந்து கற்பித்தலில் உள்வாங்கப்பட்டுள்ளது. இலங்கை போன்ற முன்மாதிரியற்ற கல்வி முறையில் இது சாத்தியமா…? இதையே லியா இலங்கையின் கல்வி முறையோடு தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.

ஐரோப்பாவில் முதலாம் வகுப்பு பிள்ளை ஒன்றுக்கு பாடசாலையில் கொடுக்கப்படும் வீட்டுவேலைக்கான -HOME WORK நேரம் பத்து நிமிடங்கள் மட்டுமே. ஒவ்வொரு வகுப்பு ஏறும்போதும் பத்து பத்து நிமிடங்கள் கூடிக்கொண்டு போகும். தங்கள் பிள்ளை பத்து நிமிடத்தில் அந்த வேலையைச் செய்து முடிக்கிறதா என்பதை அவதானிப்பதே பெற்றோரின் வேலை.‌ பிள்ளை தவறாகப் செய்தாலும் பிழை திருத்தம் செய்யக்கூடாது.‌ இது அப்பா, அம்மாவுக்கான வீட்டுவேலை அல்ல. அப்போதுதான் ஆசிரியருக்கு தெரியும் பிள்ளைக்கு தான் கற்பித்த விடயம் விளங்கிஇருக்கிறதா இல்லையா என்பது .

பெற்றோரின் உதவியுடன் பாடசாலை முடிந்த பின்னரான மிகுதி நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, பங்கிடுவது என்பது பிள்ளையின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.‌ நண்பர்கள் தொடர்பு, விளையாட்டு, தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சிகள், சங்கீதம் போன்றவற்றிற்காக நேர ஒதுக்கீடு செய்யப்படுகிறது.‌இங்கு ஆரம்பிக்கிறது நேர முகாமைத்துவம். பிள்ளையை விடிய, விடிய படிக்கச் சொன்னால், அதிகாலை நான்கு மணிக்கு நித்திரையில் இருந்து எழுப்பிவிட்டு பாடமாக்கச் சொன்னால் நித்திரைக் குறைவால் பிள்ளை வகுப்பில் நித்திரை தூங்கும், கவனம் செலுத்தாது, சோர்வாக இருக்கும். விளைவு பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திற்கு பதிலளிக்க வேண்டிவரும்.

ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் இந்த “பழக்கதோசம்” ஒரு பெரிய பிரச்சினையாகவே உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக மேற்குலக நாடுகள் பெரும் முயற்சிகளைச் செய்தே குறைந்தபட்சம் வேலையிடங்களிலாவது நேரத்திற்கு சமூகமளிக்கின்ற இலக்கை அடைந்துள்ளன. வேலைத்தளத்திற்கு அப்பால் அழைப்பிதழில் குறிப்பிடப்படும் நேரத்திற்கு எம்மவர் எந்த நிகழ்வும் தொடங்குவதும் இல்லை முடிவதும் இல்லை.  

லியாவின் உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படுவதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். அந்த மொழிபெயர்ப்பாளர் பல தடவைகள் “இவறாய்” என்று மொழிபெயர்ப்பு செய்கிறார். இப்படி தென்கொரியாவில் நடந்தால் உங்களின் “கதை முடிந்தது” என்பதுதான் அது. அந்த அளவுக்கு லியாவின் கண்டனக்குரல் உள்ளது. தென்கொரியாவில் இதுபோன்று நடக்குமாயின்‌ விசாரணையும், ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படும் என்கிறார் லியா.

நேரத்திற்கு சமூகமளிப்பது என்பது ஒரு கலை. ஒரு கடமை. ஒரு பொறுப்பு. ஒரு நேர்மை. ஒரு கனவான் பண்பு. ஒரு மரியாதை.   இதில் இருந்து தவறும் போது அது கடமையில் இருந்துதவறுவது, பொறுப்பற்ற செயல், நேர்மையீனம், கனவான்தனமற்றது, மரியாதையற்றது, மற்றவர் மனதைப் புண்படுத்துவதும், இழிவுபடுத்துவதற்கும் சமமானது. சந்திப்புக்கு நேரம் குறித்த இருதரப்புக்கும் நேரத்திற்கு சமூகளிக்கவேண்டிய தலையாய கடைப்பாடு உண்டு. 

நேரம் குறித்த இந்த நோக்கு கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்தது . இன்றைய கணனி-டிஜிட்டல் மயமாக்கத்திலும், உலகமயமாக்கத்திலும் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் பொருளாதார தாற்பரியம் குறைந்த நேரத்தில் அதிகூடிய உற்பத்தியைத் பெறுவது. இது பண்டங்கள் உற்பத்தியை மட்டும் அல்ல சேவைகள் உற்பத்திக்கும் உரியது. தொழிலாளர்கள் இயந்திர வேகத்தில் இயங்கவேண்டிய மெசினுக்கு ஈடாக செயற்படவேண்டிய நிலை.

இந்த நேர அழுத்தம் சமகால கைத்தொழில் நாடுகளில் பல சமூகப்பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உள, உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமானதாக அமைகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் எதிர்மறை விளைவு இது. நேர அழுத்தம், இயந்திரவேகம், மிகச்சரியாகச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம், வேலைப்பளு எல்லாம் உள, உடல் ரீதியான பாதிப்புக்களுக்கு காரணமாகின்றன. சமகால வைத்திய உலகம் இந்த நோயை “BURNOUT” என்று அழைக்கிறது . உடல், உள இயக்கத்திற்கான சக்தி எரிந்துபோன, பலவீனமான, வெறுமைத்தன்மை என்று சொல்லலாம்.

இதனால் கைத்தொழில் நாடுகளின் சிந்தனைகளில் ஏற்பட்டுவரும் மாற்றமானது முதலாளித்துவ உற்பத்திமுறைக்குள் தொழிலாளர்களின் நலனைப் பேணவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கையில் தோட்ட,தொழிற்சாலை, தினக்கூலிகளைத்தவிர அரசாங்க, தனியார் துறை உத்தியோகத்தர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் குறைவான உழைப்பையே வழங்குகின்றவர்களாக உள்ளனர். லியா சொல்லியது இந்தத் தரப்பினர் பற்றியதே .

மறுபக்கத்தில் வெளிநாட்டு அதிகாரி ஒருவர் தனது விருந்தினர் நாடு ஒன்றுக்கு எதிராக இந்தளவுக்கு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கடும் தொனியில் பேசமுடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. உதவி வழங்குகிறோம் என்பதற்காக இறைமையுள்ள ஒரு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை விமர்சனம் செய்யமுடியுமா….?  அதில் தலையீடு செய்யமுடியுமா…? என்றும் சிலர் கேட்கிறார்கள்.

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியை எல்லோரும் தங்கள் பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார்களா..? இராஜாங்க அமைச்சர் 30 நிமிடங்கள் பிந்திவந்ததே லியாவின் இந்த கடுப்புக்கு காரணம். ஆனால் இராஜாங்க அமைச்சரோ தான் காலதாமதமாக செல்லவில்லை என்கிறார். அப்படியானால் இவ்வளவு பேசும் வரையும் இராஜாங்க அமைச்சர் மௌனம் காக்கவேண்டிய தேவை என்ன….? 

பிச்சைவேண்டாம் நாயைப் பிடி என்று சொல்ல திராணியற்று, நாயை அவிழ்த்துவிட்டாலும் பரவாயில்லை பிச்சையே வேண்டும் என்பதனால் கடிக்கும் வரை காத்திருந்தாரா ….?

இறுதியாக நேரத்திற்கு சமூகமளிப்பது குறித்த கவிஞர் கண்ணதாசனின் கருத்துதொன்று. கவிஞர் கண்ணதாசனின் மிகப்பெரிய பலவீனம் குறித்த நேரத்திற்கு சமூகமளிப்பதில்லை. தூக்கத்திற்கு கும்பகர்ணன் கவிஞர்.

“இந்தியாவில் இந்துமதம், இஸ்லாம்மதம், கிறிஸ்த்தவ மதங்கள் உண்டு. ஆனால் என்மதம் “தாமதம்” ….!  என்றார் கவிஞர் கண்ணதாசன்.