தமக்குள்ளே வெட்டி விளையாடும் தமிழ்க்கட்சிகள் (வாக்குமூலம் 44)

தமக்குள்ளே வெட்டி விளையாடும் தமிழ்க்கட்சிகள் (வாக்குமூலம் 44)

—- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —-

‘சர்வகட்சி மாநாடு’ என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பெற்ற, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு- பேச்சுவார்த்தை- 13.12.2022 அன்று எந்த வில்லங்கங்களுமில்லாமல் நடந்து முடிந்த பின்னர், திடீரென்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 21.12.2022 மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலிசப்றி, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் அரசாங்கத் தரப்பிலும் தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளராகக் கருதப்படும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்ட சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரினதும் அதன் பேச்சாளரினதும் இத் தன்னிச்சையான சந்திப்புக்குத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் (பெயர் மாற்றம் பெற்ற ஈபிஆர்எல்எப்) தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் பா.உ. தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அதற்கு ஜனாதிபதி செயலகம் இச்சந்திப்பு உத்தியோகபூர்வமற்றது என்று அறிவித்துள்ளது.

நிலைமை இப்படியிருக்க, தம்மைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் என அழைத்துக் கொள்ளும் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நல்லூரிலுள்ள சி.வி. விக்னேஸ்வரன் பா.உ. அவர்களின் இல்லத்தில் 24.12.2022 அன்று மாலை கூடி ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் ஆராய்ந்துள்ளன.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் பா.உ. (தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் கூட), இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா, ‘புளொட்’ தலைவர் சித்தார்த்தன் பா.உ., ‘ரெலோ’த் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பா.உ., ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களானதலைவர் இரா.சம்பந்தனோ மற்றும் அதன் பேச்சாளராகக் கருதப்படும் சுமந்திரனோ கலந்துகொள்ளவில்லை.

இவற்றைப் பார்க்கும் போது 24.12.2022 அன்று கூடிப் பேசியுள்ள ஆறு கட்சிக் கூட்டணிக்கும் இரா சம்பந்தன் + சுமந்திரன் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணிக்குமிடையில் பனிப்போர் ஆரம்பமாகிவிட்டதென்றே எண்ணத் தோன்றுகிறது. நகைச்சுவையாகக் கூறப்போனால் (திரைப்படத்தில்) எழுத்தோடும்போதே ‘பைட்’ -சண்டைக் காட்சி என்பார்களே; அதுதான். இதனைப் பார்க்கும் ரசிகப் பெருமக்களான பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகள் ‘சபாஷ்! சரியான போட்டி’ என உள்ளூர மகிழ்ந்து கைதட்டிச் சிரித்து ‘விசிலடிச்சு’ வேடிக்கை பார்க்கப் போகின்றன.

ஜனாதிபதி அவர்களின் நோக்கம் இரா சம்பந்தனையும் சுமந்திரனையும் மட்டுமே பிரதானமாக வைத்துத் தமிழர் தரப்பைக் கையாள்வதா? அல்லது சுமந்திரனைப் பயன்படுத்தித் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்துவதா? அல்லது இரண்டுமா? (ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களா?) எனத்தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகளென்று தம்மைத்தாமே குறி சுட்டுக்கொண்டு தமிழர்களுடைய அரசியற் பொதுவெளியில் உலா வருகின்ற கட்சிகளென்றாலும் சரி, அல்லது தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாமே என்று தமக்குள்ளே ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு தன்னிச்சையாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்றாலும் (தமிழரசுக் கட்சியென்றாலும்) சரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 13.12.2022 அன்று ஆரம்பித்துவைத்துள்ள இப்பேச்சு வார்த்தைத் தொடர், வழமைபோல் இத்தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆளுக்குஆள்-கட்சிக்குக் கட்சி போட்டி போட்டுக் கொண்டு வாக்கு வேட்டையாடும் தேர்தல் விளையாட்டுத்திடலல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை நில ஆக்கிரமிப்புப் பிரச்சினை- அரசியல் கைதிகளின் விடுதலை-காணாமல் போனவர்களுக்கான மற்றும் யுத்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிலைமாறுகால நீதி மற்றும் நிவாரணம்-அதிகாரப் பகிர்வு என்பவற்றை யார் தீர்த்து வைத்தார்கள்என்பதல்ல பிரச்சினை. திருப்தியான தீர்வுதான் முக்கியம். யார் குற்றினாலும் அரிசியாகவேண்டுமென்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. 

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே என்ற மனோபாவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இராணுவ மற்றும் அரசியற் செயற்பாடுகள்- இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உத்தேச மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் காலம் வரைக்கும் உருவாக்கப்படவிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த இடைக்கால நிருவாக சபையை (சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் புலிகளுக்கு வழங்கச்சம் மதிக்கப்பட்டிருந்தபோதிலும் கூட) ஏனய தமிழ் அமைப்புகளுடன் பங்கிட்டுக் கொள்ள புலிகள் விரும்பாமை அதாவது அதிகாரத்தில் தாம் மட்டுமே இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடு- ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான ஓர் இடைக்கால நிருவாகத்தை ஏற்படுத்த முனைந்த போது அந்நிருவாகத்தில் ஈபிடிபி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இடம் பெறுவார்களென்ற காரணத்திற்காக அமரர் மு.சிவசிதம்பரத்தைத் தலைவராகவும் இரா.சம்பந்தனைச் செயலாளர் நாயகமாகவும் கொண்ட அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு ஆதரவு தராமை போன்ற தன்முனைப்பான-தன்னலமிக்க நடவடிக்கைகள்தான் வேண்டத்தகாத பல பேரழிவுகளை ஏற்படுத்தித் தமிழ்ச் சமூகத்தைப் பல சமூக பொருளாதார அரசியல் பின்னடைவுகளுக்கு உள்ளாக்கித் தமிழ்ச் சமூகத்தை இன்று பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் முன் ‘பிச்சைவேணாம்; நாயைப் பிடி’ என்னும் நிலைக்கு இறக்கிவிட்டுள்ளது என்ற வரலாறு தந்த பாடத்தை இத்தமிழ்த் தேசியக் கட்சிகள் மறந்துவிடக்கூடாது.

ஜனாதிபதியால் 13.12.2022 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைத் தொடரின் அடுத்த சந்திப்பு 05.01.2023 இல் நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து 10 ஆம் திகதிமுதல் 13 ஆம் திகதி வரை இப்பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்படுமெனவும் அறியக் கிடக்கிறது. இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிச் சூழலில் இப்படியொரு சந்தர்ப்பம் இனிமேல் தமிழர்களின் கதவைத் தட்டப் போவதில்லை.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் குறிப்பாக அதன் தலைவர் இரா சம்பந்தன் அவர்களிடம் மீண்டும் மீண்டுமொரு விநயமான வேண்டுகோள்.

“வடக்குக் கிழக்குத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும்/அமைப்புகளுடனும் ஒரு பரந்துபட்ட கலந்துரையாடலைத் தாமதியாது உடனடியாக மேற்கொண்டு அதன் அடிப்படையில் தமிழர் தரப்பில் எட்டப்படும் ஒரு கூட்டுத்தீர்மானத்தை-அதிகாரப் பகிர்வு விடயத்தைப் பொறுத்தவரை 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை அது தன் ஆரம்ப நிலையிலிருந்தவாறான அதிகாரங்களுடன் முழுமையாகவும்- முறையாகவும்-அரசியல் விருப்புடனும்-அர்த்தமுள்ள விதத்திலும் அமுல்படுத்த வேண்டுமென்றதோர் ஒற்றைக் கோரிக்கையை ஒரு முழுமையான ஆவண வடிவில் (Comprehensive Report) பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டு செல்லுங்கள். மூத்த அரசியல்வாதியான தங்களுக்கு இதன் தாற்பரியத்தை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. காலம் தங்கள் மீது சுமத்தியிருக்கும் இப்பாரிய பொறுப்பைத் தட்டிக் கழித்து விடாதீர்கள்”