கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறும் அருமை நண்பன் பூபதி

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறும் அருமை நண்பன் பூபதி

— வீரகத்தி தனபாலசிங்கம்—

வீரகத்தி தனபாலசிங்கம்
அவுஸ்திரேலியாவில் வாழும் எனது அன்பு நண்பன் லெட்சுமணன் முருகபூபதிக்கு கனடா இலக்கியத் தோட்டம் 'இயல் விருது 2022' வழங்கிக் கௌரவிக்கவிருக்கிறது.

அரை நூற்றாண்டு காலமாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் முருகபூபதியின் இலக்கிய, ஊடகத்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில் அவரின் சேவைகளைப் பாராட்டி இந்த விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிக் கௌரவிக்கிறது.

கலை இலக்கியவாதி, பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர் எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த மனிதாபிமானி என்று பல்பரிமாணத்தைக் கொண்ட அவரை முழுமையாக பெயரைச் சொல்லி முருகபூபதி என்று அழைக்கவே எனது இடங்கொடுப்பதாக இல்லை. பூபதி என்றே அவரை நான் அழைப்பேன்.

எனக்கும் பூபதிக்கும் இடையிலான நெருக்கமான நட்பு 45 வருடகால நீட்சி கொண்டது. 1977 செப்டெம்பரில் வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாக வேலைக்கு சேருவதற்கு ஒரே நேர்முகப்பரீட்சைக்கு சென்றவர்கள் நாம். ஒப்புநோக்காளர்களாக பணியாற்றத்தொடங்கிய காலந்தொட்டு இன்று வரை அந்த நட்பு தொடருகிறது.

பூபதி அவுஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்து 35 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் எமக்கிடையிலான நட்பு மேலும் வலுவடைந்துகொண்டேயிருக்கிறது.

ஒப்புநோக்காளராக ஒரு 6 வருடகாலம் பணியாற்றிய பிறகு 1984 ஆம் ஆண்டு ஆ.சிவனேசச்செல்வன் அவர்கள் பிரதம ஆசிரியராக இருந்தபோது பூபதி வீரகேசரி ஆசிரியபீடத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அடுத்த வருடம் நான் ஆசிரியபீடத்தில் இணைவதற்கும் பூபதியே காரணகர்த்தாவாக இருந்தார்.

உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த சூழ்நிலைகளில் பூபதி 1987 பிற்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.நான் தொடர்ந்தும் வீரகேசரியில் 1997 முற்பகுதி வரை உதவி ஆசிரியராக பணியாற்றிவிட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தினக்குரலில் இணைந்துகொண்டேன்.

பூபதி எனது நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டவர். எமக்கிடையிலான நீண்டகால நட்பில் நாம் ஒருபோதும் முரண்பட்டுக்கொண்டதில்லை. பூபதியுடன் முரண்படவும் முடியாது. அந்தளவுக்கு மனிதநேயமிக்க ஒரு பிறவி அவர். தன்முனைப்புடன் மற்றவர்களுக்கு உதவும் அவரது சுபாவம் முன்னுதாரணமானது. எத்தனை கட்டுரைகளை எழுதச்சொன்னாலும் நான் எழுதிவிடுவேன். பூபதியின் நற்பண்புகளையும் அவர் எனது நலன்களில் வைத்திருக்கும் அக்கறையையும் பற்றி எழுதச்சொன்னால் என்னிடம் வார்த்தைகள் இல்லை.

பூபதியைப் போன்று சளைக்காமல் எழுதுபவர்களை நான் பார்க்கவில்லை. எங்களால் அவ்வாறு செய்யமுடியவில்லையே என்று சிலவேளை பொறாமை கூட வருகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் புலம்பெயர் தமிழச் சமூகத்தின் மத்தியிலும் உள்ள கலை இலக்கிய ஆளுமைகளைப் பற்றி பூபதியைப் போன்று எழுதிக் குவித்தவர்களை நான் கண்டதில்லை. எதிர்காலச்சந்ததிகள் அந்த ஆளுமைகளைப் பற்றி அறிவதற்கு பூபதியின் பதிவுகள் நிச்சயமாக அரிய பொக்கிசமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் பூபதியின் சொந்த நகரம் நீர்கொழும்பு. அங்கு வாழும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு அடையாளமாக விளங்கியவர் பூபதி. புலம்பெயர்ந்த பின்னரும் கூட தனது சமூகத்தின் நலன்களில் அவர் காட்டும் அக்கறை குறையவில்லை. மேலும் அதிகரித்தது என்றும் சொல்லலாம். சகல சமூகங்களுடனும் நல்லுறவை பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டும் பூபதி புலம்பெயர்வாழ்விலும் ஒரு தீவிர கலை இலக்கிய மற்றும் சமூக செயற்பாட்டாளராக இடையறாது பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது பணிகளையும் சாதனைகளையும் இங்கு நினைவு மீட்டுவது முக்கியமானதாகும்.

மிகவும் இளம் வயதில் எழுத்துத்துறையில் எழுத்துத்துறையில் பிரவேசித்த பூபதியின் முதல் சிறுகதை ‘கனவுகள் ஆயிரம்’ 1972 ஆம் ஆண்டில் மல்லிகை இதழில் வெளியாகியது. 1974 வெளியான அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி ‘சுமையின் பங்காளிகள்’ நூலுக்கு இலங்கை தேசிய சாகித்திய விருது (1975 ) கிடைத்தது.

வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் பூபதி 1985 சோவியத் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் மாஸ்கோ உலக இளைஞர் மாணவர் விழாவில் கலந்துகொண்டார்.

நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும் கொழும்பு கிளையின் செயலாளராகவும் பணியாற்றிய அவர் 1982 இலங்கையில் பாரதி் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது அதன் அமைப்புக்குழுவின் உறுப்பினராக பெரும் பங்காற்றினார். 2011 கொழும்பில் நடந்த அனைத்துலக தமிழ் எழுத்தாளர் மகாநாட்டின் பிரதம அமைப்பாளராகவும் அவர் பணியாற்றினார்.

சிறுகதை, நாவல், கட்டுரை, நேர்காணல், பயண இலக்கியம், விமர்சனம், புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் இதுவரையில் 28 நூல்களை நண்பன் பூபதி எழுதியிருக்கிறார். இவற்றில் ‘பறவைகள்’ நாவலுக்கு 2003 இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. அவரது சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

பூபதியின் படைப்புக்களை இலங்கையில் பேராதனை பல்கலைக்கழக மாணவியொருவரும் கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவரும் தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழக மாணவியொருவரும் எம்.பில். பட்டத்துக்காகவும் பி.ஏ.பட்டத்துக்காகவும் ஆய்வுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா தினத்தின்போது விக்டோரியா மாநிலத்தில் சிறந்த பிரஜைக்கான விருதையும் 2013 அந்த மாநில அரசின் பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருதையும் பூபதி பெற்றார். விக்டோரியா தமிழ்ச் சங்கம், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், மெல்பன் தமிழ்ச்சங்கம் மற்றும் அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆகியவற்றினால் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் நிதியம், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய சங்கம் ஆகியவற்றின் தாபக உறுப்பினருமான பூபதி இன்று வரையில் அவற்றின் பணிகளில் இணைந்தவாறு இலக்கிய பிரதிகள் எழுதி வருகிறார். இலங்கையில் மல்லிகை, ஞானம், படிகள் முதலான இலக்கிய இதழ்களும் ஜேர்மனி ‘மண்’ இலக்கிய இதழும் பூபதியின் இலக்கிய, சமூக மற்றும் ஊடகப்பணிகளைப் பாராட்டி அட்டைப்பட அதிதியாக கௌரவித்திருக்கின்றன. அவரின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ‘ரஸஞானி ‘ என்ற ஆவணப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.

2022 முதல் பூபதி ‘காலமும் கணமும்’ என்ற தொடரில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து மறைந்த கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆவணக்காணொளி தொடருக்கான எழுத்தாக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளை முன்னெடுத்துவருகிறார். அண்மையில் 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவுகள் இடம்பெற்ற ‘யாதுமாகி’ என்ற நூலையும் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டார்.

பூபதி எழுதிய ‘நடந்தாய் வாழி களனி கங்கை’ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘The Mistic of Kelani River’ வெளிவந்துள்ளது.

தன்னை இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்திய மல்லிகை இலக்கிய இதழின் ஆசிரியர் மூத்த முற்போக்கு இலக்கியவாதி டொமினிக் ஜீவா அவர்கள் 2021 கொவிட் — 19 பெருந்தொற்று நோயால் மறைந்ததையடுத்து பூபதி ‘வாழும் வரலாறு மல்லிகை ஜீவா ‘ என்ற நூலை பூபதி எழுதினார்.

விரைவில் அவர் இந்திய கலை இலக்கிய ஆளுமைகள் 40 பேரைப் பற்றிய பதிவுகளை உள்ளடக்கிய ‘பாலம்’ என்ற நூலையும் ‘மழைக்காற்று’ என்ற நாவலையும் வெளியிட விருப்பதாக என்னிடம் கூறினார்.

புகலிட தமிழ் இலக்கிய உலகில் பூபதிக்கென்று தனித்துவமான ஒரு இடம் இருக்கிறது. இணைய வழி ஊடாக பல கருத்தரங்குகளில் பங்கேற்று அவுஸ்திரேலிய இலக்கியத்தில் தமிழர்களின் வகிபாகம் உட்பட புலம்பெயர் தமிழர்வாழ்வில் இலக்கியம் பற்றி பூபதி சிற்பான உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

அவர் தமிழகத்தின் பிரபல்யமான மூத்த எழுத்தாளர் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சிதம்பர ரகுநாதன், தமிழறிஞர் தொ.மு.பாஸ்கர தொண்டமான் ஆகியோருக்கு உறவுமுறையில் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அரிய படைப்புலக பணிகளை ஆற்றிய பெருமைக்குரிய நண்பன் பூபதிக்கு இவ்வருடம் ஜூன் மாதம் கனடாவின் ரொறண்டோ நகரில் நடைபெறவிருக்கும் விழாவில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருடன் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான நெருக்கமான நட்பைக் கொண்ட நான் அது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

எனது அருமை நண்பனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.