—- வீரகத்தி தனபாலசிங்கம் —-
பல தசாப்தகாலமாக நீடிக்கும் சிக்கலான தேசிய இனப்பிரச்சினைக்கு திகதி குறிப்பிட்டு ஒருபோதும் அரசியல் தீர்வைக் காண முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும், இலங்கையின் 75 வது சுதந்திரதினம் (4 பெப்ரவரி 2023) அளவில் தீர்வைக்காண்பது தனது நோக்கம் என்று கூறிக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டினார். அது பெருமளவுக்கு சுமுகமாகவே முடிந்தது.
அடுத்த சுற்றுப்பேச்சு எப்போது என்று திகதி குறிப்பிடப்படவில்லை. ஆனால், திடீரென்று விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்துப் பேசினார். ஜனவரி முதல் தொடர்ச்சியாக பல கட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருப்பதாக அரசாங்கத் தரப்பில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்த தடவை இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதை நோக்கிய முயற்சியில் ஒரு முக்கியமான அம்சத்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் மாத்திரமே மகாநாடு மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்தது.
கடந்த காலத்தில் சர்வகட்சி மகாநாடுகளுக்கு பாராளுமன்றத்துக்கு வெளியில் இருக்கும் அரசியல் கட்சிகளும் தேசியவாத மற்றும் மத அமைப்புக்களும் அழைக்கப்பட்டதால் தீர்வு முயற்சிகள் குழப்பமடைந்ததே வரலாறு. அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய அணுகுமுறையை ஜனாதிபதி கடைப்பிடிக்கப்போகிறார் என்று தெரியவில்லை.
ஆனால், நிலைபேறான அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கிய நீண்ட செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சுமுக சூழலை உருவாக்குவதற்கு பாராளுமன்ற கட்சிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக பேச்சுவார்த்தைகளை தொடருவதே உகந்ததாக இருக்கும்.
இந்த மகாநாட்டில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யையும் அதன் முன்னாள் தோழரான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற கடும்போக்கு தேசியவாதிகளை தவிர ஏனைய பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்களும் பல உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான தங்களது நிலைப்பாடுகளைக் கைவிட்டால் அரசியலில் எதிர்காலம் இல்லாமல் போகக்கூடியவர்கள். அதனால் மகாநாட்டுக்கு அவர்கள் வராமல் விட்டதை புரிந்துகொள்ளமுடியும்.
ஆனால், ஜே.வி.பி. கலந்துகொள்ளாதது பெரும்பாலும் காரணம் காட்ட இயலாததாகும். அதன் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கமுடியும் ; கலந்துகொண்டிருக்கவும் வேண்டும். அண்மைய மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தென்னிலங்கையில் மக்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் செல்வாக்கு கணிசமானளவுக்கு அதிகரித்திருப்பதாக கருதப்படும் நிலையில் — மாற்று தேசிய அரசியல் சக்தியாக தங்களை முன்னிலைப்படுத்தி அதன் தலைவர்கள் நாட்டை ஆட்சி செய்வதற்கு வாய்ப்பைத் தருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில் சர்வகட்சி மகாநாடு போன்ற முக்கியமான செயன்முறைகளை புறக்கணிப்பது பிரதான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டிய பொறுப்பை தட்டிக்கழிப்பதற்கு ஒப்பானதாகும்.
ஜே.வி.பி.யின் தலைவர்கள் ஜனாதிபதி கூட்டிய மகாநாட்டில் கலந்துகொண்டு அந்த செயன்முறையை ஆட்சேபிப்பதற்கான காரணத்தையாவது விளக்கிக் கூறி தங்களது மாற்று யோசனையை முன்வைத்திருக்கலாம். மாற்றமடைந்திருக்கும் அரசியல் கோலங்களுக்கு மத்தியில் தங்களது முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு கிடைத்த வாய்ப்பை அந்த தலைவர்கள் தவறவிட்டுவிட்டார்கள் என்றுதான் கூறவண்டும்.
இன்னமும் கூட காலம் கடந்துவிடவில்லை. தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து அவர்கள் அடுத்த கட்ட பேச்சுக்களில் பங்கேற்கமுடியும். பொதுத்தேர்தல் விரைவாக நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திவரும் ஜே.வி.பி. தற்போதைய பாராளுமன்றம் மக்களின் ஆணையை இழந்துவிட்டது என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. அந்த பாராளுமன்றத்தினால் தெரிவான ஜனாதிபதிக்கும் மக்கள் ஆணை கிடையாது என்று கூறும் அதன் தலைவர்கள் அவரின் பதவிக்கு ஒரு நியாயப்பாட்டைக் கொடுப்பதாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக மகாநாட்டில் பங்கேற்காமல் இருந்திருக்கக்கூடும் என்று சில அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
மறுபுறத்தில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடுகளை எதிர்ப்பதன் காரணமாகவே மகாநாட்டை அவர்கள் புறக்கணித்தார்கள் என்ற வலுவான ஐயம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஏற்படுவதையும் தவிர்க்கமுடியாது.
கடந்த நூற்றாண்டின் பின் அரைக்கூறில் இரண்டு ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜே.வி.பி. மார்க்சிய — லெனினிச கொள்கைகளைப் பின்பற்றுவதாக கூறிக்கொள்கின்ற போதிலும், சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் முற்போக்கான கொள்கையை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்று ஒரு வரலாறு இருக்கிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1957 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க — செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது ஜே.வி.பி. இருக்கவில்லை. ஆனால், 1965 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட டட்லி சேனநாயக்க — செல்வநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பிரதான இடதுசாரிக் கட்சிகளும் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஜே.வி.பி.யின் தாபக தலைவர் ரோஹண விஜேவீர பங்கேற்றார்.
அப்போது என்.சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் கழகத்தின் முக்கியமான ஒரு தலைவராக விஜேவீர இருந்தார். இனவாத நோக்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அதன் உறுப்பினர் எவரும் பங்கேற்கக்கூடாது என்று கட்சி எடுத்த முடிவையும் மீறி அதில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1971 ஏப்ரில் கிளர்ச்சிக்கு பிறகு சிறிமா அரசாங்கத்தினால் சிறையில் அடைக்கப்பட்ட ஜே.வி.பி. தலைவர்களையும் உறுப்பினர்களையும் 1977 பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கம் விடுதலை செய்தது. அதற்கு பிறகு ஜனநாயக அரசியலில் இறங்கிய போதிலும் ஜே.வி.பி. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கங்கள் முன்னெடுத்த எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்கவில்லை.
ஜெயவர்தன அரசாங்கம் 1980 களின் முற்பகுதியில் மாவட்டசபைகளை அறிமுகப்படுத்தியபோது அதை எதிர்த்து ஜே.வி.பி. தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தது.
1987 ஜூலையில் ஜெயவர்தனவும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை செய்துகொண்டபோது ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக செயற்பட்டபோதிலும் நாட்டை இரத்தக்களரியில் மூழ்கடித்தது. ‘இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு’ எதிராக தீவிரமாக பிரசாரம் செய்த அவர்கள் இந்திய பொருட்களை பகிஷ்கரிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டதுடன் சமாதான உடன்படிக்கையை ஆதரித்த சிங்கள அரசியல்வாதிகள் பலரை படுகொலை செய்தனர்.
அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபைகளை எதிர்த்த ஜே.வி.பி. அவற்றை நாட்டுப் பிரிவினையை நோக்கிய ஒரு அடியெடுத்துவைப்பு என்று வர்ணித்தது. கிளர்ச்சியை பிரேமதாச அரசாங்கம் கொடூரமான முறையில் ஒடுக்கியது. 1989 நவம்பரில் தலைவர் விஜேவீரவும் கொல்லப்பட்டார்.
அதையடுத்து ஒரு ஐந்து வருடங்கள் ‘உறங்குநிலையில்’ இருந்த ஜே.வி.பி.யினர் 1994 முதல் மீண்டும் ஜனநாயக அரசியலுக்கு வந்தனர். ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் மாகாணசபைகள் உட்பட சகல தேர்தல்களிலும் அவர்கள் போட்டியிட்டார்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விடுதலை புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையை செய்துகொண்டு நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்களில் ஜே.வி.பி. முன்னரங்கத்தில் நின்றது. அந்த போராட்டங்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் எதிராக சிங்கள மக்கள் மத்தியில் கடுமையான உணர்வுகளை ஏற்படுத்தின.
பிறகு சந்திரிகா அரசாங்கத்துடன் அரசியல் கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொண்ட ஜே.வி.பி.யின் தலைவர்கள் அமைச்சர் பதவிகளையும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், 2004 சுனாமியினால் வடக்கு — கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு ஏற்பாடுகள் குறித்து விடுதலை புலிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையை ஆட்சேபித்து அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார்கள்.
2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரதான பிரசாரமாக முன்னிறுத்தி போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவை ஆதரித்த ஜே.வி.பி. அவரது அரசாங்கத்தில் பங்கேற்காவிட்டாலும் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்ட போரை உறுதியாக ஆதரித்தது.
ஜே.வி.பி.யின் இந்த சுருக்கமான வரலாறு தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான எந்த முயற்சியையும் ஒருபோதுமே ஆதரிக்காத — சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஆதரிக்கின்ற முற்போக்கு சக்திகளுடன் தன்னை ஒருபோதுமே அடையாளப்படுத்திக்கொள்ளாத ஒரு அரசியல் கட்சியாக அதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
இந்த வரலாற்றை மாற்றியமைக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை ஜே.வி.பி.யின் இன்றைய தலைவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்; கடந்தகால தவறுகளை திருத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
தீர்வு முயற்சிகளுக்கு சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க — குறைந்தபட்சம் 13 வது திருத்தத்தையாவது முழுமையாக நடைமுறைப்படுத்துவற்கு தென்னிலங்கையில் கருத்தொருமிப்பை ஏற்படுத்த ஜே.வி.பி.யினால் பெருமளவு பங்களிப்பைச் செய்யமுடியும். காலம் வேண்டிநிற்கும் அரசியல் கடமையை நிறைவேற்ற அதன் தலைவர்கள் முன்வருவார்களா?
நன்றி: வீரகேசரி