சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (35) 

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (35) 

— சட்டத்தரணி, பாடும்மீன். சு.ஸ்ரீகந்தராசா — 

‘இது என் கதையல்ல,  என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’ 

அமைச்சர் அவர்களின் பிரத்தியேக விடயங்களுக்கான கிளை அலுவலகத்தின் பொறுப்பாளராக அமைச்சர் அவர்களால் நான் நியமிக்கப்பட்டேன். 18 வயதில் வினைஞர் சேவையில் இணந்திருந்த நான் மட்டக்களப்பு கச்சேரி, அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகியவற்றில் எட்டு வருடங்கள் சேவை அனுபவம் பெற்றிருந்தவன் என்பதை விட, அமைச்சர் அவர்களால் அந்த நோக்கத்திற்காகவே கொண்டுவரப்பட்டவன் என்பதால், அந்தப்பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. அந்தக் கிளை அலுவலகத்தில், என்னுடன் மேலும், இரண்டு எழுதுவினைஞர்கள் (சிங்களம்/ தமிழ்), மூன்று தட்டெழுத்தாளர்கள் (சிங்களம் /தமிழ்/ஆங்கிலம்), ஒரு தமிழ்ச் சுருக்கெழுத்தார், சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர், இரண்டு சிற்றூழியர்கள் ஆகியோர் பணியாற்றினார்கள். 

இலங்கையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அமைச்சர், திரு.செ.இராசதுரை அவர்களைச் சந்திப்பதற்காகத் தினமும் அமைச்சுக்கு வந்துகொண்டிருந்தார்கள். அவர்களது வருகையின் நோக்கங்களைக் கொண்டு, அவற்றைத் தரம்பிரித்து அமைச்சர் அவர்களிடம் தெரியப்படுத்துவது எனது நாளாந்த வேலைகளில் ஒன்றாக இருந்தது. அவர் அமைச்சில் இல்லாத நாட்களில் இந்த வேலைப்பழு மிகவும் குறைவாக இருக்கும். எவ்வாறெனினும், பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படாதவாறு செயற்படவேண்டிய கடமை எனக்கிருந்தது. தினமும் அதனைச் சீராக நிறைவேற்றிய திருப்தி என்மனதில் நிறைந்து கொண்டிருக்கும்போதே, புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள விரும்பாத அவசரப் புத்தியுள்ள சிலரைத் திருப்திப்படுத்த முடியாமல் போனதால் ஏமாற்றமும் கவலையும் அடைந்த தருணங்களை கடந்து செல்ல வேண்டிய சிரமமும் எனக்கிருந்தது.  

அமைச்சராகிச் சில மாதங்களிலேயே, மட்டக்களப்பில் இசை நடனக் கல்லூரியொன்றை நிறுவுவதற்கான செயற்பாடுகளில் அவர் ஈடுபடத் தொடங்கிவிட்டார். அது அவரது நீண்டகாலக் கனவாக இருந்த ஒருவிடயம். ஆனால், அதிகாரத்தில் இருந்தவர்களின் ஆதரவு இல்லாமையாலும், அருகே இருந்தவர்கள் எதிராக இருந்தமையாலும் அந்தக் கனவை நனவாக்க முடியவில்லை என்றும், இப்போது தானாகவே அதனை நிறைவேற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளதால், சற்றும் தாமதிக்காமல் செய்து முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார். அரசு, அமைச்சரவை, நிர்வாக நடைமுறைகள், அதிகாரிகளின் செயற்பாடுகள் என்றிவ்வாறு ஒவ்வொன்றிலும் எவ்வித தாமதமும் ஏற்படக்கூடாது என்பதில் அவர் மிகவும் கரிசினையாக இருந்ததால் அடிக்கடி அவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தார்.   

1980 ஆம் ஆண்டு இலங்கையில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட அரசாங்க அலுவலர்கள் நூற்றுக்கணக்கானோர் தமது உத்தியோகங்களில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். சிலவருடங்கள் வேலையற்றிருந்தனர். சில வருடங்களுக்குப் பின்னர் சில அமைச்சுக்களும், திணக்களங்களும் தங்கள் உத்தியோகத்தர்களில் சிலரைப் படிப்படியாக மீண்டும் சேர்த்துக்கொண்டன. வேலையில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய முடியாதவர்களாயிருந்த பலர் நிரந்தரமாக வேலையிழந்து போனார்கள்.  

பல தமிழ் அலுவலர்களும் அவ்வாறு வேலையில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படாமல் வருடக்கணக்காக வேலையற்ற நிலையில் இருந்தார்கள். அவர்கள் கடமையாற்றிய அமைச்சுக்களும் திணைக்களங்களும் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவுமில்லை, இழப்பீடுகளை வழங்கவுமில்லை. இது பற்றிய விடயம் அமைச்சர் அவர்களது கவனத்திற்கு வந்ததும், பாதிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் அரச சேவையில் தனது அமைச்சின்கீழ் சேர்த்துக்கொண்டார். அதுமட்டுமன்றி அவர்கள் வேலையிழந்திருந்த காலப்பகுதிக்கான சம்பளத்தொகை நிலுவைகள் முழுவதும் அவர்களுக்கு பிரதேச அமைச்சினால் வழங்கப்படுவதற்கும் ஏற்பாடுசெய்தார்.  

அவ்வாறு சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களில் பலருக்கு எந்த வேலையும் குறித்தொதுக்க முடியாமல் இருந்தது. அவர்களில் பலர் ஓய்வுபெறும் வயதை எட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் ஓய்வுகாலம் வரை அங்கேயே இருந்தார்கள், சிலர் சில மாதங்களில் வேறு திணைக்களங்களுக்கும், தங்கள் மாவட்டங்களுக்கும் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார்கள். (இந்த விடயம், நான் அமைச்சினை விட்டுச் சென்றபின்னர் நடந்தது என்றாலும் இந்தப் பதிவில் இடம்பெறத்தக்கது என்பதால் குறிப்பிடுகின்றேன்) 

திரு, செ.இராசதுரை அவர்கள், அமைச்சராகிய பின்னரும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இருந்து தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அமைச்சருடன் தொடர்பினைப் பேணிவந்தார்கள். கட்சிப் பிரமுகர்கள் பலர் அவரை அமைச்சில் வந்து சந்தித்தார்கள். அவரின் உதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.  

தமிழரசுக் கட்சியைப் பற்றியோ, அதன் தலைமையைப் பற்றியோ அமைச்சுக்கு வரும் யாரிடமும் அவர் விமர்சித்ததை நான் கேட்டதில்லை. அதேவேளை, அவரிடம் உதவிபெறுவதற்கு வருபவர்கள் எவரும் கட்சியைப் பற்றியோ கட்சியினரைப் பற்றியோ விமர்சிக்க அவர் அனுமதித்ததில்லை என்பதைப் பலதடவைகள் நான் கண்டு, கேட்டு உணர்ந்திருக்கிறேன்.  

நான் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவன் என்று தெரிந்துதான் என்னைத் தனது அமைச்சுக்கு வரும்படி அழைத்தவர் அவர். தனது அரும்பு மீசைக்காலத்திலே தமிழரசுக் கட்சியை மட்டக்களப்பிற்கு அறிமுகம் செய்தவர், அதை வேரூன்ற வைத்தவர், வளர்த்தெடுத்தவர் மூன்று தசாப்தங்களாக மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், மக்களால் என்றுமே தோற்கடிக்கப்படாதவர், அந்தக் கட்சியின் செயற்பாட்டினாலேயே அமைச்சராகும் நிலைக்குத் தள்ளப்பட்டவர் என்பதால் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட சிந்தனைகள் அகலாத நிலையிலேயே, அமைச்சரானபோதும் தமிழுக்கும், தமிழருக்கும் முன்னுரிமையோடு பணிபுரிந்தார்.  

நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அமைச்சரைத் தங்கள் ஊர்களுக்கு வருகை தரும்படி அழைத்துக் கொண்டிருந்தார்கள். வரவேற்பு விழாக்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்.  

அவ்வாறான சில பயணங்களில் நானும் அவரோடு செல்லவேண்டியிருந்தது. மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள், முறைப்பாடுகளை அமைச்சர் அவர்கள் என்னிடம் தருவார். அலுவலகத்திற்கு வந்தபின்னர், அவற்றையெல்லாம் வாசித்து சிலவற்றிற்குச் சுருக்கக் குறிப்பிட்டு அவரிடம் சமர்ப்பிப்பேன். சிலவற்றை அப்படி அவரிடம் எடுத்துச் சென்று காட்டி விடயத்தைக் கூறுவேன். அவரது அறிவுறுத்தலுக்கமைய அவற்றுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சில விடயங்களில் எனது கருத்தைக் கேட்பார். சிலவற்றுக்கு அவர் கேட்காமலேயே எனது கருத்தினைக் கூறுவேன். ஆரம்பத்தில் அவ்வாறு கூறும்போது மிகுந்த தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால், நான் சொல்வதையும் சிரத்தையோடு கேட்கும் அவரது சுபாவம் எனக்கு தைரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. இருபத்தாறு வயதிலிருக்கும் ஒரு சின்னப்பையன் எனக்கென்ன ஆலோசனை சொல்வது, நானென்ன கேட்பது என்று அவர் நினைக்கவில்லை.   

சாதரணமான ஓர் உதவியரசாங்க அதிபர் சூறாவளி அனர்த்த நிவாரணப் பணிகளில் பொதுமக்களின் நலனுக்கெதிராக நடந்துகொண்டபோது, அது பற்றிய எனது நியாயமான கோரிக்கையைத் துச்சமாக நினைத்து, என்னையும் எனது சக உத்தியோகத்தரையும் அச்சுறுத்திய அனுபவங்களைச் சுமந்துகொண்டிருந்த எனக்கு, நான் பிறப்பதற்கு முன்னிருந்தே அரசியலில் ஈடுபடத்தொடங்கி, தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு. செ.இராசதுரை அவர்கள், அப்போது இலங்கை அரசாங்கத்தின் அமைச்சராகவும் உள்ள நிலையில், எனது கருத்துக்களுக்கும் மதிப்புக்கொடுத்தபோது,  அவர் அவற்றையோ அல்லது அவற்றில் சிலவற்றையோ ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதற்கு அப்பால், எனக்கும் செவிமடுத்தார் என்பது ஒன்றே எனக்கு அவரின் மேலிருந்த மதிப்பை இமயத்தின் அளவுக்கு உயர்த்தியது.   

எப்படியிருந்தபோதிலும், அமைச்சில் தொடர்ந்து இருப்பதை மனதளவில் நான் விரும்பியிருந்தாலும் எனது அறிவு அதற்கு இடம் தரவில்லை.  

அதற்கான காரணம், அங்கிருந்த காலத்தில் எனது உயர் படிப்பு முயற்சி முற்றாகத் தடைப்படலாயிற்று என்பதேயாகும்.  

1981 ஆம் ஆண்டு எல்.எல்.பி இறுதிப் பரீட்சைக்குத் தோற்றி, சட்டப் பட்டதாரியாகியிருக்க வேண்டிய எனது இலக்கு கைகூடாமல் போயிற்று. வேலை நாட்களில் எட்டு மணிநேர வேலையும், வார இறுதி நாட்களில் விடுமுறையும் உள்ள அரச உத்தியோகத்தில் நான் இருந்தாலும், அமைச்சரின் அலுவலகத்தில் கடமையாற்றியதால் படிப்பதற்கு நேரம் கிடைப்பதென்பது முயற்கொம்பாக இருந்தது. அங்கு வேலை செய்வது மனதிற்குப் பிடித்திருந்தாலும், நமது இலட்சியம் கானல் நீராகப் போய்விடுமோ என்ற எண்ணம் அடிக்கடி நெஞ்சில் எழுந்தது. நாளாக நாளாக அந்த எண்ணம் தீயாக வளர்ந்தது. எனது ஆற்றல்கள் எதுவுமே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் பிறந்தது. 

ஒருநாள் அமைச்சர் அவர்களிடம் எனது நிலைமையை எடுத்துக் கூறினேன். அங்கே நான் தொடர்ந்து இருந்தால் எனது படிப்பைத் தொடரவே முடியாது என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். இரண்டு மூன்று தடவைகள் அவரிடம் இதுபற்றிப் பேசவேண்டி ஏற்பட்டது. இறுதியில் அவரது அரைமனதான இசைவோடு அமைச்சின் செயலாளரிடம் இருந்து விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு இணைந்த சேவைகள் பணிப்பாளரிடம் சென்று, எனது தேவையை விளக்கி “உண்மையைச்” சொன்னேன். கொழும்பு, வானிலை அவதானத் திணைக்களத்திற்கு 1.11.1981 இலிருந்து இடமாற்றம் பெற்றுக்கொண்டேன்.   

பிரதேச அபிவிருத்தி அமைச்சில் 15.08.1979 இலிருந்து 31.10.1981 வரை இரண்டு வருடங்களும் இரண்டரை மாதங்களும் பணியாற்றியதில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட திருப்தியோடும், இனிமேல் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்ற முனைப்போடும் புதிய அலுவலகத்தில் காலடி வைத்தேன். 

(தொடரும்)