— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
அண்மையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் இனப் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணவேண்டுமென்பதில் உறுதியான ஆவல் கொண்டிருக்கிறார்; ஆனால் தமிழர் தரப்பு அரசியற் தலைவர்களும் கட்சிகளும் தமக்குள் பிளவுபட்டுள்ளதால் தீர்வு கைகூடுவதாயில்லை என்ற சாரப்படக் கருத்துரைத்திருந்தார்.
அமைச்சரின் இந்தக் கூற்றுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பா. உ. வடக்கு கிழக்கு இணைந்த ‘சமஷ்டி’த் தீர்வில் தமிழர் தரப்பு அரசியற் தலைவர்களும் கட்சிகளும் ஒன்றுபட்டேயுள்ளார்கள்; சாக்குப் போக்குச் சொல்லாமல் ‘சமஸ்டி’ த் தீர்வை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டுமென்று பதிலிறுத்திருந்தார்.
இதனைத் தமிழ் ஊடகங்கள் வழமைபோல் முக்கியத்துவம் கொடுத்து கொட்டை எழுத்துகளில் செய்தியாகப் பிரசுரித்திருந்தன.
அவ்வப்போது அரசாங்கத் தரப்பிலிருந்து இவ்வாறான கூற்றுக்கள் வெளிப்படுவதும் தமிழர் தரப்பு அதற்குப் ‘பதிலடி’ கொடுப்பதும் அதனைத் தமிழ் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும் அதனை வாசித்தும் கேட்டும் தமிழர்கள் கைதட்டிக் களிப்புறுவதும் குறைந்தபட்சம் கடந்த 74 வருடங்களாகத் தமிழர் தரப்பு அரசியலில் (தமிழ்த் தேசிய அரசியலில்) நடந்து வருபவைதான். ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது’.
தமிழர்களைச் சமூக, பொருளாதார ரீதியாகக் கைதூக்கி வலுப்படுத்துவதினூடாக அவர்களது இருப்பைப் பேணுகிற செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்காமல் சில தனிநபர்களினதும் சில கட்சிகளினதும் வளர்ச்சிக்காகக் கோஷம்போடும் -கொடி பிடிக்கும் ‘சிலு சிலுப்பு’ அரசியலை முன்னெடுத்தமைதான் தமிழர்களின் இன்றைய பின்னடைவுகளுக்குக் காரணமாகும்.
ஒப்பீட்டு ரீதியில் இலங்கை சுதந்திரமடைந்த தருணத்தில் (1948) இலங்கையின் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களாகக் கருதப்படக்கூடிய முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் இருந்த சமூக பொருளாதார அரசியல் நிலையையும் இன்று அவர்கள் அடைந்துள்ள சமூக பொருளாதார அரசியல் அடைவுகளையும் எடுத்துநோக்கினால் இலங்கைத் தமிழர்களின் அகிம்சைப் போராட்டமும் ஆயுதப் போராட்டமும் இராஜதந்திரப் போராட்டமும் ஏற்படுத்திய ஒட்டுமொத்த விளைவுகளின் ‘ஐந்தொகைக் கணக்கு’ யாதெனில் வடக்கு கிழக்கில் இருந்து சுமார் பதினைந்து லட்சம் தமிழர்கள் தாயக நிலத்தை விட்டுப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றமையும் – உள்நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை வீணே பலி கொடுத்தமையும் -பல கோடி சொத்தழிவுகளும்தான். இவை தவிர சுமார் ஒரு இலட்சம் விதவைகளையும் பல நூறு அங்கவீனர்களையும் உளவியல் தாக்கங்களையும் பண்பாட்டுச் சீரழிவுகளையும் சூழல் சிதைவுகளையும் இப்போராட்டங்கள் விட்டுச் சென்றிருக்கின்றன என்பதும்தான்.
இதற்கு அடிப்படைக் காரணம் மக்கள் நலன் சார்ந்த அறிவுபூர்வமான அரசியற் செயற்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டுச் சில தனிநபர்களினதும் தனி நபர்கள் சார்ந்த கட்சிகளினதும் வளர்ச்சிக்காக வெறுமனே வீம்புத் தனமாக உணர்ச்சி அரசியலைத் தமிழ் மக்கள் மீது தலைவர்கள் எனப்படுவோர் திணித்து விட்டதேயாகும்.
ஆனால், தமிழர்கள் இதனை இன்னும் உணர்ந்து தெளிந்ததாகத் தெரியவில்லை.
இன்றைய பூகோள அரசியற் சூழலில் இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் விவகாரங்களை -செல்நெறியைத் தீர்மானிக்கும் காரணியாக இந்து சமுத்திரப் பிராந்திய அரசியலே விளங்குகின்றது. இதனைப் பௌத்த சிங்களப் பேரினவாதச் சக்திகள் விளங்கிக் கொண்ட அளவுக்குத் தமிழ்த் தேசியவாதச் சக்திகள் விளங்கிக் கொள்ளவில்லையென்பதே துரதிஷ்டமானது.
வடக்கு கிழக்கு இணைந்த ‘சமஷ்டி’த் தீர்வில் அனைத்துத் தமிழ் அரசியற் தலைவர்களும் கட்சிகளும் ஒன்றுபட்டேயுள்ளனர் என்ற சுமந்திரனின் கூற்று கேட்பதற்கு நன்றாகவேயுள்ளது. ஆனால் அந்தக் கூற்று மட்டும் எதனையும் தமிழ் மக்களுக்குப் பெற்றுத் தரப்போவதில்லை. அது வெறும் ‘பட்டு வேட்டிக்கனவு’ தான்.
ஆனால், 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகவும்- முறையாகவும் அமுல் செய்யும் விவகாரத்தில் அனைத்துத் தமிழ் அரசியற் தலைவர்களும் கட்சிகளும் ஒன்றுபட்டு இயங்குவார்களேயாயின் அதுவே நேர்மறையான விளைவுகளைக் கொண்டுவரும். இதுவே இலங்கைத் தமிழர்கள் தமது ‘கோவணத்’தையாவது காப்பாற்றும் முதற்கட்ட வழியாகும்.
ஆனால், தமிழ்த் தேசிய அரசியற் தலைவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் கோவணம் இழக்கப்படுவதைப் பற்றிச் சிந்தியாது தாம் மட்டும்பட்டு வேட்டியுடன் பவனி வருகிறார்கள். இனியும் அதைத்தான் செய்யவும்போகிறார்கள்.
எனவே, தலைவர்கள் இனியும் மாறப்போவதில்லை. மக்கள்தான் இனி மாற வேண்டும்.
13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான- முறையான அமுலாக்கல் மட்டுமே தமிழ்த் தேசிய அரசியல் பயணத்தின் முன்னாலுள்ள ஒரேயொரு நேர்கோட்டுப் பாதையாகும். இதனைத் தலைவர்கள் கண்டுகொள்ளாவிட்டால் அல்லது கண்டும் காணாதது போல் நடந்து கொள்வார்களாயின் அத்தகைய தலைவர்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழ் மக்கள் தாமாகவே பயணத்தைத் தொடர வேண்டும்.
கோவணம் காப்பாற்றப்பட்டால் எப்போதாவது வரும் பட்டு வேட்டியை அப்போது கட்டிக் கொள்ளலாம். ஆனால் கோவணம் இழக்கப்பட்டால் எல்லாவற்றையும் இழந்ததாகிவிடும். வடக்கு கிழக்கு இணைந்த ‘சமஷ்டி’த் தீர்வு ‘பட்டுவேட்டி’ யெனில், 13ஆவது அரசியல் அமைப்பு சட்டதிருத்தம் ‘கோவண’மாகும். கோவணத்தை இறுக்கிக் கொண்டுதான் பட்டு வேட்டிக்குப் பாடுபட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்குத் தற்போது தேவைப்படுவது செயற்பாட்டு அரசியலே தவிரபட்டு வேட்டிக் கனவல்ல.