ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் தண்டனையின்மையும் 

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் தண்டனையின்மையும் 

    — ஸ்பார்ட்டகஸ் — 

     பாரம்பரியமாக ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சுதந்திர ஊடகம் ஆகியவை விளங்கிவருகின்றன. கடந்த இரு தசாப்தங்களாக சமூக ஊடகங்களும் முக்கியமான பாத்திரத்தை வகிக்க தொடங்கியிருக்கின்றன. சுதந்திர ஊடகம் நேர்மையானதாகவும் துல்லியமானதாகவும் சமநிலையானதாகவும் இருக்கவேண்டியதைப் போன்று சமூக ஊடகமும் புதுவழி மற்றும் ஆக்கத்திறன் சிறப்புநிலையுடன் நேர்மையாக செயற்படவேண்டியது அவசியமாகும். ஏனென்றால் உரிமைகள் எப்போதும் பொறுப்புக்களுடன் நேரடியாக பிணைக்கப்பட்டவையாகும். 

    சமூக ஊடகங்கள் எந்தளவுக்கு அவற்றின் பொறுப்புக்களை நிறைவு செய்கின்றனவோ அந்த அளவுக்கு அவை துடிப்பான, ஔிவுமறைவற்ற மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடுடைய ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் வகிபாகத்துக்கு உரிமையைக் கோரமுடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கை உட்பட பல நாடுகளில் சமூக ஊடகங்களில் பல பிரிவுகள் சமநிலை இழந்தவையாக காணப்படுகின்றன. அவை செய்திகளைத் திரித்து மாற்று உண்மைகள் என்ற போர்வையில் பொய்களை வெளியிட்டு நெறிபிறழ்ந்து செயற்படுவதனால் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்று பரவலாக கவலை தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதற்காக சமூக ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையையோ அல்லது அச்சுறுத்தல்களையே எவரும் நியாயப்படுத்திவிட முடியாது. 

   இலங்கையில் அண்மைக் காலத்தில் அதுவும் குறிப்பாக “அறகலய” மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு சமூக ஊடகவியலாளர்கள் பரந்தளவில் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகிறார்கள். தங்களுக்கு இருக்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பயன்படுத்தி சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் பதிவு செய்த கருத்துக்களுக்காக பல சமூக ஊடகவியலாளர்கள் பொலிஸ் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்கள். சிலர் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருக்கிறார்கள். 

     இத்தகைய பின்புலத்தில், நவம்பர் 2இல் அனுஷ்டிக்கப்படும் ‘ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு தண்டனையின்மைமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எதிரான சர்வதேச தினத்தில் (International Day to end impunity for crimes against journalists’) உலகளாவிய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நிலைவரம் குறித்து ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். 

  ஐக்கிய நாடுகள் அனுஷ்டிக்கும் இந்த சர்வதேச தினத்தின் குறிக்கோள் சகலருக்குமான கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குற்றச்செயல் அச்சுறுத்தல்களை தடுப்பதற்கான தேவையை முக்கியத்துவப்படுத்துவதாகும். 

   ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களைச் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்காமல் இருக்கும் போக்கை முடிவுக்கு கொண்டுவருவது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் சகல குடிமக்களும் தகவல்களைப் பெறுவதற்கு கொண்டிருக்கும் உரிமையையும் உத்தரவாதப்படுத்துவதில் எதிர்நோக்கப்படுகி்ன்ற முக்கிய சவால்களில் ஒன்றாகும் என்று ஐக்கிய நாடுகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 

   செய்திகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கிய கடமையைச் செய்ததற்காக 2006 –2022 காலப்பகுதியில் 1200 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொலைகளில் பத்தில் ஒன்பது சம்பவங்களில் கொலையாளிகள் தண்டனையை அனுபவிக்காமல் தப்பி வாழ்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யுனெஸ்கோ) கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் விவகாரத்தை கண்காணிக்கும் பிரிவு வெளியிட்ட தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. 

    தண்டனையின்மை மேலும் கொலைகளுக்கு வழிவகுக்கும் என்பதுடன் மோசமடையும் முரண் நிலையினதும் சட்டம் மற்றும் நீதி முறைமையின் சீர்குலைவினதும் அறிகுறியாகும். 

   கொலைகள் ஊடக தணிக்கையின் மிகவும் கடுமுனைப்பான வடிவமாக அமைகின்ற அதேவேளை, கடத்தல், சித்திரவதை, உடல் ரீதியான தாக்குதல்கள் என்று பெருவாரியான அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்கள் ஆளாக்கப்படுகிறார்கள். ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையும் தாக்குதல்களும் ஊடகத்துறை சார்ந்தவர்கள் மத்தியில் ஒரு பீதிச் சூழ்நிலையை உருவாக்கி தகவல்கள் மற்றும் அபிப்பிராயங்களின் சுதந்திரமான சுழற்சிக்கு இடையூறை விளைவிக்கின்றன. குடிமக்கள் மத்தியில் கருத்து வெளிப்பாட்டையும் அவை அச்சுறுத்துகின்றன. 

    பெண் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் பிரத்தியேகமானவையாக இருக்கின்றன. குறிப்பாக அவர்களுக்கு எதிராக இணைய வழியில் (Online) விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைக் குறிப்பிடலாம். பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இணையவழி தாக்குதல்கள் உலகளாவிய போக்கு குறித்து யுனெஸ்கோ ஒரு ஆய்வை அண்மையில் நடத்தியது. அந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஊடகவியலாளர்களில் 73 சதவீதமானவர்கள் தாங்கள் செய்கின்ற பணிகளுக்காக இணையவழியில் அச்சுறுத்தலுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாவதாக தெரிவித்திருக்கிறார்கள். 

   ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களைப் பொறுத்தவரை, பெரும்பாலான சம்பவங்கள் உகந்தமுறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இந்த தண்டனையின்மைப் போக்கு குற்றச்செயல்களைச் செய்பவர்களை தைரியப்படுத்துவதுடன் ஊடகவியலாளர்கள் உட்பட சமூகத்தின் மீது ஒரு திகில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. பாரதூரமான மனித உரிமை மீறல்களை, ஊழலை மற்றும் குற்றச்செயல்களை மூடிமறைப்பதன் மூலமாக தண்டனையின்மை முழு சமூகங்களையும் சேதப்படுத்தப்படுகிறது என்று யுனெஸ்கோ கவலை தெரிவிக்கிறது. 

  மறுபுறத்தில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் வன்முறையையும் விசாரணை செய்கின்ற நீதித்துறை அத்தகைய குற்றச்செயல்களையும் சகலருக்குமான கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களையும் சமுதாயம் பொறுத்துக்கொள்ளாது என்ற வலுவான செய்தியொன்றை விடுக்கவேண்டும். 

   ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு தண்டனையின்மை பற்றிய பிரச்சினைகளை கையான ஐக்கிய நாடுகள் நடவடிக்கை திட்டம் ஒன்றை வகுத்திருக்கிறது. (The UN Plan of Action on Safety of Journalists and the Issue of impunity). ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு தண்டனையின்மை தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு பல்வேறு தரப்புகளையும் உள்ளடக்கிய முழுமைவாய்ந்த முதலாவது ஒருங்கிணைந்த முதலாவது திட்டம் இதுவேயாகும். இது ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள், தேசிய அரசாங்கங்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை ஒன்றிணைப்பதாக அமைகிறது. 

     இந்த திட்டம் வகுக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் மட்டத்தில் பெரு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பல பிரகடனங்கள், தீர்மானங்கள் வெளியிடப்படுகின்றன. துடிப்பான ஜனநாயகத்துக்கும் பொறுப்புக்கூறலுக்கும் ஊடக சுதந்திரமும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற உண்மை ஆட்சியாளர்களுக்கும் சமூகங்களுக்கும் இதன் மூலமாக வலுவாக உணர்த்தப்படுகிறது. ஊடகவியலாளர்களைப் பாதுகாத்தல் என்பது நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சித்திட்டத்தின் (2030 Agenda for Sustainable Development) அங்கமாகவும் இருக்கிறது. 

    இவ்வாறாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாப்பதற்கு சர்வதேச மட்டத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், சவால்கள் தொடரவே செய்கின்றன. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு தண்டனையின்மை அதிகரித்த வீதத்தில் காணப்படுகிறது. 

   எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் வர்க்கம் ஊடகங்களை பகைமையுணர்வுடன் நோக்குகின்ற போக்கில் இருந்து இருந்து விடுபட்டால் மாத்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் முழுமையாக உறுதிசெய்யக்கூடிய ஆரோக்கியமான சூழ்நிலைதோன்ற முடியும். 

   தங்களுக்கு கசப்பானதாக இருக்கும் செய்திகளிலும் கருத்துக்களிலும் உண்மை இருக்கமுடியும் என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்துகொண்டு செயற்படவேண்டும். 

 “நீங்கள் கூறுவதில் எந்தவொன்றையும் நான் ஏற்கவில்லை. ஆனால் அவற்றை கூறுவதற்கு உங்களுக்கு இருக்கும் உரிமையை பாதுகாக்க எனது உயிர் உள்ளவரை போராடுவேன்” என்ற பிரெஞ்சு மேதை வால்டயரின் கூற்றை நினைவு படுத்துவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும்.