அ. வரதராஜா பெருமாள்
தேர்தலுக்காக சட்டரீதியாகவும் செயற்படவில்லை
மாற்று சட்ட மூலத்துக்கும் முயற்சிக்கவில்லை
மாகாண சபைத் தேர்தல்களை ஆட்சியாளர்கள் நடத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என்றும் அதனை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியற் பிரமுகர்கள் அவ்வப்போது தமது ஊடக அறிக்கைகள் மற்றும் பேட்டிகளில் கூறி வருகிற போதிலும், அது தொடர்பான தொடர்ச்சியான காத்திரமான அரசியற் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றே. தங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி இருக்கிறது – அது இருந்தால் ‘போதுமடா சாமி’ என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றாலும், இது தொடர்பாக மாகாண, மாவட்ட மற்றும் உள்ளுர் மட்டங்களில் உள்ள சமூகப் பிரமுகர்கள, அரசியல் அக்கறை கொண்ட இளம் தலைமுறையினர் ஏன் தமது கட்சித் தலைமைகளை மாகாண சபைகள் தொடர்பில் காத்திரமாகச் செயற்படுவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை – குரல்களை எழுப்பவில்லை என்பது இங்கு ஒரு பெரும் கேள்வியாகவே உள்ளது.
தமிழர்கள் மத்தியிலுள்ள மிகப் பெரும்பான்மையான சமூக அரசியற் சக்திகள் மாகாண சபைகள் பற்றி எந்தவிதமான அக்கறையும் அற்றவர்களாகவே உள்ளனர் – மாகாண சபைகளால் எந்தவொரு பயனும் இல்லை, அது தேவையற்ற ஒன்று என்ற எண்ணம் தான் தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் சிந்தனையாக தொடர்ந்தும் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி சிந்திக்க வேண்டியுள்ளது. இது ஒரு வகையில் மாகாண சபை முறையை முற்றாக இல்லமற் செய்து விட வேண்டும் என்று முயற்சிக்கும் சிங்கள பௌத்த பேரின மேலாதிக்கவாத சக்திகளுக்கு துணை செய்வதாகவே அமைகின்றது –அவ்வாறான சக்திகளின் அவாவை நிறைவேற்றி வைப்பதற்கான செயற்பாடுகளே தமிழர் பக்கமிருந்து வலுவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றே கருத வேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த வகையில் மாகாண ஆட்சி முறை இருந்ததை இல்லாமற் செய்து கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம் என தனித்தனியாக மாகாணங்கள் அமைவதுவும்,அதற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்படுவதுவும் கிழக்கு மாகாணத்தவர்களின் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்ய முடியுமானால், இங்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் இருப்பது ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள வாக்காளர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயற்பாடு என ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்து இவ்விடயத்தை நாடு தழுவியதோர் அரசியல் உரிமை மீறல் பிரச்சினையாக ஏற்படுத்துவதற்கு இதுவரை ஏன் எதிர்க்கட்சி அரசியல் சக்திகள் ஒரு வலுவான முயற்சியையும் மேற் கொள்ளவில்லை.
நடைமுறையாக வேண்டியது நடைபெறாமல் இருப்பதை நடைமுறையாக்குவதற்கென நடைமுறையில் ஒரு சட்டம்.
இருந்து வந்த ஒரு நடைமுறையை மாற்றி புதியதொரு நடைமுறையை நிறைவேற்றும் நோக்கத்தோடு ஆக்கப்பட்ட ஒரு சட்டத்தை நடைமுறையில் வலுவுள்ளதாக பிரயோகிக்க முடியாமல் இருப்பதற்கு அதே சட்டத்தில் உள்ள ஓர் ஏற்பாடே காரணமாக இருந்தால் அந்தச் சட்டம் நடைமுறை வலுக் கொண்டது என்பது எப்படி சட்டபூர்வமானதாகும். இந்நிலையில் பழைய ஏற்பாடே தொடர்ந்தும் சட்டபூர்வமான நடைமுறை வலுவினைக் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது புதிதும் இல்லை பழையதும் இல்லை எனும் ஒரு நிலையை பராமரிப்பதற்காக ஆட்சியாளர்களால் 2017ம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் (திருத்த) சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு தேர்தற் சட்டத்தின் நோக்கம் தேர்தலை நடாத்துவதற்காகவே ஒழிய தேர்தலை நிறுத்துவதற்காக அல்ல. தேர்தல் முறையை முற்றாக இல்லாது ஒழிப்பதற்காக என ஒரு தனிச் சட்டம் ஆக்கப்படுவதென்பது வேறொரு பிரச்சினை. இங்கு அதுவல்ல விடயம். தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தேர்தல் தொகுதி நிர்ணய குழுவின் அறிக்கையை பாராளுமன்றம் ஏற்கிற போதுதான் அந்த தேர்தல் திருத்த சட்டமும் நடைமுறையில பிரயோகிக்கப்படுவதற்கான வல்லமையைப் பெறுவதாக அமைய வேண்டும். அதுவரைக்கும் அது சட்டபூர்வமான நடைமுறை வலுவினைக் கொண்டதாக இருக்க முடியாது. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய காலத்துக்கு முன்னரே, தேர்தல் தொகுதி நிர்ணயக் குழுவின் அறிக்கை தயாரிப்பையும் அதனை பாராளுமன்றம் ஏற்றுக் கொள்வதையும் நிறைவு செய்திருக்க வேண்டும்.
பாராளுமன்றம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அதற்கான மீளாய்வுக் குழுவின் அறிக்கை மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்தி முடித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு சட்டப்படி பழைய முறை இல்லாது செய்யப்பட்டுவிட்டதாகவும், அதேவேளை புதிய முறையை நடைமுறைப்படுத்த முடியாதென்றும் ஆட்சியாளர்கள் கொண்டிருக்கும் செயற்பாடு மிக மோசமான வெளிப்படையான ஜனநாயக விரோத அரசியலாகும். இதனை எப்படி சட்டம் படித்த ஜனநாயக சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்பது பெரும் வியப்புக்குரியதாக உள்ளது.
எப்போது மாகாண சபைத் தேர்தல் நடக்கும் என்று கேட்டால் பாராளுமன்றம் எப்போது தேர்தல் தொகுதி நிர்ணயக் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்கிறதோ அப்போது நடக்கும் என்கிறார்கள். அவ்வாறான குழுவின் அறிக்கைதான் பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே,ஏன் அதற்காக அமைக்கப்பட்ட மீளாய்வுக் குழு உரிய நேரத்துக்குள் சட்டப்படி அதனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று கேட்டால் அதைப் பற்றித்தான் அரசாங்கம் பாராளுமன்றக் கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்து உடனடியாகவே பழைய விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்தலாமே என்று கேட்டால், அது பற்றியும் பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சட்டநிபுணரை அவர் லண்டனுக்கு சென்றிருந்த வேளை அங்கிருக்கும் சில தமிழ் பிரமுகர்கள் சந்தித்து இது பற்றிக் கேட்ட போது, அது ஒரு சின்ன விசயம் – அதற்கான சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் தானே ஒரு தனிநபர் பிரேரணையாக கொண்டு வரப் போவதாகச் சொன்னார். அவர் அப்படிச் சொல்லி இப்போது ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது எதுவுமே நடக்கவில்லை. தமிழர் பிரதிநிதிகளாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எவரும் அவ்வாறான ஒரு முயற்சியில் அக்கறை கொண்டிருப்பதாக தெரியவில்லை.
உச்ச நீதிமன்றமும் மாகாண சபைகளுக்கான ஜனநாயகத்தை நிலைநாட்டவில்லை.
பல்வேறு சக்திகளாலும் மாகாண சபைத் தேர்தலை நடாத்தும்படி அடுத்தடுத்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளை செவிமடுத்து ஜனாதிபதி மைத்திரி அவர்கள், மீயாய்வு அறிக்கையை உடனடியாக தனக்கு சமர்ப்பிக்கும்படி பிரதமருக்கு கட்டளையிடுவதை விடுத்து, அமைதியாக சுமார் ஒரு வருட காலத்தைக் கடத்தி விட்டு ‘தேர்தல் தொகுதி நிர்ணய குழுவின் அறிக்கை இல்லாத நிலையில் ஜனாதிபதியினால் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயம் செய்ய முடியுமா?’ என்பதற்கான சட்ட ஆலோசனையை பரிந்துரைக்குமாறு உச்ச நீதி மன்றத்திடம் கேட்டார். அதற்கு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நீதியரசர்களைக் கொண்ட உச்சநீதிமன்ற தீரப்பாயம், பிரதமரை தலைவராகக் கொண்ட மீளாய்வுக் குழுவின் தொகுதிகள் எல்லை நிர்ணய அறிக்கை இல்லாமல் ஜனாதிபதி தன்னிச்சையாக தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை பிரகடனம் செய்ய முடியாது என சட்ட விளக்கம் அளித்தது. அதனை வைத்துக் கொண்டு உச்சநீதிமன்றம் மாகாண சபைத் தேர்தல்களை எக்காரணம் கொண்டும் நடத்த முடியாது என தீர்பபளித்து விட்டது போல, மாகாண சபைத் தேர்தல்கள் நடப்பதை விரும்பாத ஆட்சியாளர்களும் கட்சிகளும் நாட்டு மக்கள் மத்தியிலும் சமூக பிரமுகர்கள் மத்தியிலும் எண்ணத்தை விதைத்துள்ளார்கள்.
உண்மையில் உச்ச நீதிமன்றம் பிரதமரின் தலைமையிலான மீளாய்வுக் குழு அதனது அறிக்கையை சமர்ப்பிக்காது காலம் தாழ்த்தியது சட்ட விரோதமானது எனவும், அரசியல் யாப்பு பூர்வமாக செயற்பட வேண்டிய ஒரு மக்கள் சபையை செயற்பட முடியாமல் ஆக்கி வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதனையும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் சட்ட விளக்கம் வெளியிடப்படும் வேளையில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தானென்ன செய்வது என்பது போல ஜனாதிபதி மைத்திரி அமைதியாகி விட்டார்
உச்ச நீதிமன்றமாவது நாட்டில் நடைபெறும் மிகப் பெரும் சட்ட விரோத, ஜனநாயக விரோத செயலை தடுத்து நிறுத்துவதற்கு உரிய வகையில் தானாகவே அதனது தீர்ப்பில் மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துவதற்குத் தேவையான விடயங்களை வலியுறுத்தும் வகையாக தீர்ப்பளித்திருக்கலாம், ஆனால் ஜனாதிபதி எழுப்பின சந்தேகத்துக்கு அளவாக அதனது சட்ட விளக்கத்தை வழங்கியிருப்பது, உச்ச நீதிமன்றமும் இந்த விடயத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் இலக்கில் கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அதேவேளை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்னும் அரசியலைக் கொண்ட கட்சிகள் எதுவும் உரிய காலத்திலேயே உச்ச நீதிமன்றத்தினூடாக மாகாண சபைகளுக்கான தொகுதி நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கட்டளையை பிரதமருக்கு ஏதோவொரு வகையில் வழங்க வைப்பதற்கான முயற்சிகளை மேற் கொள்ளாததுவும் குறிப்பிடத்தக்கது.
முடிவாக
2017ம் ஆண்டு தேர்தற் திருத்தச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், தேர்தற் தொகுதி நிர்ணய அறிக்கை இல்லாமல் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த முடியாமல் இருக்கிறதென அவ்வப்போது முதலைக் கண்ணீர் வடித்து காலத்தைக் கடத்திய ஆட்சியாளர்கள், அதனை தாங்கள் தள்ளிப் போடவில்லை, அது தானாகவே தன்னைத் தள்ளிப் போடுகிறது என்பது போல கதை விடுகிறார்கள். அவ்வப்போது பழைய விகிதாசார முறையிலேயே தேர்தல் நடாத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வரப் போவதாகக் கூறி காலத்தைக் கடத்தி வந்திருக்கிறார்கள் – இப்போதும் தொடர்கிறார்கள்;.
கடந்த நான்கு ஆண்டுகளாக அரசியல் யாப்பின்படி மாகாண சபைகள் இருந்தும் அவற்றை மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் ஆளப்படும் நிலைமை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தும் எண்ணம் ஆட்சியாளர் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதிருக்கும் ஆட்சி மாறினாலும் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுமா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சட்ட பேரவை செயற்படுமா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண அமைச்சரவை ஆட்சி நடத்துமா?என்பதெல்லாம் விடை தெரியா கேள்விகளே! ‘இன்னுமொரு ஆறு மாதத்தில் நடைபெறும்’, ‘அடுத்த வருடம் நடக்கும்’ என்பதெல்லாம் புளித்துப் போன பழைய ஏமாற்று வசனங்களே.
மாகாண சபைகளின் தேவை பற்றிய உணர்வு தமிழர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களிடம் இல்லையென்பதே உறுதியாகிறது. இலங்கையின் அரசியல் யாப்பில் இருக்கும் மாகாண சபைகளின் இருப்பை இந்திய அரசு உறுதி செய்வதோடு, மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றுவதை கட்டாயப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய அடையாள பிரமுகர்கள் இந்தியாவிடம் கேட்பதெல்லாம் அவர்கள் தம்மை ‘கெட்டித்தனமான அரசியல் ராஜதந்திரிகள்’ என்று கருதுவதையே காட்டுகிறது. இந்தியா இன்னொரு தடவை இலங்கைத் தமிழர்களுக்காக இலங்கை அரசோடு வெளிப்படையாக முரண்படும் அரசியலை செயற்படுத்தாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
‘அவதந்திரம் தனக்கு அந்தரம்’. 1977ம் ஆண்டு தமிழர்கள் சனத்தொகை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கொண்டிருந்த பலத்தில் இன்று அரைவாசி அளவு கூட தாய் மண்ணில் இல்லை. ஆனால், இங்கு கேள்வி என்னவென்றால், தமிழர்களின் சமூக அரசியற் பிரமுகர்களில் மிகப் பெரும்பான்மையானோர்; 1970களின் கொண்டிருந்த கனவிலேயே இன்னமும் வாழ்கிறார்களா அல்லது அப்படிக் காட்டிக் கொண்டிருப்பதிலேயே அவர்கள் சுகம் காண்கிறார்களா?என்பதுதான்.
தொடர்புடைய விடயங்கள்
- மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டம் இல 17, 2017 பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு 2017ம் ஆண்டு செப்படம்பர் மாதம் 22ம் திகதி சபாநாயகரினால் கைச்சாத்திடப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
- 2017, அக்டோபர் 4ந் திகதி மாகாண தேர்தலுக்கான தொகுதிகள் நிரிணய குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது
- 2018 பெப்ரவரி 19ல் மாகாண சபைகளுக்கான தொகுதிகள் நிர்ணயக் குழு அதனது அறிக்கையை உரிய அமைச்சரிடம் கையளித்தது.
- 2018 மார்ச் 6ம் திகதி; மாகாண சபைகளுக்கான தொகுதிகள் நிர்ணயக் குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
- 2018 ஆகஸ்ட 24ந் திகதி அதனை பாராளுமன்றம் நிராகரித்தது.
- 2018ம் ஆண்டு ஆகஸ்ட்28ல் சபாநாயகரால் பிரதமரின் தலைமையிலான மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டது.
- 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை உச்ச நீதிமன்றம், தேர்தல் தொகுதி நிர்ணய அறிக்கை இல்லாமல் ஜனாதிபதி தேர்தலுக்கான தொகுதி எல்லைகளை தன்னிச்சையாக நிர்ணயிக்க முடியாது என சட்ட விளக்கம் அளித்தது.