மௌன உடைவுகள் 06 இரட்டைக் குடியுரிமை: டபிள் கேம்..!

மௌன உடைவுகள் 06 இரட்டைக் குடியுரிமை: டபிள் கேம்..!

—அழகு குணசீலன்—

இலங்கை அரசியல் எப்போதும் இரட்டை முகமும், டபிள் கேம் உம் கொண்டது. பாராளுமன்றத்திற்கு உள்ளே ஒன்று வெளியே ஒன்று, வடக்கில் ஒன்று, கிழக்கில் ஒன்று, பின்கதவால் ஒன்று, முன்கதவால் ஒன்று, பாராளுமன்றத்தில் பெரும் சத்தம், வாக்களிப்பின் போது சத்தம் இன்றி நழுவல்…. இப்படி எத்தனையோ இரட்டை முகமும், டபிள்கேமும்.

ராஜபக்ச குடும்பத்தினரின் அரசியல் தொடர்ச்சியை  கருவறுக்க, கொண்டுவரப்பட்ட 22வது அரசியல் அமைப்பு திருத்தம் அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜா உரிமையை கொண்டவர்கள் அவர்கள் இலங்கையில் பிறந்தவர்களாக இருந்தாலும், இலங்கை வம்சாவழியைக் கொண்டவர்களாக இருந்தாலும் அரசியலில் அதிகாரத்தை பெறமுடியாது.

இது புலம்பெயர்ந்த இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கும் பொருந்தும். இலங்கையில் அவர்கள் வெளிநாட்டு குடியுரிமையுடன் டொலர் கொண்டு வந்து முதலிடலாம் ஆனால் அரசியலில் பங்குகொள்ளும் உரிமை அதாவது தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் உரிமை கிடையாது. அரசியலில் ஈடுபடவேண்டுமானால் வெளிநாட்டு குடியுரிமையை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இது குறித்து அண்மைய வாரங்களில் நிறையவே பேசப்படுகிறது. இந்த விடயத்தில் காணப்படுகின்ற  இரட்டை பண்பு – டபிள் கேம் அரசியலாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது இலங்கையில் மட்டுமே உள்ள நிலையல்ல அதிகமான உலக நாடுகளில் அதுவும் அபிவிருத்தி அடைந்த மேற்குலக, வல்லரசு நாடுகளிலும் உள்ள நிலைதான். இந்த நாடுகளின் சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் இலங்கையை விடவும் மிகவும் வேறுட்டவை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனாலும் இலங்கையின் அரசியலமைப்பானது இந்த நாடுகளின் அரசியல் அமைப்புக்களை தழுவியும், அவற்றின் இறக்குமதி செய்த முக்கிய பகுதிகளையும் – உதிரிப்பாகங்களையும் பொருத்தி படைக்கப்பட்ட ஒரு இயந்திரம் என்பதனால் மற்றைய நாடுகளையும் திரும்பிப்பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

சில நாடுகளில் இரட்டைக் குடியுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த நாடுகளில் “மொனோ” தனிக்குடியுரிமையை மட்டுமே கொண்டிருக்கமுடியும்.

ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, எரித்திரியா, ஈரான், கியூபா, லெபனான், மொரோக்கோ, சிரியா, ரியுனீசியா போன்ற பல நாடுகள் தனிக்குடியுரிமையைக் கொண்டவை. இரட்டை குடியுரிமை நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே சற்று தளர்ந்து காணப்படுகிறது. இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதானது (BREXIT) அவர்களுக்கு ஒரு காலவரையறையை வழங்கியிருக்கிறது .

அவுஸ்திரேலிய அரசியல் அமைப்பின் 44 வது பிரிவில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்னர் தனது வெளிநாட்டு குடியுரிமையை விலக்கிக்கொள்ளவேண்டும்.

அமெரிக்காவில் பிறப்பால் அமெரிக்கரான ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கமுடியும்.

இங்கிலாந்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் எந்த தடையும் இல்லை. போரிஸ் ஜோன்சன் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அமெரிக்க குடியுரிமையை கொண்டவர்.‌ அவர் தனது அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொண்டார். அவரது வரிமதிப்பீடு தொடர்பான சிக்கல்களுக்காகவே அவர் இரட்டை குடியுரிமையை விலக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் இலங்கையின் இரு அரசியல்வாதிகளின் கருத்துக்கள் குறித்து மௌனம் கலைக்கப்படுகிறது.

சுமந்திரன் பாடிய பெருங்கதை..!

ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.‌சுமந்திரன் இது விடயமாக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அவரை இப்போது ஊடகங்கள் யாழ்ப்பாண, கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்று அழைக்கத் தொடங்கியிருக்கின்றன. 

அவரது “பெருங்கதையை” பகுதி பகுதியாக பிரித்துப் பார்ப்பது அரங்கம் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்.

சுமந்திரன் : ” இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முன்வந்து, அது தொடர்பில் யாராவது ஆட்சேபத்தை தெரிவித்தால், அவரது பெயரை நிராகரிக்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில் அவ்வாறான ஆட்சேபனைகளை விசாரித்து உண்மைகளைக் கண்டறிய அவர்களுக்கு அவகாசம் இல்லை….”

மௌன உடைவுகள் : ஆக, சுமந்திரனின் இந்த கருத்துப்படி இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை இச்சட்டம் ஆரம்பத்திலே தடுக்க தவறுகிறது. வேட்பு மனு  தாக்கல் செய்யும்போது அது சரியானது என உறுதிப்படுத்தப்படுவது வழக்கம். அதனை செய்தால் சுமந்திரன் கூறுகின்ற இந்தப் பெருங்கதை தேவையற்றது. இதுவரையில் மிகவும் அரிதாகவே வேட்புமனுக்களில் பொய்யான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது கட்சியின் வேட்பாளர் பட்டியல் என்பதால் அதை சரிபார்க்கவேண்டிய பொறுப்பு கட்சிக்கு உள்ளது.

சுமந்திரன் : “அவர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால், நீதிமன்றத்தின் ஊடாக அதனைக் கேள்விக்குட்படுத்தி அவரது பதவியைப் பறிக்க முடியும்…”

மௌன உடைவுகள் : குறிப்பிட்ட வேட்பாளரின் டபிள்கேம் தெரியாது மக்கள் வாக்களித்தால் அந்தவாக்குகள் அவருக்கு மட்டும் அளிக்கப்பட்ட விருப்பத்தெரிவு வாக்குகள் அல்ல.‌ மாறாக கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் இப்போது தவறான வழியில் கட்சி பெற்ற வாக்குகள் சட்டரீதியானதா? சட்டரீதியற்றதெனில் தேர்தல் முற்றாக நிராகரிக்கப்படவேண்டும். குறிப்பிட்ட நபர் பதவியிழந்தால் வேட்பாளர் பட்டியலில் இருந்து உண்மைக்கு புறம்பாக பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ஒருவரைத் தெரிவு செய்வது  நீதியற்றது. தேர்தல் ‌ஆணையாளர் இலகுவாக செய்யவேண்டிய வேலையை நீதிமன்றத்திற்கு இழுத்து இழுத்தடிக்கும் முயற்சி இது. நேரடியாகத் தொடவேண்டிய மூக்கை தலைக்குப் பின்னால் சுற்றிவளைப்பான் ஏன்?

சுமந்திரன் : “தேர்தலில் வேட்பாளர் ஒருவர் போட்டியிடும் போதுு தேர்தல் ஆணைக்குழு அவரிடம் இருந்து சத்தியக்கடதாசியைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம்….”

மௌன உடைவுகள் : ஏற்கனவே வேட்புமனு தகுதிவாய்ந்த மூன்றாவது நபரினால் உறுதிப்படுத்தப்பட்டே சமர்ப்பிக்கப்படுகிறது.‌ மாவட்ட செயலாளர் தேர்தல் அத்தாட்சி அதிகாரியாக அதை சரி,பிழைபார்க்கிறார். இன்னும் ஒரு சத்தியக்கடதாசி (பொய்க்கடதாசி) தேவையா? 

சட்டத்தின் நோக்கம் இரட்டைக் குடியுரிமை உள்ளவரை வேட்பாளராகாது தடுப்பதாக இருக்க வேண்டுமேயன்றி வென்றபின் பதவியை பறிப்பதாக இருக்கக்கூடாது. இதில் ஓட்டைகள் உண்டு கட்சிகள் இவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி மக்களை ஏமாற்றி வாக்குகள் சேகரிப்பதை இச் சட்டம் முதலில் தடுக்க வேண்டும். 

சுமந்திரன் : “குறிப்பிட்ட வேட்பாளரது பிரஜாவுரிமை தொடர்பில் நீதிமன்றத்தில் யாராவது கேள்விக்கு உட்படுத்தினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதுடன், அதற்கு மேலதிகமாக பொய்ச் சாட்சி சொன்ன குற்றத்திற்காக அவருக்கு தண்டனையும் விதிக்கமுடியும். இவ்வாறான ஏற்பாடு கொண்டு வரப்பட்டால் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பலரும் தேர்தலில் போட்டியிட பின்னடிப்பார்கள்….”

மௌன உடைவுகள் : யாரும் கேள்விக்குட்படுத்தாவிட்டால், இரட்டை பிரஜாவுரிமைக்காரர் எம்.பி. யாக இருக்க முடியும் என்பதா? இதன் அர்த்தம். 

சட்டத்தினை ஓட்டைகளை வைத்து தயாரித்து அதற்கூடாக கட்சியும், வேட்பாளரும் மக்களை ஏமாற்றும் விளக்கமாக அமைகின்றன சுமந்திரனின் கருத்துக்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் பத்துப் பேரில் எவரும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்ல என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.‌ தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தேர்தலுக்கு சில காலங்களுக்கு முன் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வந்து வேட்பாளர்களானவர்கள் இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் இந்த சந்தேகம் தொடர்கிறது. இதை ஆதா ரங்களுடன் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு கட்சிக்குரியது.

ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவருக்கு இரட்டைப் பிரஜையா உரிமை என்ற கதை மக்கள் மத்தியில் ஊசலாடுகிறது.‌ மூன்றுபேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நழுவியதும் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சபாநாயகர் இரண்டு, மூன்று பேர்கள் என்கிறார், சிலர் பத்துப்பேர் வரை என்கிறார்கள்.

சாகர காரியவாசத்தின் விதண்டாவாதம்…!

பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவாசம் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக இங்கிலாந்து புதிய பிரதமரின் தேர்வை மேற்கோள்காட்டி கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தின் சாராம்சம் இது: இங்கிலாந்தில் பிறந்த வெள்ளையர் அல்லாத, கிறிஸ்த்தவர் அல்லாத, இந்திய வம்சாவளி, இந்து மதத்தவர் சுனேக் பிரதமர் ஆக முடியும் என்றால், இலங்கையில் பிறந்த வெளிநாட்டு பிரஜைவுரிமையைக்கொண்ட  இலங்கையர், இலங்கை நலனில் அக்கறை கொண்டவர் ஏன்? தேர்தலில் போட்டியிட முடியாது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது சாகரவின் கருத்து சரி போன்று தோன்றும். ஆனால் நிலைமை அப்படி அல்ல. இலங்கையின் நிலையை பிரித்தானியாவின் நிலையோடு ஒப்பிடமுடியாது. 

எப்போது ஒப்பிடமுடியும் என்றால்..? 

இலங்கையில் சிங்களவரல்லாத, பௌத்தரல்லாத  எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம், மலையகத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக, பிரதமராக தெரிவு செய்யப்படும்போதே இந்த ஒப்பீட்டை செய்யமுடியும். அண்மைக்கால அரசியல் சூதாட்டங்களின்போதுகூட  இலங்கை அரசியல் இதற்கு தயாராக இருக்கவில்லை.

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்படும்போது அது நுழைவாயிலின் ஆரம்பத்தில் தடுக்கப்படவேண்டும். மற்றைய நாடுகளில் போன்று நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்னர் சட்டமும், வேட்பாளரின் அரசியல் நேர்மையும் சேர்ந்து இதனைச் செய்ய வேண்டும். 

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தங்கள் அரசியல் அதிகார கனவை மனதளவில் கலைத்துக்கொள்ளவேண்டும். அல்லது வெளிப்படைத் தன்மையுடனும், அரசியல் நேர்மையுடனும் தங்களை தனிக்குடியுரிமையாளராக பிரகடனம் செய்யவேண்டும்.

இல்லையேல் கோடேறுவதுதான் சிலரின் தொழிலாக இருக்கப்போகிறது.