அம்மணம் (கவிதை)

அம்மணம் (கவிதை)

ஆண் சேய் நாடும் உன் விந்தால் நிறையும் அவள் வயிற்றுப் பையது அம்மணம்

அவள் பிறப்பு பெயர் தவிர்த்து
மலடியென்றழைத்தால்,
அரண் இட்டாலும்
உன்
அந்தரங்க உறுப்பது
அம்மணம்

உணர்வுத் தாழிட்ட மனைவியிடத்து
நீ திணிக்கும்
ஒருதலை உடல் சௌகரியமும்
அம்மணம்

பெண் உரிமை மறுமணத்தை
ஏற்கா உங்கள்
குல விளக்குகள் ஒளிர்ந்தாலும் அவை
அம்மணம்

தொடுகை காரணம்
அறியாக் குழந்தைகளிடத்து
உரசும் உன்
உறுப்புச் சுவையின்
உடல் மாற்ற நிறைவதும்
அம்மணம்

தொடர் நடைபயிற்சியில்
முதிர் பருவம் கடக்கும்
உன்
சமயலறைக் கால்களின்
குருதியோட்ட நீடிப்பதுவும்
அம்மணம்

பெண் விடுதிக் கதவுகளடைப்பில்
எம்மேனி காக்கும்
உங்கள்
கட்டுக் கதைகளின் தொகுப்பும்
அம்மணம்

பேதையவள் ஆண்கரம் கோர்ப்பில்
பெரும் நடத்தை பிழை தேடும்
உங்கள்
கபட மனங்களும்
அம்மணம்

ஆடை நீங்கலது
அம்மணமா?
உன் மன ஆழக்கிடக்கையின்
குறை பொருளும் அதன்
முறை இல்லாப் பிரசவங்களுமே
அம்மணம்


செல்வி. துஷாந்தினி.யோ

thushanthiniyShgmail.com

பாரதிபுரம், கிளிநொச்சி.