சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (34) 

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (34) 

        — சட்டத்தரணி, பாடும்மீன். சு.ஸ்ரீகந்தராசா — 

இது என் கதையல்ல, 

என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை 

இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த, சொல்லின் செல்வர் திரு.செ.இராசதுரை அவர்கள் 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி, அமரர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் சேரவேண்டிய நிர்ப்பந்ததிற்கு உள்ளானார். அதன் விளைவாக அவரது நீண்டகால பாராளுமன்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். பிரதேச அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரதேச அபிவிருத்தியுடன், தமிழ்மொழி அமுலாக்கல் மற்றும் இந்து சமய அலுவல்களும் அவரது அமைச்சின் கீழ் வந்தன.  

அமைச்சின் அலுவலகம் கொழும்பு, கோட்டையில் உள்ள சிலிங்கோ மாளிகையில் இரண்டாம், பத்தாம் மாடிகளில் இடங்கொண்டிருந்தது.இரண்டாம் மாடியில் தமிழ்மொழி அமுலாக்கல், இந்துசமய விவகாரங்களுக்கான திணைக்களங்களும், பத்தாவது மாடியில் அமைச்சு அலுவலகம் மற்றும் அமைச்சரின் அலுவலகம் என்பவையும் செயற்பட்டுக்கொண்டிருந்தன.  

அமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றுவதற்காகவே நான் அழைக்கப்பட்டிருந்தேன். 

அமைச்சரின் தனிப்பட்ட அலுவலகத்தில் பணியாற்றத் தொடங்கி நாட்கள் நகர்ந்து ஒருவாரம் கடந்துகொண்டிருந்தது. எனக்குரிய முறையான இடமாற்ற உத்தரவு பொது நிர்வாக அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளரிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை. அமைச்சர் அவர்களின் உத்தரவுக்கமைய, பிரதேச அபிவிருத்தி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவிருந்த அமரர். மாணிக்கவாசகர் அவர்கள் நேரடியாகச் சென்று துரிதப்படுத்தியும் இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெறாமையால், இரண்டு வாரங்கள் முடிவுற்றபோது நான் அமைச்சரிடம் சொல்லிவிட்டு மீண்டும் மட்டக்களப்பிற்குச் சென்றேன். 

அங்கு சென்று ஒரு வாரத்தில், பிரதேச அபிவிருத்தி அமைச்சுக்கு 1979 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்ட  உத்தரவுக் கடிதம் கச்சேரிக்கு வந்து சேர்ந்தது. மீண்டும் கொழும்பிற்குப் பயணம். இடையில் அமைச்சில் கடமையாற்றிய இரண்டு வாரங்களுக்கும் எனக்குக் வாழ்வாதாரக் கொடுப்பனவுடன் (Subsistence) கடமைவிடுமுறை வழங்கப்பட்டது. அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, அதற்கான உத்தரவு அமைச்சியிருந்து அனுப்பப்பட்டிருந்தது. இதனை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் சின்னஞ்சிறிய நிர்வாக விடயங்களில் கூட மிகவும் அக்கறையெடுத்துச் செயற்படும் ஆளுமை கொண்டவராக அமைச்சர் திரு செ.இராசதுரை அவர்கள் விளங்கினார் என்பதனை நான் அறிந்துகொண்ட முதலாவது தருணம் அது. அரச சேவையின் நிர்வாக ரீதியான தேவைப்பாடுகள் அனைத்தையும் இரண்டு நாட்களுக்குள் பூர்த்திசெய்துகொண்டு, பொது நிர்வாகத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்பட்டமை பற்றிய அரசாங்க அதிபரின் கடித்துடன் மீண்டும் கொழும்பிற்குப் பயணமானேன்.  

அமைச்சில் சிரேஸ்ட உதவிச் செயலாளராக இருந்த மாணிக்கவாசகர் அவர்களுடன் மேலும் சில அதிகாரிகள் அங்கு கடமையேற்றிருந்தார்கள். 

கைத்தொழில் விஞ்ஞான அமைச்சில் கணக்காளராக இருந்த சிவலிங்கபிள்ளை அவர்கள், இடமாற்றம் செய்யப்பட்டு கணக்காளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்துசமய, அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கே.என்.சிவராசா அவர்கள் ஏற்கனவே அங்கே கடமையாற்றிக்கொண்டிருந்தார். அவர் ஒரு சைவப் பழம். திடகாத்திரமான, உயரமான மனிதர். இந்து சமயத்திற்கு ஒரு திணைக்களம் அமைக்கப்படும் அதற்குப் பணிப்பாளராக ஒருவர் தேவை என்பதற்காகவே அவர் பிரம்மதேவனால் படைக்கப்பட்டிருந்தாரோ என்று நான் சிலவேளைகளில் வியந்ததுண்டு. 

அரசசேவையிலிருந்து இளைப்பாறியிருந்த வரானநாணயக்கார அவர்கள் சிங்கள – தமிழ்மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.  

தமிழ்மொழி அமுலாக்கல் திணைக்களத்திற்கு, (எனது நினைவு சரியென்றால்) கோபாலரெத்தினம் என்பவர் பணிப்பாளராகவும், பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஸ்ரீசண்முகராசா என்பவரும் பின்னர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். 

அமைச்சுக்கும், திணைக்களங்களுக்கும் ஆளணித் தேவைக்கு உட்பட உத்தியோகத்தர்கள் தேவைப்பட்டனர். அதில் சில இடங்களுக்கு ஏற்கனவே வேறு அமைச்சுக்களிலும், திணைக்களங்களிலும் கடமையாற்றிக்கொண்டிருந்த அனுபவம் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அமைச்சர் அவர்களுக்கு நேரடியாகத் தெரிந்தவர்கள் சிலரும், அதிகாரிகளால் சிபார்சு செய்யப்பட்டவர்கள் சிலரும் அவர்களின் இசைவுடன் அவ்வாறு உள்வாங்கப்பட்டார்கள்.  

மேலும் எழுதுவினைஞர்கள், தட்டெழுத்தாளர்கள், அலுவலக ஊழியர்கள் முதலிய ஆளணிக்குத் தேவைப்பட்ட இடங்களுக்குப் புதிதாக நியமனங்கள் செய்யப்பட்டன. 

 அமைச்சர் இராசதுரை அவர்கள் நீண்டகாலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததனால் அவருக்குப் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அவர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களை அமைச்சர் அவர்களுக்கு அனுப்பியிருந்தனர். தமிழரசுக் கட்சியில் இருந்து திரு. செ.இராசதுரை அவர்கள் விலக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் அக் கட்சியில் இருந்தோரில் பெரும்பான்மையினர் அவருடன் தொடர்பிலேயே இருந்தார்கள். மதிப்பு வைத்திருந்தார்கள். அவர்களில் சிலரிடம் இருந்தும் உத்தியோகத்திற்குச் சிபார்சு செய்யப்பட்டவர்களின் பட்டியல்கள் வந்துகொண்டிருந்தன.  

அமைச்சர் அவர்களுக்கு நேரடியாகத் தெரிந்தவர்கள் சிலரும், அதிகாரிகளால் சிபார்சு செய்யப்பட்டவர்கள் சிலரும் அவர்களின் இசைவுடன் அவ்வாறு உள்வாங்கப்பட்டார்கள். மேலும் தேவைப்பட்ட எழுதுவினைஞர்கள், தட்டெழுத்தாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள், அலுவலக ஊழியர்கள், சாரதிகள் முதலிய இடங்களுக்குப் புதிதாக நியமனங்கள் செய்யப்பட்டன.    

புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சு என்பதால், அதனை முறையாகக் கட்டமைக்க வேண்டிய அவசியம் இருந்தது. சில சவால்களையும், பல அசௌகரியங்களையும் எதிநோக்க வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம் அமைச்சர் செ.இராசதுரை அவர்கள் மிகச் சாதுரியமாக எதிர்கொண்டு, உரிய அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி நெறிப்படுத்தினார். அதனால், சில மாதங்களிலேயே, ஏற்கனவே நீண்டகாலமாகச் செயற்பாட்டிலிருக்கும் அமைச்சுக்களைப்போல பிரதேச அபிவிருத்தி அமைச்சும் தன் பணிகளை இயல்பாக முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது. 

அமைச்சு அலுவலகமும், மூன்று திணைக்களங்களும் செயற்படுவதற்கான இடம் சிலிங்கோ மாளிகையில் போதாமல் இருந்ததால், பம்பலப்பிட்டியில், காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றுக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சு இடமாற்றம் செய்யப்பட்டது. பனம்பொருள் அபிவிருத்திச் சபையும் அமைச்சின் கீழ்க் கொண்டுவரப்பட்டதுடன், அதன் காட்சியகமும், விற்பனை நிலையமும் அமைச்சுக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் அமைக்கப்பட்டன. 

சில மாதங்களில் தமிழ்மொழி அமுலாக்கல் திணைக்களப் பணிப்பாளராக, திரு. ஆ.பாஸ்கரதாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார். இப்பொழுது கனடாவில் வாழும் அவர் அமைச்சில் நீண்டகாலம் தொடர்ந்து பணியாற்றினார். 

ஒருநாள் அதிகாலையில், அதிர்ச்சியான செய்தியொன்று திடீரென்று வந்து எழுப்பியது.  

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதம், குருநாகலில் தரித்து நின்றுகொண்டிருந்த மட்டக்களப்புப் புகையிரதத்தில் மோதியதால் பாரிய சேதம் ஏற்பட்டதென்றும், சிலர் உயிரிழந்தும், பலர்காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அந்தச் செய்தி இடியாக இறங்கியது. விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த, அமைச்சின் உத்தியோகத்தர்கள் சிலரும் அந்தப் புகையிரதத்கில் வந்துகொண்டிருந்ததாக, அலுவலக நண்பர்கள் கூறினார்கள். உடனடியாக, செயலாளர், மாணிக்கவாசகர் அவர்களைத் தொடர்புகொண்டு விடயத்தைச் சொல்லிவிட்டு, அவரது அனுமதியுடன், அமைச்சில் ஜீப் வண்டியில், நண்பர் கருணானந்தராசாவும் நானும் குருநாகலுக்குக்கு விரைந்தோம்.  

பலர் படுகாயமடைந்து குருநாகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் அமைச்சில் கடமையாற்றுபவர்கள் மட்டுமன்றி, எனக்குத் தெரிந்திருந்த வேறு சிலரும் இருந்தார்கள். எங்கள் தமிழ்த் தட்டெழுத்தாளர்களில் ஒருவரான, மட்டக்களப்பு புதூரைச் சேர்ந்த செல்வி மகேஸ்வரி உயிரிழந்தார். 

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களோடு முடிந்தவரை கதைத்து ஆறுதல் கூறினோம். அங்கிருந்து மட்டக்களப்பிற்குச் சென்று, மறுநாள் வாழைச்சேனையில் இருந்து பொத்துவில் வரை ஜீப் வண்டியில் ஒருநாள் முழுவதும் பயணம் செய்தோம். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு முடிந்தவரை சென்று அவர்களுக்கு விபரம் கூறி ஆறுதல் சொன்னோம்.  

(தொடரும்)