— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ வுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவர் மிலிந்த மொறகொட ‘அரசியல் ரீதியாக இலங்கை நிலைமாறும் கட்டத்தில் இருக்கிறது. சமூக அரசியல் ரீதியான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் உள்ளது. இலங்கை ஒருசிக்கலான நாடு. பல மதங்கள் இனங்களுடன் 13 ஆம் திருத்தச் சட்டப் பிரச்சனையும் உள்ளது. நாம் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கவேண்டும் ‘என்று கூறியிருக்கிறார். (ஈழநாடு 18.10.2022)
மிலிந்த மொறகொட அவர்களின் மேற்படி கூற்று இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை மிகவும் ஆபத்து நிறைந்ததாகும்.
1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக 1988 இல் நிறைவேற்றப்பெற்ற 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் அது அமுலுக்கு வந்து கடந்த 34 வருடங்களாக முழுமையாகவும் முறையாகவும் அமுல்படுத்தப்படாத காரணத்தினாலேயே மிலிந்த மொறகொட இவ்வாறானதொரு கூற்றை வெளிப்படுத்தத் துணிந்திருக்கிறார். இலங்கைத் தமிழ்த் தேசியத் தரப்பு 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை ஓரத்தில் வைத்துவிட்டுப் புதிய அரசியலமைப்பொன்றினூடாக நிரந்தர அரசியல் தீர்வைத் தேடுவதும் அதன்மீது நம்பிக்கை வெளியிடுவதும்கூட மிலிந்த மொறகொடவுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. தமிழ்த் தேசிய அரசியல் தரப்பின் இந்தப் பலவீனம்தான் மிலிந்த மொறகொடவை இவ்வாறு கூறவைத்திருக்கிறது.
இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலின் அதிகாரப் பகிர்வு நோக்கிய பயணத்தில்13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ஒரு மைல்கல் மட்டுமல்ல அதுவொரு கைகாவலுமாகும். அதனைத் தூக்கி எறிந்து விட்டுத் தமிழர்கள் தொடர்ந்து பயணிப்பது ஆபத்தாகும். ஆனால், துரதிஷ்டம் என்னவெனில் பெரும்பான்மைத் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் அவற்றின் தலைமைகளுக்கும் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல்படுத்தக் கோரி இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கைச்சாத்திகளான இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதில் ஆர்வமும் அக்கறையும் இல்லை. இதன் மறுதலையாக 13 ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் முழுமையான முறையான அமுலாக்கத்தின் மீது அக்கறை கொண்டவர்களிடம் அரசியல் அதிகாரம் இல்லை. இவர்களைப் பெரும்பான்மையான தமிழர்கள் தேர்தல்களில் அங்கீகரிக்கவில்லை. இதுவே தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இப்போதுள்ள சிக்கலும் யதார்த்தமுமாகும்.
இந்தச் சிக்கலிலிருந்து தமிழ்த் தேசிய அரசியல் விடுபடுவதற்கு இரண்டு வழிகளே உண்டு. ஒன்று ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று தம்மைக் குறி சுட்டுக் கொண்டு தமிழ் அரசியல் பொது வெளியில் செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் ஒன்று பட்டு ஒரு பொது வேலைத் திட்டமாக 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் முழுமையான முறையான அமுலாக்கத்திற்குத் தேவையான அரசியல் கள வேலைகளைத் (வெகுஜன இயக்கம் மற்றும் ராஜதந்திர நகர்வுகள் உட்பட) தாமதமின்றிக் காத்திரமாக முன்னெடுக்க வேண்டும். ஆனால் இது நடைபெற வாய்ப்பில்லை.
அப்படியாயின் அடுத்த வழி என்ன? அது என்னவெனில் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான முறையான அமுலாக்கத்தின் மீது ஆர்வமும் அக்கறையும் கொண்ட அதிகாரப் பகிர்வு இயக்கத்தை எதிர்காலத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் தேர்தல்களில் அங்கீகரிப்பதாகும். அதாவது எறிகிறவன் கையில் பொல்லைக் கொடுப்பதாகும். அதற்கு ஏதுவாக அதிகாரப் பகிர்வு இயக்கமும் தனது செயற்பாடுகளை மக்கள் மயப்படுத்தவும் வேண்டும்.
மேற்கூறப்பெற்ற அதிகாரப் பகிர்வு இயக்கம் கடந்த வருடம் 09.04.2021 இல் உருவாக்கப்பெற்று அமைதியாகவும் (அதிகாரம் கையில் இல்லாததால் சற்று மந்தமாகவும்) இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் நெம்புகோலாக இயங்கிக்கொண்டிருப்பது எந்திரி கலாநிதி கா.விக்னேஸ்வரனின் தலைமையிலான ‘அகில இலங்கை தமிழர் மகா சபை’ ஆகும்.
இலங்கைத் தமிழர்கள் எதிர்காலத்தில் தனித்தனிக் கட்சிகளின் பின்னே பிரிந்து பிரிந்து சென்று பலவீனப்படாமல் ஒரு மாற்றத்திற்காகவேனும் அகில இலங்கை தமிழர் மகா சபையின் பின்னே (அதிகார பகிர்வு இயக்கத்தின் பின்னே) அணிதிரண்டு அதனைப் பலப்படுத்துவார்களாயின் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்து அதனை ஆரம்பப் படியாகக்கொண்டு பூரணத்துவமான அதிகாரப் பகிர்வு இலக்கை நோக்கி வெற்றிகரமாகவும் நம்பிக்கையோடும் பயணிப்பதற்கான ஒரு மாற்று வழிபிறக்கும். இல்லையேல் ‘பழைய குருடிகதவைத் திறடி’ கதைதான்.