தமிழரை கடவுளாவது காப்பாற்ற… (வாக்குமூலம்-35) 

தமிழரை கடவுளாவது காப்பாற்ற… (வாக்குமூலம்-35) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

தமிழரசுக் கட்சி உருவான 1949 காலத்திலிருந்தே தமிழ்த் தேசியம் எனும் பெயரில் நடைபெற்றுவந்த/நடைபெற்றுவரும், தமிழ்க் கட்சிகளுக்கிடையேயான தேர்தல் அரசியல் போட்டிகள்- பொறாமைகள்-மோதல்கள்- சேறடிப்புகள் மற்றும் அகிம்சைப் போராட்டத்திலிருந்து ஆயுதப் போராட்டத்திற்குத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வடிவம் மாறிய காலத்திலிருந்து நடைபெற்ற அரசியற் படுகொலைகள்- அப்பாவிச் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள் -மாற்றுச் சிந்தனையாளர்கள், கருத்தாளர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள்-இயக்கங்களுக்கிடையேயான மோதல்கள் சகோதரப் படுகொலைகள் என எல்லாவற்றையுமே தலைக்கேறிய ‘தமிழ்த் தேசியப்’ போதையில் தமிழ் மக்கள் சீரணித்துக் கொண்டார்கள். 

மட்டுமல்ல, அஹிம்சைப் போராட்டக் காலத்திலும் சரி ஆயுதப்போராட்டக் காலத்திலும் சரி தலைமைகள் விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டாமலும் தட்டிக்கேட்காமலும் அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே எனத் தமிழ் மக்களும் நடந்துகொண்டார்கள். மாற்றுக் கருத்துகளுக்கும் சுய விமர்சனங்களுக்கும் இடமிருக்கவில்லை. 

இலங்கைத் தமிழர்களின் அரசியலில் தமிழரசுக்கட்சியும் (1949-1972) பின் தமிழர் கூட்டணியும் (1972-1976) அரசோச்சிய 1949-1976 காலகட்டத்தில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) சொன்னவற்றையெல்லாம் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வேதவாக்காக எடுத்துக் கொண்டு அப்போதைய அரசியல் தலைமைகளான தமிழரசுக் கட்சியும் தமிழர் கூட்டணியும் விட்ட அரசியல் தவறுகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் வெறுமனே உணர்ச்சியால் உந்தப்பட்ட தமிழ் மக்களின் கண்மூடித்தனமான செயற்பாடுகள்தான், தந்தை செல்வாவே தனது வாயால் தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்றவேண்டுமெனக் கூறவைத்து அவரைக் கண்மூடவைத்தது. இது அகிம்சைப் போராட்டக் காலத்துக் கதை. அதாவது அகிம்சைப் போராட்டம் தோல்வியில் முடிந்த கதை. 

 தந்தை செல்வாவின் மரணத்தின் பின்னர் நடைபெற்ற 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் காலத்திலிருந்து 1983 வரை தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றிருந்ததமிழர் விடுதலைக்கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியல் போக்கு தமிழர்களைக் குறிப்பாகத் தமிழ் இளைஞர்களை மிதவாத அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கையிழக்கச் செய்தன. அதனால் 1977 இலிருந்தே தமிழ் இளைஞர்களிடையே ஆயுதப்போராட்டச் சிந்தனைகளும் செயற்பாடுகளும் முளைவிட்டிருந்தன. 

1983 ஆம் ஆண்டின் பின்னர் கூர்மையடைந்த ஆயுதப் போராட்ட காலத்தை எடுத்துக் கொண்டால் பல போராளி இயக்கங்கள் போராட்டத்தில் பங்கெடுத்தபோதிலும் இராணுவ மேலாண்மை பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் தமிழ் மக்களிடையே செயல்பட்ட இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் தனித்தனியே வேட்டையாடியபோதும்- பின் ஏனைய சகோதரப் போராளி இயக்கங்களைப் புலிகள் தடை செய்து தாக்கியளித்த போதும்- தொடர்ந்து வந்த காலத்தில் இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியத் தலையீடு காரணமாக 1987இல் ஏற்படுத்தப்பெற்ற இலங்கை- இந்திய சமாதான ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்த போதும்- இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுலாக்கவென்று வந்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதி காக்கும் படையினருடன் புலிகள் போர் தொடுத்த போதும்-இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் கீழ் உருவான வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த மாகாண அரச கட்டமைப்பை பௌத்த சிங்களப் பேரினவாத அரசின் பிரதிநிதியான முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டுச்சேர்ந்து தமிழீழவிடுதலைப் புலிகள் சீர்குலைத்த போதும் -இலங்கையிலிருந்து இந்திய அமைதிகாக்கும் படைவெளியேறிய பின்னர் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமாதான முயற்சிகளையெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஈற்றில் நிராகரித்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீதான கண்மூடித்தனமான தனிநபர் வழிபாடு காரணமாக தமிழ் மக்கள் வாய்மூடி அடங்கிப்போயிருந்தமைதான் இறுதியில் 2009 மே 18 இல் முள்ளிவாய்க்கால் பேரழிவில்போய் முடிந்தது. இது ஆயுதப் போராட்டக் காலத்துக் கதை. அதாவது ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்த கதை. 

2009 மே 18 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றிருந்ததும் ஏற்றிருப்பதும் 2001 இல் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். 2009 மே 18 இன் பின்னர் இனித் தாம் நடத்தப் போவது இராஜதந்திரப் போராட்டமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அறிவித்தார்கள். தமிழர்களும் அதனை நம்பி இன்றுவரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பின்னேதான் பெரும்பான்மையாக நிற்கிறார்கள். யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எந்தவிதமான உருப்படியான- காத்திரமான இராஜதந்திர ரீதியான அடைவுகளையும் எட்ட முடியவில்லை. வருடா வருடம் மார்ச், செப்டம்பர் மாதங்களில் ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் திருவிழாவுக்குத் தனித்தனியாகவும் கூட்டாகவும் நேர்த்திக்கடன் வைத்துக் காவடி எடுத்ததுதான் மிச்சம். இது இதுவரையிலான இராஜதந்திரப் போராட்டக் காலத்துக கதை. அதாவது இராஜதந்திரப் போராட்டம் தோல்வியைத் தழுவிய/ தழுவும் கதை. 

 தமிழ்த் தேசிய அரசியலில் அஹிம்சைப் போராட்டமும் தோல்வியுற்று-ஆயுதப்போராட்டமும் தோல்வியுற்று – இராஜதந்திரப் போராட்டமும் தோல்வியைத் தழுவிய/ தழுவும் நிலையில் இலங்கைத் தமிழர்கள் இனிச் செய்ய வேண்டியது என்ன? 

* சரியோ? பிழையோ?- விரும்பியோ? விரும்பாமலோ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்சார் உளவியலிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும் செயற்பாடுகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்கள் முதலில் தங்களை விடுவித்துக்கொள்ளவேண்டும். 

 * சர்வதேசம் என்ற மாயமானை முழுவதுமாக நம்பி அதன் பின்னே தொடர்ந்து செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்/ நிறுத்திக் கொள்ள வேண்டும். 

* உள்நாட்டில் புதிய அரசியலமைப்பு மூலம் இனப் பிரச்சனைக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்ற கானல் நீரை நம்பி ஏமாறக்கூடாது. 

 * கையில் இருக்கும் 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனும் துரும்பைப் பற்றுக் கோடாகக் கொண்டு- அதன் பங்காளி இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்தியாவின் முழுமையான அனுசரணையைப் பெற்று- அதிகாரப் பகிர்வு நோக்கிய பயணத்தை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பதற்கான மாற்று அரசியல் பாதையை அடையாளம் காண வேண்டும். 

 * உள்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தினூடாகவும் வெளியில் இந்தியாவின் முழுமையான அனுசரணையூடாகவும் மட்டுமே இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் விவகாரங்களை வெற்றிகரமாகக் கையாள முடியும் என்ற யதார்த்தத்தை உளப்பூர்வமாக உணர்ந்து தெளிந்து செயற்படக்கூடிய அறிவு பூர்வமான மாற்று அரசியல் தலைமை ஒன்றினை தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய மாற்று அரசியல் தலைமை தனி நபரையோ ஒரு கட்சியையோ முதன்மைப்படுத்தாது மக்களின் நலனை மட்டுமே முதன்மைப்படுத்திச் செயற்படும் வகையில் அமைதலும் அவசியம். இவை நடைபெற்றால் இலங்கைத் தமிழர்களுக்கு உண்டு வாழ்வு. இல்லையேல் இலங்கைத் தமிழர்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும்.