முத்தம் (கவிதை) 

முத்தம் (கவிதை) 

முத்தம்

வன்புணர்வுக்கு உள்ளான 

மகள்களிடம் கேளுங்கள் 

காம முத்தப் பட்டியலில் 

தங்கள் தங்தையரின் முத்தங்களும் 

சேர்க்கப்பட்டுள்ள கதைகளைக் 

கூறுவார்கள். 

எதிலுண்டு பெண்ணே? 

சுவை 

பிறர் பொத்தி வைப்பின்பால் 

முத்தாவதிலுண்டோ? 

புறமுதுகறியா சிப்பியிலுண்டோ? 

பேழைப் பெண்ணைச் சூழும் 

மாயைக் காற்றிலுண்டோ? 

போராளிப் பெண்ணே சூடும் 

போதைக் காற்றிலுண்டோ? 

காட்டப்படுவதைப் பொறுத்து 

பெண் காணுகிற பொருளிலுண்டோ? 

காட்டப்படுகிற இடத்தில்  

பெண் காட்சிப் பொருளாவதிலுண்டோ? 

காண முயன்று 

பெண் காணும் பொருளிலுண்டோ? 

சுரோணிதம் 

செம்புனல் வெளியேற்றமா? 

அஞ்சி விடாதே 

நீ  

கைக்குட்டையில்கூட  

கரைசேர்ந்துவிடக் கூடியவள் 

ஆடையில் படிகிறதா? 

தளராதே  

நீ 

செந்நீரை 

அவமான அடையாளமாகப் பார்ப்பவளல்ல. 

நகரமுடியவில்லையா? 

இயைபாக அமர்ந்துகொள் 

நீ 

உதிரத் தோய்வில் புனிதம்கெடும் 

பகுதிப் பிரகனப்படுத்தல்களை ஏற்பவளல்ல. 

அருகிலே ஆண் தோழனா? 

பகிர்ந்துகொள் 

நீ 

உணர்வுப் பகிர்தலில் 

பாலுறுப்பு வேறுபாட்டை காண்பவளல்ல. 

கண்களில் நீர் பெருக்கமா? 

வழியட்டும் விடு 

நீ 

மாதவிடாய்க் காலத்தை 

மறைக்கப்பட வேண்டியவொரு காரியமென்பதை  

சாத்தியமாக்குபவளல்ல. 

ஆக்கியவர்: 

செல்வி. துஷாந்தினி.யோ 

thushanthiniyShgmail.com 

பாரதிபுரம், கிளிநொச்சி. 

இலங்கை